கம்ப்ளைன்ட் - குற்றச்சாட்டு - #நங்கநல்லூர்_JK_SIVAN ..
இன்று அதிர்ஷ்ட வசமாக ஒரு ராஜா ரவிவர்மா படம் கண்ணில் பட்டது. ஆஹா இது போட்டோ இல்லையா, கையால் வரைந்ததா, அடேடே தத்ரூபமாக இருக்கிறதே .என்று அதிசயித்தேன்.
ஒரு பெரிய அரண்மனை போன்ற வீடு. ''போன்ற'' இல்லை. நந்தகோப மஹாராஜா அரண்மனை தான். நிறைய பெரிய பெரிய அறைகள், கனமான ரவுண்ட் தூண்கள். ஒரு அறையில் திரைக்கு பின்னால் மேலே நிறைய உறிகள் மேலே தொங்குகிறது. ஒவ்வொரு உறி யிலும் சட்டிகளில் தயிர் வெண்ணை நிரம்பி இருக்கி றது. பலராமன், கிருஷ்ணன் இன்னும் ஒன்றிரண்டு திருடர்கள் எதையாவது உயரமாக கவிழ்த்துப் போட்டு அதன் மேல் ஏறி உரையை உடைத்து வெண்ணெய் திருடுபவர்கள். இந்த கோஷ்டி பலநாள் திருடர்கள். பிருந்தாவனத்தில் பல கோபிகளின் வீடுகளில் வெண்ணை சட்டி காணாமல் போனால், உடைந்து வெண்ணெய் இல்லாமல் இருந்தால் அதற்கு காரணம் இந்த கோஷ்டி தான். ஆனால் அவர்கள் தான் காரணம் என்று நிரூபிக்க முடியாது. சிட்டாய் பறந்துவிடுவார்கள்.
பலநாள் திருடன் ஒருநாள் தன வீட்டிலேயே கையும் களவுமாக பிடிபட்டான். வெளியே சென்றிருந்த யசோதை திடீரென்று வீட்டுக்கு திரும்பியவள் ஏதோ சத்தம் கேட்கிறதே என்று ஒவ்வொரு அறையாக பார்த்துக்கொண்டு வந்தவள் கண்ணில் ஒரு பீப்பாயை கவிழ்த்துப் போட்டு அதன் மேல் நிற்கும் நீல நிற கண்ணன் ஒருகையை உறியின் மேல் வைத்தவாறு மாட்டிக்கொண்டான். பலராமன் ஒரு பெரிய தூண் மறைவில் ஒளிந்து கொண்டான். கையில் ஒரு குச்சியோடு கண்களில் கோபத்தோடு கிருஷ்ணனை பார்க்கும் யசோதையை ரவிவர்மாவை விட வேறு யாராலும் மனத்தில் நிறுத்தி கண்ணெதிரே ஓவியமாக வடிக்க முடியாது. அன்று வெண்ணெய் திருடிய கிருஷ்ணனுக்கு ''பூஜை'' போட்டாளா யசோதை?
கண்ணை மூடி ''கிருஷ்ணா'' என்று யோசித்தேன். ஒரு காட்சி மனத்திரையில் ஓடியது:
பிருந்தாவனம் மதுரா, கோவர்தன கிரி --- எல்லாம் புத்தகத்தில் படித்ததோடு சரி. நேரில் பார்த்ததில்லை. ரெண்டு வருஷங்களுக்கு ஒரு குரூப் போக ரயிலில் ரிசர்வ் செயதும் கொரோனா குறுக்கிட்டு தடுத்தது.
மீண்டும் ஆகஸ்ட் 20ம் தேதி கிட்டத்தட்ட 60 குடும்பங்கள் செல்ல திட்டமிட்டு ரயிலில் இடம் பிடித்தாகிவிட்டது. ஒரு வார காலத்தில் முடிந்ததை எல்லாம் சென்று பார்க்க எண்ணம். கிருஷ்ணன் அனுமதிப்பான் என்று நம்பிக்கை. கொரோனா குறுக்கிடாது என்ற நப்பாசை.
கண்ணன் வீட்டு வாசலில் ஒரு கூட்டமே நிற்கிறது. எல்லோரும் பிருந்தாவன வாசிகளான கோபியர்களே . அவர்கள் குரல் கேட்டு இதோ யசோதை வெளியே வருகிறாள் .
''வாருங்கள் வாருங்கள்,,,ஆச்சர்யமாக இத்தனை பேர் இங்கே கூட்டமாக வந்து நிற்கிறீர்களே .என்ன விசேஷம் இன்று?''
உள்ளூர யசோதைக்கு கவலை. ''ஐயோ என் மகன் கண்ணன் என்ன விஷமத்தை செய்து விட்டு இவர்கள் வந்திருக்கிறார்களோ. பகவானே என்னைக் காப்பாற்று'' உள்ளே கவலைப் புயல் வீசினாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை யசோதை. புன்முறுவலித்தாள் .
''வாருங்கள் கோபியரே, என்று அவர்களை அழைத்து வீட்டில் அவர்கள் வந்து அமர்கிறார்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சில கணங்கள் செல்ல ஒருத்தி ஆரம்பிக்கிறாள்.
''யசோதா.. உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கிறோம்.\
'' ஆஹா,சொல்லுங்களேன்''
''நீ வருத்தப்படுவாய். ஆனாலும் பல நாட்களாக உன்னை சந்தித்து இதைச் சொல்ல வேண்டும் என்று எங்களுக்கு எண்ணம். பேசியவள் கண்கள் அங்கும் இங்கும் யாரையோ தேடின...
யசோதைக்கு ஓரளவு புரிந்துவிட்டது. நிச்சயம் அவனைப்பற்றி தான்..... எதிர்பார்த்தது தான்...... ஏதோ குளறுபடி.
' பரவாயில்லை, எதுவாயிருந்தாலும் சொல்லுங்கள்.' யந்திரம் போல் யசோதையின் வாய் பேசியதே தவிர உள்ளூர அவள் கலங்கிப்போயிருந்தாள் .
''யசோதா, இப்படியா ஒரு மகனை நீ வளர்ப்பாய்?'' என்றாள் ஒருத்தி.
''அவன் செய்யும் அக்ரமங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல ''-- இன்னொருவள் சேர்ந்து கொண்டாள் .
'யசோதா உன் பையன் க்ரிஷ்ணனோடு ஒரு கூட்டம் சேர்ந்து கொண்டு அலைகிறது... அப்பப்பா ஒரு வீடு பாக்கி இல்லை ''
''என்ன செய்தான் என் மகன்.....சொல்லுங்கள் '' தயங்கியவாறு குரல் தழுதழுக்க யசோதை கேட்டாள் .
''எப்படித்தான் உன் மகனுக்கு தெரியுமோ, ஒருவர் வீடு பாக்கி இல்லாமல் ஊரில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீட்டில் வெண்ணெய் ,தயிர் பானைகள் உடைகிறது. வெண்ணெய் திருடு போகிறது. நாங்கள் எப்படி குடித்தனம் நடத்துவது? எவ்வளவு உயரத்தில் உறியில் தொங்கவிட்டாலும், கண்ணில் படாமல் எங்கே ஒழித்து வைத்தாலும் கண்டு பிடித்து எடுத்து விடுகிறான் உன் பிள்ளை . அவன் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு...'' பெருமூச்சு விட்டாள் அந்த கோபி.
'
'உடைந்த பானைகள் தான் மிஞ்சுகிறது. உள்ளே வைத்திருந்த வெண்ணெய் ஆவியாகி விடுகிறது.
..ரொம்ப சமர்த்தியக்காரன் யசோதா உன் பிள்ளை... எனக்கு சிரிப்பு தான் வருகிறது.''. என்று ஒருவள் சொல்லி சிரித்தாள்
''நாங்கள் வந்ததே இதை உன்னிடம் சொல்லி, எப்படியாவது நீ அவனை கண்டித்து இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தான்... நாங்கள் வருகிறோம் அம்மா''.
''ஒரு வேண்டுகோள், அதற்காக அந்த அழகு பையனை போட்டு அடிக்காதேம்மா''
அடுக்கடுக்காக அவர்கள் தன் பிள்ளை கிருஷ்ணனை பற்றி புகார் சொன்னதைக் கேட்ட யசோதை ஒருபுறம் கோபம் ஒருபுறம் அதிசயத்தோடு திகைப்பு.
எங்கே போனான் அவன்? இவர்கள் வந்திருப்பதைத் தெரிந்து கொண்டு இந்தப்பக்கம் அவனைக் காணோ மே. எங்கே போனான்? எப்படியும் இங்கே வந்து தானே ஆகவேண்டும். வரட்டும். வரட்டும். இன்று ஒரு கை பார்த்துவிடுகிறேன்.''
நேரம் நழுவியது. சூரியன் மலை வாயில் விழும் நேரம்...
சிலையாக ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்த அம்மாவை பார்த்து விட்டான் கிருஷ்ணன்.
'
'அம்மாவின் முகம் வாட்டமாக .இருக்கிறதே. தெரு முனையிலேயே அவனும் நண்பர்களும் எல்லா கோபியரும் தன் வீட்டிலிருந்து வெளியேறுவதை பார்த்து விட்டார்கள். வீட்டில் ஏதோ தகராறு நடந்திருக்கிறது. கிருஷ்ணன் எல்லாவற்றையும் யோசித்து முடிவோடு தான் வீட்டுக்கு வந்திருக்கிறான்.
''அம்மா '
'தேனினும் இனிய அவன் குரல் கேட்டு கண்ணனை நோக்கினாள் யசோதை . ஒரு கணம் அவன் மீது அளவற்ற பாசம் பொங்கியது.
''என்ன தவம் செய்தேன் அம்மா என்று இவன் அழைக்க....''
'' கிருஷ்ணா இங்கே வா''
'' எதிரே உட்கார்'' என்றாள் . நழுவின அவனை பிடித்து உட்கார வைத்தாள் . கைககளை கட்டிக்கொண்டு குட்டியாக அவள் எதிரே அமர்ந்த அவன் கண்களைை உற்று நோக்கினாள், நிர்மலமான விசால விழிகள் அவள் விழியோடு கலக்கும்போது அவள் மனம் ஆனந்த பரவசமாகியது.
''ஏன் இப்படி எல்லாம் செய்கிறாய்?
'நான் என்ன செய்தேன் அம்மா. ஒன்றுமே செய்ய வில்லையே... ஒரு கையில் புல்லாங்குழலோடு தலையசைத்து குண்டலங்கள் ஆட, கைகளை அசைத்து நாடகமாடினான் .
''பொய் சொல்லாதே. ஏன் எல்லார் வீட்டிலும் போய் வெண்ணெய் திருடி தின்கிறாய்?''
''இல்லவே இல்லையே . நான் எங்கே எவர் வீட்டுக்கு எப்போது சென்றேன்?'' வாயின் ஓரம் வெண்ணை துளி ஒன்று வெள்ளை வெளேர் என்று அவன் கரு நீல முகத்தில் அவனைக் காட்டிக்கொடுத்து அவனுக்கு துரோகம் செய்தது. அவன் நடிப்பு அவளுக்கு சிரிப்பை தந்தது.
''அடுத்தவர் வீட்டில் வெண்ணை எடுக்க ஏனடா சென்றாய் கிருஷ்ணா, நம் வீட்டில் கருமை,வெண்மை என வகை வகையாய் பசுக்கள் இருக்கிறதே. அவை தரும் பாலும் அளவிலாமல் இருக்கிறது. ,அதில் உள்ள தயிரும், வெண்ணையும் , நம் வீட்டில் நிரம்பி இருக்கிறதே... என்ன குறை, குறைவு இங்கே??
ஏன் எப்படி எல்லாம் செய்து என்னை அவமானப் படுத்துகிறாய்?
இந்த ஆயர்பாடி கோபியர்கள் கோபக்காரர்கள். பொல்லாதவர்கள், விடியும் பொழுதே, நம் வீட்டிற்குள் வந்து வம்புகள் சொல்கிறார்கள் உன்னைப்பற்றி. ரெண்டு காதும் கேட்டு புளித்து விட்டது எனக்கு. இது தான் நீ பிள்ளை வளர்க்கும் லக்ஷணமா? என்று ஒருத்தி என்னை கேட்கும்போது வெட்கி தலை குனிந்தேன். உன் அப்பா காதுக்கு இந்த விஷயம் எட்டி, அவர் உன் மேல் ரொம்ப கோபமாக இருக்கிறார். அவர் கண்ணில் படாதே.
''இப்படியா பிள்ளையை வளர்ப்பாய்? நீ எல்லாம் ஒரு அம்மாவா?'' என்று என்னை கோபிக்கிறார்.
''என் அருமை கண்ணையா, நீ இனிமேல் தெருவில் விளையாட போக வேண்டாம். நம் வீட்டிலேயே உன் ஸ்நேகிதர்களோடு விளையாடு''
நல்ல பிள்ளையாக ''சரி அம்மா ''என்று தலை ஆட்டினான். அவன் போட்ட திட்டப்படி இன்று யமுனைக்கரையை ஒட்டிய ஒரு கோபி வீட்டில் பன்னிரண்டு பானைகளில் வெண்ணெய் இருக்கிறது என்ற விஷயம் நேற்றே காதுக்கு எட்டி இன்று அந்த வீட்டு கோபி எப்போது யமுனைக்கு ஸ்னானம் செய்ய போகிறாள் என்று அவள் வெளியே போவதற்கு அவனும் நண்பர்களும் காத்திருந்தார்கள்.
''சரி அம்மா '' என்று கண்ணன் தலை ஆட்டியதும் ''பாவம் ,என் பிள்ளை. சாது இந்த குழந்தை. இதன் மேல் எதற்கு அவ்வளவு பேரும் அபாண்டமானாக குறை சொல்கிறார்கள்... எல்லாம் பொறாமையினால் இருக்கும் ''...
யசோதை எழுந்து உள்ளே சென்றாள் . யசோதை உள்ளே செல்லும் வரை சாதுவாக அமைதி திலகமாக உட்கார்ந் திருந்த கிருஷ்ணன் விருட்டென்று எழுந்து வாசலை நோக்கி ஓடினான். ரெண்டு வீடு தள்ளி ஒருவன் அவனுக்காக காத்திருந்தான்.
''என் வீட்டில் வந்து என்னை பற்றி குறை சொன்னாயா?
பார் உன் வீட்டில் நடக்கப்போவதை.''
யசோதையிடம் வந்து அவனைப்பற்றி குறை சொன்ன அந்த யமுனை நதிக் கரை கோபி க்கு கண்ணன் நல்ல பரிசு கொடுக்கப்போகிறான் இன்று அவள் வீட்டில். எத்தனை வெண்ணை பானைகள் காலியாகி உடையப்போகிறதோ! அவளுக்கே தெரியாத போது நமக்கு எப்படி தெரியும்...யமுனைக்கு குளிக்க போனவள் ஒருவேளை வெண்ணெய்ப் பானைகளுக்கும் சேர்த்து தலை முழுகப் போகிறாளோ..!!
No comments:
Post a Comment