Friday, July 1, 2022

YATHRA

 அசாத்திய மலைக்கோயில்கள்- நங்கநல்லூர் J K SIVAN #அஹோபிலம்:


வயதாக ஆக நிறைய கோவில்கள் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஒரு தாகம் ஏற்படுகிறது. எல்லோருக்கும் அல்ல. சிலருக்கு. எனக்கும் அப்படி ஒரு தாகம் வந்தபோது சென்றது தான் அஹோபிலத்துக்கு.
என்னதான் தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தாலும் வயோதிகம் என்பது சில தடைகளை விதிக்கிறது. இயற்கையை மீற முடியாது. முதுமை ஒரு முக்ய சமாச்சாரம்.

நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு ஸ்ரீ சைல 2ஆன பின் அஹோபிலத்துக்கு கார் ஓடியது. 175 KM விடாமல் துரத்தினார். நந்தியால், வழியாக, அல்லக் கட்டா மண்டலத்தில் கர்னூல் ஜில்லாவில் இருக்கிறது அஹோபிலம். நந்தியாலிலிருந்து 70 கி.மீ. தூரம். நல்ல பாதை. ஹிரண்யனை நரசிம்மனாக அவதரித்து விஷ்ணு வதம் செய்து ப்ரஹ்லாதனுக்கு அருள் செய்த ஸ்தலம்.

''அஹோபிலம்'' என்றால் அசாத்திய பலம் என்றும் அதிசய, அற்புத குகை, என்றும் அர்த்தம். aho viryam aho shauryam aho bahuparakramah narasimham param daivam ahobilam aho balam -- அஹோபிலம் ஆகவே அஹோபலம்.

அஹோபிலம் மலை ஏற உடம்பில் அசாத்திய பலம் தேவை என்று அங்கே போனபின் தெரிந்தது. ரொம்ப லேட். எனக்கும் என் முதுகு தண்டுக்கும் சில வருஷங்களாக நல்ல நட்போ உடன்பாடோ இல்லை. ஏதோ ஒரு சமாதானத்தில் நாங்கள் இயங்குகிறோம். அஹோபில காடு மலை ஜீப் சவாரி மூலம், முதுகெலும்பை கோபப்படுத்த இஷ்டமில்லை. காசு கொடுத்து மற்றவர் தோளில் ஏறி புண்ணியம் சம்பாதிக்கும் எண்ணமும் இல்லை. நரசிம்மா, உன்னை எவ்வாறு என்னால் தரிசிக்க முடிகிறதோ அதை ஏற்றுக்கொண்டு அருள்புரிவாய். கோபம் வேண்டாம்.
கருடன் இந்த குகையில் ஆயிரம் வருஷங்கள் தவமிருந்து நாராயணன் அருள் பெற்ற ஸ்தலம். கருடன் தவம் செய்த மலைப்பகுதிக்கு கருடாசலம்,கருடாத்ரி, கருடசைலம் என்று பெயர் உண்டு. திருப்பதியில் ஒரு கருடாத்ரி வேறு மாதிரி.

இது கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரண்டாக, கீழ் அஹோபிலம், மேல் அஹோபிலமாக , நரசிம்மர் ஆலயங்கள் நிரம்பி இருக்கிறது. வடகலை வைஷ்ணவ மரபை சார்ந்தது.

கண்ணை மூடிக் கொள்வோம். கிழக்கு தொடர்ச்சி மலையை ஒரு பெரிய சர்ப்பமாக ஆதிசேஷனாக யோசிப்போம். இந்த சர்ப்பத்துக்கு 7 தலைகள். அதுதான் திருமலை திருப்பதி. வயிறு அஹோபிலம். வால் ஸ்ரீசைலம் என்று ஒரு ஐதீகம். பத்ம புராணம், கூர்ம புராணம், விஷ்ணு புராணம் எல்லாமே ''ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ர''மாக அஹோபிலத்தை பற்றி சொல்கிறது. மஹாபாரதத்திலும் அஹோபில விஷயம் உண்டு.

அஹோபிலத்தில் நவ, ஒன்பது,நரசிம்மர்கள். மலை மடிப்பு மடிப்பாக பழைய பேப்பர் காரன் அட்டைகளை அடுக்கி வைப்பதுபோல் பாறைகள் ஒழுங்காக சமத்தாக ஒன்றின் மேல் ஒன்றாக மடிந்து உட்கார்ந்து அரக்கு கலரில் வினோதமாக இருக்கிறது. குரங்குகள் லாகவமாக அங்குமிங்கும் தாண்ட, விளையாட தொங்க, குதிக்க சௌகர்யமாக இருக்கிறது..

அஹோபிலம் தான் ஹிரண்யகசிபு அசுரன் ராஜாவாக ஆண்ட, வசித்த இடம் என்று பிரம் மாண்ட புராணம் சொல்கிறது.

எட்டு கிலோ மீட்டர் மலை ஏறினால் மலைமேல் உள்ள நரசிம்மர்கள் யார் தெரியுமா?மாலோல நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், உக்ர நரசிம்மர், அஹோபில நரசிம்மர்.

கீழே யோகானந்த நரசிம்மர், சத்ரவட நரசிம்மர், பாவன நரசிம்மர், பார்கவ நரசிம்மர், லட்சுமி நரசிம்மர்.

உக்ர நரசிம்மருக்கு இத்தனை யுகம் ஆகியும் எனோ ஹிரண்யன் மேல் கோபம் குறைய வில்லை. கீழேயிருந்து அண்ணாந்து பார்த்து விட்டு ஆவென்று வாயைப் பிளந்து, முழங்காலை காதலோடு தடவிக்கொடுத்துவிட்டு, மெதுவாக 60-70 படிகள் ஏறினேன். முதலில் மலைமேல் தரிசனம் தந்தவர் உக்ர நரசிம்மர். ஒரு சிறு குகையில் இருக்கிறார். அவரைச் சுற்றி கோயில் கட்டியிருக்கிறார்கள். ஸ்வயம்பு.. அவரையே அஹோபில நரசிம்மன் எனும் புராதன நரசிம்மன் என்கிறார்கள்.
செஞ்சுக்கள் என்ற வனவாசிகள் இருந்த இடம். லக்ஷ்மி தேவி செஞ்சு லக்ஷ்மி யாக நரசிம்ம ரோடு காட்சி தருகிறாள். நரசிம்மர் ஸ்வயம்பு.

சின்ன வயதில் நாகேஸ்வர ராவ் நடித்த செஞ்சு லலக்ஷ்மி கருப்பு வெளுப்பு தெலுங்கில் பார்த்ததாக லேசான ஞாபகம் வருகிறது. கதை மறந்து போய்விட்டது. பாஷை புரியாதே. ஆரம்பம்முதல் கடைசியில் வெளியில் நான் போகும்வரை நாகேஸ்வர ராவ் பரிதாபமாக பார்த்தாரே தவிர சிரிக்கவே இல்லை என்று மட்டும் ஞாபகம் இருக்கிறது.

நான் பார்க்க முடியாத க்ரோதக் கார, கோபக்கார நரசிம்மரை, வராஹ நரசிம்மரை படமாக உங்களோடு சேர்த்து தரிசிக்கிறேன். அவரோடு லக்ஷ்மி எப்படி பயமில்லாமல் வாழ்ந்தாளோ?.

இன்னும் மேலே போனால் ஜ்வாலா நரசிம்மர். மேலே இன்று வரை நான் இன்னும் போகாததால் அடுத்த ஜென்மத்தில் இளைஞனாக இருக்கும்போதே ஜ்வாலா நரசிம்மனை எப்படியாவது ஒரு முறையாவது தரிசிக்க உத்தேசம். அவர் இருக்கும் மலைக்கு அசலசய மேரு என்று பெயர். இங்கு தான் படு கோபத்தோடு இரண்யனை சந்தித்தார் நரசிம்மர்.

அடுத்ததாக இன்னும் 2 கி.மீ மேலே சென்றால் மாலோல நரசிம்மரை தரிசிக்கலாம். பாவம் இவ்வளவு கஷ்டப் பட்டு என்னை பார்க்க வந்தாயே என்று சௌமியமாக இனித்தமுகத்துடன் எல்லா பக்தர்களுக்கும் அருள் பாலிக்கிறாராம். நான் தான் மேலே ஏறமுடியாமல் பார்க்க வில்லையே. ''மா'' என்றால் லக்ஷ்மி . ''லோலன்'' என்றால் ப்ரியன். லக்ஷ்மியோடு ஆனந்தமாக என் போன்றோர் தொந்தரவு இன்றி நிம்மதியாக ஆனந்தமாக காட்சி அளிக்கிறார்..

நிறைய குரங்குகள். வயதான குரங்குகள் கூட அனாயாசமாக மலைமேல் தாவி ஏறுகின்றபோது ஒருவேளை நாம் ஏன் குரங்கிலிருந்து மனிதனானோம், நரசிம்மர் களை தரிசிக்க வழியில்லாமல் போய்விட்டதே, மனது மட்டுமே குரங்கா இருக்கிறதே, என்று தோன்றியது. ஆமாம் பழசு இன்னும் விட்டுப் போகவில்லை. இப்போது உடல் மனிதனாக இருந்தும் மனது இன்னும் குரங்காகவே இருக்கிறதே என்ற ஒரே ஆறுதல் தான்.

மலை மேல் பாவனா நதிக்கரையில் ஆறு கி.மீ. தூரம் சென்றால் அருள் பாலிப்பவர் பாவன நரசிம்மர்.

மேல் அஹோபிலத்தில் எட்டு கி.மீ தூரத்தில் ஒரு மலை பிளவு காணப்படுகிறது. அது தான் தூண். அந்த தூணைப் பிளந்து நரசிம்மர் படு கோபமாக ஹிரண்யனை வதம் செய்ய வெளிப் பட்ட உக்ர ஸ்தம்பம் என்கிறார்கள். தூணாக இருந்த அந்த மலை நரசிம்மன் வெளிப்பட்டதும் பொடியாயிற்று. நரசிம்மன் எடுத்த முதல் ல் அடியில் 172 சப்தங்கள் வெளிவந்தன. அவையே ராகங்கள். அதில் இப்போது மிஞ்சி இருப்பது தான் மேளகர்த்தா ராகங்கள் எங்கிறார்கள். 72 மேள கர்த்தா ராகங்கள் என்று தெரியுமல்லவா?

''கரஞ்ச விருக்ஷம்'' என்னவென்று புரியவில்லை. இன்னும் ஒரு கிமீ தூரம் மேலே ஏறியவர்கள் ஒருவேளை அறிவார்கள். அந்த மரத்தடியில் காட்சி கொடுப்பவர் கரஞ்ச நரசிம்மர். ஹொங்கே மரம் என்று உள்ளூர்க் காரர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். சார்ங்கம் கையில் காண்பதால் சாரங்க நரசிம்மன் என்றும் பெயர். ஒரு தரம் ஹனுமான் இங்கே வந்து ராமனை வேண்டி தவம் இருந்தார். இவ்வளவு மலைகள் உள்ள இடத்துக்கு ஹனுமான் வராமல் இருப்பாரா.

''யாரப்பா நீ என்னை கூப்பிட்டாயா?'' என்று நரசிம்மர் ஹனுமான் முன் வந்து நின்று பேசிய தும் ஹனுமானின் தவம் கலைந்தது.

தவம் கலைந்ததால் கண்விழித்த ஹனுமான் ஆச்சர்யமாக பாதி சிங்கம் மீதி நரனாக நின்ற நரசிம்மனை பார்த்து ''தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள். நீங்கள் யாரோ தெரியவில்லை. நான் என் ராமணத்தானே கூப்பிட்டேன். உங்களை இல்லையே. போய் வாருங்கள்'' என்கிறார் ஹனுமான்.

'' என்னப்பா இது. என்னை ராமா என்று நீ கூப்பிட்டதால் தானே நான் வந்தேன் ? என்கிறார் நரசிம்மர்.

' என்னையா இது,? நீங்கள் எப்படி என் ராமனாக முடியும்?. கையில் வில்லேந்திய என் ராமன் எங்கே, விசித்திர உருவில் நீங்கள் எங்கே? முதலில் போய்ச்சேரும் '''' என்கிறார் ஹனுமான்.

''அப்படியா. இதோ பாரேன்'' என்று ராமனாக கோதண்டத்துடன், சுதர்ஸன சக்கரத்துடன் விஷ்ணுவாகவும் காட்சி தருகிறார் நரசிம்மர்.

மனமகிழ்ந்து ஹனுமான் ''அடாடா, என் ராமா நீ யா நரசிம்மன்?'' என்று நமஸ்கரித்து ஹனுமான் நரசிம்மனை வழிபட்ட இடம் இது. ஆகவே இங்கே ஒரு குட்டி ஹனுமான் கோவில் உள்ளது.

ஸ்ரீ லக்ஷ்மி சமேத உக்ர நரசிம்மரை தரிசித்துவிட்டு அவர் மூலம் மற்றவர்களையும் மனதால் தரிசித்து வேண்டிக் கொண்டு கீழே திரும்பினால் கீழ் அஹோ பிலத்தில் தென் கிழக்காக யாருமில்லாத ஒரு தெரு. சுமார் 2 கி.மீ. அதில் சென்றபோது எதிரே ஒரு பட்டாச்சாரியார் ஸ்கூட்டரில் வந்தார். அடேடே பட்டாச்சாரியார் கிளம்பிவிட்டார் கோவில் பூட்டி விட்டு கிளம்புகிறாரோ? நாம் போய் எப்படி தரிசிப்பது என்று யோசிப்பதற்குள் அவர் போய்விட்டார். .இன்னொருவர் அதி வேகமாக ஸ்கூட்டரில் எங்களை கடந்து முன்னே சென்றார். ஓஹோ அடுத்த டூட்டி காரரோ! அவர் போய் கதவை திறக்கட்டும் என்று காத்திருந்து மெதுவாக போனோம் .

யோகானந்த நரசிம்மர் இரண்யனைக் கொன்ற பிறகு யோகத்தில் ஆழ்ந்து காட்சியளிக்கும் கோலம். ப்ரஹ்லாதனுக்கு யோக பயிற்சி ஆசனங்களை கற்பித்த இடம்.
haahaa hoohoo vakya gandharva nrittageetha hritaatmaney bhavahantritat chathravataimhaya mangalam
ஆஹா ஊஹூ என்று கந்தர்வர்கள் ஆடிப்பாடி நரசிம்மனை உக்ரம் தணிய வைத்து அவர் யோகத்தில் ஆழ்ந்த இடம்.

கீழ் அஹோபிலத்தில் முக்கியமாக லக்ஷ்மி நரசிம்மனை தரிசிக்கலாம். பெரிய கோவில். மூன்று நான்கு பிரகாரங்கள். நரசிம்மனுக்கு இங்கே ப்ரஹ்லாத வரதர் என்றும் பெயர்.கீழே உள்ள நரசிம்மர்கள் ஐந்து கிலோ. விஸ்தீரணத்தில் வியாபித்து உள்ளார்கள்.

நாராயணன் ஒருவனே தெய்வம் என்ற கோட்பாட்டில் மஹா விஷ்ணுவைத்தவிர வேறு யாரையும் வழிபடாத வைஷ்ணவ சம்ப்ரதாயத்தால் நவகிரஹங்களை விஷ்ணு ஆலயங்களில் சாதாரணமாக காண்பதில்லை. வைகானச பாஞ்சராத்ர ஆகமங்கள் சொல்படி தான் வைஷ்ணவ ஆலயங்கள் அமைக்கப் படுவன. நவகிரஹங்களை பற்றி இந்த ஆகமங்கள் ஒன்றுமே பேசவில்லை. எனவே அவ்வாலயங்களில் நவகிரஹங்கள் இல்லை. நித்யஸூரிகள் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் மட்டும் தான் காணப்படுவர். நாராயணனே நவகிரஹங்களை வேண்டுவதின் பலனை தருபவர் என்பது நம்பிக்கை. எனினும் அஹோபிலத்தில் நவ நரசிம்மர்களும் நவகிரஹத்தை குறிப்பதாக அற்புத சிலைகளாக வடித்து இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. கீழே அஹோபிலத்தில் யோகானந்த நரசிம்மர் ஆலயத்தில் நவ நரசிம்மர் களையும் நவகிரஹங்களோடு சேர்த்து பார்த்து அதிசயித்தேன்.

இப்படியே நேராக போனால் பாவன நரசிம்மரை பார்க்கலாம்.

சத்ர வட நரசிம்மர் மூன்று கி.மீ. தூரத்தில் இருக்கிறார். சுற்றி எங்கும் மலைகள். ஒரு ஆலமரத் தின் அடியில் அமர்ந்த நரசிம்மருக்கு அது குடை போல் நிழல் தந்திருக்கிறது. சத்ரம் என்றால் குடை. வடம் (vata) என்றால் ஆலமரம். சிலர் அரசமரம் என்கிறார்கள். திருவாலங்காட்டில் ரத்ன சபையாக சிவன் காட்சி அளிக்கிறார் அதற்கு வடாரண்யம் (vata aaranyam) என்று தானே பெயர். கல்லால மரம் என்று தானே சொல்கி றார்கள்.ஆலமரம் எப்படி அரசமரமானது என்று புரிய வில்லை. எதுவும் நடக்கலாம்.

கீழ் அஹோபிலத்திலிருந்து இன்னும் 2 கி.மீ தூரத்தில் பார்கவ நரசிம்மரை தரிசிக்கலாம். பார்கவ தீர்த்தம் என்ற புனித குளம் இருக்கிறது.பார்கவ ராமர் (பரசுராமருக்கு பிருகு வம்சக் காரர் என்பதால் பார்கவ ராமர் என்று பெயர் உண்டு) தவம் செய்த இடம். படத்தில் நான் பார்த்த பார்கவ நரசிம்மர் காட்டை நீங்களும் பார்க்கலாம்.

ஒரே நாளில் எங்கிருந்தெல்லாமோ வந்து ஒன்பது நரசிம்மர்களை தரிசித்தவர்கள் உண்மை யிலேயே பாக்கியசாலிகள். அஹோபிலத்தில் தரையில் அமர்த்தி சாப்பாடு போட்டார்கள். பெங்களூர்க்கார தம்பதி நிர்வாகம். எல்லாமே காரம் எதிர்பார்த்த இடத்தில் கொஞ்சம் தித்திப்பாக இருந்தது. இரவு தங்கிவிட்டுட்டு அடுத்த நாள் பற்றிய சிந்தனையை காலையில் வைத்துக் கொள்ளலாம் என்று உறங்கினோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...