Monday, May 25, 2020

ANANDHA RAMAYANAM




ஆனந்த ராமாயணம் J K SIVAN

வரமும் வனவாசமும்

அயோத்தியில் ராமர் சுகமாக வாழ்ந்த காலத்தில் ஒருநாள் ஆகாயத்தில் நாரதர் தோன்றுகிறார். சீதை ராமன் இருவரும் அவரை வணங்குகிறார்கள்.

''ராம ப்ரபோ, உங்கள் அவதாரம் ராவணாதியரை வதம் செய்து ராஜ்யபரிபாலனம் செய்ய. அதற்காக
தேவர்கள் காத்திருக்கிறார்கள்'' என்று நாரதர் ஞாபகப்படுத்துகிறார்.

''அவ்வாறே நடக்கும் '' என்கிறார் ராமர். சீதையை அழைத்து ராமர் தனியாக அவளிடம்

''சீதா, என் தந்தை நாளையே எனக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்கிறார். அதை தடுத்து நான் ராவணாதியரை சம்ஹாரம் பண்ண தண்டகாரண்யம் செல்வேன். லக்ஷ்மணன் என்னோடு வருவான். நீ இங்கே தந்தை, தாய் இருவரையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்கிறாயா?''

''பிரபு நானும் தங்களோடு ஆரண்யம் வருவேன். அதற்கு மூன்று காரணம் உண்டு .

1. ஒரு வேத பிராமண ஜோதிஷ நிபுணர் குழந்தையாக இருந்தபோது என் கை ரேகையை படித்து, எனக்கு கணவனோடு வனவாச பிராப்தம் இருக்கிறது ''என்றார்.

2.என் ஸ்வயம்வரத்தில் நீங்களே வெற்றிபெற்று என்னை மணக்க வேண்டும். கடினமான அந்த சிவதனுசு உங்கள் கையில் பூமாலை போல் ஆக வேண்டும் என்று எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு 14 வருஷம் வனவாசம் செய்கிறேன் '' என்று வாக்கு கொடுத்தேன்.

3. சீதையை விட்டு ராமர் வனவாசம் செய்தார் என்பதை கல்பாந்தர ராமாயணம் சிரவணம் செய்யும்போது கேட்கவில்லை. அதற்காக வனவாசம் செல்லவேண்டும்.''

ராமர் அவள் தன்னோடு கானகம் செல்வதற்கு ஒப்புதல் தந்தார்.

அதற்கப்புறம் மின்னல் வேகத்தில் நடந்த நிகழ்ச்சிகள் சில:

1. தசரதர் வசிஷ்டரை அழைத்து ராமனுக்கு நாளைக்கே பட்டாபிஷேகம் செய்யவேண்டும். அதி உன்னத சுப கார்யங்களை ஒரு நாளைக்கு கூட தள்ளிப்போடக்கூடாது என்பதற்காக நாளைக்கு நல்ல முகூர்த்தத்தில் பட்டாபிஷேகம். அனைத்து ரிஷிகளையும் வரவழையுங்கள். சுமந்திரரை அழைத்த தசரதன் ''சுமந்திரா, வசிஷ்டர் நிச்சயித்த முகூர்த்த நேரத்தில் நாளைக்கே ராம பட்டாபிஷேகம். உடனே அனைத்து ராஜ்யாதிபதிகள், அரசர்கள் வந்து கலந்துகொள்ள அழைப்பு விடு. ஏற்பாடு செய்.'' என்கிறார்.

2. வசிஷ்டர் தசரதரை அழைக்கிறார்.
''தசரதா, உன்னோடு கௌசல்யா, சுமித்ரா இருவரையும் கூடவே அழைத்து வா ஒரு முக்கிய விஷயம்'' என கூற, அனைவரும் வந்து சேர
''நான் இப்போது சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. நாளை கைகேயி கேட்டு தசரதரி டமிருந்து பெற்ற இரு வரங்களின் படி, ராமன் பதினாலு வருஷம் கானகம் செல்வான். அவனுடைய அவதார நோக்கம் ராவணாதி அசுரர்களை அழிப்பது. ஆகவே அவனுக்கு யுவராஜா பட்டாபிஷேகம் நடைபெறாது. ஆனால் எல்லா ஏற்பாடுகள், அழைப்புகள் நடக்கட்டும். அவனுக்கு பதில் பரதன் இந்நாட்டு யுவராஜாவாகிவிடுவான்.

3. ரிஷி சாபத்தால் ராமனைப்பிரிந்த துக்கத்தில் தசரதன் விரைவில் இறந்து போவான். பின்னர் ராமன் ராஜ்யா பிஷேகம் போது விண்ணிலிருந்து கண்டு மகிழ்ந்து வாழ்த்துவான். .

இது விதி என்பதை விட தேவ கார்யம் என்று கொள்ளவேண்டும். சாதாரணமாக இதை அதிர்ச்சி அடையாமல் ஏற்றுக்கொள்வீர்கள்.
வசிஷ்டர் ராமரை அழைத்து '' ராமா , நாளைய தினம் உனது யுவ ராஜ்ய பட்டாபிஷேகத்துக்கு ஒப்புக்கொள் . பிறகு நடக்கவேண்டியவை நாடக காட்சிகள் போல ஒவ்வொன்றாக நடந்தேறும்.

மந்தரை என்று கூனி யாக சொல்லப்படுபவள் ஒரு தாதி. கைகேயியின் பணிப்பெண். ராமனை பிடிக்காதவள். தனது வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்தவள் தெருவில் ஜன நடமாட்டம், உற்சாகம் காணப்பட்டதால் கீழே வந்து விசாரிக்கிறாள்.

''என்ன விசேஷம் . இப்படி ஜனங்கள் நடமாடி எங்கும் பூமாலை தோரணங்கள் எல்லாம் கட்டுகி றார்கள்?'' தெருவில் இருந்த ஒருத்தி மந்தரையை உற்றுப்பார்த்து பேசுகிறாள் .


'''ஏன் உனக்கு தெரியாதா? ஊரெல்லாம் இது தானே இப்போ பேச்சு. தசரத மஹாராஜா, ராமனுக்கு நாளைக்கே பட்டாபிஷேகம் கட்ட திடீர் என்று முடிவு செய்துவிட்டார். ஊரே கொண்டாட்டமா இருக்கே. உனக்கு எப்படி தெரியாமல் போச்சு.?''

இந்த சேதி மந்தரைக்கு எரிச்சலைத் தந்தது. யோசித்தாள் . உடனே கைகேயியிடம் ஓடிச் சென்றாள்.'

''என்னடி மந்தரை இப்படி ஓடிவருகிறாய்?''

''அட உனக்கும் தெரியாதா ? நாளைக் காலையில் தசரத மஹாராஜா ராமனுக்கு யுவராஜா பட்டாபிஷேகம் நடத்த போகிறார்.''

''ஆஹா என்ன ஆனந்த செவிக்கினிய சந்தோஷமான சமாச்சாரம் சொன்னாய் மந்தரை. என் கண்மணி ராமனுக்கு யுவராஜா பட்டாபிஷேகம் என்ற சுப செய்தி சொன்ன உனக்கு இந்தா உடனே என் பரிசு என ஒரு நவரத்ன மாலையை தனது கழுத்தில் இருந்து கழற்றி மந்தரையிடம் தருகிறாள் கைகேயி.
நகையை விட்டு எறிகிறாள் மந்தரை.

' நீ பைத்தியமா ?''முட்டாளா?''

'' என்ன பேசுகிறாய் நீ மந்தரை? இன்று உன் நடத்தை வித்யாசமாக இருக்கிறதே?''

''யோசிக்காமல் சந்தோஷப்படும் முட்டாள் நீ. உன் கதி நாளையிலிருந்து என்ன என்று கொஞ்சமும் சிந்தித் தாயா? நீ இனிமேல் கோசலையின் வேலைக்காரி. உன் பிள்ளை பரதன் சத்ருக்னர்கள் எடுபிடி. உனக்கு இருக்கும் ஒரே வழி முன்பு நீ தசரதனிடமிருந்து பெறவேண்டிய ரெண்டு வரங்கள் .
.
''மந்தரை எனக்கு தலை சுற்றுகிறதே நீ சொல்வதைக்கேட்கும்போது. அப்படி எல்லாம் கூடவா நடக்கும்?''

''சூது வாது தெரியவில்லை. உலகம் புரியவில்லை. ஏதோ கனவில் வாழ்ந்தால் எப்படி புரியும்?''

''மந்தரை நான் என்ன செய்யவேண்டும் என்கிறாய் சொல்"

''இன்னும் ஒன்றும் குடி முழுகி போய்விட வில்லை. உடனே கோபம் தணிய என்று பெண்களுக்கு தனியாக இருக்கும் அறைக்கு செல். தலைமுடி அவிழ்த்து விரித்து, அழுக்கு உடை அணிந்து, தரையில் தலைவிரி கோலமாக ஆபரணங்களை, மணமான பெண்கள் பிரியக்கூடாத சுப ஆபரணம் ( தாலியை சொல்கிறாள்) கூட அவிழ்த்து எறி . நெற்றியில் ஒன்றும் இட்டுக்கொள்ளாதே.... (அப்புறம் கைகேயிக்கு அந்த பாக்யம் கிடைக்கவே இல்லை) தசரதன் உன்னிடம் பட்டாபிஷேகம் விஷயம் சொல்ல வருவான். அப்போது ''ஓ'' வென்று அழு. அவன் கொடுத்த வாக்கின் படி ரெண்டு வரங்கள் பாக்கி இருப்பதை இப்போதே கேள்.''

''என்ன கேட்கவேண்டும் ?''

''ஒன்று பரதன் முடிசூடவேண்டும் மற்றொன்று ராமன் 14வருஷங்கள் கானகம் செல்லவேண்டும்'' இந்த வரம் நீ பெற்றால் பரதன் சத்ருக்னன் இல்லாத நேரத்தில் செய்யப்பட்ட அவசர ராம பட்டாபிஷேக முடிவு தடுக்கப்படும்.'' செய்வாயா?. பொம்மையாக தலையாட்டினாள் கைகேயி.

தசரதன் ஆசையோடு ராம பட்டாபிஷேகம் சொல்ல வந்தவன் கைகேயின் கோலம், அழுகை, கண்டு திகைத்தான். அவள் அவன் வாக்கு கொடுத்த ரெண்டு வரங்களை கேட்டதும் துடித்தான். கொடுத்தான். அவை அவனை மூர்ச்சையாக்கி நெடுமமாக கீழே சாய்த்தது.

மந்திரி சுமந்திரர் ஓடி வந்தார். அவரிடம் ''ராமனை இங்கே உடனே அழைத்து வாருங்
கள் '' என்றாள் கைகேயி. ராமன் வந்தான். தந்தையின் நிலை அறிந்தான். கைகேயி

''ராமா, இது தந்தையின் ஆணை அப்பா. நீ உடனே 14 வருஷம் கானகம் செல்லவேண்டுமாம்'' என்றாள்.
அருகே சுருண்டு கிடந்த தந்தையை வணங்கிய ராமன் ''அப்பா சிறிதும் வருந்தவேண்டாம். சிறிய அன்னை சொல்படி, அவர்கள் மனக்கவலை தீர, இதோ நான் உடனே நான் கானகம் செல்கிறேன்.''

''என் குழந்தே.....என்னை விட்டு பிரிகிறாயா.......'' வார்த்தைகள் திண்டாடி வெளியே வந்து.... தசரதன் மீண்டும் மூர்ச்சை அடைந்தான். ராமன் தாய் கோசலையிடம் சென்றான். ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்து விஷயம் சொல்லி, அவளை மற்ற பெண்களை எல்லாம் சமாதானம் செய்தான். சீதைக்கு விவரங்கள் சொன்னார். விஷயமறிந்த லக்ஷ்மணன் என்ன சொல்லியும் பிடிவாதமாக

''நீங்கள் தனியாக போகப்போவதில்லே. நான் உங்களுக்கு முன்பே ரெடி'' என்றான்.

யாத்ராதானம் அக்னிஹோ
த்ராக்னி எல்லாம் கிரமப்படி செய்து முடித்து ராமர் சீதை லக்ஷ்மணன் பின் தொடர தந்தையிடம் விடைபெற செல்கிறார்.''கைகேயியிடம் ''அம்மா நான் காட்டுக்கு செல்கிறேன்'' என்ற போது அவள் தயாராக வைத்திருந்த மரவுரிகளை தருகிறாள். ராம லக்ஷ்மணர்கள் அணிய, சீதைக்கு மரவுரி தரித்துக்கொள்ள தெரியவில்லை. ராமரே உதவுகிறார். வசிஷ்டர் கைகேயியை கோபிக்கிறா்ர்.
'
''ராமன் தான் காட்டுக்கு செல்லவேண்டும் என்று வரம் பெற்றாய். எவ்வாறு லக்ஷ்மணனுக்கும் சீதைக்கும் மரவுரி தர துணிந்தாய்?'' சீதைக்கு திவ்ய வஸ்திரங்களை அளிக்க உத்தரவிடுகிறார். சீதை மரவுரி தரிக்க முடிவு செய்துவிட்டாள் .

தசரதர் பேச முடியாமல் தளர்ந்து மயங்கியவாறு, கொடுத்த வாக்கில் கட்டுப்பட்டு ''சுமந்திரா, தேரை கொண்டுவா. இந்த மூன்றுபேரையும் கானகத்துக்கு அழைத்துச் செல். ''

தந்தை தாயை வலம் வந்து வணங்கிய ராமர் சீதை லக்ஷ்மணன் அனைவரிடமும் விடைபெற்று ரதத்தில் ஏறினர் .

''சாரதி சீக்கிரம் ரதத்தை செலுத்து'' என்று உத்தரவிட்ட ராமரையும் மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு ரதம் தமஸா நதிக்கரை சென்றது. ராமர் வயது அப்போது பதினெட்டு என்கிறார் வால்மீகி.

மேற்கொண்டு பயணம் செல்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...