நல்ல சமயமடா நழுவ விடாதேடா J K SVAN
திருவண்ணாமலை என்றால் உடனே ரமணர் என்று நினைவு கூறுகிறோம். திருவண்ணா மலைக்கு ஸமஸ்க்ரிதத்தில் அருணாச்சலம், அருணகிரி என்று பெயர். அருணகிரி மலைக்கு மட்டுமா பெயர்? ஒரு அபூர்வ மனிதரின் பெயரையும் நினைவூட்ட வேண்டும்.
அருணகிரி நாதர் ஒரு அதிசயப் பிறவி. அசாத்திய திறமையோடு அருமையாக பிறந்தது அவரிடமிருந்து ஆறுமுகன் மேல் திருப்புகழ். என்ன சந்தம், என்ன தாளக் கட்டு, என்ன அர்த்தம். எத்தனை பொருட் செறிவு. இழையோடியிருக்கும் இணையில்லா பக்தி. இன்னொருவரை ஈடு சொல்லமுடியாத தனி அலாதி காவிய கர்த்தா அருணகிரிநாதர். இந்த மஹா ஸ்தலம் கொடுத்த ஒரு புண்ய புருஷன். வாழ்வில் எப்படி இருந்தால் என்ன ? தவறு செய்யாத மனிதன் உண்டா. ? ஆங்கிலத்தில் ஒரு உயிர் imperfect ஆக இருந்தால் மனிதன். perfect ஆக இருந்தால் கடவுள் என்பார்கள். தவறை அறிந்து வருந்தி திருந்திய பிறகு தவறு எங்கே இருக்கிறது?
தமிழுக்குத் தொண்டு செய்ய இவன் ஒருவன் போதுமே என்று அந்த அண்ணாமலையான் சந்நிதியில் ஆறுமுகன் கண்டெடுத்த முத்து தான் '' முத்தைத் தரு பத்தி'' என்ற அருள் பாடலில் ஆரம்பித்து ஓதி அகிலம் எதிரொலிக்கும் அருணகிரி. இப்படி ஆரம்பி என்று அடியெடுத்து கொடுத்து இந்த பாடலை பாட வைத்தவன் ஆறுமுகன் அல்லவா?
அருணகிரியின் திருப்புகழ் ஆயிரக் கணக்கில். ஒன்றை மட்டும் இங்கே தந்து உங்களோடு மகிழ்கிறேன். இதைத் தெரியாத தமிழன் இருக்க முடியாது. தெரியாதவர்கள் உடனே தெரிந்துகொண்டு தமிழன் என்ற பெயரைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்.
தமிழ்க் குமரனுக்கு பழனியாண்டி ஒரு அழகிய காரணப்பெயர். அப்பாவின் கையில் ஒரு அழகிய அறுசுவை மாங்கனி. அதை விரும்பிக் கேட்பவர்களோ ரெண்டு அழகிய ஆசைப் புத்ரர்கள். யாருக்கு கொடுப்பது. ஒரு போட்டி வைக்கப்பட்டது. இந்த மூவுலகையும் யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு வெற்றிப்பரிசு அந்த தீஞ்சுவைக் கனி.
மூஞ்சூறு எனப்படும் மூஷிக வாகனன் ஒரு புறம், மயில் வாகனன் முருகன் வேறு பக்கம் உலகை சூத்ரா கிளம்பினார்கள். வானத்திலேறி மின்னலென பறந்தான் முருகன். மூஷிகன் யோசித்தான். அவன் மூஷிகம் மயிலோடு போட்டிபோட்டு என்றைக்கு வெல்வது? அவனுக்கு ஞானோதயம் தோன்றியது.
மூன்று உலகைத் தானே சுற்றிவரவேண்டும். மூன்று உலகம் எது? மூவுலகும் தானாகிய முழு முதற் கடவுள் முக்கண்ணன் அல்லவோ? அவனைச் சுற்றினாலே மூவுலகும் சுற்றியதாகுமே .
மூஷிகம் அப்பா மகாதேவனை வலம் வந்தது. மஹா கணபதிக்கு மாங்கனி பரிசானது. வெகுநேரம் கழித்து முருகன் வந்தான். அண்ணன் அங்கேயே இருப்பதைப் பார்த்தான். சிரித்தான். ''எங்கே எனக்கு பரிசு?''கொடுத்தாகி விட்டதே கணபதிக்கு'' என்று விடை வந்ததும் முருகனுக்கு சினம் வந்தது. வெகுண்டான் வேலவன். துறந்தான் ஆசையை மாங்கனி மீது
மலைகள் தான் எப்போதும் அவனுக்கு ஆசையாக பிடிக்குமே. பழனியில் நின்றான் கோவணாண்டியாக பாரினில் பக்தர் மனம் இனிக்க. பழனிக்கு ஒரு சுவையான பெயர் திரு ஆவினன்குடி. இந்த க்ஷேத்ரத்தில் அருணகிரி நாதர் முருகனை (எப்போதும் பெருமாளே!! என்று தான் நாவினிக்க தமிழ் மணக்க எல்லா புகழ் மாலையிலும் விளிப்பார்) ''திருப்" புகழாக சூட்டிய பாமாலை தான் இது:
'நாத விந்து கலாதீ நமோ நம
வேத மந்த்ர ஸ்வரூபா நமோ நம
ஞான பண்டித சாமீ நமோ நம வெகு கோடி
நாம சம்புகுமாரா நமோ நம
போக அந்தரி பால நமோ நம
நாக பந்தம யூரா நமோ நம பர சூரர்
சேத தண்ட விநோதா நமோ நம
கீத கிண்கிணி பாத நமோ நம
தீர சம்ப்ரம வீர நமோ நம கிரி ராஜ
தீப மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பர லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள் தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர் பாத சேவையும் மறவாத
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூரா
ஆதரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையிலேகி
ஆதி அந்த உலாவாக பாடிய
சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடதில்
வினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
நாதம் வேதத்தின் சாரம். பிந்து அதன் சக்தியை இணைத்து, அணைத்துக் கொள்கிறது. லிங்கமும் அதன் பீடமும் போல இணை பிரியா சேர்க்கை. அதுவே சர்வ சக்தி ஆதாரம். சிவ-சக்தி. இந்த இணை பிரியா சக்தியில் விளைந்த ''அது'' வே நீ முருகா.
வேதத்தைக் காட்டிலும் அதன் சப்தத்துக்கு சக்தியும் ஆற்றலும் அதிகம். ஆகவே தான் வேதங்களை எப்படி ஸ்வரமாக உச்சரிக்க வேண்டுமோ அதை மந்த்ரம் என்று சொல்வோம். மாத்ரைகள், காலப்ரமாணம், ஸ்வரம் எல்லாம் அதற்கு பிரத்யேகமாக உண்டு. நாமமும் ரூபமும் போல என்று கொள்ளலாம். அதிலிருந்து பிழன்று மனம்போன போக்கில் இசை அமைப்பது ஏற்புடையது அல்ல.
பாபு என்பவனை ராமு என்று அழைத்தால் திரும்பியே பார்க்கமாட்டானே. பாபு பாபு என்று கத்தினால் மற்றவர்கள் தான் யாரிவன் இப்படி கூச்சலிடுபவன் என்று கோபம் கூட கொள்வார்கள். தவறான பதில் எழுதினால் மார்க் குறைப்பது போல பாபமும் வேறு வந்து சேரும்.
ஸ்வயம்புவான சிவனது குமாரன், அப்பனுக்கு சுப்பன் பிரணவத்தை உபதேசித்ததால் ஞான பண்டிதன், சகல சௌபாக்யங்களையும் தரும் அழகிய உமையவள் புதல்வன், தண்டத்தை ஏந்திய தண்டாயுத பாணி, பாத கமலங்கள் சதங்கை ஒலி கிணி கிணி என்று சப்தமெழுப்ப அச்சம் தீர்க்கும் அருளாளன், அமரர் குறை தீர்க்கவந்த குமரன், தேவயானை மணாளன் நெற்றிக்கண் பிழம்பில் உருவான ஒளிச்சுடர் , ஜோதி ஸ்வரூபன், ஆசார அனுஷ்டானங்கள் குறையாத, வேதம் மறவாத, இல்லையென்று வருவார்க்கு இல்லையென்னாத, பல நூறு கோவில்களில் பல வித வடிவில் பரமனைப் பூசிக்கும் சோழ மண்டலத்தில், உயிர் நாடியாய் உணவளித்து வாழ்விக்கும் ''சோற ளிக்கும் சோணாட்டில் எங்கும் வயலாக பச்சை பசேலென்று காணும் வயலூரில் குடி கொண்ட வரமளிக்கும் வரமே, அன்று கொங்கு நாடு ஆண்ட, சேரமான் பெருமாளுக்கு வெண் குதிரையில் கைலாயம் அடைந்தும் சுந்தரரை அடையமுடியாமல் ''ஆதி உலா'' பாடியதால் அனுமதிக்கப்பட்டதும், திரு ஆவினன்குடியில் தேவர்களே மனிதர்களாக உனைப் போற்றி வாழும் கந்த பெருமாளே என்று வாழ்த்தி, அழகாக செஞ்சுருட்டி ராகத்தில் நமக்கு பரிசு கொடுத்த பாடல் இது
சிறு வயதில் சொல்லிக்கொடுக்கப்பட்டு, எண்ணற்றோர் எங்கெங்கோ பாடியதை கேட்டு,இன்றும் பாட வைக்கும், என்றும் சந்தோஷத்தை தரும் அருமையான முருகனின் திருப்புகழை நாமணக்க சொல்லும் பக்தியை உயிரோட்டமாக கொண்ட பாடல். கரோனோ ஒய்வு இருக்கும்போதே இதுவாரபாய் தெரியாதவர்கள் மனப்பாடம் செய்ய நல்ல சந்தர்ப்பம். நழுவ விடாதீர்.
No comments:
Post a Comment