முக்திக்ஷேத்ரம்.
திருவண்ணாமலை அக்னி ஸ்வரூபமான பஞ்ச பூத க்ஷேத்திரம். கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப் படும் க்ஷேத்ரம். முன்பெல்லாம் லீவு விடுவார்கள். ஸ்பெஷல் ரயில் வண்டிகள், பஸ்கள் தீபம் ஸ்பெஷல் என்று நிறைய ஓடும். பக்தர்களின் விஜயம் ரொம்ப ஜாஸ்தி. இப்போது கொரோனாவுக்கு பிறகு நிலைமை வேறு.
எண்ணற்ற சித்தர்கள் இன்னும் அங்கே வாசம் செய்கிறார்கள் என்று சொல்வதுண்டு. ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள் தவிர விசிறி ஸ்வாமிகள் என பேர் பெற்ற ராம் சுரத்குமார் யோகி போன்றோர் வாழ்ந்த மலை. இன்னமும் ஸூக்ஷ்ம சரீரத்தில் வாழும் மலை.
14 கி.மீ தூரமான சுற்றளவு அதன் எல்லையை வலம் வருவது தான் கிரிவலம். இரவில் ஒன்பது மணிக்கு ஆர்மபித்து ஐம்பத்தைந்து பேர் கொண்ட ஒரு கோஷ்டியாக பஜனை பாடல்கள் பாடிக்கொண்டு இரவெல்லாம் நடந்து விடிகாலை ஐந்துமணிக்கு அருணாசலேஸ்வரர் தரிசனம் செய்த அனுபவம் சொல்லில் அடங்காது. முடிந்தால் ஒரு புத்தகமே எழுதவும் ஆசை.
இங்கு தான் அருணகிரியாரின் திருப்புகழ் அரங்கேறியது. '' ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே'' என்று அவர் திருப்புகழில் வரும் ஆதி அண்ணாமலையில், இப்போது அடி அண்ணாமலையாகி முருகன் குடி கொண்டிருக்கிறார்.
திருவண்ணாமலை கிருத யுகத்தில் அக்னியாகவும், திரேதாயுகத்தில் மாணிக்கமாகவும், துவாபர யுகத்தில் தங்கமாகவும், நமது புகழ்பெற்ற கலியுகத்தில் கல்லாகவும் மாறியதாம் .
இந்த ஆலயத்தில் பாதாள லிங்கம் தென்மேற்கு மூலையில் இருக்கிறது. அங்கு தான் ரமணர் முதலில் இங்கே குடிபுகுந்தார். இந்த ஆலயத்தில் உள்ள கம்பத்திளையனார் சன்னதியில் தான் அருணகிரி ஸ்வாமிகள் முக்தியடைந்தார்.
கிரிவலம் செல்லும்போது நிறைய லிங்கங்களை தரிசிக்கலாம். இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம்,நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என்று எத்திசையையும் எண் திசையையும் காக்கும் லிங்கங்களை வழிபடலாம்.
சேஷாத்ரி ஸ்வாமிகள் இங்கே வந்து சேர்ந்த போது ஒரு அதிசயம் நிகழ்ந்ததே தெரியுமா?
அவர் பாதங்கள் அந்த மலை அடிவாரத்தில் பட்டதுமே எங்கோ டாண் டாண் என்று கம்பீரமாக கோவில் மணி எதிரொலித்தது. முதன் முதலாக அருணாசலேஸ்வரரை தரிசித்தார். லிங்கம் மனதைக் காந்தம் போல் இழுத்தது. ஒரு இடத்தில் நில்லாது புயல் போல் இதுவரை அலைந்த சேஷாத்ரி ஸ்வாமிகள் இனி அடுத்த 40 வருஷங்களுக்கு இந்த இடத்தில் ஆணி அடித்தது போல் இருந்தார். கோவிலைச் சுற்றி, மலையைச் சுற்றி காற்று மாதிரி ஓடுவார்.
யாரோ ஒருவர் சுவாமிகளை ''ஸ்வாமி , நீங்கள் இந்த ஊரில் வசிப்பதற்கு ஏதாவது காரணமா?'' என்று கேட்டார்.
யாரோ ஒருவர் சுவாமிகளை ''ஸ்வாமி , நீங்கள் இந்த ஊரில் வசிப்பதற்கு ஏதாவது காரணமா?'' என்று கேட்டார்.
''இங்கே தானே ரெண்டு பேரும் (அண்ணாமலையும் உண்ணாமுலையும்) வா வா என்று கூப்பிட்டு மோக்ஷம் கொடுக்கிறா. யாராவது இதை கோட்டை விடுவாளா?'' என்கிறார்.
''கிருஷ்ணன் ஒருதடவை இங்கே வந்து சுதர்சன சக்ரத்தை கீழே வச்சிட்டு புல்லாங்குழல் எடுத்து வாசிச்சபோது சிவன் எதிரில் வந்து கூத்தாடினான் '' என்றார் ஸ்வாமிகள்.
உண்மையாகத் தான் இருக்கவேண்டும். அருணாசலேஸ்வரர் சந்நிதிக்கு பின் பிராகாரத்தில் வேணுகோபால சுவாமி கோவில் கொண்டுள்ளாரே !''
வெங்கட்ரமணய்யர் மூலம் சேஷாத்ரி திருவண்ணாமலையில் இருப்பதை அறிந்து சித்தப்பா ராமஸ்வாமி ஜோசியரும் கல்யாணி சித்தியும் சேஷாத்ரி ஸ்வாமியின் தம்பி நரசிம்ம ஜோசியரோடு வந்து அவரைப் பார்த்தார்கள்.
ஜடாமுடி, தாடி மீசை, கந்தல் ஆடை, எலும்பான உடம்பு ..... சேஷாத்ரியை அடையாளம் தெரியவில்லை.
''வா சேஷத்ரி எங்களோடு வீட்டுக்கு வந்து விடு ''-- வழக்கமான கெஞ்சல். கொஞ்சல்.
''நீங்கள் எல்லாரும் போகலாம்'' - எல்லோரையும் போகச்சொல்லி விட்டார் ஸ்வாமிகள்.
அவர்கள் போகும்போது அன்னசத்திர மணியக்காரரிடம் ''ஐயா எப்படியாவது என் மகன் சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு தினமும் அன்னம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.
சில காலத்தில் கல்யாணி சித்தியும் காலமானாள் . ராமஸ்வாமி ஜோசியரும் மறைந்தார். அவர்கள் ஈமச்சடங்குகளை நிறைவேற்றி நரசிம்ம ஜோசியரும் பிழைக்க வழி தேடி சென்னை மாநகரம் சென்றார்கள். அவ்வப்போது திருவண்ணாமலை வந்து அண்ணா சேஷாத்திரி ஸ்வாமிகளை தூரத்திலிருந்து தரிசனம் செய்வார். அவ்வளவு தான் உறவு.
1880 ல் திருவண்ணாமலை தீபம் விழா எப்படி இருந்தது என்று ஒரு புகைப்படம் இணைத்துள்ளேன் அதோடு 1940ல் இன்னொரு வெள்ளைக்காரன் எடுத்த போட்டோ. அவனுக்கு எப்படி இந்த கோவில் கண்ணைக் கவர்ந்தது. இந்த கோணத்தில் பார்த்தால் அற்புதம் என்று எப்படி தெரிந்தது. எங்கோ உயரே ஒரு மலைமேல் இருந்து எடுத்திருப்பானோ. அந்த காலத்தில் விஞ்ஞானம் வளரவில்லை சாதாரண ஒரு காமிராவில் இப்படி ஒரு ஆச்சர்யமா? அடே ,வெள்ளைக்காரா, உன் காமிராவுக்கு நன்றி.எத்தனையோ லக்ஷம் பக்தர்கள் ஆஹா எவ்வளவு அருமையான படம் என்று சொல்லும்போதெல்லாம் , அப்பனே, நீ கெட்டவனோ நல்லவனோ, உன் காமிரா ரொம்ப நல்லது. அதற்கு முக்தி நிச்சயம் கிடைத்திருக்கும். அதன் புண்யத்தால் நீயும் கைலாஸத்தில் தான் இருப்பாய் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment