ஆனந்த ராமாயணம் J K SIVAN
4 நாலு ஜோடி கல்யாணம்
சீதை யார்? ஒரு நீண்ட கதையை எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி தந்தாலும் அதன்
விறுவிறுப்பு குறையப்போவதில்லை.
பத்மாக்ஷன் எனும் ராஜா மஹாலக்ஷ்மி மகளாக பிறக்க தவம் இருந்து விஷ்ணுவிடமிருந்து ஒரு மாதுளையை பெறுகிறான். பிரித்தால் அதில் அழகாக குட்டி மஹாலக்ஷ்மி. பத்மை என்று பெயர். ஆசையாக வளர்த்தான். அழகாக பொருத்தமான கணவன் வேண்டுமே? ஸ்வயம் வரம் நடத்தினான். ஒரு யாகமும் நடத்தினான்
ராவணன் முதலான பல அரசர்கள் அவளை அடைய பங்கேற்க வந்தார்கள்.
''யார் ஆகாயத்தில் இருக்கும் நீல வர்ணத்தை எடுத்து உடலில் பூசிக் கொள்ள முடியுமோ அவனே பத்மையின் கணவன்'' என்று உரக்க கண்டிஷன் போட்டான் பத்மாக்ஷன்..
இது நம்மால் முடியாது என்று பல அரசர்கள் கழண்டு கொள்ள, சிலர் ஏமாற்றத்தில் பத்மாக்ஷனை எதிர்த்து யுத்தம் புரிகிறார்கள். பத்மாக்ஷன் அவர்களை போரில் வெல்கிறான். இதற்கிடையில் திகிலடைந்த பத்மை யாககுண்டத்தில் அக்னிப்ரவேசம் பண்ணுகிறாள். கோபமுற்ற அரசர்கள் அந்த நகரத்தையே தீக்கிரையாக்கினார்கள். பத்மாக்ஷன் அவன் ராணிகள் எல்லோருமே இறந்து போனார்கள்.
பத்மை ஒரு நாள் அக்னி குண்ட தீயில் இருந்து வெளியே வந்து குண்டத்தின் அருகே உட்கார்ந்திருந்தவளை ராவணன் பார்த்துவிட்டான். பிடிக்க ஓடிவருகிறான். அதற்குள் அக்னி குண்டத்தில் மறைந்துவிட்டாள் . அந்த இடத்தை தோண்டி பார்க்கிறார்கள். ஐந்து அதி அற்புத ரத்னங்கள் தான் கிடைத்தது. அவற்றை ஒரு பேழையில் போட்டு இலங்கை திரும்பி பூஜை அறையில் வைக்கிறான்.
''மந்தோதரி உனக்கு ஐந்து திவ்ய ரத்தனங்களை ஒரு பேழையில் வைத்திருக்கிறேன் பூஜை அறையில். எடுத்துக் கொள் '' என்று மனைவியிடம் சொல்ல, அவளால் அந்த பேழையை அசைக்க முடியவில்லை. ராவணனும் கஷ்டப்பட்டு எடுக்க முடியாமல் திணறி பேழையை உடைத்தால் உள்ளே பத்மை அழகாக சிரிக்கிறாள்.
''ஆஹா, இவள் தான் பத்மாக்ஷனின் மகள். இவள் ஸ்வயம்வரத்துக்கு தான் நான் சென்றேன். இவள் மாய சக்தி கொண்டவள் என்று நடந்த கதையெல்லாம் சொல்கிறான்.
மந்தோதரி ''ராவணேஸ்வர ப்ரபோ, இந்த குழந்தையை உடனே எங்காவது எடுத்து சென்று விட்டுவிடுங்கள். இவளால் உங்கள் உயிருக்கே ஆபத்து என்று எனக்கு நிச்சயமாக தோன்றுகிறது''
ராவணன் ''வீரர்களே இந்த பேழையை திறந்து பார்க்காமல் தூர தேசத்தில் எங்காவது எறிந்து விட்டு என்னுடன் வந்து சொல்லுங்கள் ''
''நாதா எறியவேண்டாம். எங்காவது ஒரு இடத்தில் யார் கையிலும் படாமல் புதைத்து விட செய்யுங்கள். அவள் சக்தி வாய்ந்தவள்''
அவ்விதமே ராவணனின் ஆட்கள் புஷ்பகவிமானத்தில் சென்று கடைசியில் மிதிலையில் ஒரு வயலில் ஆழமாக குழிவெட்டி அதில் பேழையை புதைத்து விடுகிறார்கள்'' ராவணன் சேதி அறிகிறான்.
விதேக ராஜன் ஜனகன் தான தர்மங்கள் செய்பவன். ஒரு பிராமணனுக்கு அந்த நிலத்தை தானம் செய்ய, அந்த பிராமணன் அதில் ஏர் உழ, கலப்பை நுனியில் பேழை சிக்கி வெளியே வர, அந்த வேதியன் ஆச்சர்யத்தோடு விதேக ராஜன் ஜனகனிடம் வயலில் கிடைத்த பேழையை கொண்டு தருகிறான்.
'வேதியரே, உமக்கு கொடுத்த நிலத்தில் கிடைத்தது உமக்கு தான் சொந்தம்''
''மஹாராஜா இந்த பேழை பூமியில் புதையுண்டு இருந்ததை நீங்கள் அறியாமல் கொடுத்ததால் உமக்கே இது சொந்தமாகும்.'' என்றான்.
பேழை திறக்கப்பட்டது.அழகிய பெண் குழந்தை. ஆசையாக ஜானகி என்று வளர்க்கிறான் ஜனகன். பூமியில் கலப்பை நுனியில் கிடைத்ததால் சீதை என்றும் பெயர் இட்டான் ஜனகன்.
இதெல்லாம் இப்போது அவள் ஸ்வயம்வரத்தில் ராமனுக்கு மாலையிட்டபிறகு ஜனகனுக்கு ஞாபகம் வந்தது.
''தசரத மஹாராஜா. உங்கள் மகன் ஸ்ரீ ராமன் நான் வேண்டியபடி ஆகாயம் போல் நிறத்தை உடையவன். என் மகள்கள் இருவர், என் சகோதரன் மகள்கள் இருவர் ஆகிய நால்வரையும் மருமகள்களாக அடையும் நீங்கள் இறைவன் அருள் பெற்றவர்'' என்று வணங்குகிறான் ஜனகன். நால்வரையும் சேனை பரிவாரங்களோடு நகர்வலம் செய்வித்து நகரமெங்கும் ராம சகோதரர்களுக்கு கோலாகலமான வரவேற்பு. மிதிலை நகரம் ஆரவாரத்தோடு ஆனந்தத்தோடு விழா கோலம் பூண்டது. ராஜா வீட்டில் ஒரே சமயத்தில் நாலு கல்யாணம். ஊருக்கெல்லாம் கொண்டாட்டம், சாப்பாடு வாரக்கணக்கில். பரிசுகள் மாதக்கணக்கில்....வசிஷ்டர் பண்ணி வைக்கும் கல்யாணம் எப்படி சாஸ்த்ரோக்தமாக நாள் கணக்கில் நடக்கும்!! வேதம் சொல்பவர்கள் சாதாரண பிராமணர்கள் அல்ல. சப்த ரிஷிகள். முனிவர்கள். யோகிகள்.
தசரதர் விக்னேஸ்வர பூஜையோடு ஆரம்பிக்கிறார். புண்யாஹவசனம், மற்ற லௌகீகம், வைதீகம், தெய்வீக சடங்ககுகள். தேவக பிரதிஷ்டை, கிராமாசாரம், குலாசாரம் , வ்ருத்தாசாரம், தேசாசாரம், பிரமதாசாரம், அனுஷ்டானங்கள், பூரணகும்பம், மண்டப பூஜை, புஷ்பங்கள் சோபனாக்ஷதைகள் தெளித்து வாழ்த்த்துக்கள்/ மங்கள வாத்தியங்கள் முழங்கின. பாணிக்கிரஹணம் நான்கு ஜோடிகளுக்கு நடந்தது. லாஜ ஹோமம் மற்ற ஹோமங்கள் தொடர்ந்தன. ஆசீர்வாதம், ஹாரதி எல்லாம் முடிந்தது. போஜனம். புதுமண தம்பதிகள் பெரியோர்களை , பெற்றோர்களை நமஸ்கரித்தார்கள்.நாலு நாள் கல்யாணம். மூங்கில் பாத்திரங்களில் தீபம் ஜொலிக்க நீராஜநம். பணியாளர்களுக்கெல்லாம் வாரி வாரி பரிசுகள் வழங்கினார்கள். ஒரு மாத காலம் ஜனகரின் விருந்தாளிகளாக உபசரிக்கப்பட்டு தசரதன் முதலானோர் அயோத்திக்கு புறப்பட்டார்கள்.
மூன்று காத தூரம் சென்றதும் சில அபசகுனங்கள் வழியில் தென்பட்டன. தசரதர் மனதில் கிலேசம். வசிஷ்டர் ''தசரதா, இனி வரப்போகும் தீங்குகள் சிலவற்றை இவை அறிவிக்கின்றன. எல்லாம் சரியாகவே நடக்கும்.
பூமியும் வானமும் சுழல்வது போல் மண்ணை வாரி தூற்றும் பெரும் காற்று. ஆஜானுபாகுவாக எதிரே பரசுராமர் ரௌத்ராகாரமாக நிற்கிறார்.
ஆனந்தராமாயணம் நீளும்.
No comments:
Post a Comment