Saturday, July 2, 2022

PESUM DEIVAM

 


பேசும்  தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

சந்நியாசிக்கு  அபிவாதயே...

இது நான் ஏற்கனவே  எழுதியிருந்த  சமாச்சாரம்  என்றாலும்  மஹா பெரியவா சம்பந்தப்பட்டா எந்த விஷயமும் திரும்ப திரும்ப படிக்கும்போதும், கேட்கும்போதும், எனக்கு எழுதும்போதும் ஒரு புத்துணர்ச்சி, சநதோஷத்தை தருகிறதே.  

மஹா பெரியவாளுக்கு சைவ வைணவ பேதம் கிடையாது. மனத்தை பார்ப்பவர், மதத்தை பார்ப்பதில்லை. 

ஒரு  வைஷ்ணவ சிறுவனுக்கு  மஹா  பெரியவாளிடம் என்னவோ ஒரு அலாதி பக்தி.  அவனுக்கு உபநயனம் நடந்து ரெண்டு வாரம் இருக்கும். அப்போது பெரியவா அவன் இருக்கும் கிராமத்தில் பட்னப்ரவேசம் பண்ணினார். எல்லார் வீட்டிலும் பூர்ண  கும்ப மரியாதை பண்ணினார்கள். இவன் வீட்டிலும் பூர்ணகும்பம் குடுத்துவிட்டு எல்லாரும் பெரியவாளுடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தனர். இந்தப் பையனும் புதுப்  பூணல் போட்டுக்கொண்ட  ஜோரில்  பெரியவா எதிரே  சென்று  வணங்கி  ''அபிவாதயே" சொல்லி  மறுபடியும் நமஸ்காரம்  பண்ணினான்.


 "அபச்சாரம்! அபச்சாரம்! டே, அம்பி! பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்றச்சே அபிவாதயே சொல்லப்டாதுடா !"  என்று யாரோ உரக்க அவனிடம் சொன்னார்கள்.
 
மஹா பெரியவா  பார்த்துக்கொண்டிருக்கும்போதே  அவன் பளிச்சென்று பதில் சொன்னான்:

"பூணல் போட்டு விட்ட  வாத்யார்  தானே பெரியவாளப் பாத்தா அபிவாதயே பண்ணுன்னு" சொன்னார் !  

பையன் மனதில்  ஒரு சந்தேகம்.   ''இவரை  பெரியவாங்கறாளே .  எதுக்கு  இவாளுக்கு   நமஸ்காரம்  பண்ணப்படாது எங்கிறா?'அப்போ இவா பெரியவா  இல்லையோ?"    வெளியே சொல்லவில்லை.

மஹா பெரியவா புன்னகைத்தார்.   "ஏண்டா ஒனக்கு என்னைப் பாத்ததும் பெரியவாளா, இல்லியான்னு சந்தேஹம் வந்துடுத்தோல்லியோ?".

பையனுக்கு தூக்கி வாரிப் போட்டது! என்னது இது?     எக்ஸ்ரே  X -ray பிடிச்ச மாதிரி  பேசறாரே . என் மனசிலே நினைச்சது இவருக்கு எப்படி தெரிஞ்சுது.

அங்கிருந்த எல்லோரும் திகைத்து நிற்க  மஹா பெரியவா விளக்கம் கொடுத்தார்.

"டே பையா,   அபிவாதயேங்கறது ஒரு life history மாதிரி. அந்தக்காலத்ல மனுஷாள்ளாம் மாப்பிள்ளைய,  கிராம சந்தையிலே  மாடு வாங்கறா மாதிரி, வாங்க மாட்டா! இங்கிதம் தெரிஞ்சவா.     

 அதுனால  அவன்  சொல்ற   "அபிவாதயே" மூலமா,  அவன்  பேரு அவன் இன்ன கோத்ரம், இன்ன சூத்ரம், இன்னார் பையன்   ன்னு தெரிஞ்சுண்டு, பொண்ணைக் குடுக்கலாமா? வேணாமா?ன்னு முடிவு பண்ணுவா. நானோ சன்யாசி. எனக்கு பொண்டாட்டி, பொண்ணு   எதுவுமே  இல்லேயேடா,    ஒனக்குக் குடுக்க. அதுனால அபிவாதயே சொல்றது அவஸ்யம் இல்லியே ஒழிய, தப்பு இல்லே, புரிஞ்சுதா?"
அழகாக அன்பொழுக நடுரோடில் அந்த பையனுக்கு உபதேசம் பண்ணினது நமக்கும் சேர்த்து தான்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...