Sunday, July 17, 2022

PANCHANGAM

 பஞ்சாங்கம்  -  நங்கநல்லூர்   J K   SIVAN 


நான்  ஜோசியன் இல்லை. நாம்  எல்லோருமே  எதிர் காலத்தை  அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

ரொம்ப ஒரு முக்கியமான விஷயம் பற்றிஇப்போது பேசுவோம். 

 நம் ஒவ்வொருவர் வீட்டிலும் காலண்டர் இருக்கிறது. அது இன்னும்  இடம் மாறவில்லை. சுவற்றில் நிச்சயம் தொங்குகிறது. காலம் அதை மாற்றவில்லை. ஆனால் அது காட்டும் காலத்தை நாம் லக்ஷியம் பண்ணுவதில்லை.  காலண்டர் என்றால் மாசம், தேதி, கிழமை என்பதை அறிய மட்டும்  உபயோகிக்கிறோம். காலண்டரில் உள்ள மீதி விஷயங்கள் பஞ்சாங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

பஞ்சாங்கமா? அதுஎதற்கு?  நமக்கு தேவையில்லையே என்று நினைப்பவர்களாகி விட்டோம்.  நிச்சயம் பஞ்சாங்கம் நமக்கு அன்றாட வாழ்க்கையில் அவசியம்.  

தாத்தா பாட்டி சொல்லித்   தந்த சம்பிரதாய சமாச்சாரங்களும் அதில் உண்டு. நிறைய வீடுகளில் இப்போது தாத்தா பாட்டிகளோ பெரியவர்களோ இல்லாத போது இந்த பஞ்சாங்கம் அந்த குறையைத்  தீர்க்கிறது.குடும்ப ஸ்திரீகளுக்கு தெரிந்திருக்க வேண்டிய விஷயம் அதில் நிறைய இருக்கிறது.

முதலில் பஞ்சாங்கத்தை பற்றி  கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டும். 
ஹிந்துக்களுக்கு  பஞ்சாங்கம் ஒரு முக்கிய கையேடு. வரப்பிரசாதம். பிறப்பது முதல், இறப்பது வரை, அதற்குப் பின்னும் நாம் அனுசரிக்க வேண்டிய நியதிகளை, நேம நியமங்களை, சொல்லித்தருவது பஞ்சாங்கம். 
நம் உடல்  பஞ்ச பூத இயற்கையால் அமைவது, அதனுடன் வளர்ந்து மாறுவது, அதனிலே ஐக்யமாவது.எனவே இயற்கையை அறிந்துகொள்ள பஞ்சாங்கம் அவசியம்.

பஞ்சாங்கம் காலம் நேரம் காட்டும் அட்டவணை மட்டும் அல்ல. நமது செய்கைகளை, எண்ணங்களை நேர் படுத்த சீராக்க உதவும் ஒரு அத்யாவசிய கருவி. சம்பிரதாயங்கள், முக்கிய நாட்கள், கிரஹணம், அமாவாசை, பௌர்ணமி, திதி, நக்ஷத்திரங்கள் மாதங்கள் தவிர பண்டிகை, கர்மானுஷ்டான மந்த்ரங்கள், சுப முகூர்த்த நேரங்கள்  சகுனங்கள்  அறிய உதவும் ஒரு வசதியை  பஞ்சாங்கம் தரும். 

வீட்டில் டாக்டரைத் தேடாத  தொந்தரவு பண்ணாத,  பேசாத, அதிகாரம் பண்ணாத, பாட்டி தாத்தா  தான்  பஞ்சாங்கம்.
பழங்காலத்தில்  அச்சடித்த பஞ்சாங்கம் கிடையாது.  பெரியவர்கள் மனக்கணக்கில் இந்த நாள் இந்த தேதி, இந்த திதி, நக்ஷத்ரம் மாசம், என்று சொல்வதை வைத்து தான் அனுஷ்டானங்கள் நடந்தது.  இதை  வீடு வீடாக சென்று சொல்லும் பிராமணர்கள்  பஞ்சாங்க பிராமணர்கள் என்று உபசரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வாத்யார்  இப்படியுண்டு.  சில  லௌகீகர்கள் தாமாகவே இதெல்லாம் தெரிந்து கொண்டு அடுத்தவர்களுக்கு சொல்வார்கள். 

கிராமத்தில்  வாரம் ஒருநாள் அல்லது பத்து நாளைக்கு,   ஒரு மாசத்துக்கு ஒரு  தடவை  வாத்யார்  வந்து ஏதாவது ஒரு  வீட்டின் திண்ணையில் வந்து உட்கார்வார்.  தெருவே  அங்கே ஓடி  வந்துவிடும். அவரவர் வீட்டில் என்றைக்கு  திதி, ஸ்ராத்தம் , எது நல்ல நாள்,எப்போ  கிரஹணம்,  என்னிக்கு   பிறந்தநாள்  நக்ஷத்ரம்,, அமாவாசை  பௌர்ணமி என்று கேட்டு  அவர் பஞ்சாங்கம் பார்த்து சொல்வார்.  அதை  அவர்கள்   வீட்டில்  சுவற்றில் கரியில் எழுதி  வைத்துக் கொண்ட  டயரி இல்லாத காலம்.

இப்போது  நமது  தேசம் முழுதும் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்த பஞ்சாங்கம் பயன்படுகிறது. பஞ்சாங்கங்கள் பல சாஸ்த்ர விற்பன்னர்களால் கணிக்கப்பட்டு பல குடும்பங்கள் அவரவர் விரும்பும் பஞ்சாங்கங்களை உபயோகிக்கிறார்கள்.  பாம்பு பஞ்சாங்கம், திரிகணித பஞ்சாங்கம், கேரள பஞ்சாங்கம் என்றெல்லாம் நிறைய இருக்கிறது. 

பஞ்சாங்கம் கணிப்பது எளிதல்ல, மிகவும் சூக்ஷ்மமாக கவனமாக கணிக்கவேண்டியது. கிரஹங்களின் சுழற்சி, அவற்றின் சுற்று, பிரயாணம், அதற்கான காலம், சூரிய உதயம், அஸ்தமன நேரங்கள் எல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்கூட்டியே சரியாக கணக்கில் கொண்டுவரும் கணித நூல். பண்டைய ரிஷிகள் ஆராய்ந்து வகுத்த வழிமுறையில் தொடர்ந்து கண்காணித்து அறிவிக்கும் அற்புத படைப்பு.

விஸ்வ விஜய பஞ்சாங்கம் என்பது நூறு வருஷங்களுக்கு கணிக்கப்படுவது. இதில் சூரிய சித்தாந்தம், கிரஹ லாகவ கணக்குகள் உண்டு. புரியாத நமக்கு தலை சுற்றும் கணக்குகள்.  சில  வீடுகளில் அறுபது வருஷ பஞ்சாங்கம் இருந்து நான் பார்த்திருக்கிறேன்.

சந்திரனின் அசைவு நமது பஞ்சாங்கத்தில் முக்கியமான ஒரு அம்சம். எல்லா கிரஹங்களையும் விட சந்திரன் ஒருவனே வேகமாக சுழல்பவன். எனவே பஞ்சாங்கம் என்பது  திதி, நக்ஷத்ரம், ராசி, யோகம், கரணம்,  என்ற   ச்ந்திரனின் சுழற்சியை அடிப்படையாக கொண்ட விஷயங்கள். 

சூரிய சந்திர நிலைகளை நிலையான துவக்கப்புள்ளி (சித்திரை அல்லது அஸ்வினி நட்சத்திரம்) பின்னணியில் பகுத்து திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என மிகமுக்கியமான ஐந்து விஷயங்களையும், இதர பஞ்சாதி(புத, சுக்கிர, மங்கள, குரு, சனி) கிரகங்கள் மற்றும் ராகு, கேது (சந்திர புவிவட்ட பாதையில் ஏற்படும் வெட்டுப்புள்ளி) ஆகிய தகவல்கள் வானசாஸ்திர அடிப்படையில் கணிப்பதாகும். ஜோசியர்களுக்கு இது மிகவும் உதவுகிறது.

நமது தேசத்தில் பஞ்சாங்கம் மூன்று முறைகளில் கணிக்கப்படுகிறது. சூரிய சித்தாந்தம், ஆரிய சித்தாந்தம், திரிக்கணித சித்தாந்தம் என்பதாகும். முற்காலத்தில் ஏறக்குறைய 18க்கும் மேற்பட்ட சித்தாந்தங்கள் , அவற்றுக்கான கணிதமுறைகள் இருந்துள்ளன. பெரும்பாலோர் பின்பற்றுவது திரி ணித பஞ்சாங்கம்.

இப்போது, நவீன தொலைநோக்கி  டெலஸ்கோப்  மூலம்  பார்த்து     விஞ்ஞான கருவிகள் கொண்டு சந்திர கிரக நிலையை மிக துல்லியமாக கணித்தும், அதன் அடிப்படையில் உயரிய சிக்கலான கணித சூத்திரங்கள்(Lunar theory - modern numerical theories) உருவாக்கியும், திருத்தங்கள் (Ephemeride Lunaire Parisienne) செய்தும் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் பெறப்படும் வானியல் துறையினரின் புள்ளிவிபரங்கள் கொண்டு திருக்கணித பஞ்சாங்கம் உருவாக்கப்படுகிறது.

இஸ்ரோ , நாஸா அமைப்புகள் தங்களின் வான்வெளி திட்டங்களுக்கு பயன்படுத்தும் மிகதுல்லியமான வானியல் தகவல்களை வணிகஅடிப்படையில் வெளியிடுகிறது. இப்படி வெளியிடப்படும் துல்லியமான தகவல்களை  வைத்து உருவாகும்  திரிக்கணித பஞ்சாங்கம்  நம்பகத்தன்மை வாய்ந்தது.

நமது  வாநிலை இலாக்கா,  astrologiical  dept  கீழ்  இயங்கும் வானியல் கிரக நிலை கண்காணிப்பு பிரிவு கொல்கத்தா அருகில் உள்ளது  அது தரும்  தகவல்கள் முறைப்படி அரசு அனுமதிப்பெற்று திரிக்கணித பஞ்சாங்கம் கணிக்கப் படுகிறது.    லஹரி அயனாம்ஸ நிலையை  கணித்து  ராஷ்டீரிய பஞ்சாங்கம் என்கிற மிகதுல்லியமான திருக்கணித பஞ்சாங்கத்தை வெளியிடுகிறார்கள். 

 மங்களாயன், சந்திராயன் விண்வெளிக்கலத்தை மிகதுல்லியமாக சந்திரனுக்கு அனுப்ப பயன்பட்ட புள்ளிவிபரங்களும் திருக்கணிதபஞ்சாங்கத்திற்கு வழங்கப்படும் புள்ளிவிபரங்களும் ஒன்றே தான்.

திரிக்கணித முறையில் அயனம் வேண்டுமானால் வேறுபடலாம் ஆனால் திதி, நக்ஷத்ரம், யோகம் எக்காரணம் கொண்டும் மாறாது.

 கை தேர்ந்த சாஸ்த்ர விற்பன்னர்களால் கணிக்கப்பட்டு பல குடும்பங்கள் அவரவர்  விரும்பும்  பஞ்சாங்கங் களை பாரம்பரியமாக வாங்கி அவ்வப்போது அது சொல்வதை பின்பற்றி வாழ்க்கை நடத்துகிறோம்.  இன்னும் நிறைய சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...