ஒரு அற்புத ஞானி - #நங்கநல்லூர்_J_K_SIVANசேஷாத்ரி ஸ்வாமிகள்
எச்சம்மா
விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறு பெண் குழந்தையைப் பிடித்து கல்யாணம் பண்ணி வைத்து மருந்து மாத்திரை தடுப்பு ஊசி வசதிகள் இல்லாத காலத்தில் அவள் கணவன் என்ற சிறுவனோ பெரிய வனோ இறந்து கல்யாணம் என்றால் என்ன என்று புரிவதற்கு முன்பே அந்த பெண் தலை சிரைக்கப் பட்டு, சமூகத்தில் ஒரு அபசகுனமாக, துரதிர்ஷ்ட ஸ்வரூபமாக மாற்றி பிறருக்கு உழைத்து எந்த ஆதரவும் இல்லாமல் மறைந்த காலம்.இது பல நூறாண்டுகள் தொடர்ந்தது.
நிறைய குடும்பங்களிலும் இப்படி துர்பாக்யசாலிகள் இருந்த காலம் ஒன்று உண்டு. அப்படி ஒருவள் தான் இளம் வயது துரதிர்ஷ்ட சாலி எச்சம்மா என்கிற லக்ஷ்மி பாட்டி. இப்படி வாழ்ந்தவர்களில் சிலர் துறவு வாழ்க்கை மேற்கொண்டவர்களாக ரமணாஸ்ரமம், காஞ்சி மடம், காசி, ஹரித்வார் என்று சென்று மரணத்தை எதிர் கொண்டு வாழ்ந்தவர்கள். பக்தி மார்கத்தில் துக்கத்தை மறந்து துன்பத்தை விலக்கி சேவை செய்து வாழ்ந்தவர்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் என் சிறு வயதில் பார்த்த வரலக்ஷ்மி அத்தை நினைவுக்கு வருகிறாள். கணவன் ஒரே மகன் இருவரையும் இழந்து வீடு வாசல், படிப்பு, சொத்து எதுவும் அற்ற நிலையில் அனாதையாக எங்கள் வீட்டுக்கு வந்தவள். அவளோடு நிறைய கோயில்களுக்கு நடந்து சென்றிருக்கிறேன்.
திருவண்ணாமலையில் வக்கீல் நரசிங்க ராவ் தனது வீட்டில் வசிக்க எச்சம்மா பாட்டிக்கு ஒரு சின்ன இடம் கொடுத்திருந்தார். சேஷாத்ரி ஸ்வாமிகள் பக்தை அவள்.
ஒருநாள் வீட்டை விட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்த நேரம் பார்த்து அவள் வீட்டு வாசலில் ஸ்வாமிகள் நின்று இருந்தார். அவரை நமஸ்காரம் பண்ணினாள்.
”எச்சம்மா, நீ இந்த வீட்டை விட்டு விட்டு வந்துடு. இங்கே நாய் இருக்கு. துஷ்டர்களும் இருக்கிறார்கள். கோபுரத்துக்கு வந்துடு. அங்கே இருக்கலாம்.”
”ஸ்வாமி, எனக்கு அவ்வளவு பக்குவம் வரலையே. நான் என்ன செய்வேன்? நானோ ஒரு ஸ்த்ரீ. எப்படி கோபுரத்தில் வந்து இருக்கிறது?”
”என்ன சொல்றே நீ. யார் ஸ்த்ரீ?”
ஸ்வாமிகள் விடுவிடு வென்று அங்கிருந்து கிளம்பி விட்டார். எச்சம்மா யோசித்தாள் . ஸ்வாமிகள் சொன்னதுக்கு என்னஅர்த்தம்? புரியவில்லையே ..
தேஹம் ஆத்மா இல்லை. அனாத்மா. எப்படி ஸ்த்ரீ என்றும் புருஷன் என்றும் அது ஆகும்?.சுத்த வஸ்துவுக்கு குலம் , கோத்ரம், ஜாதி, வர்ணம், ஆஸ்ரமம், நாமம், ரூபம் ஏது? ஒரு பிரமையில், பிராந்தியால் , ஆத்மாவின் மேல் சுமத்தப்பட்டது தானே அவை. தேகத்தின் நினைவு இருக்கிற வரை தான் இந்த ஸ்த்ரீ புருஷன் என்கிற எண்ணங்கள் இருக்கும். தேகத்தை மறந்து விட்டால் அதெல்லாம் பறந்து போய்விடும் இல்லையா? ஆத்மாவின் இந்த லக்ஷணத்தை ஸ்வாமிகள் ஒரு வார்த்தையில் உணர்த்தியிருக்கிறார் ”யார் ஸ்த்ரீ?”
இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
''எச்சம்மா உனக்கு தெரியுமா? அத்திக்காயிலே ஈஸ்வரன் இருக்கான்”
இப்படி அவர் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பதை பல பேர் அவர் உளறுகிறார். ஏதேதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகிறவர் என்று தான் எடைபோடுவார்கள். எச்சம்மாவுக்கும் அப்படி தோன்றியிருக்குமோ?
அத்திக்காய் ரவுண்டு உருவம். உடைத்தால் உள்ளே நிறைய பூச்சி புழு இருக்கும். இதை உபமானமாக காட்டி இந்த பிரபஞ்சம் உருண்டை. பிரம்மாண்டம். பகவானுடைய சிருஷ்டி. அதில் உள்ள பூச்சி புழுக்கள் தான் எண்ணற்ற ஜீவராசிகள். பரமேஸ்வரன் தானே அவற்றுள் ஜீவ ரூபியாக இருக்கிறான். வேதத்தில் வரும் ”அநேக ஜீவேன ஆத்மனா ‘ என்று சிருஷ்டி, ஸ்திதி, லய, காரியமாக ஈஸ்வரன் உள்ளிருந்து அருள்கிறான் என்று எடுத்துக் காட்டியிருக் கிறார். அதனால் தான் ”அத்திக்காயிலே ஈஸ்வரன்”.
திருவண்ணாமலையில் ஒருநாள் எச்சம்மா ரமணரை தரிசிக்க சென்றாள், பகவானை தரிசித்தவள் ஒரு மணி நேரம் அங்கே அவர் முன் அமர்ந்தாள். மகரிஷி அவளோடு பேசவில்லை. ஆனால் அந்த ஒரு மணி நேரத்திலும் அதற்கப்புறமும் கூட அந்த ஆஸ்ரமத்தில் அவளுக்கு இதுவரையில் காணாத ஒரு மன நிம்மதி ஏற்பட்டது. அவள் சந்தோஷத்தை அனுபவிக்க தொடங்கினாள். வானில் பறந்தாள் என்று கூட சேர்த்து சொல்லலாம். துன்பத்திலிருந்தும் படமுடியாத துயரத்திலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் விடு பட்டவர் களுக்கு தான் அந்த சுகம் தெரியும், அனுபவம் புரியும்.
ரமணர் முகத்தில் இருந்த ஏதோ ஒரு காந்த சக்தி எச்சம்மாவைக் கவர்ந்து விட்டது. தேனுண்ட நரி சுற்றுவதை போல எச்சம்மா ரமண மஹரிஷி இருந்த விரூபாக்ஷ குகை அருகே காணப்பட்டாள் .
அவளுக்கு என்ன தோன்றியதோ பகவானுக்கு நல்ல மடி சமையல் செய்து, பெற்ற தாய் செல்லக் குழந்தைக்கு அளிப்பது போல் தினமும் கொண்டுவர ஆரம்பித்தாள்.
விரூபாக்ஷ குகை அப்போதெல்லாம் அதிக ஜன நடமாட்ட மில்லாத காடு மண்டிக்கிடந்த மலைமேல் ஒரு இடம். கையில் சாப்பாட்டுக் கூடையோடு மலைமேல் ஏறி செல்வாள் எச்சம்மா.
ஒருநாள் ராமணருக்கு அளிக்க சாப்பாட்டு கூடையோடு சென்றவள் வழியில் மலைமேல் இருந்து கீழே இறங்குபவர்களை பார்த்தாள்.. அநேகர் முகம் ஏமாற்றத்தோடு காணப்பட்டது. .
''பாட்டிமா, எதுக்கு கஷ்டப்பட்டு மூச்சு வாங்க மலை ஏறுகிறே. அங்கே பகவானை குகையில் காணோம். வெகுநேரம் காத்திருந்து தரிசிக்காமல் திரும்புகிறோம்''
''எங்கே போயிடுவார், அங்கே தான் இருப்பார். வாங்கோ எங்கூட நான் காட்றேன்'' எச்சம்மா அவர்களையும் திரும்ப அழைத்துக் கொண்டு மலை ஏறினாள். என்ன மாய மந்திரம் எச்சம்மாவுக்கு தெரியும்?
அவர்கள் முதலில் குகைக்கு சென்றபோது பகவான் ஒரு கோவணாண்டியாக குகைச் சுவரை கற்களை மண்ணில் குழைத்து பூசி சுவர் எழுப்பிக் கொண்டிருந்தார்.
அவர்களுக்கு ரமணரை தெரியாது. பார்த்ததில்லை. ஆகவே அந்த கோவணாண்டியை யாரோ ஒரு வேலையாளாக மதித்து,
''சுவாமி எங்கேப்பா இருக்காரு?'' என்று கேட்டார்கள்.
''எனக்குத் தெரியாதே'' என பதில் சொல்லி இருக்கிறார் பகவான் ரமணர். வெகு நேரம் காத்திருந்துவிட்டு அவர்கள் கீழே இறங்கியிருக்கிறார்கள். இப்போது எச்சம்மாவோடு சென்றபோது அவரைப்பார்த்ததும் திடுக்கிட்டார். ஸ்வாமியையா நாம் சாதாரண வேலைக்காரனாக எண்ணிவிட்டோம்''
அவர்கள் சென்றதும் எச்சம்மா வருத்தத்தோடு பகவானைக் கேட்டாள்
''ஏன் இப்படி பண்ணிட்டேள். பாவம் அவா தெரியாம தானே அப்படிக் கேட்டிருக்கா?''
''என்னை என்ன பண்ணச் சொல்றே நீ. நான் என்ன பண்ணமுடியும். என் கழுத்திலே ஒரு அட்டையிலே ''நான் தான் ரமணா மஹரிஷி'' எழுதி கழுத்திலே தொங்கவிட்டுக்க சொல்றியா?'' என்று சொல்லி சிரித்தார்.
எச்சம்மாள் தன்னிடமிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் பகவானுக்கும் அவரது பக்தர்களுக்கும் உபயோகமாக ஏதாவது செய்வாள்.
ரமணரின் தாய் அழகம்மாள் தன்னுடைய கடைசி காலத்தில், விரூபாக்ஷ குகைக்கு மகனைப் பார்க்க வந்தபோது கூட ரமணர் தன் தாயைத் தன்னோடு தங்க அனுமதிக்கவில்லை .
எச்சம்மா அழகம்மாளை தன்னோடு திருவண்ணாமலை கிராமத்துக்கு கூட்டிச் சென்றுவிட்டாள் . அழகம்மாவால் தினமும் மலைமேல் ஏறி ரமணரை பார்ப்பது சிரமமாக இருந்தது.
''பாவம் அழகம்மா, எல்லாவற்றையும் விட்டுவிட்டு எல்லோரையும் துறந்துவிட்டு மகனைப் பார்க்க இங்கே வந்திருக்கிறாள். அவளை பகவானோடு தங்க அனுமதிக்க கூடாதா'' என்று பகவானுடைய சீடர்களை கேட்டாள் எச்சம்மா.
''அம்மாவானாலும் பெண்கள் எவரையும் இங்கே ஸ்வாமியோடு இருக்க அனுமதிப்பது தவறு இப்போது அம்மாவை அனுமதித்தால் பின்னால் எச்சம்மா நீயோ, மற்றும் ஆஸ்ரமத்தில் உள்ள பெண்களோ அந்த உரிமை கோருவார்களே. அப்புறம் இது என்ன ஆஸ்ரமம்?'' என மறுத்தார்கள் சீடர்கள்.
''அதெப்படி அப்பா சரியாகும். இந்த உலகில் நானோ வேறு எந்த பெண்ணோ அம்மாவாக முடியுமா? அவளுக்கு என்று தனி உரிமை கிடையாதா? நான் இப்போ ஒரு சபதம் எடுத்துக்கறேன். நானோ ஆஸ்ரமத்தில் வேறு எந்த பெண்ணோ பகவானை இப்படி வந்து இருக்க அனுமதி கேட்கமாட்டோம்''
இவர்கள் பேசுவது அனைத்தும் ரமண மஹரிஷி கேட்டுக்கொண்டிருந்தார். அவர் மெளனமாக இருப்பது சீடர்கள் சொன்னதை ஆமோதித்து என்று விளக்கினார்கள் சீடர்கள்.
பகவான் மெதுவாக எழுந்தார், அம்மா அழகம்மாவின் அருகே வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டார். ''வா நாம் வேறு எங்காவது போவோம். நாம் இங்கே தங்குவதில் அவர்களுக்கு விருப்பமில்லை ''
அப்புறம் என்ன. சீடர்கள் பகவான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். அழகம்மா மகனோடு இருப்பதில் ஆக்ஷேபணை எதுவும் இல்லை. கடைசிவரை அம்மா மகனைப் பிரியவில்லை. இந்த பாக்யம் அழகம்மாவுக்கு எச்சம்மாவால் தானே கிடைத்தது.
No comments:
Post a Comment