பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
பக்தி தானாக கனியும்
மற்ற யாருக்கும் இல்லாத ஒரு சிறந்த குணாதிசயம் மஹா பெரியவாளிடம் உண்டு. சின்ன குழந்தை முதல் எல்லாம் அறிந்த, உலகத்தையே கரைத்துக்குடித்த பண்டிதர் வரை யார் வேண்டுமானாலும் அவரோடு பேசலாம். ரெண்டு பேருக்கும் அதே கவனத்தைக் கொடுத்து அவர்கள் சொல்வதை குறுக்கிடாமல் கேட்டு மிருதுவாக பதிலைச் சொல்வார். எவர் மனதும் புண் படாது. எனக்கு தான் எல்லாம் தெரியும் என்பது போல அகம்பாவம் கிட்டவே நெருங்க முடியாது அவரிடம்.
காஞ்சிபுரத்தில் அன்று நிறைய பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தார்கள். ஒருவர் ரொம்பநேரம் தயங்கி தயங்கி நிற்பது மஹா பெரியவா எக்ஸ்ரே கண்களுக்கு தெரிந்து அணுக்க தொண்டர் அவரிடம் ஜாடையாக அந்த பக்தரை அருகே வரவழைக்க செய்தார்.
பெரியவா அருகில் வந்து கைகட்டி நின்ற அவரிடம் என்ன விஷயம் என்று கேட்பது போல் ஜாடையாக தலையாட்டினார்.
"பெரியவா ! குழந்தைகளுக்கு பக்தியில் நாட்டம் செல்வதில்லையே. காலம் போகப் போகத் தான் பக்தியின் ருசி கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்குகிறது. வாழ்வில் வரும் அனுபவங்களைப் பொறுத்து, அவர்களின் மனம் கடவுளை நாடத் தொடங்குகிறது. அது வரை பொறுமையுடன் தான் இருக்கணும் இல்லையா? வலுக்கட்டாயமாக பக்திப் பயிரை விதைக்கலாமா? அதால் பலன் அனுகூலமாக இருக்குமா?-- என்று கேட்டார்..*
மஹா பெரியவா புன்னகைத்தார்.
மஹா பெரியவா புன்னகைத்தார்.
"உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கும் பழக்கம் இருக்கா?
''உண்டு பெரியவா, ஒவ்வொருநாளும் அம்மா, அக்கா, ஆத்துக்காரி, யாராவது தயிர்ப் பானையில் மத்தை வைத்து, கயிறு கட்டி இழுத்துக் கடைவாளே..." என்றார்..*
'ஓஹோ அந்த பழக்கம் உண்டா. சரி அவ 'எந்த வேளையில் தயிர் கடைவா.. காலையிலா, மத்தியானமா, சாயங்காலமா, எப்போ ?"*
''விடிகாலையில் பெரியவா *
" மத்தியானம், அல்லது சாயந்திரம் ஏன் தயிர் கடைவதில்லை. ஏதாவது காரணம் தெரியுமா?
பதில் தெரியாமல் திகைத்தார் பக்தர். அருகில் இருந்தோர்களும் பெரியவாளே பதில் சொல்ல காத்திருந்தார்கள்.
''அதிகாலை சுபமான வேளை. அந்த நேரத்தில் வெயில் ஏறாததால் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருக்கும். அப்போது கடைந்தால் வெண்ணெய் பந்தாக திரளும். சூடில்லாமல், உருகாமல் கெட்டியாகவும் இருக்கும்.. சூரியன் ஆகாசத்தில் உக்ரமாகி விட்டால் போச்சு.. வெண்ணெய் திரளாமல், கடையக் கடைய உருகிண்டே போகும் ... "
பெரியவா நிறுத்தி விட்டு எல்லோரையும் பார்த்துவிட்டு தொடர்ந்தார்.
"அது போல தான், வயதான காலத்தில் மனதில் பல சிந்தனைகள் அலை மோதும். அப்போது பக்தி என்னும் வெண்ணெய் திரள்வது கடினம். குழந்தைகளின் மனம் குளிர்ச்சியானது.. அதில் காம, குரோத சிந்தனை இருக்காது.. அப்போது கடவுள் சிந்தனை என்னும் மத்தால் கடைய, பக்தி எனும் வெண்ணெய் சுலபமாகத் திரளும். அதனாலே அப்பா அம்மா வாரம் ஒரு முறையாவது கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போகணும். இந்தப் பழக்கம் குழந்தைகளுக்கு பின்னால் தக்க பாதுகாப்பு அளிக்கும்.. துன்பம் வந்தாலும் கடவுள் அருளால் அது நம்மை பாதிக்காது என்ற சிந்தனை உருவாகும்.. அதனால் பக்திக்கு ஏற்ற வயது குழந்தைப் பருவம் தான்.. புரிகிறதா? பழம் காயிலிருந்து தானாக கனிய வேண்டும். தடியாலே அடிக்க கூடாது. பக்தி குழந்தைகளுக்கு தானாக வளர நாம் பழக்கம் பண்ணனும்.
பக்தரும் மற்றவர்களும் இதயம் கனிந்து, கண்ணீர் மல்க பெரியவா பாதம் பணிந்து நமஸ்கரித்தார்கள் .
பேசும் தெய்வம் என்று நான் தலைப்பு போட்டு மகிழ இது தான் காரணம்.
No comments:
Post a Comment