கொஞ்சம் சிந்திக்க.....J K SIVAN
எத்தனை வருஷமானாலும், வயசானாலும் தெரியாத சில விஷயங்கள் எல்லோரிடமும் இருக்கிறது. இதற்கும் பிறப்புக்கும், படிப்புக்கும் துளியும் சம்பந்தமில்லை. சுய நினைவிலேயே வாழ்வது, பிறர் பேசுவதை கேட்காத காதுகளை வளர்ப்பது. பிறரை மதிக்க முயலாதது சில காரணங்கள்.
மற்றவர்களோடு , மக்களோடு பழகுவது என்பது ஒரு சிறந்த கலை. அதுவும் வியாபாரத்தில் ஈடுபடுவனுக்கு இது பெரிய மண்டை இடி. ஆபிசில் கணக்குப்பிள்ளையாகட்டும், வீட்டு நிர்வாகம் செய்யும் பெண்ணாகட்டும், மற்றவர்களை வேலை வாங்கி சிறப்பாக நிர்மாணிக்கும் கட்டிட கலைஞனாகட்டும், யாராக இருந்தாலும் இது அவசியம் ஒரு நிர்பந்தம். என்னதான் உயர்படிப்பு படித்திருந்தாலும், மற்றவர்களை வைத்து அனுசரித்து கூட்டு முயற்சியாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்றபோது ''மற்றவர்களோடு பழகுவது'' எப்படி என்பதை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.
எப்படி மக்களை கவர்வது?
எப்படி நம் மேல் கொஞ்சம் கவனம் வைக்கும்படி பண்ணுவது?
நமது எண்ணங்களை எப்படி அவர்களும் விரும்பும்படியாக செய்வது?
இதெல்லாம் புத்தகத்தில் படித்து வரும் ஞானமோ அறிவோ இல்லை. நடைமுறையில் பலரை கவனித்து சந்தித்து அதன் மூலம் தேர்வது. தெரிவது. இதற்கு மூலதனம் கடவுள் நமக்கு அளித்த கண், காது, புத்தி எல்லாம் தான். நமக்கு முன் வாழ்ந்தவர்கள் எப்படி இதெல்லாம் சமாளித்தார்கள் என்பது ஒரு பாடம்.
ராமசாமி நாயக்கரிலிருந்து ராபின்சன் க்ருஸோ வரை ஒவ்வொருவரும் எப்படி வாழ்ந்தார்கள் என்று அறிவது படிப்பினை.
அமெரிக்காவில் ஒரு பயங்கர கொடிய கொலைகாரன். மின்னல் வேகத்தில் துப்பாக்கியால் சுடுபவன். அவனைப் பிடிக்க போலீஸ் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவன் பிடிபடவில்லை. ஒருநாள் ஒரு பெண்ணோடு ஒரு கட்டிடத்தில் இருப்பது தெரியவந்து 150-200 போலீஸ் வீரர்கள் துப்பாக்கியோடு அவனிருந்த மாடியறை கட்டிடத்தை சூழ்ந்து கொண்டார்கள். அந்த அறையை தாக்கி சுட்டார்கள். அவன் ஒரு நாற்காலி அடியில் ஒளிந்து கொண்டு அவர்களை திருப்பி சுட்டான். அவன் கடைசியில் பிடிபட்டான். பிடிபடுமுன் ஒரு துண்டு காகிதத்தில் ஒரு வாசகம் எழுதி வைத்திருந்தான். உடலில் காயம். ரத்தம் சொட்டியிருந்த அந்த காகிதத்தில் அவன் சொன்னது:
'''நான் அணிந்திருக்கும் கனமான கோட்டுக்குள் ஒரு ஓய்ந்து போன கருணைமிக்க இதயம் ஒன்று இருக்கிறது. அது எவருக்கும் எந்த தீங்கும் செய்யாது.''
அவனை மின்சார நாற்காலியில் அமர்த்தி பரலோகம் அனுப்பினார்கள்.
அதுசரி அது பற்றி சாகும் முன்பு அவன் ''நான் பலரைக் கொன்றதற்காக என்று சொல்லவில்லை. நான் என்னை தற்காத்துக் கொண்டதற்காக'' என்று தான் சொன்னான். தான் தவறு செய்ததற்காக இந்த தண்டனை என்று தன்னைத் தானே குறை பட்டுக்கொள்ளவில்லை.
ஒருத்தர் மற்றவரை குற்றம் கண்டுபிடிப்பதோ, குறை சொல்வதோ, திட்டுவதோ கூடாது. எல்லோருமே கடவுளின் சிருஷ்டி. வேண்டுமென்றுதான் ஒவ்வொருவருக்கும் புத்தியை, வெவ்வேறாக வைத்திருக்கிறான். இதில் ஒரு வேடிக்கை. எவனுமே தான் செய்த தவறுகளை, தப்புகளை பற்றி கண்டுகொள்வதே இல்லை, பிறர் தவறுகளை, கொசுவாக அது இருந்தாலும் மலையாக்கி காட்டுகிறான்.
No comments:
Post a Comment