Friday, July 22, 2022

PESUM DEIVAM



 பேசும் தெய்வம்  -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 


''திடீர் சமையல் காரன்'''

பட்டு சாஸ்திரி  மஹாபெரியவா  மேல்  அதீத  பக்தர்.  மடத்தில் ரொம்ப வருஷம்  கைங்கர்யம் செய்த பாக்யசாலி. அவர்  சொன்னதாக ஒரு விஷயம் தான் இது. 

ஆயிற்று ஐம்பது வருஷம் ஓடிவிட்டது.  மஹா பெரியவா  பாதயாத்திரை அடிக்கடி  போவார். அப்படி ஒருதடவை சென்றவர்  சோளிங்கர் என்கிற ஸ்தலத்துக்கு வந்து தங்கினார்.  சோளிங்கர் மிக பிரசித்தமான  நரசிம்ம க்ஷேத்திரம்.  அடுத்தடுத்து  ரெண்டு மலைகள் ஒன்றின் மேல் நரசிம்மர் இன்னொன்றின் மேல் ஆஞ்சநேயர்  ஆலயம்.  நான் ரெண்டு மூன்று தடவை மலையேறி தரிசித்திருக்க பாக்யம் பண்ணினவன்.

மகாபெரியவா  சோளிங்கர் வந்த செய்தி  உடனே  எங்கும்  பரவிவிட்டது.  அப்போது இந்திய ஜனாதிபதி பதி ஆர். வெங்கட்ராமன்  சென்னையில் இருந்தார்.  அவர்  பெரியவா பக்தர்.  அவரும் அவர் மனைவி ஜானகி, , ஆந்திர தேச   போலீஸ்  ஐ.ஜி. ராமநாதன் மற்றும் சிலர்  நேராக  உடனே சோளிங்கர் வந்தார்கள். 
அன்று வாலாஜாபேட்டை லேருந்து கோட்டாசெட்டி, டாக்டர் வேணுகோபால்னு தெலுங்கு  பிரமுகர்கள்  சிலரும்  மஹா பெரியவா  தரிசனத்துக்கு வந்துட்டா. 
ஸ்ரீகண்டன், மடத்தைச் சேர்ந்தவர்.

மஹா பெரியவாளுக்கு பிக்ஷை கைங்கர்யம் பண்ணும் பக்தர். பெரியவாளுக்கு மட்டும்தான் பிக்ஷை அன்றாடம் தயார் பண்ணுபவர்.  ஆனால்  எதனாலோ, என்ன காரணத்தாலோ, மஹா பெரியவா , அன்னிக்கி மகாபெரியவாளுக்கு என்ன தோணித்தோ தெரியலை… பட்டு ஸாஸ்திரியை  வரவழைத்தார். 
 ”பட்டு இங்கே வா''
'' வந்துட்டேன் பெரியவா.  கட்டளையிடுங்கோ''
'' என்னைப் பார்க்கணும்கிறதுக்காகச் சிரமப்பட்டு எல்லாரும் இந்த ஊருக்கு வந்திருக்கா. அவாளைப் பசியும் பட்டினியுமா இருக்கவிடலாமா? தப்பில்லையா.  நீ என்ன பண்றே, அவாளுக்கெல்லாம் உன்னால முடிஞ்சதை சமைச்சுப் போட்டுடு”

.அதைக் கேட்டதும் பட்டு சாஸ்த்ரிக்குத்   தூக்கிவாரிப் போட்டுட்டுத்து. ஒரு நிமிஷம், அப்படியே பேச்சுமூச்சு இல்லாம நின்னுட்டார்.  ஏன்னு கேட்டா,  அவருக்கு  சமைக்கவே தெரியாது. 

பட்டு ஸாஸ்த்ரி :‘
''எனக்கு என்ன சமைக்கத் தெரியும்னு, மகாபெரியவா என்னைப் போய் சமைச்சுப்போடச் சொல்றார்?’னு தவிச்சுப்போயிட்டேன். ஆனா,  மஹா பெரியவா கிட்டே போய், ‘எனக்குச் சமையல் தெரியாது. வேற யார் கிட்டேயாவது சொல்லுங்கோ’னு சொல்லமுடியுமா, என்ன? பத்து வயசுலேருந்து பெரியவாளைப் பார்த்துண்டிருக்கேன். யாரையும் எந்தச் சங்கடத்துலயும் மாட்டிவிடமாட்டா ? அதனால அவரே இந்தக் காரியத்துலேயும்  எனக்கு  ஒத்தாசையா, பக்கபலமா இருப்பார்னு முழுசா நம்பினேன்.

சத்திரத்து மேனேஜர்கிட்டே போய், பாத்திரங்களைக் கேட்டு வாங்கிண்டு வந்தேன். அங்கே… பக்கத்துலயே இருந்த பெட்டிக் கடைல ஒரு தேங்காயும், கொஞ்சம்  காய்கறிகளும் வாங்கிண்டேன்.

அது ஒரு மலையடிவாரம். அந்த இடத்துல, அம்மிக் கல்லுக்கு எங்கே போறது? கொஞ்சம் நீட்டமா இருந்த கல்லு மேல பருப்பு, தேங்காய், மிளகாய்னு எல்லாத் தையும் சேர்த்து வெச்சு அரைச்சுத் துவையல் பண்ணினேன்.

அங்கங்கே கிடந்த கல்லைப் பொறுக்கிண்டு வந்து, அடுப்பு தயார் பண்ணிண்டேன். காஞ்ச குச்சிகளை யெல்லாம் பொறுக்கி எடுத்துண்டு வந்து, அடுப்பை மூட்டி சாதம், ரசம் செஞ்சு இறக்கினேன். யாரோ அரிசி கொடுத்திருந்தா. அந்த அரிசியைக் காமிச்சு, ‘இதப் பார்… ராஜா மாதிரி இருக்கு அரிசி! எடுத்துண்டு போய்  சாதம் பண்ணு ’ன்னு  சொன்னார் பெரியவா.

ஒரு மலையின் மேல நரசிம்மர்; இன்னொரு சின்ன மலையின் மேல ஆஞ்சநேயர். ரெண்டு மலையிலேயும் ஏறி, தரிசனம் பண்ணினோம். பெரியவாளும் மலைகள் மீது ஏறி வந்து, ஸ்வாமி தரிசனம் பண்ணினார்.

கீழே இறங்கறதுக்கு மத்தியானம் ஆயிடுத்து. அவாளுக் கெல்லாம் நல்ல பசி. எல்லாரையும் உக்கார வெச்சு, சாப்பாடு பரிமாற ஏற்பாடு பண்ணினேன்.

வந்திருக்கிறவா எல்லாரும் பெரிய மனுஷா. தேசத்துல முக்கியப் பதவிகள்ல இருக்கறவா. இதுவரை, சமைக் கவே சமைக்காதவன் நான். என்னோட சமையல் அவாளுக்குப் பிடிக்குமோ, இல்லையோ?! பயத்தோடயே பரிமாறினேன்…

என்னோட சமையல் அவாளுக்குப் பிடிக்குமோ, இல்லையோ?! பயத்தோடயே பரிமாறினேன். ஆனா, வந்தவா எல்லாரும் திருப்தியா சாப்பிட்டா. எனக்குப் பரம நிம்மதி.

‘வைதீக, சம்பிரதாய சாஸ்திரங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும். சமைக்கத் தெரியாது’ன்னு பெரியவா  கிட்ட சொல்லி, கையைக் கட்டிண்டு சும்மா இருந்துடலை நான்

. ‘இது மஹா  பெரியவா உத்தரவு; நமக்கு ஒண்ணும் தெரியாட்டாலும் அவர் பாத்துப்பார்’னு அசைக்க முடியாத தைரியம் உள்ளுக்குள்ளே இருந்துது. அவருடைய அனுக்ரஹம் தான், என்னைக் காப்பாத் தித்து!

சமையல் நன்னா இருந்துதுன்னும், வயிறு நிறைய, ருசிச்சுச் சாப்பிட்டதாவும் எல்லாரும் சொன்னா. உத்தரவு வாங்கிக்கறதுக்காகப் போனப்ப, பெரியவா கிட்டயும் என்னைப் பத்தி சிலாகிச்சு ஏதோ சொன்னாப் போல இருக்கு. வந்தவா எல்லாரும் போனப்புறம், பெரியவா என்னைக் கூப்பிட்டா. உள்ளூர பயமா இருந்தாலும், பெரியவா எதிர்ல போய் நின்னேன்.

”ரொம்ப நல்ல காரியம் பண்ணினே! க்ஷேமமா இருப்பே!”ன்னு கையைத் தூக்கி, ஆசீர்வாதம் பண்ணினார் மகாபெரியவா.

”அது போதும் எனக்கு! அவரோட ஆசீர்வாதம் போதும், மனசு நிறையறதுக்கு! அதைவிட வேறென்ன வேணும்?!

பட்டு சாஸ்திரி வாயால்  இதை கேட்கும் பாக்யம்  முக்கியமாக எனக்கில்லை. இருந்தாலும் அந்த சம்பவத்தை ரசித்து மனதில்  அனுபவித்து எழுதியதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...