Thursday, May 7, 2020

chithra pournami



   

     ஒரு  கணக்குப்பிள்ளை கோவில் - J.K. SIVAN

 இன்று சித்ரா பௌர்ணமி.  வானத்தில் அழகாக முழு வட்டமாக முழு நிலா. சித்திரை  முழுநிலா  விசேஷமானது. பகலின்  வெப்பத்தை அற்புதமாக இரவில்  தணிப்பவன்  பூரணச்சந்திரன். 


எல்லோருக்கும் எல்லாமும் அமைவது அபூர்வம். நல்ல மனைவி என்று சொல்லவே மாட்டேன். நாம் நல்ல கணவன்மார்களாக நடந்துகொண்டால் எந்த தாலி கட்டிய பெண்ணும் நல்ல மனைவியாகவே மாறிவிடுவாள் ''நல்ல கணவனாக'' என்று சொல்லும்போது தான் சிக்கல் வரும்.   ப்ரம்மதேவனால் கூட அதற்கு விளக்கம் சொல்லமுடியாது. மனைவியின் எதிர்பார்ப்புகள் பொறுத்து தான் அதை நிர்ணயம் செய்ய முடியும்.

சிறந்த உதவியாளன் அமைவது இன்னொரு அற்புதம். சாமுவேல் ஜான்சனுக்கு ஒரு போஸ்வேல், ராபின்சன் க்ரூஸோவிற்கு ஒரு வெள்ளிக்கிழமை,(man Friday ) இன்னம் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். 
 அப்படிதான்  யமதர்ம ராஜனுக்கு ஒரு அருமையான கணக்காளன். சித்ரகுப்தன். இவன் மௌரிய வம்சத்து சந்திரகுப்தன், சமுத்திர குப்தன் போல் இல்லை. தேவலோகத்து ஆள். நம்பகமான பாரபக்ஷமில்லாத, பூலோக வாசிகளின் வாழ்க்கை குறிப்பு எடுத்து வைத்திருப்பவன்.  கரோனா வந்தபிறகு  சித்ரகுப்தனுக்கு  எக்ஸ்டரா வேலை.   அவன் கணக்கில் நாம்  இல்லாதவரை  க்ஷேமம்.  இவன் குறிப்பின்படி தான் யமதர்மன் அந்தந்த ஜீவன்களுக்கு செய்த காரியங்களுக்கு தீர்ப்பு தண்டனை வழங்குவான்.

அந்த சித்ரகுப்தனை நாம் நினைப்பதே இல்லை. அவனும் அது பற்றி கவலைப்பட வில்லை. ஆனாலும் யாரோ ஒரு காஞ்சிபுர ராஜா .சித்ரகுப்தனைப் பற்றி கொஞ்சம் நினைத்துப்  பார்த்து அவனுக்கு ஒரு கோவில் கட்டியிருக்கிறான்.   சில வருஷங்களுக்கு முன்பு  சென்று பார்த்தேன். இடறி விழுந்தால்  ஏ தோ ஒரு சிவன், விஷ்ணு கோவில் மேல் தான் விழவேண்டுமென்ற அளவில் நிறைய கோவில்கள் உள்ள காஞ்சியில் சித்ரகுப்தன் கோவிலும்  இருக்கிறது. சித்ரகுப்தன் சூரியன் பிள்ளை, எமதர்மனின் தம்பி.

சித்ரகுப்தனை தரிசித்து வேண்டினால் செல்வ செழிப்புஎன்று பக்தர்கள் சொல்கிறார்கள். கேது கிரஹ அதிதேவதை அவன். பௌர்ணமி அன்று ரொம்ப கூட்டம்.

இந்த சின்ன ஆலயம் ஒன்பதாம் நூற்றாண்டு சோழ கோவில். மூன்றடுக்கு ராஜகோபுரம். காஞ்சிபுரம் நெல்லுக்காரன் வீதியில் கடைகளுக்கு நடுவே இருக்கிறது. உள்ளே சித்ரகுப்தன் அமர்ந்துகொண்டு ஒரு கையில் எழுத்தாணி இன்னொன்றில் சுவடு. வேலையில் மும்முரமாக  இருக்கிறான். கர்ணிகாம்பாள் சமேதன். இன்னொரு சேதி. சித்ரகுப்தனுக்கு மூன்று தேவியர்கள். பிரபாவதி, நீலாவதி, மற்ற இருவர். அமராவதி அவன் ஊர். அவன் மனைவி கர்ணிகாவின் எட்டு குழந்தைகள் தான் பிற்காலத்தில் கர்நாடகாவில் வசிக்கும் கருணீகர்களின் முன்னோடிகள் என்பார்கள்.

தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட 14 கோவில்கள் சித்ரகுப்தனுக்கு. காஞ்சிபுர கோவிலில் சித்ரவேலைப்பாடு நேர்த்தி. சித்ரா பௌர்ணமி அன்று உள்ளே நுழைவதற்கு வெகுநேரம் வெளியே காத்திருக்க வேண்டும். ஒரு தடவை சென்று பாருங்கள், அப்படியாவது நம்மை பற்றி நாலு வார்த்தை நல்லதாக எழுதட்டுமே .  இன்று  சித்ராபௌர்ணமி கும்பல் இருக்கும் என்று தோன்றவில்லை.  காரணம் சித்ரகுப்தன்  தானே.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...