திருமாங்கல்யம்.. #நங்கநல்லூர_JK_SIVAN
எல்லோருக்கும் தெரிந்த, எல்லோர் வாழ்விலும் சம்பந்தப்பட்ட முக்கியமான ஒரு சின்ன மந்திரம் பற்றி பேசுவோம்.
நாம் அடிக்கடி கல்யாணங்களுக்கு செல்லும்போது கேட்கும் மந்திரம், சினிமாவில் தாலி கட்டும்போது கேட்பது.
''கெட்டி மேளம், கெட்டிமேளம்'' என்று சப்தத்தோடு மேடையில் வாத்யார் கையை உயர்த்தி காட்ட தூரத்தில் அவரையே கவனித்துக்கொண்டு நாயனம் வாசிப்பவர் பாதியில் பாட்டை நிறுத்திவிட்டு உச்ச ஸ்தாயியில் வாசிக்க, தவில் காரர் மேளத்தை டமடம என்று பிளந்துகட்ட மேடையில் வாத்யார் சொல்லும் மந்திரம் தான் இது. இந்த மந்திரத்தை சொல்லும்போது மாப்பிள்ளை புதுசாக ஒரு பெண்ணை மனைவியாக்க அவள் கழுத்தில் தாலி கட்டுகிறான்.
தாலி கட்டும் மாப்பிள்ளைக்கோ, கட்டிக்கொள்ளும் மனைவிக்கோ, அவர்கள் இருவரின் பெற்றோருக்கோ, செருப்புக் காலோடு கையில் உள்ள மஞ்சள் அரிசி அக்ஷதையை,, பூ இதழை, மேடைமேல் வீசும் நமக்கோ, இதைச் சொல்லும் வாத்யாருக்கோ, இந்த மந்திரத்தின் அர்த்தத்தை பற்றி ஏதேனும் கவலை உண்டா? அறிந்து கொள்ளவேண்டும் ஆவலாவது உண்டா? நிச்சயம் கிடையாது.
நமக்கும் அடிக்கடி கைகடிகாரம் பார்க்கும் வழக்கம் நின்று போய், மொபைலில் மணி பார்த்துவிட்டு சாப்பாட்டுக்கு செல்ல வேண்டும். எப்போது இப்படி கெட்டி மேளம் வாசித்தார்களோ, நமக்கு கையில் உள்ள அக்ஷதையையம், ரோஜா இதழ்களையும் மேடை மேல் வீசி எறியவேண்டும். உடனே சாப்பிட்டுவிட்டு கிளம்பி விடலாம். கும்பலாக நாம் மேடையை நோக்கி ஓடும் போது விடியோக்ராபர், போட்டோக்ராபர் ''சார் கொஞ் சம் தள்ளுங்க, வியூ கொடுங்க'' என்று வழி மறிப்பார் கள். நாம் ''எறிவது'' தான், மணமக்களுக்கு நம்முடைய ஆசிர்வாதம்.
''माङ्गल्यतन्तुनानेन भर्तृजीवनहेतुना । कण्ठे बध्नामि सुभगे twam जीव शरदः शतम् ॥.
Mangalyam tantunanena mama jeevana hetuna: kante badhnami subhage twam jeeva sarada satham
“மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபகே த்வம் ஜீவ சரத சதம்” ''
தாலி என்பதை கெட்டியாக பல சவரன்களில் தங்கத் தில், வைரம் மணிகள் சேர்த்தோ கழுத்தில் அணியும் ஆபரணம் அல்ல.
தாலி என்பது மஞ்சள் நிற, மஞ்சள் கிழங்கு கோர்த்த சரடு. அது பெண்ணின் வாழ்வில், இந்துக்களின் சமூகத்தில் மிக உயர்ந்த மேன்மையான ஒரு புனித கயிறு. கணவன் உயிரோடு இருக்கும் வரை அந்த பெண் கழுத்தை விட்டு கழற்றக் கூடாத புனித கயிறு. அவ்வப்போது மாற்றிக் கொள்ளலாம். புதியதை அணிந்து கொண்டு, பழசைக் கழட்டவேண்டும்.
ஆண்கள் அது போல் பூணல் இறந்தபிறகும் கழுத்தில் இருக்கும். மாற்றிக் கொள்ளும்போது புதியது தோளில் ஏறியபிறகு தான் பழசு வெளியேறும்.
சரி, இந்த மந்திரத்தின் அர்த்தம் இப்போதாவது தெரிந்து கொள்வோமே:
கணவன் தாலி கட்டும்போது சொல்கிறது இது தான்:
''பெண்ணே, இந்த மாங்கல்ய சூத்ரம் அதாவது மஞ்சள் சரடு, உனக்கு நீண்ட மண வாழ்க்கையை அளிக் கட்டும். அதை நான் உன் கழுத்தில் உன் கணவனாக இந்த நன்னாளில், நல்ல வேளையில் முகூர்த்தத்தில், கட்டுகிறேன்.அணிவிக்கிறேன். சகல சௌபாக்கி யங்களும் பெற்று,நோய் நொடியின்றி, நூறு வயது நீ வாழ வேண்டும் பெண்ணே''
மஞ்சள் தாலி கயிற்றை அகற்றி விட்டு தங்கத்தில் செயின் போட்டுக்கொள்வது பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சொல்லவேண்டியதை மேலே சொல்லியாகிவிட்டது.
இந்த மந்திரம் ஏதோ ஒரு சாமியையோ, கடவுளையோ புகழ்ந்தோ, வேண்டிக்கொண்டோ சொல்வது இல்லை. மணமகன் தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த் தும் பாவாக அமைந்துள்ளது. இந்திய சமுதா யத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இது காட்டுகிறது.
சினிமாக்களில் இந்த மந்திரத்தை உபயோகிக்காமல் கல்யாண காட்சி காட்டலாம். அருமையான மந்திரத்தை எவனோ ஒருவன் எவள் கழுத்திலோ பணம் வாங்கிக்கொண்டு கட்டும்போது சொல்வதாக எதற்கு காட்டி மந்திரத்தை இழிவு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. நம் வார்த்தையை யார் கேட்கப் போகிறார்கள்?
நமது சம்பிரதாயங்களை, சாஸ்திரத்தை மதித்து வாழ வேண்டியது நமது முதலாய கடமை.
No comments:
Post a Comment