ஆனந்த ராமாயணம் J K SIVAN
9 கானக வாஸம்
ராமர், லக்ஷ்மணன், சீதை மூவரும் தமஸா நதிக்கரையில் இரவு தங்கிவிட்டு ஸ்ருங்கிபேரம் எனும் ஊருக்கு செல்கிறார்கள். அந்த ஊர் ராஜா குகன் தசரதனிடம் அன்பும் மதிப்பும் கொண்டவன். ராம லக்ஷ்மணர்களை பற்றி கேள்விப்பட்டவன். ராம லக்ஷ்மணர்கள் சீதா தேவியுடன் வந்ததை அறிந்து ஓடிவருகிறான். உபசரித்து அன்று இரவு ஸ்ருங்கி பேரத்தில் தங்கினார்கள் .
'' குஹா, ஆலம் பால் கொண்டுவா'' என்று ராமர் கேட்க அதை சிரத்தில் தடவி, ஜடாமகுடமாக தரித்துக் கொண்டு சீதை லக்ஷ்மணனோடு கங்கையை வணங்கிவிட்டு ஓடத்தில் கங்கையை கடந்து அக்கரையில் ரிஷி பாரத்வாஜர் ஆஸ்ரமம் சென்று வணங்கி, பிறகு யமுனையை கடந்து சென்று வால்மீகி ஆஸ்ரமம்
சென்று உபச்சாரம் பெற்று சித்ரகூட பர்வதம் அடைகிறார்கள். ஒரு இடம் தேர்ந்தெடுத்து, லக்ஷ்மணன் பர்ணசாலை அமைக்கிறான். அயோத்தியில் அரண்மனையில் அனுபவித்த சௌகர்யத்தை போலவே அந்த பர்ணசாலையிலும் ராமரும் சீதையும் ஆனந்தமாக இருந்தார்கள்.
ஒருநாள் சீதையின் மடியில் ராமன் படுத்து ஓய்வெடுப்பதை இந்திரன் மகன் ஜெயந்தன் பார்த்து விட்டு, சீதையின் அழகில் மயங்குகிறான். காக்கை வடிவில் வந்து சீதையின் கால் பெருவிரல் சிவந்து இருப்பதை பார்த்து பழமென்று கருதி அதை கூறிய அலகால் கொத்துகிறான். ரத்தம் பெருகி வழிய நித்திரை கலைந்த ராமர் சீதையின் கால் விறல் புண்ணாகி ரத்தம் பெருக காக்கையின் வாயில் ரத்தம் ஒழுகுவதையும் கண்டு ஒரு அஸ்திரம் எடுத்து காக்கையை நோக்கி செலுத்த அது காக்கையை துரத்த, எவரும் காப்பாற்ற இயலாத நிலையில் ஜெயந்தன் காக்கையாக ஓடிவந்து ராமனையே சரணமடைகிறான். காக்கையின் ஒரு கண்ணை மட்டும் அழித்துவிட்டு அஸ்திரம் காக்கைக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறது.
அயோத்தியில் ராமன் காட்டுக்குள் சென்றுவிட்டான் என்று அறிந்த தசரதன் ''ஹே, ராகவா'' என்று உச்சரித்து பிராணனை விடுகிறார். தைலத்தில் காப்பிட்டு அவர் உடல் பாதுகாக்கப் படுகிறது தூதர்கள் கேகய தேசம் சென்று பரத சத்ருக் னர்களை அழைத்து வருகிறார்கள். சரயு நதிக்கரையில் அந்திம ஸம்ஸ்காரங்களை சாஸ்த்ரோக்தமாக வசிஷ்டர் முன்னிலையில் பரத சத்ருக்னர்கள் நடத்தி தசரதரின் பூத உடலை அக்னியில் சேர்க்கிறார்கள். கைகேயியின் செய்கைகள் பற்றி விவரம் அறிந்து அவளை ஏசுகிறார்கள். மந்தரை தண்டிக்கப்படுகிறாள்.
யுவராஜ்ய பட்டாபிஷேகத்தை நிராகரித்து பரதன் ராமனை திரும்ப வரவழைக்க மந்திரி பிரதானிகளோடு கங்கைக்கரை செல்கிறான். சித்ரகூடத்தில் ராமர் இருப்பதை அறிந்து அங்கே எல்லோரும் செல்கிறார்கள். பரத சத்ருக்னர்கள் என்ன சொல்லியும் ராமர் திரும்பி அயோத்தி செல்ல மறுத்துவிடுகிறார்.
''பரதா , ஸ்ரீ ராமர் மஹாவிஷ்ணுவின் அவதாரம். அவருக்கு ராவணாதி அசுரர்களை வதம் செய்வதற்கான கடமை முன்னால் நிற்கிறது. பிடிவாதம் பிடிக்காதே.'' என வசிஷ்டர் அறிவுரை கூறுகிறார்.
பரதன் தனது சகோதரன் ராமன் ஸ்ரீ மஹா விஷ்ணு என அறிந்து பெருமை அடைகிறான். ஸ்ரீ ராமரின் பாதுகைகளை கேட்டுப் பெறுகிறான்.
''அண்ணா, அடியேனும் 14 வருஷங்கள் மரவுரி தரித்து ஜடாதாரியாக தங்கள் பிரதிநிதியாக, தங்கள் பாதுகை ராஜ்ய பாரத்தை ஏற்று ஆள நான் சேவகனாக அயோத்தி நகரத்துக்கு வெளியே நந்திக்ராமத்தில் நாட்டை காக்கும் சேவையை புரிவேன். பதினாலு வருஷம் முடிந்து பதினைந்தாவது வருஷம் முதல் நாள் சூரிய அஸ்தமனம் வரை காத்திருந்து தங்களை காணாவிட்டால் அக்னி மூட்டி பிரவேசம் செய்வேன்''
பரதன் சபதமிடுகிறான்.
பாதுகைகளை சிரத்தில் தாங்கி ராமரை வலம் வந்து விடை பெறும் போது பொது கைகேயி ராமரை நெருங்கி கண்களில் நீரோடு ''ராமா என் தவறை மன்னித்துவிடு'' என்கிறாள்.
''தாயே, நீங்கள் ஒரு தவறும் செய்யவில்லை. வரப்போகும் நிகழ்வுகளுக்காக, மந்தரையும் , ஆகாசவாணியும் முன்பே நியமிக்கப்பட்டபடி அவர்களது பங்கை நிறைவேற்றினார்கள்'' என சமாதானம் கூறுகிறார் ராமர்.
நந்திக்ராமத்தில் ராமரின் ரத்ன பாதுகை சிம்ஹாசனத்தை அலங்கரிக்க, காய் கனி வகைகளை உணவாக கொண்டு புல் தரையில் படுத்து பரதன் அயோத்தியை ராஜ்யபரிபாலனம் செய்தான்.
சித்ரகூடத்தில் சில நாள் தங்கிவிட்டு ராமர் சீதா லக்ஷ்மணனோடு அத்ரி மகரிஷி ஆஸ்ரமம் செல்கிறார்.ரிஷி பத்னி அனசூயா (அநேகர் அனுசூயா என்று பேரை எழுதுவது பிசகு. அசூயை இல்லாதவள் அன-சூயா என்பது
அருமையான பெயர்) சீதையை மகளாக அரவணைத்து, விஸ்வகர்மா செய்த ரெண்டு கர்ண குண்டலங்
கள், ரெண்டு வெண்பட்டுகள், சில ஆபரணங்கள் எல்லாம் ஆசிர்வதித்து அருள்கிறாள். ராமர் அங்கிருந்து சென்று பல ரிஷிகளை சந்திக்கிறார். இதற்குள் வருஷம் ஒன்று ஓடிவிட்டது.
No comments:
Post a Comment