அங்கே எல்லோரும் சௌக்யமா? J K SIVAN
இப்போது எல்லோரும் முக்கியமாக முதலில் கேட்கும் கேள்வி ''வேலை எதுவும் இல்லாம வீட்டிலேயே ஜாக்கிரதையா இருக்கியா?'' இப்படி ஒரு காலம் வரும் என்று எவரும் கனவு கூட கண்டதில்லை. வெளியே போகவே எவரையும் நெருங்கவே பயம் பழக்கமாகிவிட்டது.
சரி, அடுத்தது இன்னொரு கேள்வி. ''எல்லோராலும் அதிகமாக தொடர்ந்து விரும்பப் படும் ஒரு மலரின் பெயர் சொல்?''ரோஜா, மல்லிகை, தாமரை?.''...
''ஸாரி . இதெல்லாம் சாதாரண மலர்கள். மிகவும் விரும்பும் ஒரு மலர் 'ச்நேஹிதம் எனப்படும் நட்பூ . அது ஒரு அபூர்வ பாரிஜாத புஷ்பம். எல்லா சீசனிலும் கிடைப்பது, வாடாதது. வெள்ளிக்கிழமை விசேஷ நாளில் விலை ஏறாமல் இலவசமாகவே எப்போதும் பல முழங்கள் கிடைப்பது.
அது கிடைக்கும் விருக்ஷம் விசாலமான மனம். இந்த மலர் பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களும் தேடுவது. விசித்திரமானது. மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானது. கிருஷ்ணன் நமக்களித்த சிறந்த பரிசு. .
நட்பில் ''உள்ளொன்று வைத்து புறமொன்று கூறுதலுக்கு'' இடம் கிடையாது. பொய், அநியாயம், குறை, பொறாமை, இவற்றை அணுக வொட்டாத துல்லிய நிலை தான் சிறந்த நட்பு. வளரும் தன்மை கொண்டது. காலத்தை வென்றது. ஒருவன் சந்தோஷமாக இந்த உலகில் வாழ மிகவும் இன்றியமையாதது. உயிர் சக்தி என்று கூட சொல்வேன். ஒருவனது உண்மையான செல்வம் அவன் நண்பர்கள் குழாம் மட்டுமே. சமய சஞ்ஜீவிகள் உண்மையான நண்பர்கள். இந்த 40-45 நாள்களில் இதுவரை பேசாதவரை எல்லாம் கூட கூப்பிட்டு சௌக்கியமா கேட்கிறோம்... அவர்களுக்கும் நம்மோடு இப்போது பேசும் சந்தோஷம் முன்பு இல்லை.
'' உயிரைக்கொடுப்பான் யா அவன்'' என்று உண்மை நண்பனைப் பற்றி. எவ்வளவு பெருமையாக குரல் உயர்த்தி புகழ்கிறோம் பற்றி. இடுப்பு வேஷ்டி நழுவும்போது எப்படி கை தானாகவே அதைப் பற்றி இழுத்து மீண்டும் இடுப்பில் இருக்கக் கட்டிவிடுகிறதோ அதுபோல் நண்பன் என்கிறார் அனுபவ பூர்வமாக நமது திருவள்ளுவர்.
''என்னடா கஷ்டம் உனக்கு நான் இருக்கும்போது'' என்று ஒரு நண்பன் சொன்னால் நாம் ஆகாயத்தில் உலவுகிறோம்.
கிருஷ்ணன் அப்படிப்பட்ட ஒரு தூய நண்பன்.அர்ஜுனனுக்கு, திரௌபதிக்கு, பீமனுக்கு, குசேலனுக்கு, எண்ணற்ற பக்தர்களுக்கு, இன்னும் எத்தனை எத்தனை பேருக்கு உதவியிருக்கிறான்.
ஒரு ராஜாவுக்கும் பிசிர் ஆந்தையார் என்ற புலவருக்கும் அருமையான நட்பு பற்றி பள்ளி நாளில் படித்திருக்கிறேன். துரைவேலு முதலியார் தாமன் பிதியாஸ் என்ற ரெண்டு நண்பர்களைப் பற்றி தூங்கு மூஞ்சி மரத்தடியில் மேலே கிளைகளில் காக்கா கூட்டத்தின் சத்தத்துக்கிடையே சொன்னதும் நினைவில் வருகிறது. அது தியாகம். பின்னால் பள்ளியிறுதி பாடத்தில் இரு நகரங்களின் கதை என்று டிக்கன்ஸ் (tale of two cities )என்ற கதையில் சிட்னி கார்டன் தனது நண்பன் சார்லஸ் டார்னே வுக்காக தன் தலையை கொடுப்பான். ரொம்ப நாள் இந்த கதை என் மனத்தை பிழிந்து கொண்டே இருந்தது. துர்யோதனனும் கர்ணனும் எப்படிப்பட்ட நண்பர்கள். நண்பனுக்காக உயிரையும் கொடுத்தவன் கர்ணன். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தவன்.
நல்ல நண்பர்களை அறிந்து அவர்களை அடைவது ஒரு வரப்பிரசாதம். சுயநலக் கலப்பு, சந்தர்ப்ப வாதம், என்ன கிடைக்கும் என்று தேடுதல், இதெல்லாம் இல்லாத அபூர்வ பிறவிகள் என்றுமே இருக்கிறார்கள். நட்பைப் பெறுவது ஒரு கலை. அன்பு என்கிற ஊற்றில் விளைவது. தானாகவே இருவரிடம் இயற்கையாக பிறப்பது. மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டது. எல்லையற்ற வளர்ச்சி கொண்டது. மனநிலை ,எண்ணங்கள், விருப்பங்கள், கோட்பாடுகள், ஒன்றாகவே இருக்கும் சிலரென்ன பலரும் கூட நண்பர்களாகலாம்.
அகம்பாவம், தற்பெருமை நட்பை உடைக்கிறது. இக்குணம் கொண்டவர்கள் எவரோடும் நட்பாக இருக்க முடியாது. முகமூடி போட்டுக்கொண்டவனுடைய முகம் உண்மை உணர்ச்சியை காட்ட முடியுமா?. இப்போது எங்கும் தெருவில் வீட்டில் ரெண்டு கண் மட்டும் தெரிகிறது. முகமூடி.
கஷ்டங்கள் என்றும் தொடர்வதில்லை. நட்பு என்றும் நிலைப்பது. வாழ்க்கையை ஒரு போராட்டமாக பார்க்கிறோம். ஒரு பந்தயம். இந்த பந்தயத்தில் எவன் சாமர்த்தியக்காரனோ, எவன் சக்தியுள்ளவனோ அவன் மட்டுமே தப்பித்து பிழைக்கிறான். பெரிய மீன் சின்ன மீனைத் தின்று உயிர் வாழ்கிறது. நண்பனாக சிலரைக் ''காட்டிகொள்வது'' தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதாகும். தந்திரம். சமயத்துக்கேற்ற வேஷம்.
உண்மையான நண்பன் துன்பத்திலும் இன்பத்திலும் பங்கு கொண்டவன். இதால் என்ன? இன்பம் பெருகும், துன்பம் குறையும்.
முன் கை நீண்டால் முழங்கை தானே நீளும் என்பதன் அர்த்தம் நிறைய உதவு, உனக்கு பல மடங்கு உதவி தானே வரும் என்பது தான். நட்புக்கு வயசு வித்தியாசம் கிடையாது. ஜாதி, ஆண் பெண் பாகுபாடு உண்மையில் இல்லை. நீண்ட கால நட்பு தொடர்ந்த இன்பம் அளிக்கிறது. ஒழுக்கம் கட்டுப்பாடு, நேர்மை, நம்பிக்கை சமரச மதிப்பு, இவை ஒன்றே நட்பை வளர்க்கும். சுதந்திரமாக இயல்பாக பழகுவது நட்பு. குற்றம் குறை காண்பதல்ல.
நாம் எல்லோரும் அப்படிப்பட்ட நண்பர்களாக இருக்கலாமே.?
No comments:
Post a Comment