Thursday, July 21, 2022

BADRAGIRIYAR

 ஒரு ராஜா துறவியானான் - #நங்கநல்லூர்_J_K_SIVAN


வடக்கே உஜ்ஜயினியில் ஒரு பெரிய குப்த ராஜா, ஸமஸ்க்ரித பண்டிதன், வாழ்க்கை வெறுத்து தெற்கே துறவியாக திருவிடை மருதூர் வந்து விட்டபோது அவன் தமிழ் நன்றாக எழுத படிக்க தெரிந்து கொண்டான். தன்னுடைய இயற்பெயரான பர்த்ருஹரி என்பது பத்திரகிரியார் என அறியப்பட்டது.. அவன் செய்த பாக்யம் அவனுக்கு திருவிடைமருதூரில் பட்டினத்தார் குருவானார். பத்திரிகிரியின் எண்ணங்களின் சாயல் குருவின் எளிய தத்துவ வார்த்தைகள் போலவே அவனது புலம்பலில் வெளிப்படுகிறது.
நமக்கு நல்ல தத்வ விஷயங்கள் யார் மூலமாகவேனும் வரட்டும். பெயரா முக்கியம்?. முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலிகான், எர்னஸ்டோ குவாரா, கெய்சர் வில்லியம், பெனிட்டோ முசோலினி இந்த பெயர்கள் நமக்கு தெரியும். இந்த பெயர்களில் இதற்கு மேல் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? பெயர் முக்கியமில்லை.

ராஜா பர்த்ருஹரி ராஜா கந்தர்வசேனனின் முத்த மகன். உஜ்ஜயினி ராஜ்யத்தை ''இந்தா, நீ தான் ராஜா இதற்கு' என்று தந்தவன் இந்திரன். தாரா என்ற தேச அரசனும் சேர்ந்து தந்தது தான் உஜ்ஜயினி, அதற்கு ராஜாவாக பர்த்ருஹரி ஆண்டு கொண்டிருந்தபோது ஒருநாள் ஒரு துறவி கையில் ஒரு பழத்தோடு வந்தார்.
''மஹாராஜா இந்தாருங்கள், இது ஒரு தேவலோக பழம். கற்பக விருக்ஷத்தில் இருந்து கிடைத்தது. கேட்ட தெல்லாம் கொடுக்கும் விருக்ஷம் கற்பக விருக்ஷம் அல்லவா? அதன் இந்த பழத்தை நீங்கள் உண்டால் நீண்ட காலம் மரணமின்றி இளமையோடு உயிர் வாழ்வீர்கள்''.
பர்த்ருஹரி அநங்கசேனா, என்றும் பிங்கள ராணி என்றும் பெயர் கொண்ட தனது ஆசை மனைவிக்கு அந்த பழத்தை கொடுத்து '' என் ராணி என்றும் இளமையோடு நீண்டகாலம் வாழ்ந்து என்னை மகிழ்விக்க நீ இந்த பழத்தை சாப்பிடு'' என்று கொடுத்தான். ஆனால் இங்கே கொஞ்சம் கதை இடிக்கிறது. அந்த இளைய ராணிக்கு மஹிபாலன் எனும் ராஜாவின் குதிரை லாய காவலன் மேல் கள்ளக் காதல்.
''என் அன்பே இது உனக்கு சேரவேண்டிய சிரஞ்சிவி பழம். நீ மரணமின்றி இருந்தால் அதுவே எனக்கு சுகம் என்று ராணி குதிரை லாயக்காரனுக்கு பழத்தை தந்தாள். கதை அதோடு முடிந்தாள் நமக்கு பத்திரகிரியார் கிடைத்திருக்க மாட்டாரே.
இந்த பழக்கதை ஒரு பழங்கதை, பழத்தைப் போலவே சுவையான சிரஞ்சீவி கதை. மஹிபாலன் எனும் குதிரை லாயக்காரனுக்கு வெகு காலமாக லேகா என்கிற அரண்மனை தாதியிடம் இழந்துவிட்டான் . அவள் காதலைப் பெற இந்த பழம் உதவ ''மேலே சொன்ன டயலாக் இங்கே இடம் மாறுகிறது. லேகா என்ற அந்த தாதிக்கு தனது எதிர்காலம் தாதியாகவே முடிந்து போகாமல் ஒருநாள் உஜ்ஜயினிக்கே ராணியாக வேண்டும் என்று ஆசை, கனவு. ஆஹா , இந்த பழம் அந்த ஆசை நிறைவேற நல்லதாக ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது. வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ராஜா பர்த்ருஹரியை நெருங்கி சிசுருஷைகள் செய்வாள். எப்படியாவது ராஜாவின் மனதில் இடம்பிடித்து அவன் சிம்மாசனத்தில் ஒட்டிக் கொள்ள திட்டம். நல்ல சமயத்தை நழுவ விடலாமா? பர்த்ருஹரியிடம் பழத்தோடு சென்றாள் .
'லேகா, என்ன விஷயம் எதற்கு என்னை சுற்றுகிறாய்?'''
''மஹாராஜா, உங்கள் மேல் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் ப்ரேமையும் நான் கொண்டவள் என்று நிரூபிக்க இன்று எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது?
''என்ன அது ?''
''இந்தாருங்கள், இது ஒரு தேவலோக பழம், கற்பக விருக்ஷம் தந்தது. நீங்கள் மனதில் நினைத்ததெல்லாம் இதை சாப்பிட்டால் நிறைவேறும், நீண்ட ஆயுளும் சம்பவிக்கும்''
பழத்தைப் பார்த்ததுமே பர்த்ருஹரிக்கு தலை சுற்றியது, அதிர்ச்சியில் திடுக்கிட்டான். வெளியே காட்டிக்கொள்ளாமல் பேசினான்;
''ஓஹோ. இதை யார் உனக்கு கொடுத்தது?''
''இது எனக்கு தானாகவே பூஜையில் கிடைத்தது?''

பர்த்ருஹரிக்கு புரிந்துவிட்டது. கோபம், அருவருப்பு, வெறுப்பு, ஏமாற்றம் ஆத்திரம், எல்லாமே அவன் மனதை நிரப்பியது. ராணியை கூப்பிட்டு அனுப்பினான்''
அநங்கசேனையை விசாரிக்கும் விதத்தில் விசாரித்தான். மஹிபாலன், தாதி என்று அனைவரும் உண்மை யைக் கக்கினார்கள். .
அநங்க சேனை, மஹிபாலன் இருவரும் தலையை இழந்தார்கள். மனைவியின் துரோகத்தை தாங்க முடியாத பர்த்ருஹரி, அரசாங்கம், ஆட்சி, ராஜ்யம் எல்லாவற்றையும் வெறுத்தான். துறவறம் பூண்டான். தனது தம்பி விக்ரமாதித்தியனை ராஜாவாக் கினான். விக்ரமாதித்தன் வேதாளம் கதைகளை இன்னொரு சமயம் சொல்கிறேன்.
பர்த்ருஹரி துறவியாகி அவன் வாயிலிருந்து நிறைய நீதி வாக்கியங்கள் கவிதையாக வந்தன. அவையே சுபாஷிதம், இதில் நீதி சதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்று முன்னூறு ஸ்லோகங்கள். அதெல்லாமும் மீண்டும் எழுதுகிறேன்.

பர்த்ருஹரி தெற்கே வருகிறான், தமிழ் பேச எழுத கற்று, பட்டினத்தார் சிஷ்யனாகிறான், திருவிடை மருதூர் சிவன் கோவில் வாசலில் அமர்கிறான். கையில் ஒரு திருவோடு, அருகே ஒரு நாய். அவன் மனைவி அநங்கசேனா தான் அடுத்த பிறவியில் நாயாக பர்த்ருஹரியின் பின்னே அலைகிறாள்.

ஒரு நாள் ஒரு ஆண்டி பட்டினத்தாரிடம் யாசகம் கேட்க அவர் ''நானே ஒரு ஆண்டி, உனக்கு கொடுக்க என்னிடம் என்ன இருக்கிறது, நேராக அடுத்த வாசலுக்கு போ அங்கே ஒரு செல்வந்த குடும்பஸ்தன்
அமர்ந்திருப்பார் அவரிடம் கேள் '' என்று அனுப்ப அவன் பத்ரகிரியாரிடம் வந்து யாசகம் கேட்கிறான்

''அப்பனே, நானும் உன்னைபோல ஒரு பிச்சைக்காரன் தான். இங்கேயே இரு எனக்கு கிடைப்பதை உனக்கு தருகிறேன்''
''இல்லையே சுவாமி, அடுத்த வாசலில் இருக்கும் சாமியார் நீங்கள் ஒரு செல்வந்தர் என்று சொன்னாரே ''
''என்னையா என் குருநாதர் பட்டினத்தார் செல்வந்தன் என்று சொன்னார்.? என்ன காரணம்?

பத்ரகிரி யோசித்தார். ஓஹோ என்னிடம் இந்த உலகத்தில் இணைந்திருப்பது இந்த திருவோடும் என்னைத் தொடர்ந்து வரும் இந்த நாயும் தானே. இப்போதே அந்த செல்வங்களையும் விட்டு விலகுகிறேன்''

பத்திரகிரியார் திருவோட்டை வீசி நாயின் மீது எறிகிறார். அது நாயின் மண்டையில் பட்டு நாயும் இறக்கிறது. திருவோடும் உடைந்து சில்லாகி பத்திரகிரியார் ஒரு வித பந்தமும் இல்லாமல் சுதந்திர மாகிறார்.
ஐஸ் க்ரீம் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டால் ருசிப்பது போல் ராஜாவின் அருமையான "தேடல்கள்" நம்மை மகிழ்விக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக பத்திரகிரியார் புலம்பல் தருகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...