கனவிது தான் நிஜமிது தான்.. #நங்கநல்லூர்_J_K_SIVAN
கனவு ஒரு மனிதனின் வாழ்க்கையில் இன்றியமை
யாதது. கனவு காணாத மனிதனே கிடையாது. கனவு ரெண்டு வகைப்படும். பகல் கனவு, நிஜ கனவு. பகல் கனவு விழித்துக்கொண்டு எதையோ நினைத்து அது நிறைவேறுவது போல் கற்பனையில் சந்தோஷப்
படுவது. மற்றொரு தூக்கத்தில் தானாக எந்த முயற்சி யும் இல்லாமல் உருவாவது.
கடவுள் அநேக பக்தர்களை கனவில் கண்டு பேசி கட்டளை இட்டிருக்கிறார். உபதேசம் செய்திருக்கிறார் என்று நிறைய படிக்கிறோம். இப்போதும் கூட சிலர் கயிறு திரிக்கிறார்கள். கனவுகள் எத்தனையோ நிஜமாகி இருக்கிறது.
நம் கனவில் திருடன் தான் வருகிறான், வீடு எரிகிறது. ரயிலில் அறை படுகிறோம், பஸ்ஸிலிருந்து, மலையி லிருந்து விழுகிறோம், நாய் புலி எல்லாம் துரத்துகிறது. எத்தனையோ கல்யாணங்கள், ஊர்கள் உறவுகள் வீடு வாசல் என்னென்னவோ சம்பந்தா சம்பந்தமில்லாத சம்பவங்கள் நடைபெறுகிறது. விழித்தால் எல்லாம் காணாமல் போகிறது. கனவு கொடுக்கும் சந்தோஷத் தை விழிப்பு வில்லன் அழித்து விடுகிறான்..
கனவுகள் மனதில் தோன்றுகிற எண்ணங்களின் பிரதிபலிப்பு. நடந்த சம்பவங்களின் திரிபு. நிஜம் போல் நம்மை அனுபவிக்க வைக்கும் சக்தி கனவுக்கு உண்டு. கனவில் காதல் நிறைய சென்ஸார் இல்லாமல் சிலருக்கல்ல, பலருக்கு காட்சி தரும்.
காதலையும் கவிதையும் பிரிக்க முடியுமா? என்றால் முடியாது என்று நீங்கள் பதில் சொல்வீர்கள். இது காதலாலோ கவிதையாலோ உண்டான நிலையல்ல. இது கனவுகளால் உண்டான நிலை. கற்பனைகள் செய்யும் வரத்தால் உணரப்பட்ட நிலை. கனவு போதை. அதில் மிதப்பவன் கவிஞன். நிஜ போதையும் சேர்த்துக் கொள்பவர்கள் தற்கால சினிமா கவிஞர்கள்.
கம்பன், பாரதி வள்ளுவன், தாகூர் போன்ற அமர கவிஞர்கள் கண்ட கனவுகள் அற்புதமானவை. கருத்து செறிந்தவை.
அடிமனத்தில் பதிந்த எண்ணங்கள், நிறைவேறாத
ஆசைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றம், கோபம், பயம் இவையெல்லாம் மெல்ல தலை தூக்கி தூங்கும்போது நமக்கு தன்னிச்சையாக கனவாக தோன்றுகிறது. யாரும் இப்படி தான் ஒரு கனவு காணவேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டு கனவு காண்பதில்லை. அது முடியாது.
கனவில் உளறுபவர்கள் அருகே படுத்தால் நம் தூக்கம் பறிபோய்விடும். சுப்ரமணிய ஐயர் அடிக்கடி தூக்கத் தில் கத்துவார், உளறுவார், எழுந்து உட்காருவார்.
உடலெல்லாம் வியர்த்திருக்கும். கண்கள் மிரள மிரள விழிக்கும். என்ன சார் ஆச்சு?
''தஞ்சாவூர் வீட்டிலே ஓட்டைப் பிரித்துக்கொண்டு திருடன் உள்ளே குதித்து நெல் மூட்டையை எடுத்துக்
கொண்டு ஓடிவிட்டான். பிடிக்கப்போன என்னை கழுத்தை நெறிச்ச்சுட்டான் என்று கழுத்தை தடவிக் கொள்வார். முட்டாள் திருடன், போயும் போயும் நெல் மூட்டையையா ஓட்டைப் பிரித்து குதித்து வந்து திருட வேண்டும்?! சிலர் கனவில் பிசாசு பேய் தொந்தரவு ஜாஸ்தி. பாரதி கனவில் இந்தியா சுதந்திரம் பெற்றது. பாட்டாக பாடி தள்ளினார்.
மிருகங்கள் பக்ஷிகள் கனவு காணுமா என்று தெரியாது, அவற்றின் பாஷை புரிந்தால் தான் இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்.
நம் ஒவ்வொருவருக்கும் மூன்று நிலைப்பாடுகள், விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம். விழிப்புணர்வில் நடப்பது கனவாக பரிமளிக்கிறது ஆழ்ந்த உறக்கத்தில் கனவும் இல்லை, நினைவும் இல்லை.
தினமும் படுக்கும் முன்பு, நல்ல விஷயங்களை நினைத்துக்கொண்டு பகவானை தியானம் செய்து விட்டு படுக்க வேண்டும். இதனால் நல்ல கனவாக வரலாம். திருடன் பேய் பிசாசுக்கு இது எவ்வளவோ நல்லதில்லையா.? தங்கத்திலிருந்து தான் நகைகள் ஆபரணங்கள் உருவாகிறது. களிமண்ணில் இருந்து தான் பாண்டங்கள் உருவாகிறது. நல்ல எண்ணத்தினால் தான் சுகமான கனவுகள் உருவாகிறது.
No comments:
Post a Comment