Tuesday, May 12, 2020

SRIRANGAM



ஏன் பள்ளிக் கொண்டீரய்யா? J K SIVAN உனக்கு பிடித்த ஊர் பேர் ஒன்று சொல்லு என்றால் நான் இருக்கும் நங்கநல்லூர் என்பேன். இன்னொரு பேர் நான் சொல்வது ஸ்ரீ ரங்கமாக தான் இருக்கும். ஏன்? ரங்கன் இருப்பதால்!. நான் ஸ்ரீ ரங்கம் பக்கம் போய் ரொம்ப நாளாகி விட்டதால் , முன்பு போல் இப்போதெல்லாம் அடிக்கடி பயணம் செய்ய இயலவில்லை என்பதாலும் ஸ்ரீரங்கம் மனதிலேயே இருக்கிறது. ஸ்ரீரங்கம் சாதாரண கோவில் அல்ல. 108 திவ்ய தேசங்களில் முதலானது, முதன்மை பெற்றது. காரணம்? சொல்லமுடியாத அளவு நிறைய இருக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற தொன்று தொட்ட ஹிந்து கோவில். அதன் சரித்திரம் சொல்லி, படித்து, கேட்டு மாளாது. திருவரங்க திருப்பதி, பூலோக வைகுண்டம், போகமண்டபம், பெரியகோவில் இதெல்லாம் அதற்கு பெயர்கள். மிக உயரமான கோபுரம். லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் அன்றாடம் வரும் கோவில்.
155 ஏக்கரா, 4 கி.மீ. சுற்றளவு கோவில். 39 மண்டபங்கள். ஆயிரம் கால் மண்டபம். கோவிலின் விஸ்தீரணம் சொல்லட்டுமா ? 631,000 சதுர மீட்டர். (6,790,000 ச .அடி) தானாகவே உண்டானது என்பதால் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரம் என்பார்கள். முழுதும் நடக்க முடியாது. ஏழு பிரகாரம்.மதில் சுவர்கள். 21 விமானங்கள். தெற்கு வாயில் கோபுரம் தான் சமீபத்தில் கட்டியது. 236 அடி உயரம். 11 நிலை. முதலில் ஆரம்பித்தவன் அச்சுத தேவ ராயன். விஜயநகர ராயா, நீ எங்கிருந்தாலும் வாழ்க. பாவம் நீ ஆரம்பித்து 450 வருஷங்களாக மொட்டை கோபுரமாகவே நின்று கொண்டு இருந்ததே.
முதலில் 9ம், நூற்றாண்டு கங்க வம்ச ராஜா காவேரி கரையில் கட்டியது. அடேயப்பா எத்தனை அக்கிரமங்கள், அட்டூழியங்கள், எதிர்ப்புகள், முஸ்லிம்களிடமிருந்து வெள்ளைக்காரர்களிடமிருந்தும். 14ம் நூற்றாண்டு மீண்டும் புனருத்தாரணம். . எதற்கும் அசைந்து கொடுக்காத பள்ளிகொண்ட அரங்கன். கோவிலில் சமஸ்க்ரித, தெலுங்கு, ஒரியா, மராத்தி, கன்னட, 800 வித கல்வெட்டுகள் . முக்கியமாக சோழ பாண்டிய ஹொய்சள, நாயக்க மன்னர்கள் இந்த கோவிலை பராமரித்த ஆதாரங்கள். ஒரே கல்லில் அற்புத சிற்பங்கள். எல்லாவற்றையும் விட சிறப்பு அம்சம். ஆனந்தமாக படுத்திருக்கும் அரங்கநாதன். 12 குளங்கள். ஏராளமான வாஹனங்கள் , விழாக்கள், விசேஷ உத்ஸவாதிகள். பக்தர்கள் பொங்கி வராமல் என்ன செய்வார்கள்?
ஒருவன் வந்து போனது மட்டும் இன்றும் ஞாபகம் இருக்கிறது. 13ம் நூற்றாண்டில் அல்லாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர். ராக்ஷஸன். விகிரஹங்களை உடைப்பது, விலையுயர்ந்த பொற்சிலைகளை டில்லிக்கு தூக்கிக்கொண்டு போவது கோவிலை உடைப்பது அவன் நித்யகர்மா.
ஸ்ரீரங்கத்திற்கு வெள்ளிதிருமுத கிராமம் என்று ஒரு பெயர் உண்டு. அது ஒரு தீவு மாதிரி. ஒருபுறம் பார்த்தால் காவிரி. மறுபுறங்களில் கொள்ளிடம், ''ஆம்பல் பூத்த சய பருவத மடுவில் அவதரித்த இரண்டாற்று நடுவிலே'' ஏன் பள்ளி கொண்டான் அரங்கநாதன்?. அவன் தொந்தரவு பொறுக்க முடியாமல் ஸ்ரீ ராமர் தான் ஆராதனம் பண்ணிய சயன விஷ்ணு விக்ரஹத்தை கையில் கொடுத்து ''இந்தா, விபீஷணா நீ கேட்டதை கொடுத்தேன். இதை கீழே மட்டும் வைத்துவிடாதே '' என்று விபீஷணனிடம் வந்த ரங்கநாதர். அவன் எது கிடைத்தாலும் தனது ஊரான லங்கைக்கு கொண்டு செல்வான். காவிரிக்கரை வரும்போது விநாயகரிடம் கொடுத்து கொஞ்சம் இதை கீழே வைக்காமல் உன் கையில் வைத்துக் கொள் நான் இதோ வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லியும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கரெக்ட்டாக தான் பார்க்கும் இந்த இடத்தில் வைத்துவிட்டார். எவ்வளவோ முயன்றும் திருப்பி எடுக்கமுடியாமல் விபீஷணன் வெறும் கையோடு இலங்கை சென்றான். தினமும் இப்போதும் வந்து வந்து அப்பப்போ பார்த்துவிட்டு செல்கிறானாம். அவனால் முடியும் அவன் தான் சிரஞ்சீவியாச்சே. சென்னையிலிருந்து ரயில், பஸ்கள் எல்லாமே பிளேன் கூடவே திருச்சிக்கு பறக்கின்றன. அங்கிருந்தே கோபுரம் தெரியுமே.யாரையும் அட்ரஸ் கேட்கவேண்டாம். ஸ்ரீரங்கம் சம்பந்தப் பட்ட ருசிகர தகவல்களை சுருக்கமாக எழுத குறைந்தது 250-300 பக்கம் ஆகுமே. எனவே கொஞ்சூண்டு சொல்லி நிறுத்துகிறேன். இப்போதைய ஸ்ரீரங்கம் நீங்கள் எல்லாருமே தரிசித்தது என்பதால் 220-250 வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீரங்கம் எப்படி இருந்தது என்று பார்க்க ஆவலாக இருக்காதா? அதோடு நிறுத்துகிறேன். 1896ல் பெருமாளுக்கு கோவிலில் சாற்றுவதற்கு வெள்ளி தங்கங்களில் ஸ்ரீபாதம், கிரீடம் எல்லாம் வைத்திருந் தார்கள். முக்கிய நாட்களில் அப்போதெல்லாம் எடுத்து சார்த்தி பக்தர்கள் மனம் சந்தோஷத்தால் பூரித்து அந்த தங்க ஆபரணங்கள் போலவே ஒளி வீசியது. அந்த நகைகளை பார்த்தாலே பெருமாள் நிற்பது போல் இருக்கிறது பாருங்கள். கோவில்களில் யாளி இரண்டு கால்களில் நின்று பயமுறுத்துவதை பார்த்திருக்கிறேன். எதிரே நிற்க பயத்தால் அதன் கண்ணில் படாமல் பக்கவாட்டில் நின்று சின்னவயதில் நிறைய பார்த்திருக்கிறேன். இந்த யாளி நான்கு கால்களில் நிற்கிறதே.
கோபுரத்தின் சந்நிதி தெரு ஒன்று படத்தில் பாருங்கள். எத்தனை குடிசை வீடுகள், அப்போதெல்லாம் கான்க்ரீட் இல்லை. நல்லவேளை. மக்கள் கார் பஸ் ஆட்டோ இன்றி சுதந்திரமாக (வெள்ளைக்கார ஆட்சியில்!!) நடந்து போகிறார்கள். அவர்கள் தலை கிராப், ஆடையை கவனித்தீர்களா? சேஷகிரி ராயர் மண்டப சிற்பங்கள் இன்னும் அப்படியே இருக்கிறதா என்று பார்க்க வாய்ப்பில்லை. நீங்கள் பார்த்து சொல்லுங்கள். ரங்கனுடைய சாமரம், சத்திரம் (குடை), மான்தோல், தங்க பாத்திரம், வெள்ளிப் பிரம்பு, -- வயசு 250 வருஷங்களுக்கு மேல். வெள்ளித் தேர் அருகே ஒரு வைஷ்ணவ சுவாமி நிற்கிறாரே சாமரத்தோடு. அவரது எத்தனையாவது தலைமுறை இப்போது?? யாருக்காவது இவரைத் தெரியுமோ??





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...