Thursday, July 28, 2022

AADI FRIDAY

 ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’-

#நங்கநல்லூர்_J_K_SIVAN 

ஆறு மாதத்துக்கொரு தடவை  அற்புதமான வெள்ளிக் கிழமைகள் நமக்கு கிடைக்கின்றன. 
ஒன்று  உத்தராயணத்தில் சூரியன் வடதிசைப் பயணத் தில்  மகர ராசியில் புகும்போது  தை வெள்ளிக்கிழமை கள்.உத்தராயணம்  தேவர்களுக்கு பகல்.
அதேபோல்  தக்ஷிணாயனத்தில்  கடக ராசியில் சூரியன் புகும்போது  ஆடி வெள்ளிக்கிழமைகள்.  ஆனால் ரெண்டுமே  அம்பாளுக்கு  உகந்த நாட்கள் என்பதால்  பெண்கள், சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.தக்ஷி ணாயனம்  தேவர்களின்  இரவு.

தக்ஷிணாயனத்தில்  பிராணவாயு அதிகமாக கிடைக் கிறதாம். விவரம் எனக்கு தெரியாது. இன்னும் தேடவில்லை. ஒன்று நிச்சயம்.  ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள்.  தாவரங்கள் ஜீவன்களுக்கு ஆதாரமான மழை இனிமேல் தான் உருவாகி  ஆதார சக்தியை தருவதால் நிச்சயம் பிராணன் வலுப்பெறும்.வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.  கிராமங்களில்  அம்மனுக்கு கூழ் காய்ச்சி நைவேத்யம் பண்ணி எல்லோருக்கும் ஆகாரம் கிடைக்கும். ஆடி மாசம்  கடைகளில் அதிரடி தள்ளுபடி, கழிவு கொடுப்பதை பற்றி எல்லா பத்திரிகைகளும் தம்பட்டம் அடிக்கும்.

திருமணம் ஆக  ஒளவை நோன்பு என்று கொண்டாடு வார்கள். இந்த நோன்பு நோற்றால்  திருமணம் ஆகும், மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். 

இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள். பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம் இரவு பத்து மணிக்கு மேல் துவங்கும். அச்சமயத்தில் ஆண்கள் யாரும் அவ்விடத்தில் இருப்பதில்லை. பின்னர் ஒளவையார் கதையை வயதான பெண்மணி கூறுவார். ஒளவையை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து இரவைக் கழிப்பர். இதுவே ஒளவை நோன்பு. இந்த வழிபாடு மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றைய  தினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும்.  வீட்டில்  மாவிளக்கு ஏற்றி  பூஜிப்பார்கள். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. 
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்

ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் சக்தி ஸ்தலங்களில்  குடும்பத்தோடு  சென்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.   சென்னையில் மயிலாப் பூரில்  முண்டகக்  கண்ணியம்மன் கோவில் போகவே முடியாத அளவு கூட்டம் சேரும்.  , திருவேற்காடு  தஞ்சாவூர்  மாரியம்மன், சமயபுரம், நார்த்தாமலை, பெரிய பாளையத்தம்மன் கோவில்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

கன்னியா குமரி, திருவானைகாவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய ஸ்தலங்களில் ஆடி வெள்ளி கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.

ஆலயங்களில்  அம்பாளுக்கு  சந்தனக் காப்பு அலங் காரம்.  கண்டு தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகை யை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.‘  அஷ்ட லக்ஷ்மிகளுக்கும் பூஜை நடக்கும். அருள் ஆசி தேடுகிறோம்.ஆடிமாதம் 18ம் தேதி  ஆடிப்பெருக்கு  ஒரு சிறப்பான குதூகல நாள். அது பற்றி தனியாக எழுதுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...