ஆடி அமாவாசை - நங்கநல்லூர் J K SIVAN
நாளைக்கு ஆடி அமாவாசை. அமாவாசை என்றாலே சந்திரனும் சூரியனும் ஒரே ராசியில் கூடும் நாள். ஜோசியர்கள் பேசும்போது சூரியனை ''பித்ருகாரகன்'' என்றும் சந்திரனை ''மாத்ருகாரகன்'' என்றும் கூறுவதை கேட்டிருக்கிறீர்களா? அர்த்தம் புரியாமல் நாம் தலை ஆட்டுவோம்.சூரியன் சந்திரன் இருவரும் நமது தந்தை தாய் போன்றவர்களாக, அவர்கள் அம்சம் கொண்டவர்கள் . எனவே தந்தை தாய் இல்லாதவர்கள் இவர்களை தந்தை தாயாக வணங்குகிறோம் . அன்று முன்னோர்களை இவர்கள் சேரும் நாளில் த்ரிப்திப் படுத்துகிறோம். இது தான் அமாவாசை தர்ப்பணம்.
அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதே சமயம் சுமங்கலி பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகிறது. பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதி முறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில் வெங்காயம்,பூண்டு, முட்டைகோஸ், முள்ளங்கி, நூல்கோல், போன்ற காய்கறிகளை உபயோகிப்பதில்லை.
சாதாரண அமாவாசையே இவ்வாறு ஸ்ரத்தையோடு செய்யப்படுகிறது என்றால் ஆடி அமாவாசை இன்னும் விசேஷமானது. ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய 3 கிரகங்களும் ஒரு நேர் கோட்டில் (சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன்) அமையும் நாள் தான் ஆடி அமாவாசை திதி. பித்ருக்கள் சந்தோஷமாக நம்மால் திருப்தி செய்யப்பட்டு ஆசி வழங்கும் நாள். அவர்கள் ஆசியுடன் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு தான் நாம் தவறாமல் செய்யும் பித்ரு தர்ப்பணம்.
ஜோசியர்கள் சொல்லும் விதத்தில் கூறுவதானால் ''ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைவாக இருப்பவர் சுகமாக வாழவேண்டும் என்றால் அதற்கு உதவுவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். முன்னோர்களை வழிபடுவது தான் பிதுர் தர்ப்பணம், ஸ்ராத்தம் ஆகியவை.
தெய்வம், தேவர்களுக்கு அடுத்தபடி பித்ருக்கள் தான். பித்ருலோகம் என்றே ஒன்று தனியாக இருக்கிறது. அமாவாசை தினம் பித்ருக்கள் நமது தர்ப்பணத்துக்காக ஆவலுடன் காத்திருப்பவர்கள்.
நமது பெற்றோர் பாட்டன் பாட்டி இறந்த திதி, பக்ஷம் , மாதம் அறிந்துகொண்டு, ஒவ்வொரு தமிழ்வருஷமும் அதே திதியில் நாம் பிண்டப்ரதானம் செய்து வணங்குவது தான் ஸ்ராத்தம் . இதை செய்வதால் குடும்பத்தில் க்ஷேமம் உண்டாகும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .
ஆகவே ஒவ்வொரு அமாவாசையும் செய்யும் தர்ப்பணம் பிரித்திருக்களை மகிழ்வித்து ஆசியை பெற்றுத் தருகிறது. பித்ருக்களின் இறந்த திதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசை அன்று ஸ்ராத்தம் செய்வது புண்ய பலன் தரும்.
ஆடி அமாவாசை தினத்தில் விடிகாலை குளித்து சிவாலய தரிசனம், பித்ரு தர்ப்பணம், அன்னதானம் செய்தல் முக்கியத்வம் வாய்ந்தவை. அன்று சமுத்திர ஸ்னானம் மிக விசேஷம்.
சூரியன் தெற்குநோக்கிப் பயணிப்பதை தக்ஷிணாயன புண்யகாலம் என்கிறோம். அது ஆரம்பமாவதில் வருவது ஆடி அமாவாசை. வட திசையில் சூரியபயணம் உத்தராயணம். அப்போது வருவது தை அமாவாசை. மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணையும் நாள்.
ஆடி அமாவாசையன்று மூன்று சமுத்திரங்கள் ஒன்று சேரும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் சமுத்திர ஸ்னானம் ரொம்ப சிறப்பானது. அங்கே பித்ரு தர்ப்பணம் செய்வது வழக்கம். ஸ்ராத்தம் ஏற்பாடு செய்வது பித்ருக்கள் ஆசியை பெற அனுகூலமாகும். ஆகவே தான், ஆடி அமாவாசையன்று, காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கமத்தில், வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் ஸ்னானம் செய்து ப்ரோஹிதர்கள் உதவியுடன் பித்ரு தர்ப்பணம் செய்கிறார்கள்.
அங்கெல்லாம் செல்ல இயலாதவர்கள் அருகே உள்ள ஆறுகள் குளங்களில் ஸ்னானம் செய்து தர்ப்பணம் செய்யலாம். தக்ஷிணாயன ஆடி அமாவாசை இதற்கு உகந்த நாள். அன்றுவாத்தியாருக்கு சம்பாவனை, தக்ஷிணை கொடுத்து , அன்னதானம் செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கு வஸ்திர தானம் செய்வது முன்னோர்களுக்கு திருப்தி அளிக்கும். நமது தர்ப்பணத்தால் தான் முன்னோர்கள் பாபம் குறையும்.
நமது தர்ப்பணம் பெற அன்று நம்மைத் தேடி வருகிறார்கள். ஆகவே ஸ்ரத்தையுடன் அவர்களை வரவேற்று திருப்தி படுத்தி வணங்கி ஆசி பெறுகிறோம்.
சூரியனை பார்த்துக்கொண்டு கைகளில் காகத்திற்கு வைக்கும் சாதத்தை எடுத்துக்கொண்டு சூரியனைப் பார்த்து பிறகு உங்கள் கைகளில் இருக்கும் அன்னத்தை பார்த்து கீழே உள்ள மந்திரத்தை சொல்லவும்
*ஓம் சர்வ பிண்ட ரட்சகம் பரிபூரண பித்ரு அனுக்கிரகம் நமோ நமஹ*….ஓம்குருவே துணை….
No comments:
Post a Comment