Tuesday, May 26, 2020

LIFE LESSON




மார்க்க பந்துவின் கேள்விக்கணைகள்    J K   SIVAN  


இன்று  காலை  10.20க்கு   மார்கபந்துவிடம்   டெலிபோனில்    சிக்கிக்கொண்டேன்.  ஒரு மணி நேரமாகியும்  போனை கீழே வைக்க  விட வில்லை.  விடாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். கேள்வி கேட்கிறார். சொன்னதை புரிந்து கொள்வதில்லை.  புரிந்தது என்று சொன்னாலும் உடனே அதை  பற்றியே  இன்னொரு கேள்வி? எப்படி புரியவைப்பது என்பதை விட எப்படி இவரிடமிருந்து விடுபடுவது என்று யோசிக்க வைக்கும் மனிதர். நண்பர்களை குறை கூறக்கூடாது. என்னை நினைத்து தானே  போன் செய்யவேண்டும் என்று தோன்றி பேசுகிறார். அவரை திருப்திப்படுத்த   தலையால் தண்ணி குடிப்போமே. 

ஒரு சில கேள்விகள் அவர் கேட்டதை செல்கிறேன். 
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை என்று சொல்வதை விட பல கேள்விகள் அவருக்குள் எழுகிறதே . விடை தேடுகிறாரே  என்று ஆச்சர்யப்பட வேண்டும்.

 ''ஸார், இந்த கொரோனா  ஒவ்வொருநாளும்  எத்தனை உயிர்களை தின்கிறது என்று படிக்கும்போது  பகீர் என்கிறது.  மரணத்தை நினைத்தாலே  கவலையாக, பயமாக இருக்கிறது. தூக்கம் வருவதில்லை. சாப்பாடு பிடிக்கவில்லை. நேற்று என் மனைவி ஐஸ் க்ரீம் தந்தாள். வேண்டாம் போ என்று ஒதுக்கிவிட்டேன். இன்னும்   எத்தனை நாள் ஐஸ் க்ரீம் சாப்பிடப்போகிறோம்?''

''மார்க்க பந்து எதற்கு வீணாக உங்களுக்கு கவலை ? மரணத்தை பற்றி  ஏன் நினைக்கிறீர்கள்?   நீங்களோ  நானோ  இருக்கும் வரை  அது வரப்போவதில்லை.   அப்புறம் அது ஒருநாள் வரும்போது நாம் இருக்க போவதில்லை. ஆகவே மரணத்தை நாம் சந்திக்கவே போவதில்லையே.   இப்படி நினையுங்கள்.   ஐஸ் க்ரீம் நிறைய  சாப்பிடுங்களேன். 

' அப்பாடா,   நிம்மதியாக இருக்கு இப்படி நினைத்தால் ''  
இருந்தாலும்  இறந்தாலும் என்னை யாரு நினைக்கபோகிறார்கள்?    கண்ணாடியில் பார்க்கும்போது என் முகத்தில் ஏதோ ஒரு சோகம் தெரியுது சார்.  ''

''ஸார்.  மார்கபந்து.  நீங்கள் ரொம்ப  சிந்திக்கிறீர்கள். உங்களை நீங்களே வாட்டி வதைத்துக் கொள்கிறீர்கள். சந்தோஷமாக இருங்கள்.   தெரிந்தவர் தெரியாதவர்  யார் எதிர்பட்டாலும்  ஒரு சின்ன புண்மறுவல். சிரிப்பு.  அந்த பழக்கம் வந்தவுடன் கண்ணாடியில் பாருங்கள்  . உங்கள்   சிரித்த முகம் , சிரிப்பு,  உங்களுக்கே பிடிக்கும்.  மற்றவர்களை சிரிக்க  வையுங்கள்,  அப்போது உங்கள் முகம் எல்லோருக்குமே  பிடிக்கும்'.இதற்கு காசோ பணமோ செலவழிக்க வேண்டாமே ஸார் ''

''என்ன சார் வாழ்க்கை இது?  ஏதோ சாகர வரைக்கும்.  அப்புறம் யாரு  நினைக்கபோகிறார்கள்?''

மார்கபந்து  இப்போது தானே சொன்னேன்.  தன்னம்பிக்கை, உற்சாகம் வேண்டும் சார் வாழ்க்கை
யில்.  

'' வாழ்க்கை  என்கிறது  நாம் சாகும் வரை மட்டும் அல்ல ஸார் .  மற்றவர்களின்_மனதில்_நாம்  வாழ்கின்ற வரையில்.  அதை புரிந்து கொள்ளுங்கள்.   மற்றவர்கள் மனதில் நிலைக்க நாம் அவர்களை பற்றி நிறைய  நினைக்கவேண்டும். ஏதோ நம்மால்  முடிந்த  சேவை,  தொண்டாற்றவேண்டும்.   முடிந்ததை சொல்லவேண்டும், செய்யவேண்டும், வழி காட்டவேண்டும். வழி தேட வேண்டும்,  கற்றுக்கொள்ளவேண்டும்.   நிறையவே இருக்கு.  என் காலத்தை நான் இப்படி தான் ஓட்டுகிறேன்.

''ஆசை ஆசை''  அது தான் சார்  நிம்மதியை குலைக்கிறது''  
 அடுத்த கேள்விக்கு தாவினார் மார்கபந்து 

''மார்கபந்து,  ஆசை விஷயத்தில் ஒரு டிப் கொடுக்கிறேன்.    ஆசைப்  படாதீர்கள். ஆசை படுவதை மறந்து விடுங்கள். ஆனால்  ஏற்கனவே  ஆசைப்பட்டதை மறந்து விட முடியாது. நினைவில் நிற்கத்தான் செய்யும்., அதை ஆராய்ந்து விலக்குங்கள் . ஆசை குறைய குறைய ஆனந்தம் அந்த இடத்தை பிடித்துக் கொள்ளும்.''

சார்.   மறுஜென்மம் எடுக்கும்போது  நீங்க சொல்றதெல்லாம்  நிறைய மனதில் நிறைந்து இருந்து சந்தோஷமாக பிறக்க வேண்டும்.''

''அப்படியில்லை  மார்கபந்து . நாம்  ஆசைப்படறபடி  மறுபடியும் ஒரு தடவை   எந்த ஒரு   மானுட  கருவறையிலும்  இடம் கிடைக்காது. அது ஏற்கனவே செய்த  புண்ய பலனால்  கிட்டுவது.   அதேபோல்  மரணமே போ என்று நாம் விரட்டுவதால், வெறுப்பதால் கல்லறை நம்மை விட்டு விலகாது.   ஆகவே தான்  இருக்கும் ஒவ்வொரு கணமும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.  இதற்கு என்று தனியாக  ஒரு பிறப்பு தேவையில்லை..

மேற்கொண்டு மார்கபந்து கேள்விகளை தற்போது நிறுத்திவிடுகிறேன் . உங்களுக்கு   அப்புறம் என்னை   கண்டால் ஓடி விட தோன்றும். நான் எழுதுவதை ஒரு எழுத்து கூட படிக்க மாட்டீர்கள். 

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.
என்பதால் இந்த கேள்வி பதிலை இதோடு தற்போது நிறுத்துகிறேன். 


மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம் அல்லவா.  அது தனிமையில் கிடைக்கும் என்கிறார்கள்.   உண்மையில்  சில நேரங்களில் தனிமை   அநேகருக்கு  கடினமாக இருக்கும்.  நண்பர்களே  என்னைப்  பொறுத்தவரை   வெகுநேரம் தனிமை தான் என்   இனிமையான தருணம்!..

 நான் எழுதுவது எனது அனுபவங்கள்.  புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...