இது ஆனந்த ராமாயணம்.... J K SIVAN
..
வால்மீகி ரிஷி என்றவுடன் ராமாயணம் ஞாபகம் வருகிறதே. ஸ்ரீமத் ராமாயணத்தை போல் இன்னொரு ராமாயணமும் அவர் இயற்றியிருக்கிறார். ஆனந்த ராமாயணம் என்று பெயர். ராமாயணத்தில் ஒவ்வொரு அக்ஷரமும் புனிதமானது. 12,252 ஸ்லோகங்கள் கொண்ட திண்டு புஸ்தகம். வால்மீகி ராமாயணத்தில் இல்லாத விஷயங்கள் ஆனந்த ராமாயணத்தில் அநேகம்.
பிருகு வம்ச ப்ரசேதஸ், ருதம்பரா தம்பதிகளுக்கு ஏகப்பட்ட குழந்தைகள். இன்னொரு குழந்தை போகும் வழியில் காட்டில் பிறந்தது. அதை அங்கேயே விட்டுவிட்டு இமயமலை செல்கிறார்கள். குழந்தை இல்லாத ஜடன் என்ற வேடன் அழும் குழந்தையை எடுத்து ''வாலா ''என பெயர் சூட்டி வளர்க்கிறான். வாலாவுக்கும் பெரிய குடும்பம் 18 பிள்ளை 12 பெண்கள். கொள்ளை வழிப்பறி செய்வது தான் வாலாவின் தொழில். வழக்கம்போல் வழிப்பறி செய்யும்போது ஒருநாள் அகப்பட்டவர்கள் நாரதரும் அவரோடு இருந்த சப்தரிஷிகளும்.
''வாலா , நாங்கள் ரிஷிகள் பணம் பொருள் இல்லாதவர்கள் எங்களிடமிருந்து உனக்கு என்ன கிடைக்கும்? அது சரி எதற்கு நீ இப்படி வழிப்பறி கொள்ளை போன்ற பாப காரியத்தில் ஈடுபடுகிறாய்?'' -- நாரதர்.
''பாபம் புண்யம் எல்லாம் எனக்கு தெரியாது. என் குடும்பம், பிள்ளை குட்டிகள் ஜீவிக்க எனக்கு இது தான் வழி'''' இப்படி நீ பாபத்தில் சம்பாதிக்கும் பணத்தில் பொருளில் வாழும் அவர்களுக்கும் உன் பாபத்தில் பங்கு உண்டே? அது தெரியுமா என்று அவர்களை போய் கேள்''
''ஓஹோ அப்படியா. ஆமாம் அவர்களுக்கும் என் பாபத்தில் பாதிக்கு மேல் உண்டு .கேட்கிறேன்.''வாலாவின் மனைவி மக்கள் அவனுக்கு புரியும்படியாக சொல்லிவிட்டார்கள் '' ''இதோ பார் வாலா , உன் கடமை எங்களை பசியில்லாமல் உணவளித்து காப்பாற்றவேண்டியது. நாங்கள் உன்னை கொள்ளை அடிக்க சொல்லவில்லையே. நீயாக செயகிறாய். அதன் பாபம் உனக்கு தான். எங்களுக்கில்லை. நீ ஏதாவது புண்யம் செய்தால் அதன் பலன் எங்களுக்கும் உண்டு ''
அதிர்ந்து போன வாலா நாரதரிடம் ஓடினான். ''சாமி நீங்கள் சொன்னது சரி.என்னுடைய பாபம் தீர வழி சொல்லுங்க''''ராமா என்று சொல்லிக்கொடுத்தது அவன் வாயில் நுழையவில்லை. எதிரே ஒரு மரம் தெரிந்தது. அது என்ன மரம் ?'' என்கிறார் நாரதர்.''அதுவா. அது மராமரம் '' ''சரி இப்போது முதல் ''மரா மரா என்று விடாமல் சொல் ''உன் பாபம் போய்விடும்.'' என்று உபதேசித்தார் நாரதர்.வாலா தன்னை மறந்தான். விடாமல் ஒரே மூச்சாக ராம ராம என்று சப்தம் அவனிடமிருந்து வந்து. அவனைச்சுற்றி தான் புற்று எழும்பிவிட்டதே. நாரதர் மீண்டும் வருகிறார். புற்றிலிருந்து ராம சப்தம்.வாலாவுக்கு உபதேசித்தது நினைவுக்கு வருகிறது. ப்ரம்மா சரஸ்வதியை தியானம் செய்ய இந்திரன் வருணனை அனுப்பி மழை பொழிய புற்று கரைய, அதன் உள்ளிருந்து ப்ரம்ம தேஜஸ் மிக்கவராக வால்மீகி முனிவர் வெளிப்படுகிறார். வல்மீகம் என்றால் புற்று என்று அர்த்தம். அருகே தமஸா நதிக்கரையில் ஆஸ்ரமம்.
ஒரு நாள் யாரோ ஒரு வேடம் ஆஸ்ரமம் அருகே மரத்தில் கொஞ்சிக்குலாவிக்கொண்டிருந்த க்ரௌஞ்ச பக்ஷி ஜோடிகளின் ஆணை கொன்றுவிட்டான்.பெண் பறவை அளவற்ற சோகத்தில் அழுத குரல் வால்மீகிக்கு கேட்க வேடனை சபிக்கிறார். அந்த துயரம் மளமளவென்று ஸ்லோகங்களாக வருகிறது. ப்ரம்மா தோன்றி ''வால் மீகி, ராம பக்தனான உன்னிடமிருந்து வெளியான இந்த ஸ்லோகங்கள் தெய்வ சங்கல்பம். நாரதரிடம் ராம சரித்திரம் அறிந்து ஸ்லோகங்களாக இயற்றுவாய்'' என்று வரமளித்து நமக்கு 24000 ஸ்லோகங்கள் கொண்ட வால்மீகி ராமாயணம் ஏற்கனவே கிடைத்தாகிவிட்டது.
ஆனந்த ராமாயணம் பாராயணம் 41 நாட்கள் ஒரு நாள் ஒரு அத்யாயம் என்று பாராயணம் செய்பவர்கள் உண்டு. சிலர் ஒன்பதுநாட்கள் நவாஹமாக பாராயணம் செய்வார்கள். ஒரு புனர்வஸு ஆரம்பித்து அடுத்த புனர்வஸு வரையிலும் சொல்வது உண்டு. எண்ணற்ற காரிய சித்திகளில் ஒரு சில : மனசஞ்சலம் நீங்க, ம்ருத்யு பயம் நீங்க, ராஜாங்க காரியங்கள் வெற்றி பெற..... ''பிணிகள்'' காற்று சேஷ்டை நீங்க''. நமக்கு இப்போது அது தானே அவசியம்.
ஆனந்த ராமாயணம் சிவபெருமான் பார்வதி தேவிக்கு ராமர் சரித்திரத்தை ஆனந்தமாக சொல்வது.ராமருடைய ரகுகுலம் பெரிய நீண்ட வம்சம். ஆதி நாராயணனிலிருந்து, ..... தசரதன் வரையில் 63 தலைமுறை பேர்களை எழுதினால் படிக்காமல் ஓடிவிடுவீர்கள். தசரதனுக்கு மூன்று மனைவிகள் . கௌசல்யாவுக்கு பிறந்தவன் ராமன்.
இலங்கையில் ஒருநாள் ராவணன் பிரம்மாவை ''வாருமையா இங்கே என்று அழைத்து. எனக்கு என் மரணத்தை பற்றி தெரிய வேண்டும். யாரால் எனக்கு மரணம் என்று சொல்லும் ''
''ராவணேஸ்வரா, அயோத்தி மஹாராஜா தசரதன் கௌசல்யா தம்பதிகளுக்கு பிறக்கப்போகும் ராமனால் உனக்கு முடிவு' என்கிறார் பிரம்மதேவன். (இனி நான் சொல்வது புருடா இல்லை. ஆனந்த ராமாயணத்தில் இருக்கிறது)
ராவணன் உடனே அயோடத்தி செல்கிறான். சரயுவில் ஸ்னானம் செய்யும் தசரதனுடன் யுத்தம். எல்லோரும் நீரில் மூழ்க, தசரதரும் மந்திரி சுமந்திரனும் மெதுவாக தப்பித்து கரையேறுகிறார்கள். ராவணன் அதற்குள் கோசல ராஜ்ஜியம் சென்று ராஜாவை வென்று அவன் மகள் கௌசல்யாவை தூக்கிக்கொண்டு இலங்கை சென்றுவிட்டான். வழியில் ஒரு யோசனை. எப்படியும் தேவர்கள் கௌசல்யாவை தேடி வருவார்கள். ஆகவே கடலில் சந்தித்த ஒரு திமிங்கிலத்திடம் கௌசல்யாவை ஒரு பேழையில் வைத்து ''ஜாக்கிரதை'' என்று சொல்லி விட்டு போனான். திமிங்கிலம் பேழையொடு பல நீர்நிலைகளை அடைந்து சரயு பக்கம் வந்தபோது தப்பிய தசரதன் அந்த பேழையை பார்த்து அதனுள் இருந்த அழகிய கௌசல்யாவை காந்தர்வ விவாஹம் பண்ணிக்கொண்டான்.
சிரித்துக் கொண்டே ராவணேஸ்வரன் பிரம்மாவை அழைத்தான். ''ப்ரம்மா உன் வார்த்தையை பொய்யாக்கி விட்டேன். தசரதன் இல்லை. கௌசல்யாவும் இனி கோசலையில் இல்லை. எங்கே இருந்து பிள்ளை பிறப்பான் என்னை கொல்வான்?''
''தசக்ரீவா, நான் சொன்னது பொய்யல்ல. ஏற்கனவே தசரதனுக்கு கௌசல்யாவுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது.
வெகுண்ட ராவணன் திமிங்கலத்தை பிடித்து பேழையை மீட்டான். அதை திறந்து பார்த்தான். கௌசல்யாவிற்கு பதிலாக மூன்று பேர் இருந்தார்கள். வாளால் வெட்ட முயற்சித்தான்.
''ராவணா, பொறுமை கொள். பேழையில் கௌசல்யா இல்லை. மூன்று பேர்கள் உள்ளனர். இவர்களே கோடானு கோடியாக மாறினால் உன் நிலை என்ன? இந்த பேழையை ஓடி சாகேத நகரம் அனுப்பிவிடு '' என்றான் பிரமன்.சாகேத நகரத்தில் எறியப்பட்ட பேழையில் இருந்த மூவர் தசரதன், சுமந்திரர், கௌசல்யா. கோசல்ராஜன் விஷயம் கேட்டு வந்து முறைப்படி தசரத கௌசல்யா தீர்மணம் நடந்து அந்த ரகுவம்ச ராஜாவுக்கு கோஸ லேந்திரன் என்று பட்டப்பெயர். ராமனுக்கு இப்படி ஒரு பேர். மகத ராஜ குமாரி சுமித்திரை, கேகய ராஜகுமாரி கைகேயி ஆகியோரும் தசரதன் மனைவியானார்கள்.
ஒருமுறை தேவர்களுக்கு அசுரர்களுக்கும் பெரிய போர் உண்டானது. தசரதா அசுரர்களை அழிக்க தயாராகு என்று அசரீரி கேட்டு, கைகேயியுடன் தேரில் சென்றான். கடும்போர். தசரதனின் தேர் அச்சு முறிகிறது. கைகேயி ஏற்கனவே ஒரு முனிவரிடம் பெற்ற வரத்தால் இடது கையை முறிந்த தேர் அச்சாணியாக உபயோகித்து தேர் ஓடி தசரதன் அசுரர்களை வெல்கிறான். ''கைகேயி உன்னால் தான் வெற்றி உனக்கு ரெண்டு வரம் தருகிறேன் கேள் '' அப்புறமா கேட்கிறேனே இப்போது என்ன அவசரம் என்று '' வரத்தை ரிசர்வ் செயது வைத்துக்கொள்கிறாள் கைகேயி.
மேற்கொண்டு ஆனந்த ராமாயணம் தொடரட்டும்....
No comments:
Post a Comment