ப்ரதோஷம் - நங்கநல்லூர் J K SIVAN
கலிகாலத்தில் கோவிலுக்குச் செல்வதற்கே புண்யம் செய்திருக்கவேண்டும் என்ற நிலைமை ஆகிவிட்டது. அதுவும் விசேஷ காலங்களில் ஆலயதரிசனம் எவ்வளவு மன நிறைவு தருகிறது, அங்கு நிறைந்திருக்கும் அதிர்வலைகள் நம்மை எவ்வாறு புத்துணர்ச்சி பெற வைக்கிறது என்பதை அனுபவத்தில் தான் அறிய முடியும்.
அப்படி ஒரு சிறந்த தினம் மாதமிருமுறை வரும் ப்ரதோஷம். சிவாலயங்களில் மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்படுவது.
பிரதோஷம் எப்போது வரும்? ஒவ்வொரு சுக்ல பக்ஷம், வளர்பிறை, பதிமூன்றாம் நாள், திரியோதசி
அன்றும் க்ரிஷ்ணபக்ஷம் தேய்பிறைக்கு பதிமூன்றாம் நாள் அன்றும் வருகிறது.
பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆகவே மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சௌகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
பிரதோஷம் எப்போது வரும்? ஒவ்வொரு சுக்ல பக்ஷம், வளர்பிறை, பதிமூன்றாம் நாள், திரியோதசி
அன்றும் க்ரிஷ்ணபக்ஷம் தேய்பிறைக்கு பதிமூன்றாம் நாள் அன்றும் வருகிறது.
பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆகவே மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சௌகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
பிரதோஷம் பற்றிய வரலாறு தெரிந்தால் இன்னும் நன்றாக புரியும்.
திருப்பாற்கடலில் அமிர்தம் கிடைக்க தேவரும் அசுரரும் வாசுகியை கயிறாக, வடவரையை மத்தாக உபயோகித்து கடையும்போது வாசுகி கொடிய விஷத்தை கக்கியதால் பிரபஞ்ச உயிர்களை காக்கும் பொருட்டு ஹாலஹாலம் எனும் அந்த கொடிய விஷத்தை முழுதும் விழுங்கி பரமேஸ்வரன் நீலகண்டன் ஆனார். அந்த நேரம் பிரதோஷ காலம் என அறியப்பட்டு அந்த நேரத்தில் பரமேஸ்வரனை வழிபடுவதால் நம் பிரச்னைகளும் தீர்ந்து நல் வழி பிறக்கும். பரமேஸ்வரன் நெஞ்சில் தகிக்கும் அந்த ஆலஹால விஷத்தை தாங்கிக்கொண்டு பார்வதி மடியில் படுத்திருப்பதை, ப்ரம்மவிஷ்ணு தேவர்கள் கவலையோடு சிவனை பார்ப்பதை சுருட்டப்பள்ளி பள்ளிகொண்ட ஈஸ்வரர் ஆலயத்தில் பல முறை பார்த்திருக்கிறேன்.
ஒரு பிரதோஷ தினத்தன்று சிவனையும் நந்திகேஸ்வரனையும் ஒரு சேர தரிசித்தால், ஒரு வருஷம் கோவிலுக்கு சென்று வழிபட்ட புண்யம் கிடைக்கும் என்று பெரியோர்கள் அனுபவித்து சொல்லியுள்ளார்கள்.
சனிக்கிழமை அன்று பிரதோஷம் நேர்ந்தால் அது மஹா பிரதோஷம் என்று இன்னும் மஹிமை அதிகம் வாய்ந்தது. அன்று தரிசனம் செய்தால் ஐந்து வருஷம் சிவதரிசனம் செய்த புண்ய பலன்.
எப்படி மஹா விஷ்ணு அலங்கார பிரியரோ அப்படி பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர்.
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும். இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.
பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திரு நீறணிந்து ஓம் நமசிவாய என்று பஞ்சாக்ஷரத்தை ஒரு முறையாவது உச்சரிக்க வேண்டும். எல்லோராலும் உபவாசம் இருக்க முடியாதே. அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்கமுடிந்தால் பாக்கியசாலிகள். பின்னர் இருக்கவே இருக்கிறது இரவு உணவு. இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.
பிரதோஷம் அன்று கோவிலில் எங்கும் 'ஓம் நமசிவாய...’, 'தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்ற செவிக்கினிய சப்தங்கள், பக்தர்களின் கோஷங்களை கேட்கும்போது நாம் வேறு உலகுக்கு கொண்டு செல்லப் படுகிறோம்.
பிரதோஷம் அன்று எப்படி ப்ரதக்ஷிணம் பண்ணவேண்டும் என்ற ஒரு முறை இருக்கிறது. அந்த விசேஷ ப்ரதக்ஷிணத்தின் பெயர் சோமசூத்ர பிரதட்சணம். அன்று அப்படி ப்ரதக்ஷிணம் செய்வதால் அநேக அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்பது முன்னோர் வாக்கு.
பிரதோஷ கால சோமசூத்ர பிரதட்சணம் செய்வது எப்படி என்று விளக்குகிறேன். முதலில் சிவன் கோயிலில் வெளியில் உள்ள நந்தி பகவானை வணங்கி நேராக உள்ளே சென்று சிவ பெருமானுக்கு இடப்புறமாக (Anti Clockwise) இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அதே வழியாக திரும்ப வந்து (Clockwise), இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது அபிஷேக தீர்த்தம் வெளியேறக்கூடிய சோமசூத்ரம் எனும் கோமுகி வரை வந்து வணங்கி மீண்டும், வந்த வழியே சண்டிகேஸ்வரர் சன்னதி வரை வந்து வணங்க வேண்டும். மீண்டும் சோமசூத்ரம் வரை சென்று வணங்கி விட்டு, மீண்டும் சண்டிகேஸ் வரரை தரிசித்துவிட்டு, சிவபெருமானை நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசனம் செய்வது தான் சோமசூத்ர ப்ரதக்ஷிணம். இப்படி மூன்று, ஐந்து, 11 என ப்ரதக்ஷிணம் செய்து சிவபெருமானையும், நந்தியையும் வழிபடும் பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
ரெண்டு சனி பிரதோஷங்களில் அடுத்தடுத்து சிவ தரிசனம் செய்வது அர்த்தநாரி பிரதோஷம். சிவனும், சக்தியும் இரண்டறக்கலந்து அர்த்தநாரீஸ்வரராக இருப்பதால், இந்த இரண்டு பிரதோஷங்களில் வழிபட பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். மேலும் திருமணம் கூடி வருவதில் இருந்த தடைகள் சிக்கல்கள் விலகி, விரைவாக திருமணம் கை கூடும். முன்பு கை விட்டுப் போன, இழந்த செல்வங்கள் வந்து சேரும்.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
No comments:
Post a Comment