Wednesday, May 27, 2020

MORAL




                    பொது இட  சுத்தம்.... J K  SIVAN 
                                        

நாம் எப்படிப்பட்டவர்கள் என்று தீர்மானிக்க, தெரிந்து கொள்ள  இந்த கதையை முதலில் படிக்கவேண்டும். அப்புறம். நாம் அந்த சூழ்நிலையில்  இருந்தால் என்ன செய்திருப்போம்?  என்று யோசிக்கலாம். நம்மை மாற்றிக்கொள்ள ஒரு வழி இது. 

குப்புசாமிக்கு வழி தெரியவில்லை.   நீண்ட பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு நடக்கிறான்.  கிழக்கு மேற்கு தெரியாத   யாருமில்லாத   எங்கும்  வீடே தெரியாத வெட்டவெளி.  கொளுத்தும் வெயில்.  இடது காலில்  கிழிந்த செருப்போடு    விந்தி விந்தி நடை.   வெயில் சுட்டெரிக்கும்போது தாகம் வராதா? 

''கிருஷ்ணா கிருஷ்ணா''
அம்மாவை நினைத்துக்கொண்டான். 

'டேய்  குப்பு எப்போ எல்லாம் உனக்கு கஷ்டம்னு  தோணுதோ அப்போ கிருஷ்ணா கிருஷ்ணா''ன்னு சொல்லு. கூப்பிடு.  ஹெல்ப் பண்ணுவான்''    அம்மா  சொல்வாளே .

விடாது '' கிருஷ்ணா கிருஷ்ணா''. கிழிந்த செருப்போடு நடந்த குப்புவின் கண்ணில் ஒரு பழைய சின்ன வீடு  சீக்கிரத்திலேயே   தென்பட  மெதுவாக அங்கே போனான் ... ஜன்னலில்லாத, கதவில்லாத, யாருமில்லாத ஒரு ஓட்டு வீடு. பின் வாசல் சுவற்றின் பக்கம்  ஒரு தண்ணீர் பம்ப்.   தெருவில் பெண்கள் கெட்டவார்த்தையில் ஒருவரை திட்டிக்கொண்டு சண்டைபோட்டுக்கொண்டு  தண்ணீர் பிடிக்க  கையால் அடிப்பார்களே அது போல குழாய்..
 பக்கத்திலேயே  சின்ன  ஆழமான குட்டி கிணறுபாதாளத்தில்  தண்ணீர் கண்ணில் பட்டு முகம் தெரிந்தது.   தெய்வத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது குப்புவுக்கு.

''லொட்டு லொட்டு ''என்று கைப்பிடியை இழுத்து பம்ப்  அடித்தான். குழாய் ஏப்பம் விட்டது.
 தண்ணீர் மட்டும் வரவில்லை.  சக்தி ஏற்கனவே குறைந்து தாகத்தில் தவிக்கையில் ...
''அட  இது கண்ணில் படாமல் போனதே ''என்று  ஓரமாக இருந்த ஒரு  அலுமினிய  சொம்பை பார்த்தான். அதில் நீர்.  மேலே  ஒரு தகர  தட்டு. அதில் ஏதோ எழுதியிருந்தது.

''இந்த சொம்பில் உள்ள நீரை குழாயில் ஊற்றி பம்ப்அடி . தண்ணீர் வரும். மறக்காமல் போகும் முன்பு  மீண்டும் சொம்பை நீரால் நிரப்பி வை.''

குப்பு என்ன செய்தான். தாகத்தில் தவிக்கும்போது இருக்கும் சொம்பு நீரை குடித்துவிட்டு கிளம்பினானா? குழாயில் கொட்டி பம்ப் அடித்து அதில் நீர் வந்து குடித்துவிட்டு மீண்டு சொம்பை நிரப்பினானா?     இருக்கும் தண்ணீரை குடிக்காமல் எந்த முட்டாளாவது ஏப்பம் விடும் குழாயில் ஊட்டி வீணடிப்பானா?''

குப்பு  கெட்டிக்காரன்.  தன்னைப் போல் இனி வரும் எவனும் கஷ்டப்படக்கூடாது என்று தகரம் சொன்னபடியே சொம்பு  நீரை குழாயில் கொட்டி பம்ப் அடித்து நீர் வந்து குடித்து விட்டு சொம்பை மீண்டும் நிரப்பியதோடு அல்லாமல்  ஒரு வரி தகரத்தில் எழுதிவைத்தான். 

''தாராளமாக சொம்பை காலி பண்ணலாம். நம்பலாம். குழாய் வேலை செய்கிறது '

ரயில்களில் துர்கந்தம்.  கழிவறை பக்கமே  நகரமுடியவில்லை. 

''உபயோகித்தபின் மறக்காமல் தண்ணீர் ஊற்றவும்'' 
என்று ரயிலில் கழிவறையில் படித்தும் நீர் ஊற்றாத  ரொம்ப  படித்தவர்களாயிற்றே நாம். கழிவறையை அடுத்த பெட்டியில் துர்நாற்றத்தோடு  பிரயாணம் பண்ண தயங்கமாட்டோமே. 

\''துப்பாதே, குப்பை போடாதே, பூ பறிக்காதே''  
என்றெல்லாம் படிப்போம், அர்த்தம் மட்டும் புரியாதே.  பொது இடங்கள் சுத்தமாக இருந்தால்  நாமும் சுத்தமாவோம். 
கொரோனா  ஓடிவிடும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...