Sunday, July 10, 2022

SORROW OF GOPIS


உனைக் காணாத கண் ஒரு கண்ணா! -  நங்கநல்லூர்  J K  SIVAN 


கோபிகளின் துயரம்  -  1 - 3 ஸ்லோகங்கள் 

என்ன ஆச்சர்யம் இது?.  ஊரில் யாருமே  இல்லையா?  எல்லோரும் இங்கே யமுனை ஆற்றின் கரையில் வரிசையாக நிரம்பி அமர்ந்திருக்கிறார்களே?  யாருமே சந்தோஷமாக இல்லையே?,  யமுனை ஆற்றில் ஓடும் நீரை விட இங்கே அவர்கள் கண்களில் வெள்ளம் அதிகமாக காண்கிறதே.    ஏன்? எதற்கு இந்த சோகம்?

பின்னே  இருக்காதா?  கிருஷ்ணன்பிருந்தாவனத்தை விட்டு புறப்படும் நேரம் வந்துவிட்டது. அக்ரூரர்  தேரில் வந்து காத்திருக்கிறார். நந்தகோபன் வீட்டைச்  சுற்றி பெரிய கும்பல். எல்லோரும் கிருஷ்ணனைப் பார்க்க அங்கே வேறே திரண்டு இருக்கிறார்கள்.  நிறைய பேரின் ஒரே  கேள்வி,  ''கிருஷ்ணன் எப்போது திரும்பி பிருந்தாவனம்  வருவான்?''

உண்மையில் இந்த கேள்விக்கு  பதில் கிருஷ்ணனுக்கே தெரியாது.   அவனுக்கே உள்ளூர ஒரு சந்தேகம், இனி நாம் இங்கே  வருவோமா?

ஆற்றங்கரை வழியாக தான் கண்ணன் தேரில் மதுராவுக்கு போவான். ஆகவே இங்கே அவனைப் பார்ப்போம், விடைகொடுப்போம். முடிந்தால் பிடித்துக் கொள்வோம்.

 கண்ணனை விரும்பி கோபிகள் அழுது கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்?  யமுனா தேவி நீ  யாவது கொஞ்சம் கண்ணன் மனதை மாற்றேன்?அவனோடு விளையாடியது, அவன் குறும்பு பேச்சு, அவன் ஆட்டம் பாட்டங்கள்  எல்லாமே  கோபியர் மனதில் படமாக ஓடுகிறது.

''கண்ணையா , எங்கள் மேல் கருணை இல்லையா உனக்கு. பேசாமல்  இங்கேயே இருந்துவிடு''
உன் மோஹனப்புன்னகை மனதில் பதிந்துவிட்டது.  கல் நெஞ்சக்காரா,உன் காந்தவிழிகள் எங்களை அடிமையாக்கிவிட்டதே.  கருத்த சுருண்ட கேசங்கள் முகத்தில் ஆட, அவற்றை ஒதுக்கிவிட்டுக்கொண்டு உடலெல்லாம்  பசுக்களோடு ஓடி ஆடியதில் புழுதி வர்ணம். வெறும் காலோடு காட்டில்  எங்கள் பசுக்களோடு எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம்  ஓடியவன் நீ.

இதெல்லாம் கோபியர் ஏக்கங்கள். கண்ணன் பிரிவை தாங்கமுடியாத கோபிகளில் சோக கீதம் தாம் ஸ்ரீமத் பாகவதத்தில்  பத்தாவது காண்டத்தில் தசமஸ்காந்தத்தில்  31வது  அத்தியாயமாக வேத வியாசர் வடித்திருக்கிறார். 19  ஸ்லோகங்கள். அவற்றை இனி பார்க்கலாம்.

गोप्य ऊचु:    
जयति तेऽधिकं जन्मना व्रज:  श्रयत इन्दिरा शश्वदत्र हि ।
दयित द‍ृश्यतां दिक्षु तावका- स्त्वयि धृतासवस्त्वां विचिन्वते ॥ १ ॥
gopya ūcuḥ
jayati te ’dhikaṁ janmanā vrajaḥ śrayata indirā śaśvad atra hi
dayita dṛśyatāṁ dikṣu tāvakās tvayi dhṛtāsavas tvāṁ vicinvate

கிருஷ்ணா, நீ வந்து பிறந்தாலும் பிறந்தாய், இந்த வ்ரஜ பூமியே லக்ஷ்மிகரமாக களை  கட்டி ஆனந்த  வைகுண்டமாகி விட்டதடா.  அதிர்ஷ்ட தேவதை  இங்கே குடி வந்து விட்டதடா!
எங்கேடா  ஒளிந்துகொண்டிருக்கிறாய், வாடா எதிரே. உனக்காக தான் ஒவ்வொருவரும் மூச்சைப் பிடித்துக்  கொண்டு எப்படியாவது உன்னோடு  நெடுநாள் பிருந்தாவனத்தில் வாழ விரும்புகிறோம். வாழ்கிறோம்.   எங்கள் உயிர் மூச்சே  நீ தானப்பா.  

நீ அதிசய சிறுவன், அழகன், கண்ணைப்பறிக்கும்  கருநிற வண்ணன்,  கண்ணன் என்ற பெயர் கொண்டவனே.   அன்பு பாசம் ப்ரேமை ஒன்றே  இயல்பாக  கொண்டு  பக்தர்களை  பராமரிப்பவனே, பயத்திலிருந்து காப்பவனே.

शरदुदाशये साधुजातसत्- सरसिजोदरश्रीमुषा द‍ृशा ।
सुरतनाथ तेऽशुल्कदासिका वरद निघ्नतो नेह किं वध: ॥2 ॥

śarad-udāśaye sādhu-jāta-sat-sarasijodara-śrī-muṣā dṛśā
surata-nātha te ’śulka-dāsikā vara-da nighnato neha kiṁ vadhaḥ

கண்ணா, உன்னைக் காணாமல் வாடும் எங்கள்  நிலையை எண்ணிப்பார்த்தாயா? அன்றலர்ந்த தாமரை மலர்களை பார்க்கும்போதெல்லாம் உன் கருவிழிகளாகவே  எங்களுக்கு அவை காட்சி தருகிறது. என்ன அழகு எவ்வளவு காந்த சக்தி அவற்றுக்கு! உன் கடைக்கண் பார்வைக்கு ஈடு உலகமே போதாதே. உள்ளம் கொள்ளை கொள்ளும் அவற்றின் சக்திக்கு முன்பு வேறு எது இருக்கிறது?  சாதாரண ஒருமறியா கோபிகள் எங்களை இப்படி இரக்கமில்லாமல் நீ வதைக்கலாமா?

विषजलाप्ययाद् व्यालराक्षसाद् वर्षमारुताद् वैद्युतानलात् ।
वृषमयात्मजाद् विश्वतो भया-दृषभ ते वयं रक्षिता मुहु: ॥ ३ ॥

viṣa-jalāpyayād vyāla-rākṣasād varṣa-mārutād vaidyutānalāt
vṛṣa-mayātmajād viśvato bhayād ṛṣabha te vayaṁ rakṣitā muhuḥ
viṣa-jalāpyayād vyāla-rākṣasād

ஒன்றா இரண்டா  எடுத்துச் சொல்ல?  எத்தனை ஆபத்துகளிலிருந்தெல்லாம் எங்களை நீ காப்பாற்றியவன். ஒன்றிரண்டு மட்டும் சொல்லட்டுமா?  அருமையான தெளிந்த நீரோடையாக குடிநீராக அம்ருதமாக இருந்த  காளிந்தி நதியை கொடிய விஷமாக மாற்றி  எத்தனையோ உயிர்களை பலி கொண்ட காளிங்கனிடமிருந்து காப்பாற்றி அவனை விரட்டியடித்தாய். அகா சூரன் பெரிய  சர்ப்பமாக வந்து விழுங்கியபோது  அவன் குடலைக் கிழித்து கொன்றவ னல்லவா நீ? இந்திரன் கடுங்கோபம் கொண்டு ஏழுநாட்கள் அடாது மழை விடாது  பெய்தபோது  இந்திரன் எல்லோருக்கும் ஜலசமாதி எழுப்ப முனைந்தபோது அவன் சீற்றத்தை அடக்கி, கோவர்தனகிரியை குடையாக பிடித்து சகல உயிர்களையும் காப்பாற்றியவன் நீ,   நீ மறந்து போனாலும்  நாங்கள் மறக்க முடியுமா? காற்றாக வந்து சுழன்று வீசி  வேரோடு எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு  அழித்த  த்ருணாவர்த்தனின் மூச்சுக்காற்றை, பிராணனை, நிறுத்திக்  கொன்றவன் நீ, அரிஷ்டாசுரன் கூரான கொம்புகளோடு பலமிக்க  காளையாக வேகமாக ஓடி  கொல்ல வந்த போது அவனை நொடியில் அழித்தவன் நீ. வியோமாசுரன்  வந்த  வழியே சென்று  மரணத்தைத் தழுவ செய்தவன் நீ.  எல்லோரையும் ரக்ஷிக்கும் ,கிருஷ்ணா, தயாமூர்த்தியே,  எங்கள் பயம் போக்க வந்தவனே. தாய் போல் காத்த தயாநிதி. உன்னைவிட்டு எங்களால் எப்படி பிரிந்து வாழமுடியும்?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...