Thursday, July 14, 2022

GOPIKAS' SORROW

 

உனைக் காணாத கண் வேண்டாம் கண்ணா -                                   நங்கநல்லூர்  J K  SIVAN        


கோபிகளின் துயரம்  - 16- 19 ஸ்லோகங்கள்

पतिसुतान्वयभ्रातृबान्धवा-नतिविलङ्‌घ्य तेऽन्त्यच्युतागता: ।
गतिविदस्तवोद्गीतमोहिता: कितव योषित: कस्त्यजेन्निशि ॥ 16 ॥

pati-sutānvaya-bhrātṛ-bāndhavān ativilaṅghya te ’nty acyutāgatāḥ
gati-vidas tavodgīta-mohitāḥ kitava yoṣitaḥ kas tyajen niśi

கிருஷ்ணா,   நாங்கள் எல்லோருமே  கூட்டுக்  குடும்பங்கள் என்று உனக்கு தெரியும்.  இருந்தும்  எப்படி உன் வசப்பட்டோம்? எங்கள் அன்பான கணவன்மார்கள், குழந்தைகள், வீட்டிலுள்ள  பெரியவர்கள், சகோதர சகோதரிகள்  மற்றும் உறவினர் எத்தனையோ பேர்,   அவர்கள் எல்லோரையும்  பற்றி துளியும் கவலைப் படாமல் உன்னைக் காண வேண்டும்,உன்னோடு இருக்க வேண்டும்  என்ற  உந்துதலில், ஒரே நோக்கத்தில் போட்டது போட்டபடி உன்னைத் தேடி ஓடி வந்துவிடுகிறோமே. அச்சுதா? நாங்கள் ஏன் உன்னைத் தேடி வருகிறோம் என்று உனக்குத் தெரியாதா?  வண்டுகள் பூவை எதற்கு நாடுகிறது?  ஈக்கள்  வெல்லத்தை ஏன் கூட்டமாக  மொய்க்கிறது? உன்மேல் உள்ள பாசம், நேசம் பிரேமை எங்களை மதியிழக்கச் செய்கிறது என்பது  நீ அறிந்த உண்மை.  உன் வேணுகானத்திற்கு ஏதோ ஒரு மந்திர சக்தி உள்ளது. அது செவியில் நுழைந்த மறு  வினாடி எங்களை நாங்கள் மறந்துவிடுகிறோம். கால்கள் எங்களை அறியாமல் உன்னை நோக்கி நடக்கிறது, ஓடுகிறது. ஏமாற்றுக்காரா, எங்களை விட்டுச் செல்லாதே.

रहसि संविदं हृच्छयोदयं  प्रहसिताननं प्रेमवीक्षणम् ।
बृहदुर: श्रियो वीक्ष्य धाम ते मुहुरतिस्पृहा मुह्यते मन: ॥ 17 ॥

rahasi saṁvidaṁ hṛc-chayodayaṁ prahasitānanaṁ prema-vīkṣaṇam
bṛhad-uraḥ śriyo vīkṣya dhāma te muhur ati-spṛhā muhyate manaḥ

கண்ணா,  நீ தெய்வீக அழகன். உன்னோடு பழகப்  பழக , பேசப்பேச, பார்க்கப்  பார்க்க  எங்கள் மனதில் வெள்ளம்போல்  விருப்பம், ஆர்வம் ஆசை பெருகுதடா. உன்  கள்ளப்பார்வை,  மோஹனப்புன்னகை, சாதுர்ய பேச்சு,  அழகிய வதனம், கம்பீரம், திருவுடை மார்பு,  அனைத்தும்  எங்களை கொள்ளைகொண்டு  உன்னோடு பிணைத்துவிட்டது.
உன்னைத்தவிர வேறு சிந்தனை மனதில் இல்லை. . நீ பேசின பேச்செல்லாம் திரும்ப திரும்ப நினைவலை களாக வந்து கொண்டே இருக்கிறது.  இனி உன்னைப் பார்க்கமுடியாது என்ற எண்ணமே எங்களைச்  சித்ரவதைப் படுத்தி சின்னா பின்னமாக்குகிறது

व्रजवनौकसां व्यक्तिरङ्ग ते वृजिनहन्‍त्र्यलं विश्वमङ्गलम् ।
त्यज मनाक् च नस्त्वत्स्पृहात्मनां स्वजनहृद्रुजां यन्निषूदनम् ॥  18 ॥

vraja-vanaukasāṁ vyaktir aṅga te  vṛjina-hantry alaṁ viśva-maṅgalam
tyaja manāk ca nas tvat-spṛhātmanāṁ sva-jana-hṛd-rujāṁ yan niṣūdanam
 
எங்கள் மனத்தில் எத்தனையோ போராட்டம். அவை எல்லாவற்றையும்  ஜெயித்து, விரட்டி, உன் திவ்ய சுந்தர ஸ்வரூப  எண்ணம் ஒன்றே இந்த வ்ரஜபூமியில் எல்லோர்  துயரத்தையும், கஷ்டங்களையும் போக்கும் சக்தி கொண்டதாக இருக்கிறது.  கிருஷ்ணா,  நீ அளவில்லாத ஒரு அதிசயமடா! உன்னோடு நிழலாக  சேர்ந்தே இருக்க மனம் துடிக்கிறதடா. இது தான் எங்கள் நோய். வியாதி. எங்கள் எல்லோரையும் தொற்றிக் கொண்டிருக்கும் வியாதி.  அதற்கு  நீதான்   டாக்டர். மருத்துவர். இந்த நோய்க்கு மருந்தே நீ தான். நீ வா வந்து குணப்படுத்து.

यत्ते सुजातचरणाम्बुरुहं स्तनेषु  भीता: शनै: प्रिय दधीमहि कर्कशेषु ।
तेनाटवीमटसि तद् व्यथते न किंस्वित् कूर्पादिभिर्भ्रमति धीर्भवदायुषां न: ॥ 19 ॥

yat te sujāta-caraṇāmburuhaṁ staneṣu bhītāḥ śanaiḥ priya dadhīmahi karkaśeṣu
tenāṭavīm aṭasi tad vyathate na kiṁ svit kūrpādibhir bhramati dhīr bhavad-āyuṣāṁ naḥ

ஒரிஸ்ஸாவில்  பூரி ஜெகநாதர் ஆலய ரத உத்சவ சமயம்.  ஸ்ரீ சைதன்ய மஹா பிரபு  ஜெகநாதனை தரிசிக்க வந்தபோது அந்த ஊர் ராஜா பிரதாப ருத்ரன் அவரை அழைத்து உபசரித்து காலைப்  பிடித்து விடும்போது  ஸ்ரீமத் பாகவத  பத்தாவது காண்ட,( தசமஸ்கந்தம்)  31 வது அத்யாய 19 ஸ்லோகங்களையும்  -- கோபிகைகள் துயர கீதம் --   பாடுகிறான்.    சைதன்யர்  இதைக் கேட்டு  எழுந்து ஆனந்தமாக  ராஜாவைக் கட்டிக் கொள்கிறார்.  அவர் கோபியாக மாறிவிட்டார், ராஜா கிருஷ்ணனாக மாறிவிட்டான்.!! இந்த சம்பவம் சைதன்ய சரிதாம்ருதம்   நூலில் வருகிறது.

மேலே சொன்ன 19வது கடைசி ஸ்லோகம் அர்த்தம்:
கண்ணா,   உன் தாமரைத் திருவடிகள்  ம்ருதுவானவை, மென்மையானவை, பூவிதழ் போன்றவை. அவற்றை எங்கள் மார்பில், நெஞ்சில், ஹ்ருதயத்தில் பதிக்கும்படி செய்.  நாங்கள் உன்னைச் சுமக்கிறோம்,  எங்கள் ஜீவாதாரமே நீ தானே.  எங்கள் மனக்கவலை நீ காட்டில் மேட்டில் எல்லாம் நடக்கும்போது  கூரிய கல், முள்  எல்லாம் குழந்தை உன் காலில் குத்துமே. நீயோ எதையும் லக்ஷியம் பண்ணாமல் ஆடி  ஓடுபவன்..உனக்கு வலிக்குமே!என்ன செய்வதென்றே புரியாமல் குழம்பி இருக்கிறோம்.  நீ தான் தெளிவு படுத்துபவன். வா. 

இந்த பதிவுடன் ஸ்ரீமத் பாகவதம், தசமஸ்காந்தம்  31வது அத்யாயத்தில்  கோபிகைகளின்  கீதம் என்ற தலைப்பிலுள்ள 19 ஸ்லோகங்களும் விளக்கப்பட்டு  நிறைவுபெறுகிறது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...