Thursday, May 7, 2020

RASA NISHYANDHINI



ரஸ நிஷ்யந்தி்னி J K SIVAN

பருத்தியூர் பெரியவா வாழ்வின் திருப்பங்கள்

பருத்தியூர் ராமர் கோவில் ஸ்ரீ பருத்தியூர் பெரியவா கிருஷ்ண சாஸ்திரிகளை சிறுவயது முதல் கவர்ந்த ராமர் ஆலயம். சிதிலமடைந்திருந்த அந்த ஆலயத்தை மிக அழகாக புணருத் தாரணம் செய்தார்.
நேற்று ஒரு முகநூல் அன்பர் ராதாகிருஷ்ணன் ராமதுரை என்பவர் எழுதியது:
''மிகவும் அழகிய கோயில், ராமன். நான் பணிபுரியும் குடவாசலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது கோயில் மிகச் சிறப்பாக எடுத்துக் கட்டப்பட்டுள்ளது. அவ்வூர் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் மிகப் பெரும் பொருட்செலவில் புதுப்பித்துள்ளார். அற்புதமான தரிசனம்''
ஸ்ரீ பருத்தியூர் பெரியவா கதைக்குள் செல்வோம்:
பையனைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சேங்காலிபுரம் சென்ற அப்பா ராமசேஷ சாஸ்திரி முத்தண்ணாவாள் வைத்தியநாத தீக்ஷிதர் வீடு எங்கே என்று விசாரிக்கும்போது அவரைப் பற்றியும் விஷயம் கிரஹிக்கிறார். பரம்பரை அக்னிஹோத்ரிகள். சிறந்த குரு. நிறைய பிள்ளைகள் வேத சாஸ்திரம் கற்றுக்கொள்கிறார்கள். ''நமது பிள்ளை கிருஷ்ணனை குரு ஏற்பாரா?'' என்று சின்ன சந்தேகம் மனதில் வளர்ந்தது. சாக்ஷாத் ரங்கநாதனே அல்லவா அனுப்பினான். ஏற்பார்'' என்று சமாதானம் உண்டானது. . குரு அன்போடு குழந்தைகளின் சக்தியை புரிந்து கொண்டு நிறைய நேரம் கணக்கு பார்க்காமல்
தமது புத்ரர்களாக பாவித்து கற்பிக்கும் குரு என புரிந்தது. வீட்டின் எதிரே பரிமள ரங்கநாதர் ஆலயம் கண்ணில் பட்டது. ஆஹா ரங்கநாதன் அருள் பெற்றவர். தன்னை ரட்சிக்கும் ரங்கநாதர் சரியான குருவைத் தான் தனது பிள்ளைக்கு காட்டி இருக்கிறார் என்று நன்றியோடு நினைத்தார்.
நமது காஞ்சி மஹா பெரியவா கூட முத்தண்ணாவாளை பற்றி சொல்லும்போது. ''அவா குடும்பமே ஸ்ரீ ரங்கநாதன் அனுக்கிரஹம் பெற்றவா. ஸ்ரீ ரங்கநாதனுடைய பாதங்களே முத்தண்ணா வாள் கிரஹத்தை பார்த்துண்டு தானே இருக்கு.'' என்றார்.
தானே வாசலில் வந்து ராமசேஷ சாஸ்த்ரியையும் சிறுவன் கிருஷ்ணனையும் உள்ளே கூட்டிச் செல்கிறார். தான் ஸ்ரீரங்கத்தில் கண்ட கனவை பற்றி சாஸ்திரிகள் சொல்கிறார். சாஸ்திரிகளின் பூர்வோத்தரம், பாரம்பரியம் , குடும்பம் பற்றி அறிகிறார். ரங்கநாதனே தன்னிடம் அனுப்பின கிருஷ்ணனை அணைத்து ''வாடா குழந்தே உள்ளே, மத்த குழந்தைகளோடு உக்காரு ''
குருகுல வாசம் தொடர்ந்தது. ஒவ்வொருநாளும் சிஷ்யர்கள் குருவோடு சேர்ந்து கோவில்களில் தரிசனம் செய்து பஜனை ஸங்கீர்த்தனம் செய்வார்கள். சிவ, ராம, நாம பாராயணம். கல்வியும் பக்தியும் இணைந்து வளர்ந்தது. காலம் ஓடியது. கோவிலில் ஒருநாள் ராமசேஷ சாஸ்திரி தம்பதியை பார்த்து ''உம்மோட குமரன் கிருஷ்ணன் ப்ராஞன். ஸமஸ்க்ரிதம் நன்றாக தெளிவாக அறிந்துகொண்டான். அவனுடைய எதிர்காலம் பளிச்சென்று தெரியறது. இனிமே மேல் படிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கோ''. பக்கத்திலே மருதாநல்லூர். பன்னிரண்டு வயசில் கிருஷ்ண சாஸ்திரிக்கு மருதாநல்லூர் ஸத்குரு கோதண்டராம ஸ்வாமிகளின் மந்த்ரோபதேசம் கிடைத்தது தெய்வ சங்கல்பம்.
''இவன் கிட்டே தெய்வீகம் இருக்கு. நூறு கோடி ராம நாம மந்திரம் ஜபிக்கட்டும். ஸ்ரீ ராமர் தரிசனம் பெறுவான்''
''நான் எப்படி நூறு கோடி கணக்கிடறது?' என்று சிறுவன் கிருஷ்ணன் கேட்டபோது ஸத்குரு
''நீ ஒண்ணும் கணக்கு வச்சிக்கவேண்டாம். ராமனுக்கே தெரியும் நூறு கோடி எப்போ முடிஞ்சுதுனு, நீ விடாம சொல்லிண்டே இரு . அப்போ அவனே நேர வருவான் ''
நண்பர்களே, நமது முன்னோர்கள் ஞானிகள். ஐந்தெழுத்தது மந்திரம் பஞ்சாக்ஷரம். ''ஓம் நமசிவாய'' ஆறெழுத்து மந்திரம் ஷடாக்ஷரம் ''ஓம் சரவணபவா'' எட்டெழுத்து மந்திரம் அஷ்டாக்ஷரம் 'ஓம் நமோ நாராயணாய'' ஏகாக்ஷர ப்ரணவ மந்த்ரம் ''ஓம்'' என்றெல்லாம் நமக்கு உபதேசித்தவர்கள் . ஸ்ரீ ராமனுக்கான ஷடாக்ஷரி மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறார்கள். . ''ஸ்ரீ ராம ஜெயம்'' தான் ஸ்ரீ ராம ஷடாக்ஷரி. இதை விடாமல் சொல்வதில் என்ன கஷ்டம்? மனதில் கடியாரம் டிக்டிக் என்று இது ஓடட்டுமே!. சர்வம் ராம மயம் என்பது சுலபமாக தெரியும், புரியும். ராம நாமம் தாரக மந்திரம். சம்சார சாகரத்தை தாண்ட உதவும் சாதனம். மோக்ஷ மந்திரம். கிருஷ்ண சாஸ்திரி விடாமல் ராமாயணம் படித்தார். ஒவ்வொரு முறை படிக்கும்போது புது புது அர்த்தங்கள் மனதில் ஊற்றாக பெருகியது.
''ராம சேஷா, உன் பிள்ளை ''கிருஷ்ணனை, ராஜ மன்னார்குடி ராஜு சாஸ்திரி கிட்டே அழைச்சுண்டு போ.'' மன்னார்குடி பெரியவாளிடம் கிருஷ்ணன் சிஷ்யனானார். அந்த மஹான் அடையபலம் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் வம்சம். (இவரைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேனே). பிற்காலத்தில் மஹா பெரியவாள் அனுகிரஹத்தில் மன்னார்குடி பெரியவா வசித்த அந்த க்ரஹம் சங்கரமடமாகியது .
மன்னார்குடி பெரியவா கண்டிப்பானவர். கோபிப்பார். நன்றாக புரியும் வரை கற்பிப்பார். தினமும் வடக்கே கைலாசநாதர் சந்நிதி பக்கம் இருக்கும் படித்துறையில் ஸ்னானம். சிஷ்யகோடிகள் தெற்கே மீனாட்சி அம்மன் சந்நிதி படித்துறை பக்கம் ஸ்னானம். தினமும் கிருஷ்ண சாஸ்திரி சுந்தரேஸ்வரர் சந்நிதி அருகே உட்கார்ந்து ராம ஜபம் காலை ஒன்பது மணி வரை. அப்புறம் பாடம். மற்ற நேரத்தில் வெண்ணைத்தாழி மண்டபம் ஆஞ்சனேயர் சந்நிதி முன் உட்கார்ந்து ராமஜெபம். பாடங்கள் முயற்சி இல்லாமலேயே மனதில் பதிந்தது. ஹநுமானே நவவ்யாகரண பண்டிதன். ராம பக்தன். அவன் எதிரே ராமஜெபம் விடாமல் பண்ணினால் எளிதில் பாடங்கள் மனதில் பதியாதா? ''
ஒருமுறை சக மாணவன் பைங்காநாடு கணபதி சாஸ்திரி கேட்டார் '
' கிருஷ்ணா , குரு பாடம் சொல்லி தருவது எல்லாம் நாங்கள் கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்றோம். உனக்கு எப்படிடா டக்கென்று மனதில் பதிகிறது?''.
''கணபதி, எனக்கு பெரியவா பாடம் சொல்லும்போது அவர் ஏதோ புதுசா சொல்றதா தோணலை. ஏற்கனவே எனக்கு தெரிஞ்ச விஷயத்தை எவ்வளோ அழகா சொல்றார்னு தான் ரசிக்க தோண்றது ''
மன்னார்குடி பெரியவாளுக்கு ஒரு தரம் கிருஷ்ண சாஸ்திரியின் நடத்தை அதிகப்ரசங்கி தனம் என்று தோன்றியதோ? இனி இங்கே உனக்கு பாடம் கிடையாது போ வெளியே'' என்று கோபிக்கிறார்.
கிருஷ்ண சாஸ்திரி அவரை விட்டு பிரியவில்லை. நேரே வெண்ணைத்தாழி மண்டப ஆஞ்சநேயர் சந்நிதி போய் ராம ஜபம் விடாமல் தொடர்ந்தார். மடத்தில் சமர்த்த ராமதாஸரின் தச போதம் பிரசங்கம் கேட்டார். நாள் முழுதும் சாப்பிடவில்லை. அங்கேயே தூக்கம். மறுநாள் காலை ஹரித்ரா நதி ஸ்னானம். ஆஞ்சநேயர் சந்நிதி. ஜபம்.ராமாயண பாராயணம். சேது பாவா மட ஆஞ்சநேய ஆலயம் அவரை ராமாயண பிரசங்கியாக உருவாக்கியது. ராமாயண பிரசங்கம் நிறைய பேர் ரசித்து கேட்டார்கள். விஷயம் மன்னார்குடி பெரியவாளுக்கு சிஷ்யர்கள் மூலம் காதுக்கு எட்டி ''அவனை ஆத்துக்கு வந்து இங்கே பிரசங்கம் பண்ண சொல்லு '' என்கிறார்.
கிருஷ்ண சாஸ்திரி பயந்து கொண்டே அவர் எதிரில் அளவு கடந்த பக்தி மரியாதையினால் பேச வராது என்று ''நான் உள்ளே வரலே. திண்ணையிலே உக்காந்து பண்றதை உள்லேருந்தே கேளுங்கோ''. ராமனின் கல்யாண குணங்கள் பற்றி பிரவசனம்.''க்ஷமயா பிரித்வி சம: பொறுமையில் ராமன் பூமித்தாய். '' உள்ளே கேட்டுக்கொண்டிருந்த பெரியவா ஓடிவந்தார். கண்ணீர் மல்கியது. அவரைக்கண்டதும் கிருஷ்ண சாஸ்திரி எழுந்தார். சாஷ்டாங்கமாக குருவை நமஸ்கரித்தார். குரு அணைத்துக் கொண்டார்.
''விஸ்வாமித்ரருக்கு ராமன் மாதிரி எனக்கு இவன் கிருஷ்ணசாஸ்திரி. ராமனை சிஷ்யனாக கொண்டு அவரிடமிருந்து சகலமும் கற்ற குரு விஸ்வாமித்ரர். '' ராமா உன் மஹிமையை உணர்ந்ததால் நான் இனி முழு மனிதன் '' என்று சொன்னவர். முன் கோபியாகிய நான் ஏதோ கல்வி கற்றவன். நீ மஹா மேதாவி. உன்னை வெளியே போ என்று சொல்லியது குற்றம். உன் ப்ரவசனம் என் அகக்கண்ணை திறந்தது. உன்னால் எண்ணற்றோர் ராமகாதை கேட்டு இனி செவி இன்பம் பெறுவார்கள். ததாஸ்து'' என்று ஆசிர்வதித்தார்...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...