பேசும் தெய்வம் J K SIVAN
இது ஒரு அற்புதமான சம்பவம். ஏற்கனவே நான் படித்து எழுதியதும் தான், என்றாலும் இன்று மீண்டும் இந்த மஹா பெரியவா அனுபவம் எனும் என்றும் அலுக்காத சுகத்தை உங்களோடு துய்க்கிறேன்.
ஆயிற்று. இது நடந்து பல வருஷங்கள் ஓடிவிட்டன. மகா பெரியவா விருப்பத்தின் படி சதாராவில் ஸ்ரீ உத்தர நடராஜா கோவில் நிர்மாண பணி நடந்த சமயம். மஹாபெரியவா வந்திருக்கிறார் என்ற செய்தி எண்ணற்ற பக்தர்களை சதாராவில் அவர் தரிசனம் பெற கூட வைத்தது.
மத்தியானம் சுள்ளென்று வெய்யில் கொஞ்சம் குறைய மாலை சுமார் மூன்று மணி இருக்கும். ஒரு 30 வயது வாலிபன் பெரியவா எதிரில் சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுகிறான். கண்களில் ப்ரவாஹம் . அவர் முகத்தில் மந்தஹாசம்.
“எழுந்திரு நீ யாரு ? எங்கேர்ந்து வரே, ஏன் அழறே ?''
பதிலுக்கு பதிலாக மேலும் கண்ணீர். பக்கத்தில் இருந்தவர் முதுகை தட்டிக்கொடுத்து ஆறுதல். மஹா பெரியவா எதிரே உட்காரு என்று ஜாடை காட்ட உட்கார்ந்தான்.
''எங்கேருந்து வரே?
''பாலக்காடு பெரியவா''
“ பாலக்காட்டிலிருந்து இங்கே வரணும்னு வந்தியா, இல்லே இந்த பக்கம் வேறே ஏதாவது வேலையா
வந்தியா?
“ பெரியவா இங்கே இருக்கான்னு கேட்டு தெரிஞ்சுண்டு இங்கே நேரே வந்தேன்''
“ பெரியவா இங்கே இருக்கான்னு கேட்டு தெரிஞ்சுண்டு இங்கே நேரே வந்தேன்''
“ சரி, உன் பேர் என்ன?“
“ ஹரிஹர சுப்ரமணியன்''
“ ஹரிஹர சுப்ரமணியன்''
'' பேஷ் ரொம்ப நல்ல பேர். உன் தோப்பனார் என்ன பண்றார்?''
'' அப்பா இப்போ ஜீவிய வந்தர் இல்லை. பாலக்காட்டில் ஆயுர்வேத வைத்தியரா இருந்தா. பேர் டாக்டர் ஹரிஹர நாராயணன்.''
மஹா பெரியவா முகத்தில் குதூகலம். புருவம் உயர்ந்தது. ''அட, நீ ஆயுர்வேத நாராயணன் பிள்ளையா? அப்படின்னா உன் தாத்தா டாக்டர் ஹரிஹர ராகவன் இல்லியோ? ஆயுர்வேதத்தில நல்ல பேர் சம்பாதிச்சவர்''
'' ஆமாம் பெரியவா''
''பேஷ், பிரபல வைத்ய பரம்பரைன்னு சொல்லு. நீ ஏன் டாக்டர்ன்னு பேரிலே போட்டுக்கலே ''
''நான் வைத்தியம் படிக்கலே .அந்த லைனிலே அப்பா என்னை விடலே . ''
''அப்படி சொல்லாதே. அப்பா உன்னை சேக்கலியா , உனக்கு ஸ்ரத்தை இல்லையா ஆயுர்வேதம் கத்துக்க''
பதில் இல்லை.
'பெரிய வைத்ய பரம்பரைலே பிறந்தும் நிறை ய விஷயங்கள் தெரிஞ்சுக்காம விட்டு ட்டே, சரி. என்ன படிச்சிருக்கே?''
''ஒம்பதாவது''
''ஏன் மேற்கொண்டு படிக்க பிடிக்கலியா?''
“அப்போ தெரியலை. இப்போ தோண்றது ''
''கல்யாணம் ஆயுடுத்தா?''
''ஏழு வயசிலே ஒரு பொண்ணு இருக்கு''
“ஓஹோ இப்ப என்ன பண்றே?''
அவன் கண்களில் கண்ணீர். '' படிப்பு இல்லாததால் வேலை எதுவும் கிடைக்கலே. உள்ளூர் அரிசி மில் ஒண்ணிலே சூப்பர்வைசர். எழுநூறு ரூபா சம்பளம். அதிலே தான் குடும்பம் ஓடறது.''
“ஓஹோ . தாத்தா கொள்ளுத்தாத்தா விட்டுட்டு போன சொந்த க்ரஹம் இருக்கா?''.
''தாத்தா கட்டின பழைய வீடு இருக்கு. அது விஷயமா தான் பெரியவாளை பார்க்க வந்தேன்''
ரொம்ப வருஷம் முன்னாலே அத்தை புருஷனை இழந்து வீணாபோய்ட்டா, ரெண்டு பெண்களோடு எங்க வீட்டோட வந்துட்டா. நவராத்ரி சமயம் . வீட்டை அப்பா உள்ளூர்லே ஒரு வியாபாரிகிட்டே 25ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வச்சு அந்த ரெண்டு பெண்களுக்கும் கல்யாணம் பண்ணினார். அப்பாவும் போய்ட்டார், அத்தையும் போய்ட்டா. எங்கள் வருத்தம் என்னன்னா, லக்ஷ்மிகரமான நவராத்ரி சமயம் வீட்டு மேலே கடன் வாங்கி அடைக்க முடியாமல் இப்போ நாப்பத்தஞ்சாயிரம் ரூபா அசலும் வட்டியும் நிக்கிறது. கடனிலே இருக்கற வீடும் மூழ்கப்போறது. என்ன பண்றதுன்னு தெரியலை ''
மஹா பெரியவா ஒரு க்ஷணம் கண்களை மூடினார். பிறகு கேட்டார்: வருஷா வருஷம் கொலு வைக்கிற துண்டா?''
''இல்ல பெரியவா. அப்பா இருந்தவரைக்கும் விடாம நடந்தது தான். அப்புறம் வைக்கலே ''
''ஆத்துலே பெரியவாளை மரியாதை இல்லாமலோ, குறை யோ சொல்லப்படாது. அவா மஹான்கள். பெரிய காரியங்கள் எல்லாம் பண்ணினவர்கள். எதையோ மனசிலே வச்சுண்டு, நவராத்ரி கொண்டாடி, கொலு வைக்காம விட்டது தப்பு. இப்போ நவராத்ரி சமயம் . ஆரம்பிச்சுடுத்து. பாலக்காட்டில் ஆத்திலே இந்த நவராத்திரிலே இருந்து மறுபடியும் கொலு வை. உன் கஷ்டம் எல்லாம் தீர்ந்துடும். க்ஷேமமா இருப்பே''
மங்களக்ஷதை குங்குமம் பிரசாதம் கொடுத்தனுப்பினார்.
இருபது நாள் கழித்து சதாராவில் பெரியவா தரிசனத்துக்கு பெரிய கூட்டம். மடத்து சிப்பந்திகள் ஆண் பெண் வரிசைப்படுத்தி பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்பினார்கள் . ஒரு வடக்கத்தியர் காவி ஜிப்பா, 60-65 வயசு, குண்டாக பஞ்சகச்சம் துளசி ருத்ராக்ஷ மாலைகளோடு பெரியவா முன் நகர்ந்து நமஸ்கரித்தார். ஹிந்தியில் பேசினார். பெரியவா ஹிந்தி பேசுவா. எதிரே ஒரு ஓரமாக உட்காரச்சொன்னார்.
அரைமணி முக்கால் மணி நேரத்தில் பாலக்காட்டு ஹரிஹர சுப்பிரமணியன் வரிசையில் வந்து எதிரே நின்றான். கையில் ஒரு இரும்பு பழைய ட்ரங்க் பெட்டி .
மஹா பெரியவா மந்தஹாசத்தோடு அவனையும் அந்த ட்ரங்க் பெட்டியையும் அர்த்தபுஷ்டியோடு பார்க்க அதை திறந்தான். பட்டுத்துணியில் சுற்றிய பழைய 10-15 ஓலைச்சுவடிகள். அவற்றை பார்த்துவிட்டு அவனையும் பார்த்தார். அவன் விழித்தான். ஒன்றும் புரியவில்லை. ஞான சூன்யம். பேசினான்:
''பெரியவா சொன்னபடி இந்த வருஷம் கொலு வைக்க பரண்லே ஏறி கொலு பொம்மை எல்லாம் எடுத்தேன். இந்த ட்ரங்க் பேட்டி பரண்லே இருந்தது. இத்தனை வருஷ காலம் அதை நாங்க யாருமே பாக்கவே இல்லை பெரியவா. திறந்து பார்த்தா இந்த ஓலைச்சுவடிகள். எனக்கு ஒண்ணும் தெரியலை, புரியலே. பெரியவா கிட்டேயே காமிக்க எடுத்துண்டு நேரே வந்தேன்''
பெரியவா முகத்தில் புன்னகை. எதிரே உட்கார்ந்திருந்த காவி ஜிப்பாவை ஜாடை காட்டி அழைத்தார். ஹிந்தியிலே
'' கொஞ்சம் நேரத்துக்கு முன்னாலே என்னோடு பேசும்போது கேட்டீர்களே அந்த அபூர்வ வஸ்து உங்களைத் தேடி வந்திருக்கு''
அவரிடம் ஓலைச்சுவடி சென்றது. அதை பிரித்து பையில் வைத்திருந்த பூதக்கண்ணாடியால் ஒவ்வொரு சுவடியாக படித்தார் . முகம் மலர்ந்தது. தலையில் சுவடிகளை வைத்து நமஸ்கரித்தார்.
' ஆஹா, பெரியவா நீங்க பரம ஆச்சார்ய புருஷா. சந்தேகமே இல்லை. இந்த அபூர்வ ஆயுர்வேத கிரந்தத்தை பல வருஷங்கள் எங்கெங்கோ தேடியும் கிடைக்கலே. நீங்க ப்ரத்யக்ஷ தெய்வம். உங்க கிட்டே கேட்டா தெரியும் என்று எல்லோரும் சொல்லி இங்கே வந்தேன். அரைமணி நேரம் கூட ஆகலே. பல வருஷமா எங்கெல்லாமோ நான் தேடியது கைமேல் கிடைச்சுடுத்து.''
மீண்டும் நமஸ்காரம் பண்ணின்னார் காவி..
ஹரிஹர சுப்ரமணியன் ஒன்றும் புரியாமல் ஓரமாக கைகட்டி நின்று ொண்டுபார்த்தான். பெரியவா அவனை
கிட்டே கூப்பிட்டார்.
“இவர் ஒரு பெரிய ஆயுர்வேத பண்டிதர். ஆராய்ச்சி நிபுணர். பண்டரிபுரம் ஊர்க் காரர். அரைமணி நேரத்துக்கு முன்னாலே தான் எங்கிட்டே அவருடைய ஆயுர்வேத ஆராய்ச்சியில் சில விஷயங்கள் விட்டுப்போய் இருக்கிறது. அதை எங்கேயும் தேடி பிடித்தால் தான் ஆராய்ச்சி முழுமை பெறும் . என்ன செய்வது எங்கே கிடைக்கும் என்று கேட்டார். நான் யோசனை பண்ணினேன். சரி கொஞ்சம் நேரம் கழித்து சிந்திப்போம் என்று எண்ணி உட்கார வைத்தேன் . நீ என்னடான்னா நாங்க எதை தேடறோமோ அதை ட்ரங்க் பெட்டியோட கொண்டு வந்திருக்கே. இந்த சுவடிகள் அவருக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும். நீயே உன்கையால் உங்க தாத்தா ஆராய்ச்சி பண்ணி எழுதியதை கொடு. ''
ரொம்ப பவ்யமாக பணிவோடு ஹரிஹர சுப்பிரமணியன் கொடுத்ததை ஹிந்திக்காரர் மரியாதையோடு பெற்றுக்கொண்டார். அவர் கண்களில் ஆனந்த கண்ணீர். நாக்கு தழு தழுக்க
''பரமாச்சார்யா, உங்களுடைய ஆசிர்வாதத்திலே தான் இந்த அபூர்வ கிரந்தம் கிடைச்சுது. காணிக்கை எதுவும் குடுக்காம இதை பெற்றுக்கொள்வது தர்மம் இல்லை ''
பையிலிருந்து ரூபாய் நோட்டுகளை கட்டு கட்டாக எடுத்தார். ஐம்பதாயிரம் ரூபாய் எடுத்து தட்டில் தாம்பூலம் பழங்களோடு வைத்து பெரியவா முன்னால் வைத்தார். பெரியவா ஹரிஹரசுப்ரமணியனை பார்த்து தலையாட்டி ஜாடையாக எடுத்துக்கோ என்று சொன்னார். கைகள் நடுங்க, உடல் வியர்க்க அவன் அதைப் பெற்றுக்கொண்டான்.
''உன்கிட்டே என்ன சொன்னேன், குடும்பத்திலே இருந்த பெரியவாளை குறை சொல்லாதே, பெரிய காரியங்கள் எல்லாம் பண்ணவா அவா. ட்ரங்க் பெட்டிலே ஜாக்கிரதையா உனக்கு பெரிசா வச்சிட்டு போயிருக்கா. உனக்கு தெரியலே
ஸம்ப்ரதாய தர்மத்தை விடக்கூடாது. நவராத்திரி கொலு வை. அம்பாள், லட்சுமி சரஸ்வதி, முன்னோர்கள் எல்லோரும் சுபிக்ஷமா உங்களை வைப்பா'' என்றேனா இல்லையா. என்னமோ என் மனசிலே பட்டுது . அப்படி சொன்னேன். வீடு கடன் வட்டியோடு இப்போது தீந்துடுத்தா? அது தான் சந்திர மௌலீஸ்வரன் அனுக்கிரஹம். போயிட்டு வா...பாலக்காட்டில் சந்தோஷமா இரு
No comments:
Post a Comment