திருக் கோளூர் பெண் பிள்ளை
வார்த்தைகள் J K SIVAN
65 ஆரியனைப் பிரிந்தோனோ தெய்வவாரியாண்டானைப் போலே
ஆளவந்தார் என்கிற யமுனாச்சார்யார் அரையர் சேவையை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அரையர்கள் ஒரு பாசுரம் பாடுகையில் ‘அனந்தபுரம் புகுதும் இன்றே’’ என்ற வரியை மூன்று முறை அழுத்தமாக அபிநயித்து காட்டுகிறார்கள். முதல் வரிசையில் ஸ்ரீரங்கத்தில் அதை பார்ததுக்கொண்டிருந்த யமுனாச்சார்யாருக்கு அரங்கன் ஜாடையாக அரையர்கள் மூலம் ''உடனே நீ திருவனந்தபுரம் போ'' என்று கட்டளை இடுவதைப் போல் தோன்றவே, அக்கணமே, தனது பொறுப்புகளை நம்பகமான ஒரு சிஷ்யரிடம் விட்டுவிட்டு பிரயாணத்துக்கு தயாராகும் ஏற்பாடுகள் செய்கிறார். அப்படி பொறுப்பை ஒப்படைத்தது அவரிடம் மிகவும் ஈடுபாடு பக்தி உள்ள சிஷ்யர் தெய்வ வாரி ஆண்டான் என்பவரிடம்.
''தெய்வவாரி ஆண்டான், இனி நீ இந்த மடத்தின் நிர்வாகத்தை நேர்மையாக, நான் திரும்பி வரும் வரை பரிபாலனம் செய். நான் திருவனந்தபுரம் பத்மநாபனிடம் செல்ல வேண்டும்'' என்று கிளம்பிவிட்டார் யமுனாச் சார்யார் .
தெய்வவாரி ஆண்டானுக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வான்? அளவற்ற குருபக்தி கொண்ட அவனால் ஆச்சார்யாரை பார்க்காமல் அவரை தினமும் வணங்காமல் அவர் சொல் கேளாமல் ஒரு நாளாவது இருக்க முடியுமா? அதே நேரம் அவர் சொல்லிய வாக்குக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டாமா?
உள்ளூற அவரை பிரிந்த வருத்தத்தோடு ஆஸ்ரம, மட, நிர்வாகத்தை பொறுப்பாக செய்து கொண்டிருந்தார் தெய்வ வாரிஆண்டான். சரியான தூக்கம், உணவு இன்றி தனிமையில் ஆற்றமாட்டாமல் அழுதார் . உடல் இளைத்தது . படுக்கையில் வீழ்ந்தார் . மருத்துவர்கள் வந்து ஆண்டானை பரிசோதனை செய்தார்கள். மருந்துகள் கொடுத்தார்கள். உடலில் ஒன்றும் குறையில்லை, மனதளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பாதிப்பு உடலில் நலக்குறைவு.
''தெய்வவாரி ஆண்டான் ஸ்வாமிகள், உங்கள் உடலில் குறை தெரியவில்லை, மனதளவில் உங்களுக்கு என்ன குறை ?''
''மருத்துவரே, என்னால் என் ஆச்சார்யனை பிரிந்து உயிர் வாழ முடியவில்லை. பிரிவு தாங்க முடியாமல் மனதளவில் மட்டுமில் லாமல் அது உடலையும் பாதித்து விட்டது. .ஆச்சார்யரைக் காணாவிடில், இன்னும் மோசமடையும் என்றும் கூறினார்.
''இவர் உடனே திருவனந்தபுரம் போக வேண்டும். குருநாதரை காணவேண்டும். அப்போது தான் உயிரோடு வாழ்வார்'' என மருத்துவர்கள் சொல்லி விட்டதால், மற்ற சிஷ்யர்கள் பல்லக்கு தயார் செய் ஆண்டான் திருவனந்தபுரம் செல்கிறார் . அவன் அவரை சந்திக்கும் முன்பே ஆச்சாரியார் வழியில் எதிர்படுகிறார். திருவனந் தபுரம் பத்மநாபா ஸ்வாமியை சந்தித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்பிக் கொண்டிருந்தார் ஆச்சார்யார் .
எதிரே பல்லக்கில் வந்து கொண்டி ருக்கும் தெய்வ வாரி ஆண்டானை கண்டதும் ஆச்சார்யருக்கு அதிசயமும் ஆச்சர்யமும் அருவருப்பும் ஒருசேர அவனைக் கடிந்து கொண்டார்.
''ஆண்டான் நான் உன்னை நம்பித்தானே, ஆஸ்ரம/மடத்தின் நிர்வாகத்தை பொறுப்பாக கவனித்துக்கொள் என்ரறு ஒப்படைத்தேன். எப்படி அதை கவனிக்காமல் இங்கே வந்தாய்?. உனக்கு பரதன் எப்படி ராமன் கட்டளையை கீழ்ப்படிந்து நந்தி க்ராமத்தில் 14 வருஷங்கள் ராஜ்யபாரம் செயது அயோத்திய மாநகரத்தை திறம்பட ஆண்டான் என்பது கவனம் இருக் கிறதா? உன்னை பரதனாக நினைத்தேன். நீ என்ன செய்தாய் பார். என் கட்டளையை மீறி மடத்தின் நிர்வாகப்பொறுப்பை வேறு யாரிடமோ கொடுத்துவிட்டு அதன் மேல் கவனம் இல்லாமல் இங்கே வந்திருக்கிறாயே''
ஆச்சார்யாரை கண்ணார தரிசித்த தெய்வவாரி ஆண்டான், அவரது சொல் நெஞ்சை சுடவே, மூர்ச்சையாகி கீழே விழுந்தார் .
பல்லக்குடன் வந்தவர்கள் யமுனாச் சார்யரிடம் தெய்வவாரியாண்டான் உடல் நிலை அவர் பிரிவால் க்ஷீணித்ததையும் , அவரது பிரிவு தாங்கமுடியாததால் அவன் உயிர் ஊசலாடுவதையும் , மருத்துவர்கள் அறிவுரைப்படி அவரை தாங்கள் அழைத்து வந்ததைப் பற்றியும் சொல்கி றார்கள். ஆண்டானது இணையற்ற குருபக்தியை புரிந்து கொண்ட யமுனாச் சார்யர் மனமகிழ்கிறார் . அவனை ஆசீர்வதிக்கிறார்.
ஆண்டானுக்கு மூர்ச்சை தெளியவைத்து, ஆளவந்தார் ஸ்வாமிகள் (யமுனாச் சார்யார்) வாரியாண்டானை வாரி அணைக்கிறார்.
''ஆண்டான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய், போ, அனந்த பத்மநாபனை தரிசித்து விட்டு வா. எல்லோருமாக ஸ்ரீரங்கம் திரும்புவோம்.''
தெய்வவாரியாண்டான் ஆச்சார்யரை நேரில் தரிசித்ததில் மகிழ்ந்து உளமார மறுபடியும் வணங்கி "ஆரியப் பெரு மானே! (‘ஆரியன்’ என்றால் ‘உய ர்ந்தவர்’) எனக்கு அரங்கனும் நீங்களே, அனந்த பத்மநாபனும் நீங்களே! மீண்டும் உங்களை ஒரு வினாடியும் என்னால் பிரிய இயலாது" என்றார்.
ஆச்சர்யப்பட்ட ஆளவந்தார், வாரியாண் டாருடனும், தனது சீடர்களுடனும் ஸ்ரீரங்கம் திரும்பினார். தெய்வ வாரி ஆண்டான் உடல் நிலை குணமாகியது.
இந்த தெய்வவாரி ஆண்டானைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?
நமக்கு அவரைப்பற்றி அறிய உதவியது வேறு யாரு மில்லை. எல்லாம் அறிந்த ஞானி நமது திருக்கோளூர் பெண் பிள்ளை தான்.
ஸ்ரீ ராமானுஜரை சந்தித்த அவள் அவர் கேட்ட ஒரு சாதாரண கேள்விக்கு 81 பேரை அடையாளம் காட்டி ''அவர்களைபோலவா நான்? எந்த விதத்திலாவது பெருமாளிடம் ஆச்சர்யனிடம் பணிவிடை செய்தவள் '' என்கிறாள். அப்படித்தான் இந்த தெய்வ வாரி ஆண்டானை 65 வது உதாரண புருஷராக காட்டுகிறாள். அவரைப் போல் குருவினி டத்தில் பக்தி கொண்டவளாக நான் இருந்த துண்டா, அவருக்காக என் உடல் இளைத்த துண்டா, எனக்கு எந்த விதத்தில் இந்த புண்ய க்ஷேத்ரம் திருக்கோளூரில் வசிக்க அருகதை? என்கிறாள்.
No comments:
Post a Comment