Sunday, July 31, 2022

RAMA'S BIRTH

 ராமன் எப்போ பிறந்தான்? #நங்கநல்லூர்_J_K_SIVAN

நேற்று காலை என்ன கலர் சட்டை போட்டிருந்தேன்? மத்தியானம் என்ன சாப்பிட்டேன்? இதெல்லாமே ஞாபகத்தில் இருக்காதபோது, பலர் இரவும் பகலும் மண்டையைக் குடைந்துகொண்டு ராமர் கிருஷ்ணன், பிறந்த நாளை நேரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஜோசியர்கள் மற்றும் சரித்திர வல்லுநர்கள் எண்ணற்ற ஆராய்வுகள் நடத்தி அற்புதமாக அந்த தேதி நேரத்திடை எல்லாம் கணித்து இருக்கிறார்கள். அதன்படி, ஸ்ரீ ராமநவமி ஜனவரி 10, 5114 BC அதாவது இன்றைக்கு 7128 வருஷங்களுக்கு முன்னர். ராமன் பிறந்த நேரம் ராத்திரி 12.30 க்கு.
காலம் மாறி விட்டது. நாம் ராமநவமியை சித்திரை மாதம் அதாவது ஆங்கில மாதம் ஏப்ரலில் ஏதோ ஒரு பஞ்சாங்கம் காட்டும் நாளில் கொண்டாடு கிறோம்.
சக்தி வாய்ந்த விண் நோக்கும் கருவிகளை பூதக் கண்ணாடிகளை எல்லாம் உபயோகித்து, பட்நகர் என்கிற சரித்திர நிபுணர் கண்டுபிடித்த உண்மை களை சொல்கிறார். ''அதி சக்தி வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி இயந்திரங்களையும் கணினி உபகரணங் களையும் உபயோகித்து பார்த்ததில் ராமன் பிறந்த நாள் அன்று இருந்த கிரகங்களின் நிலை பாடுகள் சரியாக ராத்திரி 1230 க்கு கிமு 5114 ஜனவரி 10 அன்று ராமன் உதித்ததை துல்லியமாக நிருபணம் செய்கின்றன.
அந்த நாளிலிருந்து மெல்ல நகர்ந்து 25 வருஷங்க ளைப் பரிசோதித்ததில் ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகளின் தேதிகள், நேரங்கள் சரியாக பொருந்துகிறது. மேலும் நகர்ந்து விண்வெளி ஆராய்ச்சியை தொடர்ந்ததில் ராமரின் வனவாசம் 13 வது வருஷம், 10வது மாதத்தில் அமாவாசை அன்று சூரிய க்ரஹணம் நடந்தது தெரிகிறது. அன்றைய (அதாவது 7.10. 5077 BC ) ஆகாயத்தில் தோன்றிய கிரகங்கள், நக்ஷத்ரங்களை ஆராய்ந்தபோது ராமயணத்தில் சொன்னது வாஸ்தவம் என்று அறியப் படுகிறது. அடுத்து வந்த ரெண்டு க்ரஹணங்களையும் சரியாகக் கணக்கிட்டு ராமாயணத்தில்ஸ் வால்மீகி முனிவர் எந்த உபகரணமும் இல்லாமல் கண்டு பிடித்துச் சொல்லியது சரி என்கிறது.
ராமனின் தூதனாக ஹனுமான் இலங்கையில் சீதையை சந்தித்தது என்றைக்கு?, என்று கூட சொல்ல முடிகிறது. அது 12th September, 5076 BC என்கிறார்கள்.
இதை எதற்காக சொல்கிறேன் என்றால் ராமாயணம் புருடா இல்லை. பட்நகர் போன்றோர் பலர் சோதித்து,
ஆராய்ந்து கண்டறிந்து ஒப்புக்கொண்ட உண்மை நிகழ்வு தான் ராமாயணம். ஒவ்வொரு கால கட்டத்திலும் வால்மீகி கூறும் நாள், நேரம் காலம் எல்லாமே ஆதார பூர்வமாக இருக்கிறது..”
அப்படியும் சிலர் அது தப்பு, இது தவறு என்று சில சம்பவங்களையும் கால கட்டத்தையும் தங்களது கணக்குகளோடு சில புஸ்தக பிரகாரம் எதிர்ப்பதோ, மாறுபடுவதோ தவிர்க்கமுடியாதது. ஆனால் நமக்கு என்ன சந்தோஷம் என்றால், ஏதோ ஒன்று இருந்ததை ஒப்புக்கொண்டு தானே அது அப்படி யில்லை என்கிறார்கள். அதுவே போதும்.
''ராமா, எந்த புஸ்தகம் எது வேண்டுமானாலும் சொல்லட்டுமடா. நீ என்றுமே கோடானுகோடி மனசு புஸ்தகங்களில் நிலையாக இருக்கிறாய். அன்றாடம் அவைகளில் எங்களோடு உலவுகிறாய். அது போதும்.
ராமன் பல ஆயிரம் வருஷங்களுக்கு முன், ஏன் மில்லியன் வருஷங்களுக்கு முன்னால் த்ரேதா யுகத்தில் பிறந்தான். ஸ்ரீமத் பாகவத புராணம் ராமனை திரேதா யுக ராஜா என்கிறது. ( பா.பு.. 9.10.51). த்ரேதாயுகம் 1,200,000 வருஷங்கள் கொண்டது. அதற்கு மேலும் கூட இருக்கலாம்.
பின்னர் கிருஷ்ணன் இருந்த த்வாபர யுகம் 864,000 வருஷங்களைக் கொண்டிருந்தது. படித்தால் உங்களுக்கும் எழுதும்போது எனக்கும் கூட, தலை சுத்துகிறது. எப்படி கணக்கு போடுகிறார்கள்? வாயு புராணம் இதை சொல்கிறது. இதை யார் பரிசோதித்து ஆராய்ச்சி செய்து சொல்ல முடியும்.?
ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். வாயுபுராணத்தில் (70.47-48- published by Motilal Banarsidass) ராவணனது வாழ்க்கையை விவரிக்கிறது. ராவணனின் தவ வலிமை குன்றியபோது தான் அவன் தசரதன் மகன் ராமனை சந்தித்தான். இது 24வது த்ரேதா யுகத்தில் நடந்த ராம- ராவண யுத்தம் பற்றியும் அதில் ராவணனும் அவனைச் சார்ந்தவர்களும் அழிந்ததை சொல்கிறது.:
tretayuge chaturvinshe ravanastapasah kshayat
ramam dasharathim prapya saganah kshayamiyavan
நான் மேலே குறிப்பிட்ட விண்வெளி நக்ஷத்திர க்ரஹ ஆராய்ச்சி ராமன் த்ரேதா யுகத்தை சேர்ந்தவன் என்று காட்டுகிறது. மத்ஸ்ய புராணம் (47/240,243-246) மகாவிஷ்ணுவின் அவதாரங்களை குறிப்பிடு கையில் பகவான் ராமனாக அவதரித்தது 24வது திரேதா யுகத்தில் என்கிறது.

RAMAKRISHNA PARAMAHAMSAR

அருட்புனல் -  #நங்கநல்லூர்_J_ K_SIVAN 
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 


11  எல்லாம் நீயே தாயே

ராமகிருஷ்ணர்  பழசை  நினைவு கூறும்போது சொன்னது:

 ''எனக்கு  தாபுரி மஹராஜ் அளித்த உபதேசங்கள் அடிக்கடி நினைவுக்கு வரும். சர்வ சக்தி படைத்த அந்த பரமாத்மா ஒரு வித செயலிலும் ஈடு படாமல் வெறுமனே இருந்தால், படைத்தல், காத்தல், அழித்தல் எதுவுமின்றி, அதன் பெயர் அப்போது ப்ரம்மம், புருஷன். அதுவே பரம்பொருள். மேலே சொன்ன மூன்று  செயல்களில்  ஈடுபடும்போது பரமாத்மாவை சக்தி, மாயா, ப்ரக்ரிதி, என்கிறோம்.  கடவுளாக வழி படுகி றோம். இந்த ரெண்டுக்குமே ஒரு வித்தியாசமும் இல்லை. பாலும் அதன் வெள்ளை நிறமும் போல். வைரக் கல்லும் அதன் ஒளி வீச்சும் போல. பாம்பும் அதன் அசைவும் போல. ஒன்றில்லாமல் ஒன்றை நினைத் துக்கூட பார்க்க முடியாது. என் தாய் சக்தி தேவதையும் பிரம்மமும் ஒன்றே''. இதைத்தான் ''ப்ரம்மம் ஒக்கட்டே'' என்று பாடி இருக்கிறார்கள் போல் இருக்கிறது.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்  மேலும் சொல்கிறார்:

''தக்ஷிணேஸ்வரிலிருந்து தோதாபுரி விடைபெற்று சென்று  கிட்டத்தட்ட  ஆறுமாத  காலம்  ஆகி விட்டது.  இருந்தபோதிலும் நான் இடைவிடாது ப்ரம்மத்தோடு ஒன்றி சமாதி நிலையில் இருந்தேன். யாராலும் இந்த நிலையிலிருந்து சாதாரணமாக மீண்டு வர முடியாது. மூன்று வாரத்திலேயே காய்ந்த சருகாக இந்த உடல் பிரிந்து விடும். இரவு பகல் எனக்கு தெரியவில்லை. வாய் வழியாக ஈ கொசு வண்டுகள் எல்லாம் புகுந்து மூக்கின்  வழியாக வெளியேறும். அதுவும் எனக்கு தெரியவில்லை. என் ரோமங்கள் புழுதி படிந்து சடையாகியது. மற்றவர்களுக்கு நான் இறந்த பிணம்.''

யாரோ ஒரு சந்நியாசி இந்த நிலையில்  ராம கிருஷ் ணரைப் பார்த்துவிட்டு அவரை பாதுகாத்தார். அவ்வப்போது அவர் வாயைத்   திறந்து ஏதாவது ஆகாரத்தை உள்ளே செலுத்துவார். ஆன்மா வெளியே உடலை விட்டு பிரியாது காத்தார். ஆறு   மாதங்கள் கழிந்து நினைவுக்கு திரும்பினார் ராமகிருஷ்ணர். எல்லாம் காளியின் அருள். ஆனால் வயிற்றுப் போக்கு ஆரம்பித்தது. வயிற்றுவலியால் சுருண்டார்.

இனி ராமக்ரிஷ்ணரைச் சுற்றி சாதுக்கள், முனிவர்கள், துறவிகள், சந்யாசிகள், பக்தர்கள். சதா அவருடைய ஆசிகளையும் உபதேசங்களையும் நாடி எண்ணற் றவர்கள் குழுமினர். ராமகிருஷ்ணரின் மஹத்வம் எங்கும் பரவ ஆரம்பித்தது.    தாந்த்ரீகர்கள், வைஷ்ண வர்கள், ஞானம் வேண்டுவோர்  என்று   வரிசை வரிசையாக எத்தனையோ பேர்  அவரைத் தேடி வந்தனர்.

அனைவரையும் வரவேற்று உபசரித்து தங்க இடம், உணவு வசதிகளை மாதுர் பாபு அளித்தார். ராம கிருஷ்ணரின் வேதாந்த புராண ஞானம் அனைவ ரையும் அதிசயிக்க வைத்தது.

''நான் படிக்காதவன். எனது நற்புண்ணியம் அநேக விதவான்களையும், ஞானிகளையும் சந்திக்க இயன்று அவர்களிடமிருந்தெல்லாம்   விருப்பத்தோடு தெரிந்து கொண்டது தான்'' என்பார் ராமகிருஷ்ணர்.

பூ பூக்க ஆரம்பித்தால் கூப்பிடாமலேயே வண்டு தேடி வருவது போல் பக்தர்கள் தக்ஷிணேஸ்வரம் வந்தார்கள்.

''ப்ரம்மம் ஒன்று தான். எல்லா மதங்களும் அதை வெவ்வேறாக பார்த்து வித  விதமாக வெவ்வேறு  மொழிகளில்  சொல்கிறது. இதுதான் நிர்விகல்ப சமாதியில் நான் அறிந்தது''   என்கிறார் ராமகிருஷ்ணர். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் விஷயம் இது தான்.

இதை நிரூபிக்க 1866 ல் ஒரு முஸ்லீம் குருவை நாடி முஸ்லீம் மத கோட்பாடுகளை பின்பற்றி, முஸ்லிமாக உடுத்து அல்லா ஜபம் பண்ணினார் ராமகிருஷ்ணர். உண்மையான முஸ்லிமாக மாறிவிட்டார். மூன்று நாள் இடைவிடாத த்யானத்தில் ஒளி ஸ்வரூபத்தில் முகம்மது நபி தரிசனம்  ராமகிருஷ்ணருக்கு  கிடைத்ததாம்.

அதேபோல் நவம்பர் 1874ல் தனது சிஷ்யர், ப்ரொபஸர் சம்பு சரண் மல்லிக் என்பவரை பைபிள் வாசித்து அர்த்தம் புரிந்துகொண்டு இயேசுவின் கிறிஸ்தவ மத கோட்பாடுகளை நன்றாக அறிந்துகொண்டார். த்யானம் செய்தார்.

ஒருநாள் சம்பு சரண் மல்லிக் வீட்டு கூடத்தில் உட்கார்ந்திருந்தபோது மடோனா குழந்தை இயேசுவை வைத்திருக்கும் படம் கண்ணில் பட்டது. உற்றுப்  பார்த்துக்  கொண்டே இருந்தவர் தெய்வீக உணர்வில் ஆழ்ந்தார். படத்தில் இருந்த உருவங்கள் உயிர் பெற்று வெளிவந்து அவர் ஆத்மாவில் கலப்பதை  அவரால்  உணர  முடிந்தது.

உணர்ச்சி வசப்பட்ட ராமகிருஷ்ணர் பக்தி மேலீட்டால்  ''தாயே என்னவெல்லாம் அம்மா நீ செய்கிறாய் எனக்கு?'' என்று கண் கலங்கினார்.   இயேசுவை மனதில் இருத்திக் கொண்டு மூன்று  நாள் காளி பவ தாரிணியை சென்று பார்க்கவே இல்லை ராமகிருஷ்ணர்.

KALIYUGAM

அப்போதே சொன்ன சுகர்:   நங்கநல்லூர்  J K  SIVAN  
கலிகாலம்  5


अनाढ्यतैवासाधुत्वे साधुत्वे दम्भ एव तु । स्वीकार एव चोद्वाहे स्न‍ानमेव प्रसाधनम् ॥ ५ ॥  ஸ்ரீமத் பாகவதம்  12.2.5
anadhyataivasadhutve sadhutve dambha eva tu  svikara eva codvahe snanam eva prasadhanam

பாவம், இன்னும் ஏழு நாளில் சாகப்போகிறவனை  சுகப்பிரம்ம ரிஷி பயமுறுத்துகிறார் என்று சொல்லலாமா?  கலியுகத்தில்  எப்படியெல்லாம் மனிதர்கள் நடந்து கொல்வார்கள், அதாவது இப்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம்  என்பதை அப்படியே  சுகர்  அப்போதே தெரிந்து வைத்திருக்கிறார். ஞானக்கண்ணுக்கு  நல்ல பவர்  இருக்கிறது.

 ரெண்டு மூணு நாளைக்கு ஒரு தரம் குளிப்பவனே  சுத்தமானவன் என்று போற்றப்படுவான்...ஒருவரை ஒருவர் மனமார விரும்புவதே தாம்பத்யம். அக்னி சாட்சியாக, சப்த பதி  சுற்றி வரும் அர்த்தம் எத்தனையோ  பேருக்கு இன்னும்  தெரிந்து கொள்ள விருப்பமிலையே. கல்யாணம் என்பது  ஒரு வியாபாரமாகிவிட்டது. அங்கே குணம் காணோம். பணம் விளையாடுகிறது. 
 ஏதோ ஒரு வேகத்தில், தப்புக் கணக்கில் திரு மணங் கள் நடைபெறும். சூரியனைக் கண்ட பனித்துளி போல் திருமண உறவு  மறையும். வெகுநாள் நிலைப்ப தில்லை.  திருமணம்  என்பது புனிதமான ஆயிரங்கால பயிர் என்பது சும்மா. எந்த அவலையோ நினைத்து எந்த உரலையோ இடித்த விவகாரம், சமையல்,  சத்திர கண்டிராக்டர்களை மகிழ வைக்க ஒரு வசதி ஆகிவிட்டது.

நமது முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் கல்யாணம் செய்து கொள்ளும்போது , தப்பு தப்பு, அவருக்கு கல்யாணம் செய்து வைக்கப்பட்டபோது அவர் 8 வயது சிறுவனாம் .

யாரையோ போய் சொல்வானேன்.   எனது  தாய்க்கு  கல்யாணம் நடந்தபோது  பன்னிரண்டு  வயது.  அப்பாவுக்கு 18 . கல்யாணங்கள்  ஜாதகப் பொருத்தம் பார்த்து நடந்தது அப்போது.  இப்போது   ஜாதகத்தில்  'மூணு கேள்விக்கு ஐநூறு ரூபாய். ஒரு கேள்வி எக்ஸ்ட்ரா கேட்கலாம்''
பால்ய உறவு அன்யோன்யம் கடைசி வரையில் அப்போது தொடர்ந்தது. ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே இல்லை.   இப்போதும் எனக்கு தெரிந்து  வெகுகாலம் சேர்ந்து வாழ்ந்த ஒரு சில கணவன் மனைவியர் வயதான காலத்தில் ஒருவர் பிரிந்தால் சீக்கிரமே மற்றவரும் பிரிந்துவிடுவது கண்ணில் நீர்த்தேக்கம் உண்டாக்குகிறது.

அதிசயமாக  இப்போது கருப்பு கோட்டுகள்   நீதிமன்றத்தில்  கணவன் மனைவியை பிரிக்க  உபயோகிக்கும் அஸ்திரம்  ''ஆண்மை/பெண்மை குறைபாடு''  . இது  அப்போதே  சுகப்பிரம்ம ரிஷிக்கு தெரிந்திருக்கிறது.

 கலிகாலத்தில்  பணம் தான் குணத்தை நிர்ணயம் செய்யும். படிப்பு யோக்கியதாம்சம் எல்லாம் ஏட்டில் யாருக்கோ எழுதி வைக்கப்பட்டது.  காசு இருக்கிறவன் படிக்கவே வேண்டாம்.  பதவி காத்திருக்கும். பல  சர்வகலாசாலைகள் அவனுக்கு டாக்டர் பட்டம் கழுத்தில் மாட்டும். 

சுகர் இன்னொரு   ஷாக் கொடுக்கிறார்.  கலியுகத்தில்    கையிலே காசு  வாயிலே  தோசை தவிர    நீதி நேர்மை காசுக்கு, அதிகாரத்தால் அந்தஸ்தால்  கிடைக்கும் வஸ்து என்கிறார். '' காட்சியான பணம் கைவிட்டு போன பின் சாட்சி கோர்ட் ஏறாதடா'' பாட்டு   நிறைய தடவை கேட்டாகிவிட்டது.

சுகர் யூ ட்யூப்  பார்க்காமலேயே  நிறைய சொல்லியிருக்கிறார் இப்போதைய நிலவரம் பற்றி.  கலிகாலத்தில்  நிறைய பேசுவார்கள். பேசுபவன் எல்லாம் விஷய ஞானம் அறிந்த பண்டிதனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. மற்றவனை எப்படியெல்லாம் கீழ்த்தரமாக மட்டமாக கொச்சையாக திட்டமுடியுமோ அதை அடுக்குச் சொல்லாக அடுக்கி அடுக்கி சொன்னால் போதும்.  யாருக்கும் புரியாமல் பேசுபவன் மஹா பண்டிதன். எங்கும் கோயபெல்ஸ்கள் நிறைந்து விடுவார்கள்  என்கிறார். 



ETERNAL LOAN

 தீராத கடன்.   -   நங்கநல்லூர் J K  SIVAN


 
உலகிலேயே  அதிகமான  தெய்வங்களும் ஆலயங்களும் புண்ய ஸ்தலங்களும் உள்ள நாடு நமது பாரத தேசம் என்று தாராளமாக சொல்லலாம்.  எண்ணற்ற அதிசயங்கள் பல யுகங்களாக நடந்து இன்றும் தொடர்கிறது. தென்னிந்தியாவில் ஆலயங்கள் அதிகமாக  இருப்பதன் காரணம் வட இந்தியாவில்   தொடர்ந்து பல பிற மத வெறியர்கள், அந்நியர் ஆக்கிரமிப்பில்  தாக்குதலில்  பல ஆலயங்கள் அழிந்துவிட்டன. ஆனால் பக்தியை எதாலும்  எவராலும் அழிக்க முடியவில்லை.

பல அதிசயங்களை  தன்னுள் கொண்டது  திருப்பதி  திருமலை வேங்கடேச  பெருமாளின்
 ஆலயம்.   உலகில்  செல்வம் கொழிக்கும்  தன்னிகரற்ற  பிரசித்தமான ஆலயம். ஆந்திரா சித்தூர் ஜில்லாவில் உள்ளது. சென்னை மாநகரத்திலிருந்து சில மணி நேரங்களில் செல்ல முடியும். கலியுகத்தில் பூலோக வைகுண்டம்  என போற்றப்படுவது. மஹா விஷ்ணு கலியுக வரதன்  வேங்கடேசனாக  நின்றருள் புரிவதை பல மணிநேரம்  கால்கடுக்க நின்று ஒரு வினாடியில் கண்டு மகிழ பக்தர்கள் கூட்டம் மொட்டைத்தலையோடு  அலைமோதுகிறது.

 கிட்டத்தட்ட  நானூறு கூடி ரூபாய் சொத்துள்ள  ஆலயம்.  லக்ஷக்கணக்காக ஒவ்வொரு நாளும் பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து தரிசிக்கும்  க்ஷேத்ரம்.  வருஷத்துக்கு  சுமார்  700 கோடி ரூபாய் காணிக்கை பெறுகின்ற  பெருமாள் வேங்கடேசன்,  வேங்கடாசலன்.  தன்னைச் சுற்றி  ஏழுமலைகள் கொண்ட ஏழுமலையான். பக்தர்கள் குறை தீர்ப்பதற்கென்றே உருவான ஸ்ரீனிவாசன், பாலாஜி.   எண்ணற்ற மஹான்கள் தரிசித்த  ஆலயம்.   வேங்கடேசன்  நிற்கும் ஆலயம் உள்ள மலை சேஷாசலம், சேஷகிரி, ஆதிசேஷன் மலையாக நிற்கும்  வேங்கடாத்ரி ஸ்தலம்.  இந்த ஏழு மலைகள் தொடர்ச்சியாக  ஸ்ரீ சைலம் வரை பரவி நிற்கிறது.  மற்ற  ஆறு மலைகள்  ரிஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, கருடாத்திரி, நாராயணாத்ரி, சேஷாத்ரி.

தேவர்கள் ரிஷிகள் ஒரு பெரிய யாகம் வளர்க்க முடிவெடுத்து, அந்த யாக பலனை யாருக்கு அளிப்பது, மும்மூர்த்திகளில் யார் பொருத்தமானவர்? இதை தேர்ந்தெடுக்க பிருகு மகரிஷி நியமிக்கப்பட்டு அவர் ப்ரம்மா விஷ்ணு சிவன் மூவரையும் அணுகி,  கைலாசத்தில் ப்ரம்மலோகத்தில் அவர்  உபசரித்து வரவேற்கப்படவில்லை. வைகுண்டம் சென்றார்.  விஷ்ணு மஹாலக்ஷ்மி மடியில் தலைவைத்து சயனித்திருந்தார்.  பிருகு ரிஷி வருகிறார் என்று அறிந்தும் வரவேற்கவில்லை.  கோபத்தில் விஷ்ணுவின் மார்பில் பிருகு  ரிஷி உதைத்தார்.  விஷ்ணு விழித்து  பிருகுவை வணங்கி உபசரித்து தன்னை உதைத்த அவர் கால்களை  அன்போடு  தடவிப்  பிடித்து விடுகிறார்.   தவறை உணர்கிறார்.  பிருகு  மஹாவிஷ்ணுவின் தயை, அன்பு, பெருந்தன்மை அனைத்தையும் கருதி மெச்சி, அவரே யாகத்தின் பலனை பெற உசிதமானவர், உகந்தவர் என்று முடிவெடுக்கிறார்.  ஆனால் மஹாவிஷ்ணுவின் மார்பில் உறையும்  மஹாலக்ஷ்மி  விஷ்ணுவின் செயலால் கோபமடைந்து  பூமிக்குச்சென்று விடுகிறாள். ஆகாச ராஜன் பெண் பத்மா வதியாகிறாள். அவளைத்  தேடி வரும் மஹாவிஷ்ணு ஸ்ரீனிவாசனாக ஏழை முதியவள்  வகுள மாலிகாவிடம் வளர்கிறார்.

பத்மாவதி நந்தவனத்தில் விளையாடும்போது ஒரு யானை அவளை துரத்த  அப்போது அங்கே வந்த ஸ்ரீனிவாசன் யானையை அடக்கி  பத்மாவதி மனதில் இடம் பெறுகிறான்.  அப்புறம் அண்ணலும் நோக்கினான் . அவளும் நோக்கினாள் .

பத்மாவதியை மணக்க பெரும் கோலாகலமான திருமண செலவிற்காக  ஸ்ரீனிவாசன் குபேரனிடம் கடன் வாங்கியது இன்னும் வட்டியுடன் அசல் திருப்பிக்  கொடுக்கப்படவில்லை.  கலியுக முடிவில் கடன் தீரலாம்.
ஸ்ரீனிவாசனின்  கடன் தீர பக்தர்கள் கோடி கோடியாக காணிக்கை அளிக்கிறார்கள் என்பது ஐதீகம்.  மனமுவந்து இதனால் ஸ்ரீனிவாசன் பக்தர்களின் குறை தீர்க்க  குறையொன்றுமில்லாத கோவிந்த னாக காட்சி தருகிறான்.


ANDAL


 பூரக்காரி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


ஆடி  மாதம் முச்சூடும்  ஏதேனும் ஒரு விசேஷம் குதூகலம் இருந்து கொண்டே இருக்க காரணம்,   அந்த மாதம் தெய்வீக மாதம், மார்கழியைப் போல்.  மார்கழிக்காரி ஒருவள் சம்பந்தம் அதற்கும் உண்டு.  நாளை  ஆடிப்
 பூரம்.  ஆண்டாள் ஜெயந்தி என்று கொண்டாடப்படும் தினம்.  மனசு பூரா வில்லிப்புத்தூரில்  இருக்கிறது.
லக்ஷ்மி ஒரு ஆழ்வார் மகளாக உதித்த நாள். ஒரு சக்தி பிறந்தது பெரியாழ்வார் மூச்சினிலே  அன்று.

சூரியனுக்கு உரிய சிம்ம ராசியில், இடம் பெற்றுள்ள பூரம் சுக்கிரனின் நட்சத்திரமாகும். ஆண்டாள்  அதனால் தான் கம்பீர  ஆழ்வாராக திகழ்கிறாள்.  ஸ்ரீனிவாசன் பத்னி சுகபோகத்தில் ஆழ்த்துபவள்.  அவள் எழுதிய  நாச்சியார் திருமொழி, திருப்பாவை போதுமே அவள் கலைத்திறனை எடுத்துக் காட்ட.

பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். பிறந்த அன்றே சுக்கிரதசை.  இல்லையென்றால் விஷ்ணு சித்தர் கண்ணில் படுவாளா?  திருப்பாவை பாடுவாளா?  ரெங்கமன்னாரை அடைவாளா?  நமக்கு தெய்வமாக சந்நிதியில் நிற்பாளா?  பூர நக்ஷத்ரக்காரர்கள்  அழகாக இருப்பார்களாம்?  ஆண்டாளே , உன் கொண்டை யழகே போதுமடி பெண்ணே!  ஒவ்வொரு வைணவ திருமணத்திலும்  மணப்பெண் அழகிகள் உன்னைப்போலவே அல்லவோ தலையலங்காரம் செய்து கொள்பவர்கள்! 

பூர நக்ஷத்ரக்காரர்கள்  இரக்ககுணமும்  இனிமையாக பேசுபவர்களாகவும்  காரியம் சாதிப்பவர்களாகவும் இருப்பார்களாம். உன் இரக்கம் தான், உன் இனிமையான சொல் தான்,  நீ  ரங்கனை அடைவதை சாதித்ததும் தான் எங்களுக்கு தெரியுமே.  உன் திருப்பாவை தெரியாத தமிழன் தமிழனே அல்ல.

பூரக்காரர்கள்   எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவார்க்கலாம்.  மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் காரியத்தில் கண்ணாக இருப்பவர்களாம்.   எதிரிகளையும் வெற்றிகொள்ளும் வல்லமை பெற்றவர்களாம்.   ஆஹா  இதெல்லாம் நிரூபித்தவள் நீ! .   பர  பரவென்று சுறுசுறுப்பாக  விடிகாலையில் எழுந்து மற்ற தூங்கும் பெண்களை எழுப்பி  யமுனையில் குளிக்க வைத்தவள் நீ.  மார்கழி முப்பது நாளும் தவறாமல்,  விடாமல்  காத்யாயனி நோன்பு நோற்கவேண்டும் என்று தீர்மானித்து எல்லோரையும் ஈடுபட வைத்தவள் அல்லவா?  

எதிரிகளை வெற்றி  கொள்பவள்  என்பதை உன்னை  சிலவருஷங்கள்  முன்பு எதிர்த்தவர்களை கப் சிப் பண்ணியதை  நினைவு கொள்கிறேன் . .... இன்னும் என்ன சொல்வதற்கிருக்கிறது? 

பூர  நக்ஷத்ரத்தில் பிறந்தவர்கள்  விதவித  ஆடைகள் அணிபவர்களாம்.  ஆமாம் உனக்கில்லாத  அலங் காரமா? பெண்ணே,  நீயே  அழகின் வடிவம் தானே.   எல்லோரையும்  பூர நக்ஷக்காரர்கள் அரவணைத்து செல்வார்களாம்.

நீயல்லவோ சரியான உதாரணம்?  வைணவர் சைவர் மற்றவர் என்று எல்லோரையும் உனைக் காண, தரிசிக்க, உன் அருள் பெற செய்பவளாயிற்றே நீ.     உன்  அன்பு  அரவணைப்பால் தானே எங்கிருந் தெல்லலாமோ  மார்கழியில் உன்னைத் தேடி கோவில்களில் மொய்க்கிறார்கள்.

பூர நக்ஷத்ரகாரர்கள் உணவு வகைகளை  தேடித் செல்பவர்கள்  என்று ஜோசியர்கள் சொல்கிறாரகளே. ஒரு சின்ன திருத்தம்.  நீ தேடித் செல்கிறாயோ இல்லையோ,  உன்  பிரசாதமாக  மார்கழி திங்கள் மடி நிறைய பொங்கல் பெற்று திருப்தியாக சாப்பிட்டவர்களின் நானும் ஒருவன்.  இப்போது நினைத்தாலும் நாவில் நீர் சுரக்கிறது. ஆஹா உன்னால் தான்    முழங்கை வழியாக நெய் மணத்தோடு வழிந்து ஓட , முழங்கை வழிவாற  அக்கார வடிசல்,  சர்க்கரை பொங்கல்   சாப்பிடுபவர்கள்  இன்றும்  எண்ணற்றவர்கள் உண்டே. 

உறவினருக்கும் நண்பர்களுக்கும் உதவுபவர்களாம் பூர நக்ஷத்ரக் காரர்கள்.  இதற்கு  எங்கும் உதாரணம் தேடி செல்லவேண்டாம். பேசாமல்  ஸ்ரீபெரும்புதூர் சென்று ராமானுஜரைக்  கேட்கலாம்,  அடித்துச் சொல்வார்.  பெரிய நம்பி, அத்துழாய் எல்லாம் சாக்ஷி சொல்ல வரிசையாக காத்திருக்கிறார்களே .

 பூரக்காரர்கள்  உடல்நலனில் அக்கறை காட்டுபவர்களாக இருப்பார்களாம்.  நீ கூட அழகாக  எப்படி உபவாசம் இருப்பது எதையெல்லாம்  நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று  எதெல்லாம் விரதமிருக்கும்போது   சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது  என்று  எடுத்துச் சொன்ன  பீஸ் FEES  வாங்காத லேடி டாக்டர் தானே அம்மா.. 

கடைசியாக ஒரு வார்த்தை.
பூர நக்ஷத்துக்காரர்கள்  புத்தகம் எழுதி வெளியிட்டு பணமும் புகழும் சம்பாதிப்பவர்கள் என்று ஜோசியம் சொல்கிறது. நீ எழுதிய புத்தகங்கள் இன்றும்  பலரால் வெளியிடப்பட்டு அவர்களுக்கு  பணமும் உனக்கு புகழும் சம்பாதிப்பவர்கள் தானே. நான் கூட  உன்னைப் பற்றி எழுதினேன், புகழ் சம்பாதித்தேன். பணம் சம்பாதிக்க விருப்பமில்லை. பூரக்கார்களுக்கு  ஆன்மீகத்தை வியாபாரமாக்கினால் பிடிக்காது  என்று ஜோசியம் எனக்கு தெரியும். 

Thursday, July 28, 2022

KALIYUGAM

 அப்போதே சொன்ன சுகர்:   #நங்கநல்லூர்_J_K_SIVAN  

கலிகாலம்  4

4 இது தான் நம் கலியுகம்.

लिङ्गमेवाश्रमख्यातावन्योन्यापत्तिकारणम् । अवृत्त्या न्यायदौर्बल्यं पाण्डित्ये चापलं वच: ॥ ४ ॥SRI MAD BAGAVATHAM 12.2.4

liṅgam evāśrama-khyātāv anyonyāpatti-kāraṇam avṛttyā nyāya-daurbalyaṁ pāṇḍitye cāpalaṁ vacaḥ   SB 12.2.,4

கலிகாலத்தில்  மனிதனின்  மனம் குரங்கு என்பதை நிரூபிக்கும். பக்தி  ஊசலாடும்.  ஒருவனின்  பக்தி அவன் மனநிலையை, நம்பிக்கையைப்  பொறுத்தது.  அது ஒருநாள்  சிவன்  உலகிலேயே உயர்ந்த தெய்வமாக வழிபட  வேண்டியவர்  என்று நினைக்கும்.  பத்து நாள் கழித்து வேறே  ஒருவர்  விஷ்ணு மஹாத்ம்யம் சொன்னதை கேட்டு இனிமேல்  நமக்கு ஒரே  தெய்வம்  மஹா விஷ்ணுவே என்று  சிவன்இல்லை என்று  சிவ வழிபாட்டை நிறுத்த  வைக்கும்.  ரெண்டு நாள் தான் இது. யாரோ  ஒரு சிலர்  பேசுவதைக் கேட்டு  அம்பாள் சக்தி தான் சிறந்த தெய்வம் என்று பேசும்.  அப்புறம் கிருஷ்ணன் தான் பெஸ்ட்  BEST என்று சொல்லும்.  அவ்வளவு தான் ஒரு வாரம் கூட  ஆகியிருக்காது. யாரோ சொல்வார் கிருஷ்ணன் புல்லாங்குழல் படம் வீட்டில் இருக்கக்கூடாது. நரசிம்மர் வேண்டாம்  என்றெல்லாம். இதெல்லாம்  மனதில் தோன்றும்   சாதக பாதக சமாச்சாரங்கள். இதற்கு முக்கியம் வேண்டாம்.  
உனக்கு எந்த உருவத்தில் நம்பிக்கையோ அதில் நான் இருப்பேன் என்கிறான் கிருஷ்ணன்.  சரியாக நமது மகோன்னதமான கோட்பாடுகளை புரிந்து  கொள்ளா ததால்  வேறு மதங்களில் ஈர்ப்பு உண்டாகிறது. அவன்   சரியாக  நமது சனாதன தர்மத்தை  அறியாமலும்  யாரிடமும் கேட்டு ஞானம் பெறாததாலும் இந்த சங்கடம்.  அடிக்கடி நமது    மேன்மையான  கோட் பாடுகளை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக தான் திரும்ப  திரும்ப சொன்னதையே  நானும் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டே இருப்பது. பலபேர் பலமுறை படிக்கட்டும், சிலர் ஒருமுறையாவது படிக்கட்டும்.. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். தெரிந்தவர்கள் மறக்காமலிருக்கட்டும் என்பதற்காக.
சுக ப்ரம்ம ரிஷி  தீர்க்க தரிசி.   கலியுகத்தில் எப்படி மக்கள் இருப்பார்கள், வாழ்க்கை எவ்வாறு  நடக்கும் என்று நன்றாக  அறிந்தவர.  இன்னும் எழுநாளில் சாகப்போகும்   பரிக்ஷித்துக்கு கலிகாலம் எப்படி இருக்கும் என்று  எதற்கு தேவை?   இருந்தாலும் அவர் அவனுக்கு சொல்வது நமக்காக  சொல்லப்பட்ட  சமாச்சாரம்.  

கலியுகத்தில் வார்த்தை ஜாலங்கள், பொய்யில் கோட்டை கட்டுபவன்,  சிறந்த கல்விமானாக   அறிஞனாக, கலைஞனாக, கவிஞனாக கெட்டிக் காரனாக  மதிக்கப்பட்டு, மரியாதை பெற்று,  கை தட்டப்படுவான்.  வெறும் வேஷதாரி, ஞானியாக,  பக்திமானாக காட்சி  அளிப்பான்.  காசு பண்ணுவான்.  

 எவ்வளவு யோக்கியனாக, நாணயமாக, நேர்மையாக இருந்தாலும் பரம ஏழை நிராகரிக்கப்படுவான்.
அவனுக்கு சமூகத்தில் அந்தஸ்து பெருமை  இருக்காது.  இதனால் தான்  வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழி  உருவானதோ?  என்ரூ தோன்றுகிறது  மேலே  உள்ள  சுகப்ரம்மரின் ஸ்லோகம் படிக்கும்போது.

AADI FRIDAY

 ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’-

#நங்கநல்லூர்_J_K_SIVAN 

ஆறு மாதத்துக்கொரு தடவை  அற்புதமான வெள்ளிக் கிழமைகள் நமக்கு கிடைக்கின்றன. 
ஒன்று  உத்தராயணத்தில் சூரியன் வடதிசைப் பயணத் தில்  மகர ராசியில் புகும்போது  தை வெள்ளிக்கிழமை கள்.உத்தராயணம்  தேவர்களுக்கு பகல்.
அதேபோல்  தக்ஷிணாயனத்தில்  கடக ராசியில் சூரியன் புகும்போது  ஆடி வெள்ளிக்கிழமைகள்.  ஆனால் ரெண்டுமே  அம்பாளுக்கு  உகந்த நாட்கள் என்பதால்  பெண்கள், சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.தக்ஷி ணாயனம்  தேவர்களின்  இரவு.

தக்ஷிணாயனத்தில்  பிராணவாயு அதிகமாக கிடைக் கிறதாம். விவரம் எனக்கு தெரியாது. இன்னும் தேடவில்லை. ஒன்று நிச்சயம்.  ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள்.  தாவரங்கள் ஜீவன்களுக்கு ஆதாரமான மழை இனிமேல் தான் உருவாகி  ஆதார சக்தியை தருவதால் நிச்சயம் பிராணன் வலுப்பெறும்.வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.  கிராமங்களில்  அம்மனுக்கு கூழ் காய்ச்சி நைவேத்யம் பண்ணி எல்லோருக்கும் ஆகாரம் கிடைக்கும். ஆடி மாசம்  கடைகளில் அதிரடி தள்ளுபடி, கழிவு கொடுப்பதை பற்றி எல்லா பத்திரிகைகளும் தம்பட்டம் அடிக்கும்.

திருமணம் ஆக  ஒளவை நோன்பு என்று கொண்டாடு வார்கள். இந்த நோன்பு நோற்றால்  திருமணம் ஆகும், மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். 

இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள். பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம் இரவு பத்து மணிக்கு மேல் துவங்கும். அச்சமயத்தில் ஆண்கள் யாரும் அவ்விடத்தில் இருப்பதில்லை. பின்னர் ஒளவையார் கதையை வயதான பெண்மணி கூறுவார். ஒளவையை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து இரவைக் கழிப்பர். இதுவே ஒளவை நோன்பு. இந்த வழிபாடு மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றைய  தினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும்.  வீட்டில்  மாவிளக்கு ஏற்றி  பூஜிப்பார்கள். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. 
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்

ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் சக்தி ஸ்தலங்களில்  குடும்பத்தோடு  சென்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.   சென்னையில் மயிலாப் பூரில்  முண்டகக்  கண்ணியம்மன் கோவில் போகவே முடியாத அளவு கூட்டம் சேரும்.  , திருவேற்காடு  தஞ்சாவூர்  மாரியம்மன், சமயபுரம், நார்த்தாமலை, பெரிய பாளையத்தம்மன் கோவில்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

கன்னியா குமரி, திருவானைகாவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய ஸ்தலங்களில் ஆடி வெள்ளி கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.

ஆலயங்களில்  அம்பாளுக்கு  சந்தனக் காப்பு அலங் காரம்.  கண்டு தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகை யை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.‘  அஷ்ட லக்ஷ்மிகளுக்கும் பூஜை நடக்கும். அருள் ஆசி தேடுகிறோம்.ஆடிமாதம் 18ம் தேதி  ஆடிப்பெருக்கு  ஒரு சிறப்பான குதூகல நாள். அது பற்றி தனியாக எழுதுகிறேன்.

RAMAKRISHNA PARAMAHAMSA

 அருட்புனல் -   நங்கநல்லூர்  J K SIVAN 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 


''ப்ரம்ம ஞானோபதேசம்''


காலம்  யாருக்காகவும் காத்திருக்காமல் என்பது  ஓடிக்கொண்டே தான் இருக்கும்.  அது ஓடினால் தான் சரித்திரம். அதன் ஓட்டத்தின்  பக்கங்கள்  தான் சம்பவங்கள்  எனும்  எத்தனையோ எண்ணப் பதிவுகள்.

பிராமணிக்கு பரம சந்தோஷம்.  ''இந்த  சிஷ்யன் ராமகிருஷ்ணன் மிக அருமையாகப்  பாடம்   கற்றுக்
கொள்கி றானே என்று.  அவனுக்கு நம்மை விட ஒரு அபூர்வ அனுபவம் வேறு இருக்கிறதே. அவனுக்கு  தாயார்  பவதாரிணியின் கருணைப் பார்வை வேறு செல்லமாக இருக்கிறதே. நினைத்தபோது அவளை அடைய முடிகிறதே.  என்னால் முடியுமா?'' என்று வியக்கிறாள்.

1874ல்  தோதாபுரி என்கிற  ஒரு  துறவி தக்ஷிணேஸ்வரம் வந்தார். அத்வைதி.  நர்மதை நதிக்கரையில் நாற்பது வருஷங்களுக்கு மேலாகத்  தவம் புரிந்தவர். கங்கைக்   கரைக்கு வந்தவர். கம்பீரமும் மிடுக்கும் கொண்ட தேகம். அதட்டல் குரல், கடுமையான பார்வை. சிடு சிடு முகம்.  ஆஜானுபாகுவான உருவம்.  போதாததற்கு  கரு கருவென தாடி மீசை. உடம்பில் துணியில்லாத அவதூதர்.    ப்ரம்ம ஞானி. ப்ரம்மம் ஒன்று தான் நித்ய வஸ்து .   அதற்கு காலம், நேரம், காரணம், எதுவும் இல்லை. நிரந்தரம். மாயையால் ஒன்று பலவாக காணும். தோன்றி மறைவது போல் தோற்றங்கள் ஏற்படும். மாற்றங்கள் உண்டாகும். ''இது இல்லை, இது இல்லை'' என்று ஞானம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து தெளிவு தரும். எண்ணத்தில் எல்லைக்கப்பால் ஆன்மா ஒளிர்வது தெரியும். எண்ண ஓட்டம் நிற்கும். பிறகு தான்  மோனத்தில் ஞானம் உணரமுடியும். தேகம் மறந்து விடும். ''நான்''  யார் என்று புரியும்  என்று  அழகாக  உணர்த்துபவர்.

''சுவாமி,  எனக்கு வேதாந்தம்  போதியுங்கள் " என்று வேண்டிய  ராமகிருஷ்ணருக்கு வேதாந்த நாட்டம் இருப்பதை அறிந்து தோதாபுரி மகிழ்ந்தார்.   ராமகிருஷ்ணர்  நேராக பவதாரிணியிடம் சென்றார்

''அம்மா  நான் இவரிடம் வேதாந்தம் கற்றுக்கொள்ள அனுமதிப்பாயா?''  
''ஆஹா  நல்ல திட்டம்.  ஆரம்பி'' என்றாள்  அன்னை. அது அவருக்கு மட்டுமே  தானே தெரியும்.
''சந்யாசிகள் தான் அப்பா வேதாந்தம் கற்று  அப்யஸிக்க தகுந்தவர்கள். நீ  இளம் வாலிபனாக இருக்கிறாயே. நீ  சந்நியாசி ஆக முடியுமோ?'' என்கிறார் தோதாபுரி.

''எனக்கு சம்மதம்.   ஆனால் ரகசியமாக என்னை சந்நியாசி ஆக தீக்ஷை கொடுங்கள். என் வயதான அம்மா  மனைவி ஆகியோர் இது தெரிந்தால்  வருந்துவார்கள்''

ஒரு சில நாள் கழிந்தது.   ஒரு  விடியற்காலை அக்னி வெளிச்சம். பஞ்சவடியில். தோதாபுரியும் ராம கிருஷ்ணரும்.  இருளில்  அக்னி  ஜ்வாலையின் ஒளி இரு முகங்களிலும் பளிச்சிட்டன.

ஒல்லியான  ராமகிருஷ்ணர், குறுந்தாடி  மீசை கொண்ட வர் .அழகிய பரந்த  ஆழ்ந்த கருமை நிற கண்கள் எப்போதும் அரை மூடி பாதி திறந்த  நிலையில் இருப்பவை.  புன்னகை புரியும் முகம், திறந்த வாய். வெண்மை நிற பற்கள் சில  வெளியே தெரியும்.  எதிரே சிறிய குன்று போன்ற  திண்மையான சந்நியாசி. வெயிலும் பனியும், இடியும், மின்னலும், காற்றும் மழையும் தாங்கும் தேகம். இரும்பு மனது.  தேக்கு நிற உடம்பு. இது தான் தோதாபுரி.

அக்னியில் மந்திரங்கள் உச்சரித்து உறவு, பந்தங்கள் எல்லாம் விடுபட்டது. குடுமியை  அறுத்தெறிந்தாகி  விட்டது. பூணல் அக்னியில் கலந்தது. ஜாதி, மதம், குலம் , சமூகம், எல்லாம் விலகி விட்டது.  இனி ஆசை, பாசம் எதுவும் கிடையாது. அதுவும் அக்னியில் கரைந்தது.  ஆன்மா ஒன்றே லக்ஷியம். காவி  கோவணம், அரையில் சுற்றிக்கொள்ள காவி உடை பெற்று அணிந்தாகிவிட்டது. கதாதர்,   ''ராமகிருஷ்ண பரமஹம்ஸர்'' எனும் புது  யோகியாகி விட்டார்.

தியான அறையில் இருவரும்.   குருவிடமிருந்து சிஷ்யனுக்கு  ப்ரம்ம ஞானம் போதிக்கப்பட்டது. உபநிஷத் துகள் வேதங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பூரண நிம்மதி, அமைதி, சாந்தம் குடிகொண்டது அந்த குடிசையில்.

''உலகத்திலிருந்தும்  அதன் பொருள்களிடமிருந்தும்  என் மனம் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெற்று வருவதை உணர்ந்தேன்'' என்று பின்னால் இந்த அனுபவத்தைச்  சொல்கிறார் ராமகிருஷ்ணர்.

''என்னால் ஒரே அடியாக முற்றிலும் விடுபட முடியவில்லையே, குரு மஹராஜ்''-   ராமகிருஷ்ணர்.
''விடுபட்டே  ஆகவேண்டும் நீ.  ஆன்மாவில் முழுதுமாக  உன் மனம் தோய வேண்டும்  ''  -- தோதாபுரி.

ராமகிருஷ்ணர் முயன்றார். சமாதி நிலை எளிதில் கிட்டியது .  மூன்று நாள் அசையாமல் நிர்விகல்ப சமாதியில்  இருந்தார்.

எங்கும் மூன்று நாளுக்கு மேல் தங்காத  தோத்தாபுரி  தக்ஷிணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணருடன் மூன்று மாதங்கள் தங்கினார்.

''எல்லாம் மாயை தான்'' என்கிறார் தோதாபுரி.  ''
''அந்த மாயையே  என் தாய் தானே''  என்று அவளையே எதிலும் கண்டார் ராமகிருஷ்ணர். 
அவித்யா மாயையில் பிறப்பு இறப்பு, சுக துக்கம் எல்லாம் உண்டாக்குகிறாள்.  இது கீழ் மட்டத்தில்.   வித்யா மாயையில் தான் தயை, காருண்யம், உயர் எண்ணங்கள், பணிவு பூரண அன்பு எல்லாமே கொடுக்கிறாள். அது மேல் மட்டத்தில்.

மெல்ல மெல்ல  ராமகிருஷ்ணரிடமிருந்து  குருவான தோதாபுரி மஹா காளி அம்சத்தை, சர்வ சக்தியை, புரிந்து கொள்கிறார்.

ஒருநாள் மாயை, வேதாந்தம் பற்றி இருவரும் கார சாரமாக பேசிக்கொண்டிருக்கும்போது தோட்டக் காரன் ஒருவன் உள்ளே வந்து ஹோம அக்னியில் தனது சுருட்டை பற்ற வைத்துக் கொள்கிறான். அவ்வளவு தான் தோதாபுரி அவனை நோக்கிப்   பாய்ந்து கோபாவேசத்தில் அடிக்க ஓடுகிறார். அவரைத்  தடுத்து  ராம கிருஷ்ணர் ''சுவாமி மாயையின் சக்தியை பற்றி அறிந்தவர் நீங்கள். அதை சந்திக்கும்போது  புரிந்து கொள்ள  தவறுகிறீர்களே'' என்றபோது  தோதாபுரி தலை குனிந்தார் .

தோதாபுரியின் உடலில் நோய் கண்டது. விடாமல் சீத பேதி. இதன் உபாதையால் மனம் தியானத்தில் ஈடுபட தடங்கலாயிற்று. இந்த உடலை கங்கையில் தொலைத்து விடலாம் என்று கங்கையில் இரவு நேரத்தில் இறங்கினார். என்ன ஆச்சர்யம்.ஆழமான கங்கையில் அவர் ஏன் முழுகவில்லை. தண்ணீர் இல்லையா?  எப்படி அக்கரை  நடந்து சென்றார் ? திரும்பி பார்த்தால்  ஓ வென்று கங்கை பிரவாகம், எதிரே தக்ஷிணேஸ் வரம் கோவில், பஞ்சவடி, ஆஹா  இது என்ன எங்கு பார்த்தாலும் பவதாரிணி. காளி , கங்கை பூரா காளி'' அவளா  என்னை மூழ்கி சாகாமல் காப்பாற்றியவள். எங்கே என் வயிற்றுவலி? எங்கே அந்த உபாதை? எப்படி நின்றது? நானா அவதிப்பட்டவன்?  ராமகிருஷ்ணர்  உணர்ந்ததை நான் இப்போது உணர்கிறேன். அவளே எல்லாம், மாயையும் அவளே, நிஜமும் சத்தியமும் அவளே.எப்படி  மூன்று மாதம் பதினோரு மாதங்களாக அங்கே கழிந்தது என்று ஆச்சரியப்பட்டார்  தோதாபுரி.

''அப்பா மஹா பிரபு, ராமகிருஷ்ணா, இனி நீ என்னிடம் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லை  காளி புத்ரா'   என  வாழ்த்திவிட்டு  தன் வழியே நடந்தார் தோதாபுரி.

 

badra giriyar

 பத்திரகிரியார் சரித்திரம் - #நங்கநல்லூர்_J_K_SIVAN --

எப்போது எல்லாவற்றையும் வெறுக்கிrறோம் ? ஏமாற்றத்தை ஜீரணிக்க முடியாமல் போகும்போது. எதிர்பார்ப்பு எதிர்ப்பாக மாறும்போது. ஆசை நிராசையாகும்போது. கனவு கைகூடாதபோது. நம்பிக்கை துரோகம் அதிர்ச்சி தரும்போது இதெல்லாம் காரணம் எனலாம்.
சகல சௌபாக்கியங்களும் கொண்ட ராஜா பர்த்ருஹரி ஆசை மனைவியின் பச்சை துரோகத்தால் மனமுடைந்து நாட்டை துறந்து காட்டை நோக்கினான். தவமிருந்தான். மனம் ஒருநிலைப்பட்டது. நடந்தான் தெற்கே வந்தான். தமிழ் கற்றான். திருவிடை மருதூரில் பட்டினத் தாரை தரிசித்து சீடனானான்.அவனது மனக்குமுறல் 'பத்ரகிரியார் புலம்பல்'' என்ற ரெண்டடி தத்துவப் பாடள்களாகியது.
உஜ்ஜைனி ராஜா பர்த்ருஹரி நாட்டைத் துறக்கும் முன்பு நடந்த ஒரு சம்பவம்.
பட்டினத்தார் வடக்கே ஸ்தல யாத்திரை சென்றபோது உஜ்ஜைனி மாகாளபுரத்திற்குச் செல்கிறார். மஹா காளேசுவரரை வணங்கி விட்டு ஊருக்கு வெளியே இரவில் ஒரு காட்டுப் பகுதியில் ஒரு பிள்ளையார் கோவிலில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார்.
அன்றிரவு ஒரு திருடன் ராஜா பர்த்ருஹரியின் உஜ்ஜைனி அரண்மனை அந்தப்புரத்தில் திருடும்போது காவலாளிகள் பார்த்துவிட்டார்கள். ராணியின் முத்து மாலையைத் திருடன் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினான். வீரர்கள் வேகமாக துரத்தியதால் திருடன் காட்டுப்பக்கம் ஓடியவன் காட்டுப்பகுதியில் இருந்த பிள்ளையார் மேல் அந்த முத்து மாலையைத் தூக்கி எறிந்தான். ஆனால் அவன் எறிந்த முத்து மாலை பிள்ளையார் எதிரில் நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. பட்டினத்தாருக்கு நடந்தது ஒன்று தெரியாத சமாதி நிலை.
திருடனைத் துரத்திய ராஜாவின் காவலர்கள் ராணியின் முத்து மாலையை அணிந்து உட்கார்ந்திருந்த பட்டினத்தாரை துறவி வேஷம் போடும் திருடன் என்று பிடித்துக்கொண்டு போய் ராஜா பர்த்ருஹரியின் முன் நிறுத்த அவன் கோபத்தோடு தீர விசாரிக்காமல் பட்டினத்தாரைக் கழுவிலேற்ற ஆணையிட்டான்.
கழுமரத்தில் மேல் ஏற்றப்பட்ட நேரம் பட்டினத்தாருக்கு நிஷ்டை கலைந்தது. விஷயம் அறிந்தார். பரமேஸ்வரனை நினைத்து ஒரு பாடல் பாட அந்தக் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. இது தான் அந்த அற்புத பட்டினத்தார் பாடல்:
''என்செய லாவதியாதொன்று மில்லை; இனித்தெய்வமே
உன்செய லெயென் றுணரப் பெற்றேன்; இந்த வூனெடுத்த
பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோலிங்ங னேவந்து மூண்டதுவே''
பரமேசா, எல்லாம் உன் செயல். நான் எதை நினைத்து எதைச் செய்ய இயலும்? இந்த மாமிச பிண்ட உடல் எடுத்து நான் நினைவறிந்து தவறு செய்யவில்லை. ஒருவேளை நான் முற்புறவிகளில் சேந்த தீவினை, பாபங்கள் இங்கே கழுமரமாகி என்னைப் பிளக்கவந்ததோ?''
பட்டினத்தார் பாடல்கள் எளிமையானவை, சுலபமாக அர்த்தம் புரியும். இந்த அதிசயத்தை கண்ட அந்தக் கணமே ஞானம் பெற்றான் ராஜா பர்த்ருஹரி. பின்னர் பட்டினத்தார் சிஷ்யனாக பத்திர கிரியாரானான் .
இறந்து போன பர்த்ருஹரியின் மனைவி திருவிடை மருதூரில் ஒரு நாயாக பிறந்து அவரைச் சுற்றி வந்தது. பத்திரகிரியார் வீசிய திருவோடு மண்டையில் பட்டு அந்த நாயும் இறந்தது. திருவோடும் உடைந்தது. முற்பிறவி ஞாபகம் வந்து, திருவிடைமருதூருக்கு வந்தாள். பத்திரகிரியாரிடம், “துறவியாகிய தங்கள் எச்சில் சோறு உண்டு வளர்ந்த நாய் நான் தான். எனக்கு முக்தி கிடைக்க வேண்டும்''என்று முறையிட்டாள். அவர் மருதூர் இறைவனிடம் முறையிட அங்கே கிளம்பிய ஜோதியில் இருவரும் முக்தி பெற்றனர்.
திருவிடை மருதூர் மஹாலிங்கத்தை வரகுண பாண்டியன், பத்திரகிரியார், பட்டினத்தார், ஸ்ரீதர் ஐயாவாள் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலம் நான்கு தேரோடும் வீதி நான்கு மடவிளாகம் கொண்டு அழகிய ஊராக விளங்குகிறது. தேரோடும் வீதிகளில் கீழைவீதியில் விஸ்வநாதர் ஆலயமும் தெற்கு வீதியில் அருள்மிகு ஆத்மநாதர் ஆலயமும் மேலை வீதியில் ரிஷிபுரீஸ்வரர் ஆலயமும் வடக்கு வீதியில் அருள்மிகு சொக்கநாதர் ஆலயமும் அமைய நடுநாயகமாக மஹாலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலம் ஒரு பஞ்சலிங்கத் தலம் . நாலு பக்கமும் நான்கு சிவாலயங்கள். நடுவே திருவிடைமருதூர் ஸ்தலம். கிழக்கே பாணாபுரம்.பாணாபுரீஸ்வரர் ஆலயம். தெற்கே திருநீலக்குடியில் மனோக்கிய நாத சுவாமி ஆலயம், மேற்கே திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோயில் .வடக்கே இடங்கொண்டீச்சுரம் (கல்யாணபுரம்) அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் ஆலயம். சித்தர்கள் பலர் தரிசித்த ஸ்தலம்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் முக்தி அடைந்த பத்திரகிரியார் எழுதிய மெய்ஞான புலம்பல் நூல் சித்தர் நூல்களில் தனித்துவம் வாய்ந்தது. எளிய தமிழில் பொருள் உணரும் வகையில் எழுதப்பட்டவை பத்திரகிரியார் முக்தி அடைந்த இடம் கிழக்கு மாட வீதியில் 'நாயடியார் கோயில்' என்று அடையாளம் காட்டுகிறது.

SRADHDHAM

 த்ருப்தியத: த்ருப்தியத: த்ருப்தியத: - நங்கநல்லூர்  J K  SIVAN 


மன்னனாகப் பிறந்து முடிசூடும்  நேரத்தில்  தாய் சொல் தட்டாமல்  தந்தை  அளித்த  வரம் பழுதாகாமல்  பதினான்கு வருஷங்கள்   ராமன்  மரவுரி தரித்து வனவாசம் ஆரம்பித்து ஒரு  வருஷம் ஓடியது.  
தண்ட 
காரண்ய வனம் மரங்களும் மலைகளும் நிறைந்த செழிப்பான காடு. அருகில் கங்கையைப் போல பல்குணி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. 
காட்டில் ஒருநாள். 
காலண்டர் இல்லாத  அந்த காலத்தில் எல்லோரும்  வருஷம், மாசம்,  நாள்,திதி,  நக்ஷத்ரத்தை மனதளவில் நினைவில் வைத்து வாழ்க்கை நடத்தியவர்கள்.  ஆகவே  ராமனுக்கு  அன்றைய தினம்  தனது  அருமைத் தந்தை தசரத மஹாராஜா  மறைந்த ஸ்ராத்த திதி நாள் என்பது நினைவுக்கு வந்தது.  

அதிகாலை நேரத்தில்  பல்குணி நதிக்கரையிலேயே தந்தைக்குத் திதி கொடுத்துவிடலாம் என்று ராமன் எண்ணினான். 
அருகே இருந்த தம்பியிடம்   “லக்ஷ்மணா,  நான் காட்டை விட்டு  வெளியேறக்கூடாது.   ஆகவே  நீ அருகில் இருக்கும் கிராமத்திற்குப்  போய்  ஸ்ராத்தத்துக்குத் தேவையான தானியங்கள், பொருட்கள்  தர்ப்பைகளை எடுத்துக் கொண்டு  சீக்கிரம் வா'' என்று  கட்டளையிட்டான் ராமன். 

லக்ஷ்மணன் விரைந்தான்.   காட்டின் எல்லையில் ஒரு சின்ன கிராமம்.  அங்கே  போய்  ஸ்ராத்த தேவைகளுக்கு சாமான்களை சேகரிப்பதில் மும்முரமானான். 

அதற்குள்  சீதை காட்டில் இருக்கும் பழங்களைப் பறித்து வந்தாள். ராமனோ ஆற்றில் நீராடிவிட்டுத் திதி செய்வதற்காக இடத்தைச் சுத்தப்படுத்தினார்.

ஸ்ராத்த  திதிக்கு  குறிப்பிட்ட  நேரம்  காலம் உண்டு.  அது நெருங்கிவிட்டது, கிராமத்திற்குச் சென்ற லக்ஷ் மணன் இன்னும் திரும்பவில்லையே!  பித்ருக்கள் உணவிற்காகக் காத்திருப்பார்களே, என்ன செய்வது?  என்ற கவலையுடன்   ''சீதா  இங்கேயே   நீ  ஆற்றங்கரையில்  உட்கார்ந்திரு''  என்று சொல்லிவிட்டு  லக்ஷ்மணனைத்  தேடி  ராமன்  காட்டின் எல்லைக்கு புறப்பட்டான்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. தனியாக  உட்கார்ந்திருந்தாள்  சீதா, கிராமத்திற்குச் சென்ற ராம லக்ஷ்ம ணர்கள்  இன்னும் ஏன் திரும்பவில்லை?  ஸ்ராத்தப் பொருள்களைக் கொண்டுவந்தால்தானே சமைக்க முடியும்?   சீதா கண் கலங்கினாள்.

தான் பறித்து வந்த பழத்தைச் சுத்தப்படுத்தினாள், அருகில் இருக்கும் தாழம்பூப் புதரிலிருந்து தாழம்பூ வைப் பறித்து இலையில் வைத்தாள்.

ஸ்ராத்த  நேரம் முடிய  வெகு சில  நாழிகைகள்  இருக்கிறது.  அப்புறம்  அசுர கணம் வந்துவிடுமே, அதற்குள் தன்னுடைய மாமனார்  தசரதருக்கு   பித்ரு பிண்டம் படைக்கவேண்டும்.   தசரத மஹாராஜா  பட்டினியாக இருப்பாரே'' 

 வேறுவழியின்றி,  ஸ்ராத்த நேரம் முடிவதற்குள்  இலையில் தான் பறித்து வந்த பழங்களை ஸ்ராத்த  நைவேத்யமாக வைத்து தன் மாமனாரை நினைத்து மனதார பிரார்த்தனை செய்தாள்.

அப்போது ஆகாசத்தில் தசரதனின் குரல் ஒலித்தது, “சீதா, 
 நீ படைத்த உணவை நான் ஏற்றுக்கொண்டேன். நலமுடன் வாழ்க” என்றது.   சந்தோஷம் தாங்கவில்லை. ஆயினும், ''அடடா,  நான் முறையாக  பித்ரு பூஜை ஸ்ராத்தமாக  செய்ய இயலவில்லையே'. வணங்கவில்லையே,  ஸ்ராத்த  பிண்டத்தை முறைப்படி அளிக்கவில்லையே, புத்ரர்கள்   ராம லக்ஷ்மணர்களும்  ஸ்ராத்தத்தில் பங்கேற்க வில்லையே , எப்படி  தசரதர் திருப்தியாக நான் அளித்ததை ஏற்றுக்கொண்டார்?  ஒருவேளை வேறுயாரோ?  தசரதர் இல்லையோ?''

“சுவாமி,  நன்றி, நீங்கள் யார் என்று  நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்”- என்றாள்  சீதை.
''சீதா  நான் தான் உன்  மாமனார் தசரதன்” என்று கூறி  க்ஷண காலம் தோன்றி  தசரதர் அவளுக்கு ஆசிவழங்கி மறைந்தார்.

சீதைக்கு  பரம சந்தோஷம்.   நான்  கண்ட இந்த அற்புதக்காட்சியை  சொன்னால் யாரும் நம்ப மாட்டார்களே, ராம லக்ஷ்மணர்கள்   ஏற்பார்களா?'' என்று மனதில் எண்ணம் தோன்றியது. இருந்தாலும் 
 தான் பறித்துவந்த தாழம்பூவும், பல்குணி ஆறும், அருகில் இருக்கும் பசுவும் சாட்சி சொல்லும் என்று தனக்குள்ளேயே  ஆறுதல் அடைந்தாள்..

வெகு தொலைவிலிருந்தா   கிராமத்தில்  ஸ்ராத்த பொருட்கள்,  தானியங்கள், கனி, ஆகியற்றை  ராமலக்ஷ்மணர்கள் எடுத்துக் கொண்டு திரும்பிவர  கால தாமதம் ஆகிவிட்டது, சிராத்தம் செய்ய நேரம் வெகு  சில  நேரமே இருக்கிறது என்று ராமனுக்கு துடிப்பு.,

''இந்தா சீதா, இதை வைத்து உடனே  ஸ்ராத்தசமையல் செய். சீக்கிரம்.'' என்றான் ராமன்.
சீதா தயங்கியபடியே, நடந்ததாய் சொன்னாள் . 
''பாவம் தனியாக இருந்ததபோது பயந்து ஏதோ கனவு  கண்டிருப்பாய் ''  என்று ராமன் சீதையின் சொல்லை நம்பவில்லை. 
''நாதா  நான் சொல்வது உண்மை என்பதற்கு  இந்த பல்குணி நதி,  ஒரு  பசு,  தாழம்பூவையும் வே சாக்ஷி. அவற்றை கேளுங்கள்''  என்றாள்  சீதை. 
'ராமன் நம்பாதபோது, நாம்  அதை எதிர்த்து சொல்லக்கூடாது என்று பயந்து து பசுவும், பல்குணியும், தாழம்பூவும் எதுவுமே சொல்லவில்லை.

ஆகவே  சீதை  சமைத்ததும்,  அப்பாவுக்கு திதி  கொடுக்கத் துவங்கினார் ராமன். அப்போது மீண்டும் வானில் இருந்து பித்ருக்களின் குரல் கேட்டது, 

''ராமா. நிறுத்து சீதா பரிமாறிய பழங்களை நாங்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டோம், திருப்தியும் அடைந்துவிட்டோம்” என்றது தந்தை தசரதனின் குரல்.  ராமலக்ஷ்மணன் சீதை மூவரும் குரல் வந்த திசையில் வணங்கினார்கள்.  மகிழ்ந்தார்கள். 

''சீதா  நான் நீ சொன்னதை நம்பாமல் போனது தப்பு '' என ராமன்  மிகவும் வருந்த,  சீதா உண்மையை கூறாமல் இருந்த  பல்குணி நதியை சபித்தாள்.  அவள் பசு,தாழம்பூ,  ஆகியவற்றையும் சபித்தாள். 
”இனி நீ பூமிக்கு மேலே செல்லாமல், பூமிக்குக் கீழே யார் கண்ணுக்கும் தெரியாமல் ஓடுவாயாக'',
 ''தாழம்பூவே,  இனி நீ ஈஸ்வரன் பூஜைக்குப் பயன்படாமல் போவாயாக,
'' பசுவே நீ வாயைத் திறந்து உண்மையைக் கூறாததால் உன் முகத்தில் வசிக்கும் லட்சுமி தேவி பின்புறம் செல்லட்டும்''   அதன் படியே ஆயின. 
இன்று ஆடி அமாவாசைக்கு இது பொருத்தமான புராண கதை என்பதால் உங்களுக்கு கூறினேன்.

நம் பித்ருக்களை அன்போடு அழைத்தாலே உங்களுக்காக ஓடி வருவார்கள். அவர்களை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டாகும்.

KALIYUG

 அப்போதே சொன்ன சுகர்: #நங்கநல்லூர்_J_K_SIVAN

கலிகாலம் 3

சரியான கணிப்பு

दाम्पत्येऽभिरुचिर्हेतुर्मायैव व्यावहारिके । स्त्रीत्वे पुंस्त्वे च हि रतिर्विप्रत्वे सूत्रमेव हि ॥ ३ ॥
dāmpatye ’bhirucir hetur māyaiva vyāvahārike strītve puṁstve ca hi ratir vipratve sūtram eva hi

கலிகாலத்தில் கணவன் மனைவி உறவு டாம் & ஜெர்ரி உறவு மாடலாக இருக்கிறது. ஓட்டுதல், மரியாதை, அபிமானம், சகிப்பு தன்மை எல்லாம் சுத்தமாக இருக்காது. சுயநலம் தான் பெரிது. கோர்ட்டுக்கு போய் கருப்பு கருப்பு கோட்டுக்காரனிடம் பணம் கொடுத்து தனித்தனியாக பிரிந்து போகாமல், ஒரே கூரையின் கீழே வாழும் இரு துருவங்களாக வாழ்வார்கள். பிராமணன் என்றால் வெறுமே பூணல் நூலை மட்டும் மாட்டிக் கொண்டவன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மதிப்பை இழந்தவனாகி விடுவான். மிருகத்தனத்தோடு மனைவி போகப்பொருள் என்று கருதி சுய திருப்தி நாடும், காமம் தேடும் மனித மிருகங்களாகி விடுவார்கள். காசு கொடுக்காத வேலைக்காரர்களாக கணவன் மனைவிகளாக இருப்பதற்காகத் தான் கல்யாணம் என்ற எண்ணம் மனதில் பதியும் . கடவுள் பக்தி தேய்பிறை மாதிரி குறைந்து கொண்டே போகும். வேதம் என்பது சில பெண்களின் பெயராக ''வேதா'' என்று மட்டும் உரு மாறி விடும்.

வெகுகாலம் முன்பு கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷனாக ஆண் இருந்தான். பெண் என்பவள் பின் தூங்கி முன்னெழும்பும் பேதை.யாக இருந்து ''ஏ மழையே பெய்'' என்றால் மேலே மேகத்துக்கு காது கேட்டு மழை பெய்தது. கணவன் கீறிய கோட்டை மனைவி தாண்ட மாட்டாள் 'பதி சொல் தவறாத பாவாய்'' எல்லாம் கலிகாலத்தில் சில பழைய புத்தகங்களில் தான் படிக்க முடியும். அதற்கு இப்போது அர்த்தம் புரியாது, இல்லை, அர்த்தமே தெரியாது, கிடையாது. அடேயப்பா, எவ்வளவு துல்லியமாக நம் காலத்தை அப்போதே சுக பிரம்ம ரிஷி கண்டித்திருக்கிறார். எப்படி ஐயா உம்மால் இது முடிந்தது?

கல்யாணத்தில் பெண்ணின் தலையில் நுகத்தடி வைத்தும், காசியாத்திரை செல்லும் யாரோ ஒரு ப்ரம்மச்சாரியை பிடித்து ''இந்தா தம்பி, என் பெண் உனக்கு'' என்று கன்யா தானம் செய்வதும் கலிகாலத்தில் அர்த்தம் இல்லாமல் ஏதோ டிராமாவில் ஒரு காட்சி போல் நடக்கிறது. மேடையிலிருந்து தட்டில் ஒவ்வொருவர் சீட்டுக்கு seat க்கு அருகில் வந்தும் மாங்கல்யத்தை காட்டி அக்ஷதை புஷ்பம் கை நிறைய தந்து அதை டமடம வென்று மேளம் தட்டும்போது நமக்கு முன்னால் நிற்கும் யார் தலையிலோ போடுகிறோமே இது தான் ஆசீர்வாதம் என்று ஆகிவிட்டதே!

PRADHOSHAM

 ப்ரதோஷம் -   நங்கநல்லூர்  J K SIVAN 


கலிகாலத்தில்  கோவிலுக்குச்  செல்வதற்கே  புண்யம் செய்திருக்கவேண்டும்  என்ற நிலைமை  ஆகிவிட்டது. அதுவும் விசேஷ காலங்களில்   ஆலயதரிசனம்  எவ்வளவு  மன நிறைவு  தருகிறது, அங்கு நிறைந்திருக்கும்  அதிர்வலைகள் நம்மை  எவ்வாறு புத்துணர்ச்சி பெற வைக்கிறது என்பதை அனுபவத்தில் தான் அறிய முடியும்.

அப்படி ஒரு சிறந்த  தினம் மாதமிருமுறை  வரும் ப்ரதோஷம்.  சிவாலயங்களில் மிக சிறப்பாக  அனுஷ்டிக்கப்படுவது.

பிரதோஷம் எப்போது வரும்?  ஒவ்வொரு  சுக்ல பக்ஷம், வளர்பிறை, பதிமூன்றாம் நாள், திரியோதசி
அன்றும் க்ரிஷ்ணபக்ஷம் தேய்பிறைக்கு பதிமூன்றாம் நாள் அன்றும் வருகிறது.

பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும்.  ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆகவே மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சௌகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

 பிரதோஷம் பற்றிய வரலாறு  தெரிந்தால் இன்னும் நன்றாக  புரியும்.  

திருப்பாற்கடலில் அமிர்தம் கிடைக்க தேவரும் அசுரரும்  வாசுகியை கயிறாக,  வடவரையை  மத்தாக உபயோகித்து  கடையும்போது  வாசுகி  கொடிய விஷத்தை கக்கியதால்  பிரபஞ்ச உயிர்களை காக்கும் பொருட்டு ஹாலஹாலம்  எனும் அந்த கொடிய விஷத்தை முழுதும் விழுங்கி  பரமேஸ்வரன் நீலகண்டன் ஆனார்.  அந்த நேரம் பிரதோஷ காலம் என அறியப்பட்டு அந்த  நேரத்தில்  பரமேஸ்வரனை வழிபடுவதால் நம் பிரச்னைகளும் தீர்ந்து நல் வழி பிறக்கும்.  பரமேஸ்வரன்  நெஞ்சில் தகிக்கும் அந்த ஆலஹால விஷத்தை தாங்கிக்கொண்டு  பார்வதி மடியில் படுத்திருப்பதை,  ப்ரம்மவிஷ்ணு தேவர்கள் கவலையோடு சிவனை பார்ப்பதை சுருட்டப்பள்ளி  பள்ளிகொண்ட ஈஸ்வரர் ஆலயத்தில் பல முறை பார்த்திருக்கிறேன். 
 
ஒரு பிரதோஷ தினத்தன்று  சிவனையும்  நந்திகேஸ்வரனையும் ஒரு சேர  தரிசித்தால், ஒரு வருஷம் கோவிலுக்கு சென்று வழிபட்ட புண்யம் கிடைக்கும் என்று பெரியோர்கள் அனுபவித்து சொல்லியுள்ளார்கள்.

சனிக்கிழமை அன்று பிரதோஷம் நேர்ந்தால் அது மஹா பிரதோஷம் என்று இன்னும் மஹிமை அதிகம் வாய்ந்தது.  அன்று தரிசனம் செய்தால்  ஐந்து வருஷம் சிவதரிசனம் செய்த புண்ய பலன்.
எப்படி மஹா விஷ்ணு அலங்கார பிரியரோ அப்படி பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம்.  இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும்  சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும். இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திரு நீறணிந்து  ஓம்  நமசிவாய என்று பஞ்சாக்ஷரத்தை ஒரு முறையாவது உச்சரிக்க வேண்டும். எல்லோராலும்  உபவாசம் இருக்க முடியாதே.  அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்கமுடிந்தால் பாக்கியசாலிகள். பின்னர் இருக்கவே இருக்கிறது  இரவு உணவு.  இப்படி பதினோறு  பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

பிரதோஷம் அன்று கோவிலில்  எங்கும்   'ஓம் நமசிவாய...’, 'தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’  என்ற  செவிக்கினிய சப்தங்கள், பக்தர்களின் கோஷங்களை  கேட்கும்போது  நாம்  வேறு உலகுக்கு கொண்டு செல்லப் படுகிறோம்.

பிரதோஷம் அன்று எப்படி ப்ரதக்ஷிணம் பண்ணவேண்டும் என்ற ஒரு முறை இருக்கிறது. அந்த விசேஷ ப்ரதக்ஷிணத்தின் பெயர்  சோமசூத்ர பிரதட்சணம். அன்று அப்படி ப்ரதக்ஷிணம் செய்வதால் அநேக அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்பது முன்னோர் வாக்கு.

பிரதோஷ கால  சோமசூத்ர பிரதட்சணம் செய்வது எப்படி என்று விளக்குகிறேன்.   முதலில் சிவன் கோயிலில் வெளியில் உள்ள நந்தி பகவானை வணங்கி நேராக உள்ளே சென்று சிவ பெருமானுக்கு இடப்புறமாக (Anti Clockwise) இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அதே வழியாக திரும்ப வந்து (Clockwise), இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது அபிஷேக தீர்த்தம் வெளியேறக்கூடிய சோமசூத்ரம் எனும் கோமுகி வரை வந்து வணங்கி மீண்டும், வந்த வழியே சண்டிகேஸ்வரர் சன்னதி வரை வந்து வணங்க வேண்டும். மீண்டும் சோமசூத்ரம் வரை சென்று வணங்கி விட்டு, மீண்டும் சண்டிகேஸ் வரரை தரிசித்துவிட்டு, சிவபெருமானை நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசனம் செய்வது தான் சோமசூத்ர ப்ரதக்ஷிணம்.  இப்படி   மூன்று, ஐந்து, 11 என ப்ரதக்ஷிணம் செய்து சிவபெருமானையும், நந்தியையும் வழிபடும்  பக்தர்கள்  நினைத்த காரியம் நிறைவேறும்.

ரெண்டு  சனி பிரதோஷங்களில் அடுத்தடுத்து  சிவ தரிசனம் செய்வது அர்த்தநாரி பிரதோஷம். சிவனும், சக்தியும் இரண்டறக்கலந்து அர்த்தநாரீஸ்வரராக இருப்பதால், இந்த இரண்டு பிரதோஷங்களில் வழிபட பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். மேலும் திருமணம்  கூடி வருவதில் இருந்த தடைகள் சிக்கல்கள் விலகி, விரைவாக திருமணம் கை கூடும். முன்பு கை விட்டுப் போன, இழந்த செல்வங்கள் வந்து சேரும்.

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். 

Wednesday, July 27, 2022

GOD IS NOW HERE


 This is the first recording of my speech to the HINDU  THAMIZH DISAI - ANANDHAJOTHI,  a spiritual channel, and the topic I spoke about is  GOD IS NOW HERE



ANOTHER  EPISODE  OF MY SPEECH ON HOW WE SHOULD EDUCATE AND TRAIN OUR CHILDREN HAS BEEN PUBLISHED BY THE HINDU  ANANDHAJOTHI  VIDEO SECTION.   SHARE THE LINK                                                           


https://youtu.be/YUofvshe4C4

ADI AMAVASYA

 ஆடி அமாவாசை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


நாளைக்கு  ஆடி அமாவாசை. அமாவாசை என்றாலே  சந்திரனும் சூரியனும் ஒரே ராசியில் கூடும் நாள். ஜோசியர்கள் பேசும்போது  சூரியனை  ''பித்ருகாரகன்''  என்றும்  சந்திரனை ''மாத்ருகாரகன்''  என்றும் கூறுவதை கேட்டிருக்கிறீர்களா? அர்த்தம் புரியாமல் நாம் தலை ஆட்டுவோம்.சூரியன்  சந்திரன் இருவரும் நமது  தந்தை தாய் போன்றவர்களாக, அவர்கள் அம்சம் கொண்டவர்கள் . எனவே  தந்தை தாய் இல்லாதவர்கள் இவர்களை தந்தை  தாயாக  வணங்குகிறோம் . அன்று  முன்னோர்களை இவர்கள் சேரும் நாளில் த்ரிப்திப் படுத்துகிறோம்.  இது தான் அமாவாசை தர்ப்பணம்.

 அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதே சமயம் சுமங்கலி பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகிறது. பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதி முறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில்  வெங்காயம்,பூண்டு, முட்டைகோஸ், முள்ளங்கி,  நூல்கோல், போன்ற காய்கறிகளை உபயோகிப்பதில்லை.

சாதாரண அமாவாசையே  இவ்வாறு  ஸ்ரத்தையோடு செய்யப்படுகிறது என்றால் ஆடி அமாவாசை இன்னும் விசேஷமானது.   ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய 3  கிரகங்களும் ஒரு நேர் கோட்டில்   (சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில்  சந்திரன்) அமையும்  நாள்  தான்  ஆடி அமாவாசை திதி.   பித்ருக்கள்  சந்தோஷமாக நம்மால் திருப்தி செய்யப்பட்டு  ஆசி வழங்கும் நாள்.   அவர்கள் ஆசியுடன் தான் நாம்   நிம்மதியாக வாழ முடியும்.  அதற்கு தான் நாம் தவறாமல் செய்யும்   பித்ரு தர்ப்பணம்.

ஜோசியர்கள் சொல்லும் விதத்தில்  கூறுவதானால்  ''ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைவாக  இருப்பவர்  சுகமாக வாழவேண்டும் என்றால்  அதற்கு உதவுவது  தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான்.   முன்னோர்களை வழிபடுவது தான்   பிதுர் தர்ப்பணம், ஸ்ராத்தம்  ஆகியவை.  
தெய்வம், தேவர்களுக்கு அடுத்தபடி  பித்ருக்கள் தான்.  பித்ருலோகம் என்றே ஒன்று தனியாக  இருக்கிறது.  அமாவாசை தினம் பித்ருக்கள் நமது தர்ப்பணத்துக்காக  ஆவலுடன் காத்திருப்பவர்கள்.

நமது பெற்றோர்  பாட்டன் பாட்டி  இறந்த திதி, பக்ஷம் , மாதம்  அறிந்துகொண்டு,  ஒவ்வொரு தமிழ்வருஷமும்   அதே திதியில்  நாம்  பிண்டப்ரதானம்  செய்து  வணங்குவது தான் ஸ்ராத்தம் . இதை செய்வதால்  குடும்பத்தில்  க்ஷேமம் உண்டாகும்.   சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் . 

ஆகவே  ஒவ்வொரு அமாவாசையும்  செய்யும் தர்ப்பணம்  பிரித்திருக்களை  மகிழ்வித்து ஆசியை பெற்றுத் தருகிறது.  பித்ருக்களின்  இறந்த திதி தெரியாதவர்கள்  ஆடி அமாவாசை அல்லது தை  அமாவாசை அன்று  ஸ்ராத்தம் செய்வது  புண்ய பலன்  தரும்.  

ஆடி அமாவாசை தினத்தில்  விடிகாலை குளித்து சிவாலய தரிசனம், பித்ரு தர்ப்பணம், அன்னதானம் செய்தல் முக்கியத்வம் வாய்ந்தவை. அன்று சமுத்திர ஸ்னானம் மிக விசேஷம். 

சூரியன் தெற்குநோக்கிப் பயணிப்பதை  தக்ஷிணாயன  புண்யகாலம்  என்கிறோம். அது ஆரம்பமாவதில் வருவது ஆடி அமாவாசை.   வட திசையில் சூரியபயணம்  உத்தராயணம். அப்போது வருவது தை  அமாவாசை. மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணையும்  நாள்.

ஆடி அமாவாசையன்று  மூன்று சமுத்திரங்கள் ஒன்று சேரும்  கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில்  சமுத்திர ஸ்னானம்  ரொம்ப சிறப்பானது.  அங்கே பித்ரு தர்ப்பணம் செய்வது  வழக்கம். ஸ்ராத்தம் ஏற்பாடு செய்வது பித்ருக்கள் ஆசியை பெற அனுகூலமாகும்.   ஆகவே தான்,   ஆடி அமாவாசையன்று, காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கமத்தில், வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில்  ஸ்னானம் செய்து  ப்ரோஹிதர்கள் உதவியுடன்  பித்ரு தர்ப்பணம் செய்கிறார்கள். 

அங்கெல்லாம் செல்ல இயலாதவர்கள்  அருகே உள்ள  ஆறுகள் குளங்களில் ஸ்னானம் செய்து தர்ப்பணம் செய்யலாம். தக்ஷிணாயன ஆடி அமாவாசை  இதற்கு உகந்த நாள். அன்றுவாத்தியாருக்கு சம்பாவனை, தக்ஷிணை கொடுத்து , அன்னதானம் செய்து,   மாற்றுத்திறனாளிகளுக்கு  வஸ்திர தானம் செய்வது  முன்னோர்களுக்கு திருப்தி அளிக்கும்.  நமது தர்ப்பணத்தால் தான் முன்னோர்கள் பாபம் குறையும். 
நமது தர்ப்பணம் பெற  அன்று நம்மைத் தேடி வருகிறார்கள்.  ஆகவே ஸ்ரத்தையுடன் அவர்களை வரவேற்று  திருப்தி படுத்தி  வணங்கி  ஆசி பெறுகிறோம். 

சூரியனை பார்த்துக்கொண்டு கைகளில் காகத்திற்கு வைக்கும் சாதத்தை எடுத்துக்கொண்டு சூரியனைப் பார்த்து பிறகு உங்கள் கைகளில் இருக்கும் அன்னத்தை பார்த்து  கீழே உள்ள  மந்திரத்தை  சொல்லவும் 
*ஓம் சர்வ பிண்ட ரட்சகம் பரிபூரண பித்ரு அனுக்கிரகம் நமோ நமஹ*….ஓம்குருவே துணை….

Tuesday, July 26, 2022

LET US GO TO TEMPLES

 


கோவில்களுக்கு போவோம்.   -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஆலயங்கள்  ஒவ்வொரு ஹிந்துவின்  குலாச்சார, கலாச்சார அபிவிருத்தி  ஸ்தலங்கள். நமது  தன்னம்பிக் கையை, பரோபகார எண்ணத்தை, தீய எண்ணங்கள் செயல்கள் நெருங்காத மனத்தை வளர்க்கும்  ஸ்தாபனங்கள். கடவுளை, குல தெய்வமாக,  குடும்பத்தில் ஒருவனாக  எண்ணும்  நெருக்கத்தை கொடுக்கும் இடங்கள். 

பழைய ராஜாக்கள்  கோவில்களை பெரிதாகக் கட்டி  அருங்கலைகளை வளர, சிறக்கச் செய்தார்கள். பக்தி,  தேக ஆரோக்யம்,  ஒழுக்கம், தர்மம்,  தானம்,  கலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் வளர  பல பண்டிகைகள் அங்கு கொண்டாடப்பட,  பல  பிரசங்கங்கள், இசை இயல் நாட்டிய நிகழ்வுகள் நடக்க,  கல்வி பெரிதளவு வளர்ந்து  பரவ,  கோவில்கள்  வசதியாக, பெரிதாக,  தாராளமாக பலர்   அமர்வதற்கான மண்டபங்களோடு
 கட்டப்பட்டன.  எத்தனையோ  சித்தர்கள்,  மஹான்கள் பலர் அங்கே  மக்களை  நல்வழிப்படுத்தி, வாழ்வு  மேன்மை  யுறச் செய்து ஞானம் புகட்டினார்கள். கம்பர் அருணகிரிநாதர்,   சைவ சமயக்குரவர்கள், ஆழ்வார்கள்  போன்றவர்கள் இயற்றிய  தெய்வநூல்கள் அங்கே தான் உருவாயின.

கோவில்கள் கூட்டுப்  பிரார்த்தனைக்கும்  பொதுநல, ஒற்றுமைக்கும்  பெரிதும் உதவுபவை.  அன்றும் இன்றும் என்றும். 

கோவிலுக்கு செல்வதால்  உள்ளும் புறமும்  சுத்தமாக  இருக்கும் பழக்கம் உண்டாகும்.  தெய்வங்களின் சந்நிதிகள்   ஒரு  விசேஷ உணர்வளித்து  உடலையும்  உள்ளத்தையும் , ஆரோக்யமாக, புத்துணர்ச்சி பெற உதவுபவை.  காக்கும் சக்தி கொண்டது.

அவரவர் பாரம்பரிய  கலாச்சாரம் பின்பற்ற, திருமண், திருநீறு, துளசி, வில்வ மாலைகள், ருத்திராக்ஷம் தரிக்கும் குலாச்சார பண்பாடுகள் தலை முறை தலைமுறையாக பழக்கத்தில் வந்தது. 
சிவாலயங்களில் நந்திதேவரை வணங்கி உத்தரவு பெற்று உள்ளே சென்று வழிபட்டார்கள். வைணவ ஆலயங்களில் கருடர் முதலில் அவ்வாறு வணங்கப்படுகிறார். 

மன உறுதி, வைராக்கியம், புலன்களை  கட்டுப்படுத்துவது எல்லாம் கோவில்களில் நமக்கு  எளிதாகும்.
கோவில்களில்  மக்கள்  ஒருவரை ஒருவர் வணங்குவதோ,  வம்பு பேசுவதோ குறைகிறது.  திருநீற்றை  பிரசாதங்களை, மலர்களை,  கால் படும்படி போடுவது  பாபம்.

ப்ரஹாரங்களில் சுற்றும்போது  ஒருவர் மேலும் இடிக்காமல் கோஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டு மெதுவாக இறை சிந்தனையோடு தியானம் செய்து கொண்டு நடக்கவேண்டும்.  பிரதோஷ காலங்களில் பிரஹாரம் சுற்றுவது சோமசூக்த ப்ரதக்ஷிணம் என்ற முறைப்படி தான் நடக்கவேண்டும். அதை விவரமாக பிறகு கூறுகிறேன்.

அதேபோல் சண்டிகேஸ்வரர், சண்டேஸ்வரர்  முன் நின்று அனுமதி பெற்று கையை உதறிவிட்டு ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை என்று காட்டிவிட்டு விடைபெறவேண்டும். கைதட்டுவது தப்பு.  சிவ  சொத்து குல நாசம் என்பது இன்னும் பலர் உணரவில்லை. அனுபவம் உணர்த்தும்.

கோவிலை  சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். கோயிலுக்குள்ளேயே  பிரசாதம் சாப்பிட்டு இலையை கண்ட இடத்தில் தூக்கி எறிவது பாபம் . 

தினமும் கோவில் செல்லமுடியாவிட்டால் வாரம் ஒருநாளாவது   குடும்பத்தோடு, குழந்தைகளோடு செல்லலாம். செல்லும் பழக்கம் இனியாவது வரட்டும்.  பக்தி என்பது இரும்பு காந்தத்தோடு 
ஒட்டிக்கொள்வது போல்  மனத்தை இறைவனோடு இணைக்கும், அதற்கு உதவுவது கோவில்.

KALIYUGAM

 அப்போதே சொன்ன சுகர்:   நங்கநல்லூர்  J K  SIVAN 


 கலிகாலம் இப்படித்தான்.

ஸ்ரீமத் பாகவதத்தில் பன்னிரெண்டாவது காண்டம் 2ம் அத்தியத்தில் இருக்கிறோம்.  முழுதும் அல்ல. சில அற்புத பகுதிகளை மட்டும்.   நான்  ஜவந்திப்பூ மாலையை  கழுத்தில் போட்டுக்கொண்டு  சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து உரக்க கதை சொல்லும் பௌராணிகன் இல்லை.  உங்களில் ஒருவன்.

சுகதேவரால் எப்படி கலிகாலத்தில் என்னென்ன வெல்லாம் நடக்கப்போகிறது என்று அறிய முடிந்தது என்று கேட்டால்  உடனே பதில் ''ஞான திருஷ்டி'' என்று சொல்லிவிடலாம். நமக்கு பகலிலேயே  எதிரே வரும் தண்ணீர் லாரி  கண்ணுக்கு தெரியவில்லையே.

இதைச்  சொன்ன சுகதேவரை விட எதிர்கால கவலையில் கேள்விகேட்டு அவரை துளைத்து இதைச் சொல்ல வைத்த பரீக்ஷித் மகாராஜாவுக்கு தான் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.  அவன் இத்தனை கேள்விகளை ஏழு நாளில் கேட்டு  ஏழு ஜன்மத்துக்கு நமக்கு போதுமான  விஷயங்களை  சுகப்ரம்மத்திடமிருந்து  பெற்றுத் தந்திருக்கிறானே.

''நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எழுதி இன்னும் பெரிதாக எழுதுங்கள்'' என்று சில நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.  

''ஐயா,  சுருக்கி எழுதும்  இதைப்  படிக்கவே ஆளில்லை.   ஆன்மீக கட்டுரைகள் படிப்பதை விட  அவரைக்காய் பொரிச்ச குழம்பு  எப்படி  பண்ணுவது பற்றி  தெரிந்து கொள்ள  விரும்புவர்கள் தான்  அதிகம்.

அவனவன் ஆபிஸ் போகும்போது,  ட்ரெய்னிலும் பஸ்ஸிலும் , ஆட்டோவிலும்  காதில்   ஒயரை   ear phone  wire  செருகிக் கொண்டு பயணிக்கும்போது  படிக்க ஒரு எண்ணம் வந்து பத்து நிமிஷம் செலவழித்தால்   அவன் பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணவன்.  அந்த நேரத்தில் அவனைப்  பிடிக்க சிறிசாக சுருக்கி எழுதினால் தான் உண்டு. இல்லையேல் அலமாரியில் பரிமேலழகர், நாலடியார், திரிகடுகம்,  திவ்ய பிரபந்தம்,  பெரிய புராணம் பக்கத்தில் என் புத்தகமும் அமர்ந்து கொள்ளும்  என  அறிவேன்.

மொபைல் போன்,  வாட்சாப் வந்தாலும் வந்தது, மூணு மணி நேரம் கதை சொல்கிறவர்கள் கூட மூணு நிமிஷத்தில் மொபைலில் சுருக்கிக்கொண்டு சொல்கிறார்கள். யு ட்யூப், கட்சிக் கொடி பூசல் பற்றி கூட சுகருக்கு தெரிந்திருக்கும் போல் இருக்கிறது. முழுதும் தேடினால் பாகவதத்தில் ஏதோ ஒரு ஸ்லோகத்தில் பிடித்துவிடலாம்.

 விவரமாக  படிக்க இங்கே யாரும் இல்லை. அவசரமாக பார்க்க, நுனிப்புல் மேய, பொம்மைகளால் பதில் சொல்ல மட்டுமே முடிகிறது. மீம்ஸ்  memes  என்பது  வடிவேல் சுவாமிகளால்  உயிர்பெற்று ஊரெல்லாம் கொரோனா போல் பரவி இருக்கிறதே. யார்  சுகப்ரம்மம் படிப்பார்கள்?

சுகர் பரிக்ஷித்துக்கு எந்த தேசத்தில் எந்தராஜாவுக்கு அப்புறம் எவனைக் கொன்று எவன் வருவான் என்று சரித்திர பக்கங்களை அது எழுதப்படுவதற்கு முன்பே சொல்கிறார்.

vittam eva kalau nrnam  janmacara-gunodayah dharma-nyaya-vyavasthayam karanam balam eva hi  

''பரீக்ஷித்,  கலியுகத்தில் மனிதனின் குணத்தை பணத்தை வைத்து தான் சொல்வார்கள்.  கையில் காசு நிறைய இருப்பவன் (நேர்மையாக கணக்கு காட்டினால்   அவ்வளவு எப்படி  கையில்  வைத்துக் கொள்ள முடியும்?) ''குணத்தை''  , சமூக அந்தஸ்தை, பதவி  நாற்காலியில் அமர்வதை அவனால் தான் அடைய முடியும். ,அவனால் எதுவும் செய்ய முடியும்''  
எப்படி  சுகர் இதை அப்போதே  தெரிந்துகொண்டிருக்கிறார்?.

அப்போதெல்லாம் சாஸ்திரம் வேதம் கற்ற அரசர்கள் ஆண்டார்கள். நீதி நியாயம், நேர்மை தெரிந்திருந்தது. ஆள்வதற்கு ஒரு குலம் க்ஷத்ரியர் என்று இருந்தது. கலிகாலத்தில் அப்படி கிடையாது. குலம் அப்புறம் ''கும்பல்'' ஆகிவிடும் என்கிறார். ஐந்தாவது  வரை  படித்தாலே  போதும் . அதுவே  அதிகம் நாட்டை ஆள'' என்கிறார். எந்த கூட்டம் பலம் மிக்கதோ நீதி நியாயம் எல்லாம் அது சொல்வது தான்  நியாயம், நேர்மை,  உண்மை  என்கிறார். காசே  தான் கடவுளடா,  அதுவே   எதையும் சாதிக்கும் என்கிறார்.

FASTING

உபவாசம்  -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 


நமது மதம் மிகவும் வினோதமானது. எண்ணற்ற பண்டிகைகள், விரதங்கள், உபவாசங்கள், விருந்துகள், எல்லாமே  தன்னுள் கொண்டது.

இங்கு ருசிக்கும் பஞ்சமில்லை,  ருசியை வெறுக்கும்  மன உறுதியும் உண்டு

.இரவும் பகலும் இடைவிடாமல் ஓய்வின்றி பல வருஷங் கள் உழைக்கும் இந்த தேகத்துக்கு அவ்வப்போது சற்று ஓய்வும் தேவை. ஒய்வு என்று அதை வெட்டியாக  வீணாகி எ செலவழிக்காமல் இறைவன் மேல் சிந்தனையோடு செலவிடுவது தான் உபவாசம் விரதம் எல்லாம்.   எதையாவது நிறைவேற்ற, எதையாவது ரூ பலனை அடைவதற்கு வேண்டி அதற்காக அனுஷ்டிப்பது விரதம்.  உபவாசம்  வெறும் இறை சிந்தனைக்காக
 மேற்கொள்வது. 
உபவாசம்  என்றால் இறைவனோடு ஒன்றி இருக்க  முயல்வது, அதாவது பாபங்களிலிருந்து விலகுவது, தீய செயல்களை, தீமைகளை எண்ணாமலிருப்பது, ஆகாரங்களை ஒதுக்குவது.  அமைதியாக இறைவனை தியானிப்பது, கூட்டாக பஜிப்பது, பஜனை செய்வது போன்ற  காரியங்களில் ஈடுபடுவது.  வாசனாதி திரவியங்களை உபயோகிக்காமல், அலங்கரித்துக் கொள்ளாமல், சுத்தமான வஸ்திரம் மட்டும் அணிந்து, பகலில் படுத்து உறங்காமல், அதிகமாக நீராகாரம், நீர் எதுவும்  அருந்தாமல்  இருப்பது உபவாசம். 

முக்கியமாக  என்றெல்லாம்  உபவாசம் இருக்கிறோம்? 
இந்து மதப் புராணத்தில் பல வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
,
 ரம்ஜான் சமயத்தில் இஸ்லாமியர்கள்  எச்சிலைக்கூட  விழுங்க மாட்டார்கள்.  நம்மவர்கள்  நிர்ஜல உபவாசம் அதாவது உபவாச தினத்தில் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது. அனுஷ்டிப்பார்கள்.யோகிகள்  முனிவர்கள், ரிஷிகள் பல நாட்கள் சேர்ந்தாற்போல் உபவாசம் இருந்தவர்கள்.  இதை உண்ணாவிரதம் எனலாம்.
காந்தியடிகள் பல நாள் உண்ணாவிரதம் இருந்தவர். சிலர்  தேன்,  இளநீர், பசுவின் பால், ஏதாவது ஒன்று மட்டும் சேர்த்துக்கொண்டு உண்ணாவிரதம் இருப்பார்கள்.எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருக்கும் வழக்கமும் உண்டு. 
காலை நேரம் மட்டும், பகல் நேர உணவை மட்டும், இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருப்பவர்களும்  உண்டு. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருக்கிறவர்களும் உண்டு. .
தேய்பிறை  கிருஷ்ணபக்ஷம் அன்று ஆரம்பித்து வளர்பிறை  சுக்ல பக்ஷம்  முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருக்கும் பழக்கமும் சிலரிடம் இருக்கிறது. .
ஒரு நாள் முழுவதும் வில்வ தளத்தையும்   நீரையும், அல்லது  துளசி ஜலம்  மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
இப்படி அவரவர்  சம்ப்ரதாயம் பின்பற்றி  வழக்கத்தை கடைபிடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். 
உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்பதை  அவரவர்  உடல் நிலை, சூழ்நிலைக்கும் தகுந்தபடி  ஏற்றுக்கொண்டு பின்பற்றலாம்.  வெறும்   நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.
விரதமிருப்பவர்கள்  பல தெய்வங்களை வழிபடுபவர்கள்.  எந்தெந்த  தெய்வத்துக்கு விரதமிருக்கிறார்கள் என்று வகைப்படுத்தலாம். 
பிள்ளையாரை வழிபடுபவர்கள், அவரை தியானித்து  அனுஷ்டிக்கும் விரத தினங்கள்:விநாயக சதுர்த்தி
ஆவணி சதுர்த்தி,  சங்கடஹர சதுர்த்தி விரதம், விநாயக சஷ்டி விரதம்

பரம சிவனை வேண்டி பகதர்   உபவாசம், விரதம் இருப்பது    ஆனி உத்தரம், ஆருத்ரா, திருவாதிரை, சிவராத்திரி,  ப்ரதோஷ விரதம்,  கேதாரகௌரி விரதம்

அம்பாள் உபாசகர்கள் அனுஷ்டிப்பது:   நவராத்திரி,  வரலட்சுமி நோன்பு, ஆடிப்பூரம்,ஆடிச் செவ்வாய்
பங்குனித் திங்கள், மாசி மகம்

முருக பக்தர்கள்  பின்பற்றும் உபவாச விரத தினங்கள்:   கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை வைகாசி விசாகம்
தைப்பூசம்,  திருக்கார்த்திகை விரதம்

 வைஷ்ணவர்கள், விஷ்ணு பக்தர்கள் அனுஷ்டிக்கும் விரத உபவாசங்கள் : ஏகாதசி விரதம்,உபவாச, விரத தினங்களில் வெந்நீரில் குளிக்கமாட்டார்கள்.   ஸ்ராத்த தினங்களிலும் அப்படித்தான். துவாதசி அன்று  பாரணை. தான தர்மங்கள் செய்து  காக்கைக்கு  போஜனமளித்து கோவிலுக்கு சென்று  பகவானை தரிசித்துவிட்டு  உணவு சாப்பிடுபவர்களும்அநேகர்  இன்றும் இருக்கிறார்கள்.  ஒரு வேளை  உணவை மட்டும்  சாப்பிடாமல் விடுவது:  ஏக  புக்த உபவாசம்.நீர் மட்டும் பருகி உபவாசம் இருப்பது திரவ  ஆஹார  உபவாசம்.பழங்கள் மட்டும் சிலவற்றை சாப்பிடும் உபவாசம் பல ஆஹார உபவாசம். பல என்றால் பலவிதமான,  எல்லாவற்றையும்  சாப்பிடுவது என்று அர்த்தமில்லை, பலம் என்றால் பழம். விஹித ஆஹார உபவாசம், கொஞ்சூண்டு கொஞ்சூண்டு  சாப்பிடுவது. மித ஆஹார  உபவாசம்  மிதமாக  லிமிடெட் சாப்பாடு நிர்  ஆஹார  உபவாசம், எதையுமே சாப்பிடாமல் இருக்கும் உபவாசம்.நிர்ஜல  உபவாசம்  தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது.
உபவாசம் இருப்பவர்கள் உடல் சிக்கென்று  இருக்கும். எந்த வியாதியும் அணுகாது. மஹாபெரியவாளே  ப்ரத்யக்ஷ உதாரணம். அவர் எதையும் தனக்கென வேண்டி உபவாசம் இருந்ததில்லை. லோக க்ஷேமத்துக்காக உபவாசம் இருந்த தெய்வம்.உபவாசத்தில் ஒவ்வொருநாளும் ஒரு தெய்வம் தியானம் செயது உபவாசம் இருப்பதுண்டு சிவபக்தர்கள்  திங்கக்கிழமை , சோமவார உபவாசம் இருப்பார்கள்.  பரமேஸ்வரன், பார்வதிக்குகந்த நாள் செவ்வாய் மங்களவாரம் ,  ஹனுமான், முருக, துர்க்கை  பக்தர்கள் அங்காரக உபவாசம் இருப்பார்கள்.
புதன் கிழமை  கிருஷ்ணன், பாண்டுரங்கனுக்கு உகந்தநாள். வியாழன் குருவாரம், ப்ரஹஸ்பதி  வாரம். 
Thursday (Guruvar or Vrihaspativar) தக்ஷிணாமூர்த்தி உபாசகர்களும் அன்று உபவாசம் இருப்பார்கள்.வெள்ளி  சுக்ரவாரம் எனப்படுவது.  அம்மனை வழிபடுபவர்கள்,  சக்தி உபாசகர்கள், துர்க்கைக்கு, காளிக்கு, சந்தோஷி மாதாவுக்கு என்று உபவாசம் இருப்பார்கள். 

சனிக்கிழமை அநேகர்  சனிபகவான்  அனுக்கிரஹம் வேண்டி  உபவாசம் இருப்பார்கள். எள்ளு மூட்டை கட்டி நல்லெண்ணெய் விளக்கேற்றுவார்கள்.ஞாயிறு  சூர்யனுக்குகந்த நாள்.  


KALIYUGAM


அப்போதே  சுகர்  சொன்னது.நங்கநல்லூர்  J K  SIVAN 
கலியுகம்

 ''ஸார்,  நீங்கள்  எங்கே இருக்கிறீர்கள் ?
''கோடம்பாக்கம்''
இப்படி சொன்னால்  புரியும், அதில் ஆச்சர்யம் இல்லை.    ''நான் கலியுகத்தில் இருக்கிறேன் '' என்றால் அவரை ஒரு தடவை உச்சி முதல் உள்ளங்கால் வரை கொஞ்சம் கோணலாக அவரைப்  பார்த்து விட்டு  ''ஐயோ பாவம்,சின்ன வயசிலேயே  புத்தி ஸ்வாதீனம் இல்லை....'' என்று நகர்வோம்.
உண்மைதான்.  நாம்  இப்போது  கலியுகத்தில் இருக்கிறோம், இப்போது என்னவெல்லாம் நடக்கிறது என்று முன்பே  ஐயாயிரம் வருஷத்துக்கு முன்பு யோசித்து ஸ்ரீமத் பாகவதம்  சுகப்பிரம்ம ரிஷி சொன்னதாக  ஒரு பதினைந்து விஷயங்களை சொல்லியிருக்கிறது.  அதை படித்து 'ஆஹா''  என்று பிரமித்துப்  போக  உங்களை அழைக்கிறேன்..
துவாபர யுகத்தில்,  கிருஷ்ணன் காலத்தில்  பரிக்ஷித்துக்கு  சுக ப்ரம்மம்  சொன்னது.....
யார்  இந்த பரீக்ஷித்?  
அர்ஜுனன் பேரன், அபிமன்யு பிள்ளை.   ''தக்ஷன் என்ற பாம்பு   கடித்து இன்னும்   ஏழு நாளில்   நீ  சாகப் போகிறாய்  என்று  நோட்டீஸ் கொடுக்கப்பட்டவன்.    நம்மைப் போல   வீடு வாசல், பணம், பெண்டாட்டி, குழந்தைகளைக்   கட்டிக்கொண்டு    ''ஐயோ, நான் உங்களை விட்டு போகப்போகிறேனே''  என்று அழாமல்  சுகப்பிரம்ம மகரிஷியை அழைத்து  துளைத்து எடுத்துக்  என்னென்னவோ  நிறைய விஷயங்கள் இரவும் பகலுமாக கேட்டுத்  தெரிந்து கொள்கிறான்.  

பரீக்ஷித்  நல்ல  ராஜா. அவனால் நாம்  எத்தனையோ ஞானம் பெறுகிறோம். இனி பரீக்ஷித்   சுகர் சம்பாஷணையை கேட்போம்.

 ''மகரிஷி, அடுத்ததாக  ஏதோ ஒரு யுகம் வருமாமே. அது என்ன?''
'' கலியுகம்.''
''பேரே நன்றாக இல்லையே. சரி, அதில் என்ன நடக்கப்போகிறது மகரிஷி ? சொல்ல முடியுமா?''
ஆஹா  சாஸ்திரங்கள்  அதைப்  புட்டு புட்டு வைத்திருக்கிறதே. கேள். அரசனே ''

ततश्चानुदिनं धर्म: सत्यं शौचं क्षमा दया । कालेन बलिना राजन् नङ्‌क्ष्यत्यायुर्बलं स्मृति: ॥ १ ॥
tatas canu-dinam dharmah satyam saucam ksama daya kalena balina rajan nanksyaty ayur balam smrtih  .12.2.1.

''ஒவ்வொருநாளும்  கொஞ்சம் கொஞ்சமாக  மதம், சத்யம், உண்மை, நாணயம்  ( காசு இல்லை நேர்மை) சுத்தம்,  மன்னிக்கும் குணம், தயை, கருணை, ஆயுள், உடல் வலிமை ஞாபகம் எல்லாமே குறைந்து கொண்டே வரும். காலம் இதை தீர்மானிக்கும்.   (நாமே   இப்போதுள்ள நிலையில் இதெல்லாம் அனுபவிக்கிறோம். இன்னும்  வேறு நிறைய இருக்கிறதோ?)

ஆரம்பத்தில்  சத்ய யுகம் 18,00,000 வருஷ காலம். மனிதனின் வயது அப்போது பத்து லக்ஷம் வருஷம்.  யமனுக்கு சுத்தமாக வேலையே இல்லை.  எத்தனை பிள்ளை, குட்டி, பேரன் பேத்தி, கணக்கு கம்ப்யூட்டரில் கூட போடமுடியாது.

அப்புறம்  த்ரேதா யுகம்  - ராமர் காலம் - 12,00,000 வருஷ காலம். அப்போது சராசரி ஒவ்வொரு மனிதனுக்கும் பத்தாயிரம் வருஷம் வயசு.   LIC  கிடையாது.   அட  சத்ய  யுகத்தைவிட  பத்து மடங்கு வயது குறைந்து விட்டதே.

அடுத்தது துவாபர யுகம்  -   800,000  வருஷ காலம்.   மனிதன் வயது  அப்போது சராசரி ஆயிரம் வருஷங்கள்.    ஐயோ  இதென்ன அக்கிரமம். வயஸு   பத்து மடங்கு குறைந்து விட்டதே.

 இப்போது கலியுகம்   நடக்கிறது.  இதில் நமக்கு அதிக பக்ஷ வயஸு 100.   இன்னும்  பத்து மடங்கு குறைந்து விட்டது.  நூறு வயதே ஜாஸ்தி.   சராசரி  70 தாண்டினாலே அப்புறம் ஒவ்வொரு  நாளும்  போனஸ்.  

இன்னும் போகப்போக 20 வயது 30 வயது  ஆனாலேயே  அவன் தொண்டு கிழவன். தாத்தா.
எப்படி இருக்கு?  இப்போதே  அங்கும் இங்குமாக ஒரு சில  30-35 வயது ஹார்ட் அட்டாக் மரணங்கள் . படிக்கவோ கேட்கவோ ஷாக்  அடிக்கிறது.   ஞாபக சக்தி குறைந்து போய்விட்டது.   கேட்க கேட்க படிக்க படிக்க  எதுவுமே   மறந்து கொண்டே போகிறது.  நமது தாத்தா  கொள்ளு தாத்தா, காவேரியில் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டார், பனை மரம் ஏறி நுங்கு பறித்தார், தேங்காயை பல்லால் கடித்து உறித்தார்.  தோட்டத்தில் கரும்பு கண்ணில் பட்டால் ரெண்டு மூன்று கரும்பை கடித்தே நின்றார்....  இதெல்லாம் ஆச்சர்யமான விஷயங்கலாக வாயைப் பிளந்து கேட்கிறோம்.  ஆஞ்சநேயர் கோவில் மிளகு வடையை கூட  நம்மால் கடிக்க முடியவில்லை. பல் அவ்வளவு வீக். WEAK.
மதம்,  பக்தி, மரியாதை, பதவிசு, எல்லாம் குறைந்து விடும்.
இப்போதே  மதம்  என்று எவனாவது  எசகு பிசகு  பண்ணினால்,  சொன்னால்,  உடனே  பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்......மத சார்பற்ற.... இதற்கு என்ன அர்த்தம் என்றே எனக்கு  இன்னும்  புரியவில்லை.  கோவில்கள் சிலரது  வாழ்க்கைக்கு  சவுகரியங்களை தேடித்தரும்  சுலப வழியாகி விட்டதே.  கிராமங்களில் கோவில்களில் ஆளே இல்லை. சில கோவில்களில் சாமியே  காணோம். அமெரிக்காவுக்கோ எங்கோ சென்று விடுகிறது.   கோவில் நிலங்கள் பிளாட் ஆகிவிட்டன.  அன்னதானம் நிச்சயம் என்று தெரிந்த சில கோவில் களில்  பிச்சைக்காரர்கள்,  உழைக்காமல் பிழைப்பவர்கள் தான் சாப்பாட்டு நேரத்தில் கண்ணில் படுகி றார்கள். பக்தர்களுக்கு  இலவச உணவு சுத்தமாக  கிடைக்குமோ?.  

கருணையாவது, காருண்யமாவது, தயையாவது.   ஒரு ரூபாய்க்கு குழந்தையை விற்கிறார்கள்.  அசந்தால் அறுபதுக்கு மேலே கிழவிகள் தங்கச்சங்கிலி தங்கள் உயிர் இரண்டையும் கோட்டை விடுகிறார்கள்.  மூன்று வயது பெண் குழந்தையை பாலின வன்மையில் கொல்கிறார்கள்.  பத்திரிகை  டிவி  எல்லாமே  
 நிமிஷத்
துக்கு நூறு கொலை கொள்ளை பற்றி தான் செய்தியும் படமும் போடுகிறது.  நல்லவிஷயம் எதையும் சொல்ல பிடிக்கவில்லையா?  சொல்வதற்கு எதுவும் இல்லையா?

ஆமாம் நமது காலம் கலிகாலம் என்பதை மேற்படி ஸ்லோகத்திலிருந்து உணர்கிறோம். எப்படி இவ்வளவு துல்லியமாக  சுகர்  சொல்ல முடிந்தது  அதுவும்  5000 வருஷங்களுக்கு முன்னால் .....!

 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...