உடனே மனப்பாடம் பண்ணலாம். J K SIVAN
ம்ருத்யுஞ்ஜய ஜப மந்த்ரம் என்றால் இந்த கரோனா சமயத்தில் வீட்டை விட்டு எங்கோ ஒரு மலையை தேடி உச்சியில் உட்கார்ந்து கண் மூடி, சாப்பாடு தண்ணீர் இல்லாமல் தவம் இருப்பதோ ? என்ற பயம் வேண்டாம்.
இருந்த இடத்திலேயே மனது குவிந்து ஒருமித்து உள்ளேயே சொல்லிக்கொள்ளலாம். ரொம்ப சின்னது.
வேதகால ரிஷிகளில் இருந்து அடுத்த போர்ஷன் மாமா வரை எல்லாருக்கும் தெரிந்தது.நல்ல பலன் தரும். குணப் படுத்தும் கைகண்ட மருந்து. வெள்ளைக்காரர்கள் அறிந்து கொண்டு பயன் பெறும்போது நாம் கோட்டை விடுவது ரொம்ப பெரிய குற்றம்.
மிருகண்டு ரிஷிக்கும் அவர் மனைவி மருத்வதிக்கும் வருத்தம். குழந்தை இல்லையே . சிவ பக்தர்கள். சிவனை வேண்டினார்கள்
பரமேஸ்வரன் நேரில் வந்து ரெண்டுவித ஆப்ஷன் option கேட்கிறார்.
'' மிருகண்டு, உனக்கு சர்வ ஞானமும் அறிந்த அழகான பிள்ளை .. ஆனால் 16வயஸு தான் இருப்பான், அவன் வேணுமா, இல்லை ரெண்டும் கெட்டானாக மூளையே உபயோகப்படுத்தாத ஒரு பிள்ளை -- 100 வயசு இருப்பான் அவன் வேணுமா?''
''ஈஸ்வரா, எனக்கு வேறே வழியே இல்லையே. 16 வயஸு புத்திசாலியையே கொடுங்கோ ''வருஷம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. மேலே எழுதின வரியிலிருந்து இந்த அடுத்த வரி வருவதற்குள் 16 வருஷம் ஓடிவிட்டதே. மார்கண்டேயனுக்கு அது தான் அவனுக்கு கடைசி வருஷம் என்று தெரியாமல் வளர்த்தார்கள்.
அன்று 15 முடிகிறது 16 ஆரம்பம். பிறந்தநாள் அன்று பெற்றோர் எதற்கு கண்ணீர் வடிக்கி றார்கள்? எதற்கு அழுகை? விஷயத்தை போட்டு உடைத்த பெற்றோரை சமாதானப் படுத்துகிறான். யோகி ஞானி அல்லவா?நேராக தான் தினம் வழிபடும் சிவாலயம் சென்றான். சிவலிங்கம் அருகே உட்கார்ந்து கொண் டான்.கரெக்ட்டாக டூடி முடிக்க யமதூதர்கள் வந்தார்கள். மார்க்கண்டேயன் வீட்டில் இல்லை. கோவிலுக்கு போனார்கள். எப்படி சிவலிங்கம் அருகே இருப்பவனை கயிற்றால் தூக்கி இழுப்பது?
''எஜமான் மார்க்கண்டேயனை கொண்டு வரமுடியாது. சிவலிங்கத்தை இருகக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான்''யமன் வந்தான்
.''மார்கண்டேயா, வா விளையாடாதே. உன் காலம் முடிந்துவிட்டது. சீக்கிர வெளியே வா. எனக்கு நிறைய இடம் போகவேண்டும். ''பதில் பேசாமல் மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை இன்னும் கெட்டியாக அணைத்துக் கொண்டான்.யமன் பாசக்கயிற்றை வீசினான்.சிவன் மீது பாசக்கயிறு விழுந்தது. லிங்கத்திலிருந்து காலனை ஸம்ஹாரிக்க மூர்த்தி எழுந்தது. மறலியை (யமனை) காலால் உதைத்தது. மார்க்கண்டேயன் என்றும் 16 சிரஞ்சீவியானான்.
இந்தக்கதை எல்லா ஹிந்துக்கள் வீட்டிலும் கேட்ட, கேட்கவேண்டிய கதை.
சிவன் ருத்ரன். அதே நேரம் காருண்யமானவன். மார்கண்டேயனுக்கு அவன் ம்ருத்யுஞ்ஜயன் . காலத்தை வென்றவன். எத்தனையோ குடும்பங்களில் ம்ருத்யுஞ்ஜயன் உண்டு. என் பெரியப்பா ஒருவர். வெகுகாலம் வாழ்ந்தார்.
மகா மிருத்யுஞ்ஜய மந்த்ரம் ரிக்வேதத்தில் (மண்டலம் 7 ஸ்லோகம் 59) இயற்கையின் சக்திகள் எல்லாம் சிவனின் குழந்தைகள். மருத்துகள் எனும் தேவதைகள் புயல், சூறாவளி போன்ற காற்றின் சீற்றத்தை கட்டுப்படுத் துபவர்கள் .உயிர் மூச்சும் காற்று தானே. அதை ஜெயிக்கும் மந்திரம். ம்ருத்யுஞ்ஜய மந்த்ரம். சுபத்தை, சுபிக்ஷத்தையும் வாரி வழங்கும். வேதங்களின் இதயம் இந்த மந்திரம். காயத்ரி மந்திரம் போன்று சர்வ சக்தி வாய்ந்தது.
ॐ त्र्यम्बकम् यजामहे सुगन्धिम् पुष्टिवर्धनम् । उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्
''OM. Tryambakam yajamahe Sugandhim pushti-vardhanam Urvarukamiva bandhanan Mrityor mukshiya mamritat''
ஓம். த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம், உர்வாருகமிவ பந்தனான் ம்ரித்யோர் முக்ஷீய மாம்ருதாத் :
வெள்ளரிச் செடியில் காய் பழுத்ததும் யாரும் அறுக்காமலே தானாகவே செடியிலிருந்தும், கொடியிலிருந்து, விடுபட்டு விடும். எவ்வளவு அருமையான உதாரணம். வாழ்க்கையில் பந்தங்களை சுவைத்து அனுபவித்தாயிற்று. இனி தேவையில்லை என்று நாம் ஒதுங்கி பரமனை நாட வேண்டும். இது தான் நாம் பழுப்பது.
மத்த எல்லா செடி மரத்திலிருந்தும் காய் பெரிசாகி, பழமாகி வெயிட் தாங்காம 'பொத்'' துன்னு கீழே ஒரு நாள் விழும்.
வெள்ளரிச்செடியில் கொடி தரையிலே படரும். கொடியில் பூசணி, பரங்கி மாதிரி வெள்ளரியும் தரையில் தான் இருக்கும்.
ஆனால் நன்னா பழுத்ததும் செடி கொடி தானாகவே வெள்ளரிப் பழத்தை விட்டுடும் . இதுவும் அதிலிருந்து இருக்கிற இடத்திலேயே விடுபடும். வாழ்க்கையில் இருந்துண்டே ஒருநாள் இதிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடையறதுக்கு இது நல்ல உதாரணம்.
'உர்வாருகமிவ பந்தனாத் முக்க்ஷீய' எஎன்றால் 'வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து விடுபடுவதுபோல, என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும்' என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று மஹா பெரியவா சொல்வதை கேட்போம்:
மஹா பெரியவா: '' மற்ற பழங்கள் போல் அல்லாமல், வெள்ளரிப்பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும். வெள்ளரிக்கொடி, தரையோடு தரையாய்ப் படரும். அதனால், வெள்ளரிப்பழமும், தரைத் தளத்திலேயே பழுத்துக் கிடக்கும். அது பழுத்தவுடன், அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள், இலைகள் போன்றவை தன்னால் அந்தப் பழத்தை விட்டு விலகும். அதாவது, பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது. அதுபோல, ஞானிகளுக்கு, அவர்கள் பந்தம், பற்றை விட்டு விலக வேண்டுமென்பதில்லை. சரியான தருணத்தில், 'இவர் பழுத்து விட்டார்' எனத் தெரிந்தால், பந்தம், பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே - எப்படி வெள்ளரிக்கொடி தன் பழத்தை விட்டு விலகுகிறதோ, அது போல - விலகி விடுமாம்.'' எவ்வளவு நுண்ணிய கருத்தை தெள்ள தெளிவாக வெள்ளரிப்பழம் போல வெள்ளரியை வைத்தே உதாரணம் காட்டிய மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்லோகம்.''
மரணம் எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று. ஆனால் சிலர் விபத்து காரணமாகவோ அல்லது நோய் காரணமாகவோ விதி முடிவதற்கு முன்பே மரணம் அடைவதுண்டு. இதை துர் மரணம் என்பர். முக்கண்ணனை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு துர் மரணம் நேராது. சிவனுக்குரிய மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஒருவர் முறையாக ஜபித்தால் விதிப்படி அவர்கள் வாழ வேண்டிய முழுமையான வாழ்வை வாழ்ந்த பிறகே மரணம் அவர்களை அண்டும். அதுவரை எக்காரணம் கொண்டும் மரணம் அண்டாது. மரணப்படுக்கையில் இருப்பவர்களை கூட காக்கும் சக்தி பெற்றது மிருத்யுஞ்ஜய மந்திரம்
கமகமவென்று விபூதி வாசனை அடிக்கும். பக்தர்களுக்கு கருணையம் வரங்களையும், கேட்டபடியே, அள்ளி அள்ளி தருபவர் பரமேஸ்வரன். சிவனே உன்னை பூஜித்து வழிபடுகிறோம். காம்பில் இருந்து வெள்ளரிப் பழம் எப்படி விடுபடுகிறதோ அது போல மரணத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்து சன்மார்க்க நெறியில் இருந்து பிறழாமல் வாழ்ந்திட அருள்பாலிக்க வேண்டுகிறேன். சிவனை வேண்டி ஜெபிக்கும் மஹா ருத்ர மந்திரத்தில் கடைசியில் வருவது இந்த ம்ருத்யுஞ்ஜய மந்திரம்.
எத்தனையோ சினிமா பாடல்கள் ''வாடா மச்சி வாழக்கா பஜ்ஜி, ஒத்தை ரூவா நோட்டு, நான் ஒரு முட்டாளுங்க'' போன்ற கீர்த்தனை களை இரவு பகலாக சாஹித்யம் செயகிறோமே, ரெண்டே வரி கொண்ட மேற்சொன்ன மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை நிமிஷத்தில் மனப்பாடம் செய்யலாம். விடாமல் சொல்லலாம்
குழந்தைகளை சொல்ல வைக்கலாம்.
எப்படி கரோனா சமயத்தில் வீட்டில் இருக்கும் நேரத்தில் காசில்லாமல் ஒரு நல்ல யோசனை?
No comments:
Post a Comment