Wednesday, May 6, 2020

NARASIMMA JAYANTHI




இப்படி  ஒரு  நரசிம்மர் J K SIVAN

இன்று தான்  அந்த நாளில்......
''எங்கேடா  இருக்கிறான்,  உன் நாராயணன். காட்டு அவனை.  எங்கும் இருப்பவன் என்கிறாயே, இதோ என் எதிரே இருக்கும் இந்த தூணில் இருக்கிறானா?''   என்று கிண்டலடிக்கிறான்  ஹிரண்யன்.. சுக்ல பக்ஷம், சித்திரை  சதுர்த்தசி தேதி  அஸ்தமன நேரத்தில்  காத்திருக்கிறான்  நரசிம்மன்  கடும் கோபத்தோடு. 

''ஓ  அதிலும் இருக்கிறான். சாணிலும் உளன், கோணிலும்  உளன்,  தூணிலும் உளன், அணுவை சத கூறிட்ட  ஒவ்வொரு கூறிலும் கூட  உளன் '' என்கிறான் பிரஹலாதன். உடைவாளை உருவி  தூணை பிறக்கிறான். நரசிம்மன் அவதாரம் செயகிறார்.  6.5.2020...அதே நாள்.

இன்று  மஹா விஷ்ணு  நான்காவது அவதாரமாக எடுத்த  நரசிம்மர் ஜெயந்தி.  ஊர் உலகமெல்லாம்  வெளியே  போகாமல் வீட்டுக்குள்ளேயே  அவரை ஸ்தோத்ரம் செயகிறோம்.  சிங்கப்பெருமாள் கோவில், அஹோபிலம், சோளிங்கர் போன்ற  நரசிம்ம க்ஷேத்ரங்களில்  பகவானும்  பட்டாச்சார்யரும் தான்.
சைவ வைணவ இருபாலாரும் சேர்ந்து வணங்கும் இஷ்ட தெய்வம்  நரசிம்மன்.  நரசிம்ம ராவ், ஐயர், அய்யங்கார், நரசிம்மாச்சாரி   என்று லிஸ்ட்  பெரிதாக போய் கொண்டே இருக்கும், இருந்தாலும்  வைஷ்ணவர்கள் தான் இதில் முதல் இடம் பெறுபவர்கள்.  இன்னொரு விஷயம்  மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் அதிகமாக  வணங்கப்படுவது  கிருஷ்ணன், ராமன் ,நரசிம்மன் மூவர் மட்டும் ரொம்ப ஜாஸ்தி.
சிறு குழந்தையான  ப்ரஹ்லாதனை அவனது கொடூர ராக்ஷஸ  தந்தை ஹிரண்யகசிபுவிடமிருந்து காப்பாற்றி ஹிரண்யனை வதம்  செய்த அவதாரத்தில் ஒரு விசேஷம்  ஹிரண்யன் கேட்ட வரம்:
பலவருஷங்கள்  கடும் தவம் இருந்த ஹிரண்ய கசிபுவின் முன்  ப்ரம்மா  தோன்றி  ''எதற்கு என்னை வேண்டி தவம் இருந்தாய், என்ன வரம் வேண்டும் கேள். தருகிறேன்''
ஹிரண்யன் நன்றாக யோசித்து வைத்திருந்தான். தான்  நீண்ட காலம் அழிவற்று  வாழ்ந்தால் தான்  தேவர்கள் அசுரர்கள் அனைவரையும்  கட்டுக்குள் வைத்து இந்த மூவுலகையும்  ஆளலாம். ஆகவே  மரணம் வருவதற்கான வாய்ப்புகள் அனைத்தையுமே  சிந்தித்து  ஒரு வரம் கேட்டான்.
''ப்ரம்ம தேவா, எனக்கு மரணமே நேரக்கூடாது.
''அது என் கையில் இல்லை ஹிரண்யா. பிறந்தவை அனைத்தும் இறந்தே ஆக வேண்டும்.  தோன்றியவை மறைவது தான் நியதி. உனக்கு மரணம் எப்படி சம்பவிக்க கூடாது என்று வேண்டுமானால் நீ கேட்கலாம்.''
அப்படியானால்  எனக்கு  பகல் பொழுதிலும்  மரணம் ஏற்படக் கூடாது, இரவு பொழுதிலும் மரணம் நிகழக் கூடாது.   மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது  மிருகத்தாலும் மரணம் ஏற்படக் கூடாதுவீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும்  என் மரணம் நடக்க கூடாது.
ஆகாயத்திலும் மரணம் நிகழக்கூடாது  பூமியிலும் மரணம் நிகழக்கூடாது
எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம் நிகழக்கூடாது.  
இது அத்தனையும்  கவனத்தில் இருந்தால் தான்  ஹிரண்யனைக் கொல்லமுடியும் .  மஹாவிஷ்ணு, மனிதனும் இல்லாமல் மிருகமும் இல்லாத  பாதிநரன்  மீதி சிங்கமாக,  இரவும் பகலுமில்லாத  அஸ்தமன காலத்தில், வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாத வாசல்படி மேல்,  ஆகாயத்தில் பூமியில் இல்லாத தனது மடிமேல்  எந்த ஆயுதமும் இன்றி தனது கூரிய  நகங்களால் ஹிரண்யனை அழித்தார் என்பது சரித்ரம். திருப்பதி வெங்கடாஜலபதிக்கே குல தெய்வம் நரசிம்மன்.நரசிம்மன் எங்கும் இருப்பவர். உலகெங்கும் வியாபித்தவர்.  எல்லா க்ஷேத்ரங்களிலும்  சிங்க முகம் நான்கு கைகளுடன் வீற்றிருந்த கோலத்தில் , ஒருகால் தொங்க விட்டுக்கொண்டு, இரு காலும் மடங்கி, குத்துக்கால் இட்டு உட்கார்ந்த நிலையில், நின்ற கோலத்தில், உக்ராமானவராக, லக்ஷ்மியோடு   எல்லாம் நரசிம்மனை தரிசித்திருக்கிறோம். ஆனால் படுத்துக்கொண்டு இருக்கும் நரசிம்மனை பார்த்திருக்கிறீர்களா? . நான் பார்த்தேன். திருவதிகையில் ஒரு ஆலயத்தில் சயன நரசிம்மர். தெற்கு நோக்கி ஜம்மென்று படுத்துக் கொண்டிருக்கிறார். அசப்பில் பெருமாள் மாதிரி. முகம் தான் அவரைக் காட்டிக் கொடுக்கும். அவரை எங்கே பார்ப்பது? சொல்கிறேன்.

நரசிங்க புராணத்தில் நரசிம்மன் திருவக்கரையில் இருந்த வக்ராசுரன் என்பவனிடம் மோதி அவனை கொன்று விட்டு ''உஸ் அப்பாடா'' என்று களைப்பாற திருவதிகைக்கு வந்து படுத்த கோலம். போக சயனம். தாயார் காலருகே வழக்கம்போல். திருவதிகையில் சர நாராயண பெருமாள் கோவிலில் அவரை காணலாம். தாயார் ஹேமாம்புஜவல்லி. உலகிலேயே படுத்திருக்கும் நரசிம்மர் இவர் ஒருவர் தான். திருவதிகை எங்கிருக்கிறது ? கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே.

700 ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்த தேசிகர் திருவந்திபுரம் செல்லும்போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டி ருக்கிறார். சிவனைப்போலவே இந்த சயன நரசிம்மருக்கும் ஒவ்வொரு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜை. மீதி வைஷ்ணவ கோவில்களில் கை கூப்பி நிற்கும் கருடாழ்வார் இந்த கோவிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வாருக்கு பெருமாள் திரிபுர சம்ஹாரத்தின் போது சங்கு, சக்கரங்களை வழங்கியதாக புராணம் கூறுகிறது.

1,300 வருடங்களுக்கு முன்பு ஓம் என்ற வடிவில் திருவதிகை கிராமம் இருந்ததாம். சரநாராயண பெருமாள் மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திரிபுர சம்ஹாரத்தின் போது சிவபெருமானின் போருக்கு பெருமாள் சரம் (அம்பு) கொடுத்து உதவிய தால் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். மஹா பாரதம் முடியும் தருண காலத்தில் அர்ஜுனன் இங்கே வந்ததாக ஒரு ஐதீகம்.

மூலவர் சரநாராயண பெருமாள் முழுவதும் சாளக்கிரமத்தால் (கருங்கல்) ஆனவர். இப்போது தான்தெரிகிறது ஆண்டாளுக்கு கூட படுத்திருக்கும் நரசிம்மனை தெரியும் என்று. '' மாரி மலை முழைஞ்சில் மன்னி கிடந்து ''உறங்கும் சீரிய சிங்கம்'' ..... என்கிறாளே .

கொரோனா  விடுமுறை  முடிந்து  உங்களால் முடிந்தபோது சென்று தரிசிக்கலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...