கோவில்களுக்கு போவோம். - நங்கநல்லூர் J K SIVAN
பழைய ராஜாக்கள் கோவில்களை பெரிதாகக் கட்டி அருங்கலைகளை வளர, சிறக்கச் செய்தார்கள். பக்தி, தேக ஆரோக்யம், ஒழுக்கம், தர்மம், தானம், கலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் வளர பல பண்டிகைகள் அங்கு கொண்டாடப்பட, பல பிரசங்கங்கள், இசை இயல் நாட்டிய நிகழ்வுகள் நடக்க, கல்வி பெரிதளவு வளர்ந்து பரவ, கோவில்கள் வசதியாக, பெரிதாக, தாராளமாக பலர் அமர்வதற்கான மண்டபங்களோடு
கட்டப்பட்டன. எத்தனையோ சித்தர்கள், மஹான்கள் பலர் அங்கே மக்களை நல்வழிப்படுத்தி, வாழ்வு மேன்மை யுறச் செய்து ஞானம் புகட்டினார்கள். கம்பர் அருணகிரிநாதர், சைவ சமயக்குரவர்கள், ஆழ்வார்கள் போன்றவர்கள் இயற்றிய தெய்வநூல்கள் அங்கே தான் உருவாயின.
கோவில்கள் கூட்டுப் பிரார்த்தனைக்கும் பொதுநல, ஒற்றுமைக்கும் பெரிதும் உதவுபவை. அன்றும் இன்றும் என்றும்.
கோவிலுக்கு செல்வதால் உள்ளும் புறமும் சுத்தமாக இருக்கும் பழக்கம் உண்டாகும். தெய்வங்களின் சந்நிதிகள் ஒரு விசேஷ உணர்வளித்து உடலையும் உள்ளத்தையும் , ஆரோக்யமாக, புத்துணர்ச்சி பெற உதவுபவை. காக்கும் சக்தி கொண்டது.
அவரவர் பாரம்பரிய கலாச்சாரம் பின்பற்ற, திருமண், திருநீறு, துளசி, வில்வ மாலைகள், ருத்திராக்ஷம் தரிக்கும் குலாச்சார பண்பாடுகள் தலை முறை தலைமுறையாக பழக்கத்தில் வந்தது.
சிவாலயங்களில் நந்திதேவரை வணங்கி உத்தரவு பெற்று உள்ளே சென்று வழிபட்டார்கள். வைணவ ஆலயங்களில் கருடர் முதலில் அவ்வாறு வணங்கப்படுகிறார்.
மன உறுதி, வைராக்கியம், புலன்களை கட்டுப்படுத்துவது எல்லாம் கோவில்களில் நமக்கு எளிதாகும்.
கோவில்களில் மக்கள் ஒருவரை ஒருவர் வணங்குவதோ, வம்பு பேசுவதோ குறைகிறது. திருநீற்றை பிரசாதங்களை, மலர்களை, கால் படும்படி போடுவது பாபம்.
ப்ரஹாரங்களில் சுற்றும்போது ஒருவர் மேலும் இடிக்காமல் கோஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டு மெதுவாக இறை சிந்தனையோடு தியானம் செய்து கொண்டு நடக்கவேண்டும். பிரதோஷ காலங்களில் பிரஹாரம் சுற்றுவது சோமசூக்த ப்ரதக்ஷிணம் என்ற முறைப்படி தான் நடக்கவேண்டும். அதை விவரமாக பிறகு கூறுகிறேன்.
அதேபோல் சண்டிகேஸ்வரர், சண்டேஸ்வரர் முன் நின்று அனுமதி பெற்று கையை உதறிவிட்டு ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை என்று காட்டிவிட்டு விடைபெறவேண்டும். கைதட்டுவது தப்பு. சிவ சொத்து குல நாசம் என்பது இன்னும் பலர் உணரவில்லை. அனுபவம் உணர்த்தும்.
கோவிலை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். கோயிலுக்குள்ளேயே பிரசாதம் சாப்பிட்டு இலையை கண்ட இடத்தில் தூக்கி எறிவது பாபம் .
தினமும் கோவில் செல்லமுடியாவிட்டால் வாரம் ஒருநாளாவது குடும்பத்தோடு, குழந்தைகளோடு செல்லலாம். செல்லும் பழக்கம் இனியாவது வரட்டும். பக்தி என்பது இரும்பு காந்தத்தோடு
ஒட்டிக்கொள்வது போல் மனத்தை இறைவனோடு இணைக்கும், அதற்கு உதவுவது கோவில்.
No comments:
Post a Comment