கம்பீர ராஜரிஷி. கௌசிகன் என்கிற விஸ்வாமித்ரர் வருகை அயோத்தியில் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தந்தது. தசரதன்அளித்த சகல வித உபசாரங் களையும் பெற்று விஸ்வாமித்ரர் மெதுவாக பேச்சை ஆரம்பிக்கிறார்.
''தசரதா, உன்னை பார்க்க எதற்காக வந்திருக்கிறேன் என்று தெரியுமா ?
''தாங்கள் பார்க்க விரும்பினது தெரிந்தால் நானே உங்களிடம் ஓடி வந்திருப்பேனே மகரிஷி.
''இல்லை உன்னிடம் ஒரு விஷயம் பேச வந்தேன்.
''தங்கள் சித்தம் என் பாக்யம் மகரிஷி சொல்லுங்கள் காத்திருக்கிறேன் ''
''தசரதா நான் காட்டில் ஒரு யாகம் நடத்தப்போகிறேன். சில ரிஷிகளும் என்னோடு அதில் பங்கு கொள்கி றார்கள். அந்த வனத்தில் சில ராக்ஷஸர்கள் நடமாட்டம் அதிகம், ரிஷிகளின் யாகத்தை கெடுக்க முயல்பவர்கள்.''
''ஓ அப்படியா, நான் என் சேனையை அனுப்பட்டுமா ''
சிரிக்கிறார் விஸ்வாமித்ரர்
'' தசரதா , நீ பேசுவது குழந்தைப் பேச்சு. உன் மகன் ராமனை லக்ஷ்மணனோடு சேர்த்து என்னோடு அனுப்பு அது போதும்''
''மகரிஷி .... மகரிஷி...''
''என்ன தயங்குகிறாய் தசரதா.''
'' மகரிஷி ராமனும் லக்ஷ்மணனும் சிறுவர்கள் பதினாறு வயது கூட ஆகாத பாலகர்கள். எவ்வாறு அவர்கள் பயங்கர ராக்ஷஸர்களை சமாளிக்கமுடியும். அவர்களுக்கு பதில் நானே உங்களோடு வருகிறேன்.''
விஸ்வாமித்ரர் நினைத்ததை முடிப்பவர்.
'' தசரதா , உன்னால் முடியாததை உன் மகன் ஒருவனே முடிப்பவன். நீ அவனையே என்னோடு தயங்காமல் அனுப்பு.''
கலங்கிய தடுமாறிய தசரதனுக்கு வியர்த்துக் கொட்டியது தசரதன் சுற்று முற்றும் நீரில் மூழ்கியவன் உதவியை எதிர்பார்ப்பது போல் பார்க்கும்போது அவனுக்கு வசிஷ்டர் அருகே இருந்து தெம்பு கொடுக்கிறார்.
''தசரதா, கொஞ்சமும் யோசிக்காதே, உன் மகன்கள் ராமனையும் லக்ஷ்மணனையும் விஸ்வாமித்ர ரிஷியோடு அனுப்பு, அவர் உன்னைவிட ஜாக்கிரதையாக அவர்களை பார்த்துக் கொள்வார்'' என்று ஊக்கமளிக்கிறார்.
அப்போது நிலைமையை புரிந்து கொண்ட விஸ்வாமித்ரர் தசரதனுக்கு ராமன் யார் என்பதை எடுத்துரைக்கிறார்.
''தசரதா, ''என்'' மகன் என்று நீ அறியும் உன் ராமன் யார் என்று உனக்கு முதலில் தெரியுமா? அவன் இந்த பிரபஞ்சத்துக்கு ''அப்பன்'' என்பது எனக்கு தெரியும்.
நீ அவனை '' சிறு வயது'' குழந்தையாக, சிறுவனாக பார்க்கிறாய். எனக்கு அவன் காலமே காணமுடியாத அனாதி பரமன் என்று தெரியும். அவனுக்கு வயதெது? வயதேது?''
''என் பிரார்த்தனையால் யோகத்தால், வேண்டுதலால் விரதத்தால் பிறந்த மகன் ராமன் என்று தான் நீ நினைக்கிறாய், தசரதா, எனக்கு அவன் இந்திராதி தேவர்களின் பிரார்த்தனையால் , அவர்கள் தவத்தால், மஹான்கள், யோகிகள் வேண்டுதலால், அவனே அவ்வாறு விரும்பியதால் உனக்கு மகனாக பிறந்தவன் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
''ஏதோ கௌசலையிடம் பால் குடித்து, போஷாக்குடன் உணவளிக்கப்பட்டு வளர்ந்தவன் உன் மகன் ராமன் என்று நீ நினைக்கிறாய். எண்ணற்ற முன்னோர்கள் விரதமிருந்ததன் தவப்பயனாக, தேவர்களின் யாக பலனாக, விரத பயனாக பிறந்தவன் ராமன் என்பது எனக்கு தெரியும்.
''கோசலையின் மணி வயிற்றில் ராமன் பிறந்ததாக நீ எண்ணுகிறாய். அவள் கருவில் அவள் சுமந்தது இந்த பிரபஞ்ச ஜீவன்களை எல்லாம் '' என்று நீ அறிவாயா ?
நான் மேலே சொன்னது ஒரு நூறு வயசு அற்புத நூலிலிருந்து .
''ரஸ நிஷ்யந்தினி'' என்ற ராமாவதார 100 காரணங்களை ''அஹம் வேத்மி'' என்ற வார்த்தையின் அர்த்தமாக விஸ்வாமித்ரர் தசரதனுக்கு சொல்வது போல் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் எழுதி இருக்கிறார்
மேலே தொடர்வதற்கு முன் ஒரு சங்கதி.
ஒரு முறை பருத்தியூர் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் உபன்யாசம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய நாகம் மேடைக்குள் வந்து விட்டது. அனைவரும் கலங்கினர் . அந்த காலத்தில் ஒலி பெருக்கி வசதி தெரியாது. அந்த நாகம் மெதுவாக மேடையில் அமர்ந்திருந்த சாஸ்திரி களை மூன்று முறை வலம் வந்தது அவர் எதிரே படம் எடுத்து தலையை ஆட்டியது. தரையில் குனிந்து மூன்று முறை வாயால் தொட்டது. சாஸ்திரிகள் துளியும் பதட்டப் படவில்லை. இரு கைகளும் கூப்பி வணங்கினார். மெதுவாக மேடையை விட்டு நாகம் கீழே இறங்கி மறைந்தது. ஏதோ ஒரு சக்தி நமது புரிதலுக்கு அப்பாற்பட்டு நம்மை இயக்குகிறது. அதை தெய்வம் என்கி றோம். கண்ணால் காணமுடி யாததை, கருத்தினால் அறிய இயலும். அது தான் பக்தி.
No comments:
Post a Comment