Sunday, October 1, 2017

​ஒரு தாயும் மகனும்

​ ​ஒரு தாயும் மகனும் -- j.k. sivan

​மஹாத்மா காந்தி தனியாக ஒரு மரத்தடியில் அமர்ந்து ரகுபதி ராகவா ராஜா ராம் பாடிக்கொண்டிருந்தார். எதிரே நேரு.

பாபு இன்று உங்கள் 149வது பிறந்த நாள். பாரதத்தில் உங்கள் சிலைகளை தேடி பிடித்து மாலைகள் போடுகிறார்கள். வணங்குகிறார்கள் தெரியுமா?

வருஷத்தில் ஒருநாள் மட்டும் என்னை நினைக்க செய்து விட்டாய். எல்லாம் உன்னால் வந்தது தானே. எனக்கு சிலை மட்டுமா வைத்தாய். நான் குஜராத் காரன். நீயோ காஷ்மீர் ஆசாமி?. சம்பந்தமில்லாத குடும்பம். என் குடும்ப பெயரையே உன் குடும்பத்தில் வைத்து ....... ம்ம். அதாலும் எனக்கு மதிப்பா மரியாதையா... மக்கள் பேசுவது அரசல் புரசலாக என் காதில் இங்கு வந்தும் விழுகிறதே ஜவஹர்... ஏன் இப்படி எல்லாம் செய்தாய்?.

நேரு பதில் பேசவில்லை. தலையை குனிந்து கொண்டார்.

''ம்ம்ம் சரி எனக்கு நேர் மாறான உன் குடும்பம் என் பெயரை எடுத்திருக்கவும் வேண்டாம் . அதை மக்கள் மத்தியில் இப்படி கெடுக்கவும் வேண்டாம். ரூபாய் நோட்டுகளில் நான் சிரிப்பாய் சிரிக்க வேண்டாம். ​நான் இதெல்லாம் விரும்பினேனா?​..​ என் வாழ்க்கைப்பாதையை ஒருவன் நினைத்துப் பார்க்கிறான் பார் கீழே அதைப் படி.​

+++
​நமது தேசத்தில் குஜராத் ஒரு முக்கிய​மானபிரதேசம். அங்கே போர்பந்தர் என்று ஒரு கிராமம். அதை சுற்றி அகழ்வாராய்ச்சிக்காரர்கள் நிறைய தோண்டிப் பார்த்ததில் ஹாரப்பா நாகரிகத்தின் சுவடுகள் தெரிந்தது. கடல் வாணிபத்தில் அக்கால மக்கள் ஈடுபட்டது தெரியவந்தது. அருகே தான் கிருஷ்ணன் வாழ்ந்த பேட் துவாரகா இருக்கிறது.​​

இரு நூறு வருஷங்களுக்கு முன்பு அங்கே ராஜாக்கள் ஆட்சி நடந்தது. கெய்க்வாட் என்ற வம்சம் தொடர்ந்து ஆண்டுவந்தது. வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை ஆண்டபோது பலம் வாய்ந்த எதிர்ப்பை தெரிவித்தவர்களில் கெய்க்வாட் கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்.

இங்கே தான் கிருஷ்ணனின் பால்ய நண்பன் சுதாமா பிறந்து வாழ்ந்தான். அப்போது துவாபர யுகம்.
இந்த ஊருக்கு போகும் ஒரு பாக்யம் எனக்கு பல வருஷங்களுக்கு முன்பு கிடைத்தது. அருகே ரணவாவ் எனும் பண்டைய கால புகழ் பெற்ற பட்டினம் உள்ளது. அதில் இப்போது ஒரு பெரிய சிமெண்ட் தொழிற்சாலை இருக்கிறது. ஊரையே வளைத்துப் போட்டு இருக்கிறார்கள். மேற்கு இந்தியாவின் தலை சிறந்த சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒரு நிறுவனம் சௌராஷ்ட்ரா சிமெண்ட் கம்பெனி. அங்கே தான் கப்பல் வேலையாக போயிருந்தேன். காந்தி பிறந்த வீட்டை பார்த்தேன். காந்தி புத்தகங்கள் சல்லிசான விலையில் நவஜீவன் டிரஸ்ட் காரர்கள் போட்டிருந்தார்கள் எட்டு வரிசை புத்தகங்கள் நூறு ரூபாய்க்கு கிடைத்தது.

போர்பந்தர் முந்தைய காலத்தில் சுதாமாபுரி என்று குசேலர் பெயரில் அழைக்கப் பட்டது. ராஜபுத்திரர்கள் வாழ்ந்த ஊர் அது. 16ம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை அங்கே முகலாய கவர்னரின் ஆட்சி தான். அவர்களை பின்னால் மராத்தியர்கள் விரட்டி கைப்பற்றியபோது இருநூறு வருஷங்கள் ஓடிவிட்டது. கத்தியவாட் பிரதேசம் என்று பெயர் பெற்று, பரோடாவை தலைநகரமாக கொண்ட பேஷ்வா வம்ச கெய்க்வாட் அதன் அரசனானபோது ஒரு குஜராத்தி வைஸ்ய குடும்பத்தில் பெண் ஒருத்தி பிறந்தாள். அப்போது வருஷம் 1839.

வெள்ளைக்காரர்கள் ஒரு பென்ஷன் மாதிரி கொஞ்சம் பணம் கொடுத்து கெய்க் வாடை முடக்கி போட்டு பேஷ்வாவாக்களிடமிருந்து போர்பந்தர் கை மாறியது. அதை வெள்ளைக்காரர்கள் தங்கள் நிர்வாகத்தில் கொண்டுவந்தார்கள்.

இப்படி கையாலாகாத கடை சி போர்பந்தர் ராஜா நத்வார் சிங்ஜி பவ்சிங்ஜி மஹாராஜா. இது நடந்தது 1807ல்.

நான் சொன்ன பெண் பிறந்தது 32 வருஷங்களுக்குப் பிறகு. அவள் பெயர் புத்லிபாய். சுத்த வைசிய ஆச்சார சைவ குடும்பம் . அவள் தந்தை ஒரு பணக்கார வியாபாரி. ரொம்ப விஷ்ணு பக்தி வாய்ந்த குடும்பம். ராமர் மேல் கொள்ளை ஆசை புத்லி பாய்க்கு. ஒருநாளாவது பூஜை பண்ணாமல் சாப்பிடமாட்டாள். அருகே இருந்த ஹரி கோவிலுக்கு அவள் போகாத நாளே கிடையாது. ஏகாதசி விரதப் பெண். ஒருநாளைக்கு ஒருவேளையே உணவு. உபவாசம் இருந்தால் மறுநாள் சூரிய தர்சனத்துக்குப் பிறகு தான் ஆகாரம். சூரியனை மேகம் மறைத்து கண்ணில் படவில்லையென்றால் அன்று முழுதும் பட்டினி. அவள் பிள்ளை பிற்காலத்தில் பல நாட்கள் உணவின்றி உபவாசம் இருக்க முடிந்தது அம்மாவின் பழக்கமாகக் கூட இருக்கலாம். ஹரியை மறக்கவில்லை அவனும்.

புத்லிபாய்க்கு ஒரு வரன் பார்த்தார்கள். ஏற்கனவே மூன்று முறை மனைவியை இழந்த 40வயதுக்கு காரர் கரமச்சந். போர்பந்தரின் பரோடா ராஜா கெய்க்வாடின் முக்கிய மந்திரி உத்யோகம். இவருக்கு மனைவியாகி அவள் நாலு குழந்தைகளை பெற்றாள். அந்த நாலாவது கடைக்குட்டி மோகன்தாஸ். செல்ல மகன். அவன் பிறக்கும்போது அவளுக்கு 30 வயது என்பதால் அவன் பிறந்தது 1869ல். அவளையே நெருங்கி பின்பற்றி அவளிடமிருந்து பக்தி, விடாப்பிடியாக உபவாசம், ஹரி பக்தி அவனை ஆட்கொண்டது.
யாருக்க்காவது உடம்பு சரியில்லை என்றாலும் புத்லி பாய் தான் முன்னே நின்று கவனித்து உதவுவாள். அவளது காருண்யமும், அன்பும் ஆதரவும் அவளை எல்லோராலும் மதிக்கப்பட்ட உயர்ந்த ஸ்தானத்தை பெற்றுத்தந்தது. அந்த குணம் அவனுக்கும் வந்தது. மெலிந்த உடலில் இத்தனை மன வலிமையா? . அதை அப்படியே பையனும் அடைந்து விட்டான்.

அந்த கிராம வீட்டில் குயில் கூவுவதை கேட்டு விட்டு தான் அம்மா தினமும் சாப்பிடுவாள். குயில் கூவவில்லை என்றால் அன்று உணவு கிடையாது அவளுக்கு. அம்மா மேல் பாசத்தால் வீட்டுக்கு பின்னே சென்று தானே குயில் மாதிரி கூவி அவளை சாப்பிட வைத்திருக்கிறான் மோகன்தாஸ். அம்மாவின் மேல் அவ்வளவு பாசம், அவள் பட்டினியில் சாகக் கூடாது என்ற நல்ல எண்ணமே தவிர ஏமாற்றும் குணம் அல்ல. இதை கண்டுபிடித்த அம்மா கண்களில் நீரோடு ''மோகன் இப்படிப்பட்ட பொய் பேசும் உன் போன்ற மகனை பெற நான் என்ன பாபம் செய்னோதேனோ?' என்று கதறியதைக் கண்டு வாடினான்.
''இனி பொய் பேச மாட்டேன்'' என்று அம்மாவிடம் சத்யம் செய்தவன் கடைசிவரை அதை கடைப் பிடித்தான். பொய் சொல்லக்கூடாது என்பதற்காக அடிக்கடி ஹரிச்சந்திரன் கதையை அவனுக்கு போதித்தாள். அது பசுமரத்தாணி போல் அவன் மனதில் பதிந்தது. அவனது வைராக்கியம், இரும்பு மனது பிற்காலத்தில் இந்த தேசத்திற்கே உதவியது.

அம்மா பிறருக்கு நோய்வாய்ப்பட்டபோது உதவிய பழக்கம், பிற்காலத்தில் வார்தாவில் தொழு நோயாளர்களை தொட்டு அவர்களுக்கு சேவை செய்ய அவனை தயார் செய்தது.
மோகனுக்கு ஏழு வயசாகும்போது அவன் தந்தை கரம் சந்துக்கும் கெய்க்வாட் ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு வந்ததால் போர்பந்தர் ராஜ உத்தியோகத்தை விட்டு ராஜ்கோட் என்கிற ஊருக்கு குடும்பத்தோடு சென்றார்கள். பத்து வருஷங்கள் ஓடின.

அப்பா கரமச்சந்த் மரணமடைந்தார். மோஹனை வெளிநாட்டுக்கு மேல் நிலை வக்கீல் படிப்புக்கு இங்கிலாந்து அனுப்ப குடும்பத்தில் மூத்தவர்கள் முடிவெடுத்தார்கள். இதற்குள் அவன் கொஞ்சம் மாறிவிட்டான்.

அவனுக்கு பதிமூன்று வயதிலேயே கஸ்தூரிபாய் என்ற பெண்ணை கல்யாணம் செய்தாகிவிட்டது. புத்லி பாய் பார்த்து தேர்ந்தெடுத்த பெண் எப்படி இருப்பாள். மோகனுக்கு பள்ளிக்கூட காலத்தில் கொஞ்சம் கெட்ட சகவாசம். கடவுள் பக்தி அற்ற நாஸ்திகம், புகை பிடிப்பது, புலால் உண்பது போன்ற புது பழக்கம் ஒட்டிக் கொண்டது. பாவம் அம்மாவுக்கு இது சிலகாலம் தெரியவில்லை.

கடல் கடந்து செல்வது நமது தர்மத்துக்கு விரோதம் என்று எதிர்த்தாள். எப்படியோ அவளை சமாதானப் படுத்தி சத்தியம் செயது கொடுத்து அனுமதி பெற்றுக் கொண்டான் . ''மது அருந்தமாட்டேன், பிற பெண்களை தொட மாட்டேன், புகையிலை கிட்டவே வராது. வெள்ளைக் காரர்கள் பழக்கங்களை கடை பிடிக்கமாட்டேன்.'' இது அவள் அவனிடம் வாங்கிக் கொண்ட சத்யம். 19 வயதில் இங்கிலாந்து சென்றான்.
வெளிநாடு சென்ற அவன் திரும்பி வருவதற்குள் அவன் சென்ற மூன்றே வருஷத்தில் அருமையான அம்மா காலமானாள் .

''அம்மா, உன் பிள்ளையைப் பற்றி உனக்கு தெரியாமலேயே போய் விட்டாய். நான் சொல்கிறேன் கேள்.

உனக்கு வாக்கு கொடுத்தபடியே அவன் ஸத்யஸந்தன். உன்னைப் போலவே பிறர்க்கு சேவை செய்வதிலேயே தனது முழு வாழ்க்கையையும் அர்பணித்தான்.ஏன் உயிரையே கூட தியாகம் செய்தவன் . பொய் பேசவில்லை. நீ சொல்லிக் கொடுத்த உபவாசத்தை இந்த நாட்டின் சுதந்திரத்துக்காகவே பிரயோகித்தான்.. நீ சொல்லிக் கொடுத்த ஹரி, ராம் என்கிற வார்த்தை அவன் கடைசி வார்த்தையாகவே இருந்தது. இப்படிப் பட்ட பிள்ளையை அக்டோபர் 2ம் தேதி பெற்றாய் 1869ல். இன்று அதே நாள். ஆனால் 167 வருஷங்கள் ஓடி விட்டது. உன்னை இன்றும் உலகமே நினைக்கும்படியான ஒரு உன்னத ஸ்தானத்தை கொடுத்த உன் மகன் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி உனக்கு மகன் மட்டுமல்ல, இந்த தேசத்துக்கே தந்தை, மோகன்தாஸ் கரம்சந்த் என்று நீ இட்ட பெயர் மறந்து போனாலும் அவன் உன்னால் பெற்ற மஹாத்மா காந்தி என்ற பெயர் இந்த உலகம் உள்ளவரை நிலைக்கும் தாயே.''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...