ஆனந்த ராமாயணம் J K SIVAN
11 ராவண சந்நியாசி வந்தான்
மூன்று லோகங்களிலும் தன்னை எதிர்க்க எவருமின்றி, சர்வ வல்லமை படைத்த தசமுகன், பத்து தலை ராவணேஸ்வரனுக்கு தனது அன்
புத் தங்கை தலைவிரி கோலமாக, ரத்தம் சொட்ட, மூக்கு, காது எல்லாம் அறுபட்டு அலங்கோலமாக அழுது கொண்டு எதிரே நின்றால் எப்படி இருக்கும்? உடைவாள் மேல் கை செல்ல,
புத் தங்கை தலைவிரி கோலமாக, ரத்தம் சொட்ட, மூக்கு, காது எல்லாம் அறுபட்டு அலங்கோலமாக அழுது கொண்டு எதிரே நின்றால் எப்படி இருக்கும்? உடைவாள் மேல் கை செல்ல,
''சூர்ப்பனகை, என்ன இது, யார் இப்படி காயப்படுத்தியது ? எங்கே அவன்? இன்னுமா உயிரோடு இருக்கிறான்? மஹா சக்தி வாய்ந்த சகோதரர்கள் கரன், தூஷணன், திரிசிரஸ் பாதுகாப்பில் உள்ள உனக்கு இது எப்படி நேர்ந்தது?
''அண்ணா, நீ பரம முட்டாள் என்று நிரூபித்துவிட்டாய். பெரிய ராஜாக்களின் தூதர்கள், உளவாளிகள் அவ்வப்போது உலகில் நடக்கும் விஷயங்களை ராஜாவுக்கு சொல்வார்கள். உனக்கு உன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லையே!''
''என் தங்கை என்பதால் பிழைத்தாய். என்ன சொல்கிறாய் நீ?'
''நீ முட்டாள் என்றேன். கரன், தூஷணன், திரிசிரஸ் பதினாலாயிரம் அசுரர் வீரர்கள் அத்தனை பேருமே விளக்கின் முன் விட்டிலாக கணநேரத்தில் மாண்டுவிட்டார்கள். முன்பே சுபாகு கொல்லப்பட்டான். தாடகை அழிந்தாள் மாரீசன் எங்கோ கடலில் தூக்கி வீசி எறியப்பட்டான் ... எல்லாம் ஒரு மனிதனால் நடந்தும் உனக்கு ஒன்றுமே தெரியவில்லை...
''உனக்கு என்ன நேர்ந்தது என்று சொல்?''
''பஞ்சவடியில் ஒரு பர்ணசாலையில் ஒரு அழகான பெண், உலகத்தில் அவளைப்போன்ற அழகியே இல்லை, என்பதால் அவளைக் கொண்டு வந்து உனக்கு பரிசாக கொடுக்கலாம் என்று எண்ணி நெருங்கியபோது லக்ஷ்மணன் என்பவனால் இந்த கதி நேர்ந்தது. லக்ஷ்மணன் என்பவன் ராமனின் சகோதரன். அவன் தான் தூங்கிக் கொண்டிருந்த என் மகன் சாம்பவனையும் கொன்றவன். இதற்கெல்லாம் பழி தீர்க்க முடியும் உன்னால் என்றால் உடனே அந்த சீதையை இங்கே கொண்டு வந்து விடு. இல்லாவிட்டால் பேடியாக ஓடி
ஒளிந்துகொள்''
''நிறுத்து, நான் அவர்களைக் கொன்று, சீதையுடன் இங்கு வந்தவுடன் மேற்கொண்டு பேசு''
ராவணன் கிளம்பினான். மாமன் மாரீசனைச் சென்று பார்த்தான்.
''என்ன தசகண்டா இப்படி ஓடி வருகிறாய்? என்ன விஷயம் ''
''மாமா நம் சூர்பனகைக்கு இரு மானுடர்கள் தீங்கு செய்து விட்டார்கள். உடனே பழி தீர்க்க வேண்டும்'' என்று விஷயம் சொன்னான்.
''உன் தங்கையால் விளைந்த புது ஆபத்து இது. ஏற்கனவே நான் விஸ்வாமித்ரன் யாகத்தில் அதை தடுக்க சென்றபோது என்னுடன் வந்த சக்திவாய்ந்த சுபாகு மாண்டான். நான் இந்த கடலில் தூக்கி எறியப்பட்டு உயிர் பிழைத்தேன்'. '' ரா'' என்ற எழுத்தை கேட்டாலே எனக்கு உடல் நடுங்குகிறது. உயிர் ஊசலாடுகிறது. நீ அவனை போய்ப் பார்த்தால் திரும்பி நான் உன்னை பார்க்க முடியாது. ஜாக்கிரதை.''
''மாமா வாயை அடக்கி பேசு. நான் சொல்வதை கேட்காவிட்டால் உனக்கு என் கையாலேயே மரணம்.' யோசித்து நான் ஒரு திட்டம் தீட்டி இருக்கிறேன். அதன் படி செய். நீ உடனே ஒரு மான் உருவம் கொண்டு பஞ்சவடி செல் ராமன் சீதை முன்பு விளையாடி அவளை மயக்கு. ராமன் உன்னை பிடித்து தர வருவான். போக்கு காட்டி தொலை தூரம் அவனை ஓட விடு. அங்கிருந்து ராமன் குரலில் ''ஹே லக்ஷ்மணா'' என்று அலறு . லக்ஷ்மணனும் ராமனுக்கு ஆபத்து என்று உன்னிடம் ஓடி வருவான். தனியாக விடப்பட்ட சீதையை நான் பார்த்துக் கொள்கிறேன். கிளம்பு உடனே ''
மாரீசன் கெட்டிக்காரன். எப்படியும் மரணம் நிச்சயம் என்பது தெரிந்து விட்டது. ஒரே ஆப்ஷன் தான் இருக்கிறது. யார் கையால் சாவது? ராவணன் கையால் சாவதை விட ராமன் கையால் மரணம் சிறந்தது என்று முடிவெடுத்தான். காரியம் வெற்றியானால் பாதி ராஜ்ஜியம் தருகிறேன் என்று வேறு சொன்னான் ராவணன் ''
மாரீசன் ராவணனோடு ரதத்தில் ஏறினான். பஞ்சவடி சென்றார்கள். தூரத்திலேயே ரதம் நின்றது. மாரீசன் தங்கநிற மானானான். பர்ணசாலை அருகே அமர்ந்திருந்த மூவரை பார்த்தான் சீதையின் கண்ணில் படும்படி ஒரு பொன்னிற மான் அழகாக விளையாடியது. சீதைக்கு அதை ரொம்ப பிடித்தது. அது உண்மை சீதை அல்ல. சாயா சீதை. மானும் நிஜமல்ல ராக்ஷஸன். எல்லாமே நாடகம். நடக்கப்போவதை எல்லாம் நன்கு அறிந்த ராமன் '' லக்ஷ்மணா நீ சீதைக்கு காவல் இரு. நான் அந்த மானைப்பிடித்துக்கொண்டு வருகிறேன்'' என்றான். மானை துரத்தி ஓடினான்.
வெகுநேரம் ஆகியது. மான் பிடிபடவில்லை. ராமனை வெகுதூரம் காட்டுக்குள் இழுத்துச் சென்றது. கடைசியில் ராமன் ஒரு அஸ்த்ரத்தை எடுத்து அதன் மேல் பிரயோகிக்க மான் திடீரென்று ராமன் குரலில் வலியோடு '' ஹே லக்ஷ்மணா, ஹே சீதா... நான் இறந்தேன்'' என்று கத்தியது. மாரீசன் வேலை முடிந்து மரணமடைந்தான். காற்றில் எங்கோ நடுக்காட்டில் ஒலித்த ராமனின் அபயக் குரல் சீதைக்கு கேட்டது.
''ஐயோ ராமனுக்கு ஏதோ ஆபத்து. லக்ஷ்மணா உடனே ஓடு. ராமனைக் காப்பாற்று...''
''அம்மா எனக்கும் கேட்டது. ஆனால் இது ராமன் குரல் அல்ல... கவலைப்படாதீர்கள்...'' எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக சீதை அவனை விரட்டினாள் . தகாத வார்த்தைகளை வீசினாள் ஏசினாள் என்று சொன்னாலே போதும். என்ன என்று எழுத அவசியமில்லை. ''
''அம்மா, நீங்கள் என்னை எவ்வளவு இழிவாக பேசினாலும் என் கடமையை செய்கிறேன். உங்கள் வாக்குப்படியே அண்ணனை தேடிச் செல்கிறேன் . தயவு செய்து நான் கிழிக்கும் இந்த கோட்டை மட்டும் தாண்டி வெளியே வராதீர்கள். இது உங்களை நான் வரும்வரை பாது காக்கும். எல்லோருக்கும் இப்போது தெரிந்த வார்த்தை. '' லக்ஷ்மண் ரேகா' . அதை வட்டமாக சீதையை யின் பர்ணசாலையை சுற்றி கிழித்தான். ராமனைத் தேடி ஓடினான்.
இதெல்லாம் சரியாக எதிர்பார்த்தபடி நடப்பதை அறிந்த ராவணேஸ்வரன் ஒரு சந்நியாசி வேடத்தில் '' ''நாராயண'' என்று வெளிப்படுகிறான். பிக்ஷை கேட்கிறான். கோட்டுக்குள்ளிருந்தே ''இந்தாருங்கள்'' என்று சீதை அளித்ததை ஏற்கவில்லை.
''ராமரின் க்ரஹ தர்மத்திற்கு இது தக்கதல்ல. வாசலுக்கு வெளியே வந்து அல்லவோ பிக்ஷை இடவேண்டும்''
லக்ஷ்மண ரேகைக்கு வெளியில் இடது காலை வைக்கிறாள். ராவணன் லபக்கென்று சீதையை பிடித்துக்கொண்டு சந்நியாசி வேஷம் களைந்து, கோவேறு கழுதைகள் பூட்டிய தனது ரதத்தில் வைத்து வேகமாக செல்ல, எதிரே ஜடாயு வந்தான். தடுக்கிறான் பெரிய யுத்தம் நடக்கிறது. எட்டு கோவேறு கழுதைகளையம் கொன்றான் ஜடாயு. ராவணன் வில் முறிந்தது. பத்து க்ரீடங்களும் தரையில் உருண்டது. ஒருவாறு ஜடாயுவை தனது மந்திர சிவனளித்த வாளால் இறக்கைகளை துண்டித்துவிட்டு சீதையை தூக்கிக்கொண்டு ஆகாயமார்க்கமாக இலங்கை புறப்பட்டான் ராவணன்.
சொல்லமுடியாத வருத்ததுடன் தனது ஆபரணங்களை கழற்றி சீதை தனது உத்தரீயத்தை கிழித்து அதில் முடிந்து கீழே ஒரு மலை மேல் சில வானரங்கள் உட்கார்ந்திருப்பதை கண்டு அவற்றை நோக்கி வீசினாள் .
சீதையை இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்த ராவணன் பல ராக்ஷஸிகளை அவளுக்கு காவல் வைத்துவிட்டு தனது மாளிகைக்கு சென்றான்.
ப்ரம்ம தேவாதி தேவதைகள் நடந்ததை கண்காணிக்கிறார்கள். பிரமன் உத்தரவுப்படி தேவேந்திரன் சிறிது பாயசம் ரகசியமாக சீதைக்கு கொண்டு தருகிறான். அதை பருகினால் வருஷக் கணக்கில் பசிக்காது. அதில் சிறிதை , ஆகாயத்தில் தேவர்களுக்கும், ராமர் லக்ஷ்மணர்களுக்கும், அருகில் இருந்த திரிசடை எனும் ராக்ஷஸிக்கும் கொடுத்துவிட்டு சீதை தானும் சிறிது சாப்பிட்டாள் என்கிறது வால்மீகியின் ஆனந்த ராமாயணம். நான் இதுவரை கேள்விப்படாதது.
ராவணன் மந்திராலோசனை நடத்தி பதினாறு வலிவுமிக்க ராக்ஷஸர்களை அழைத்து ராமலக்ஷ்மணர்களை கொல்லும்படி அனுப்ப அவர்களை பாவம், வழியில் கபந்தன் எனும் இன்னொரு ராக்ஷ்சன் அப்படியே ஒரே வாயில் விழுங்கிவிட்டான்...
இனி ராமனை தொடர்ந்து செல்வோம்...
''
No comments:
Post a Comment