Saturday, February 27, 2021

ADHI KADAVOOR MAYANAM




 மயானம் போனதுண்டா?      ---      நங்கநல்லூர்  J.K. SIVAN


யாரையாவது  பார்த்து  நீங்கள்  மயானம்  எப்போது போனீர்கள்  என்றால்  அவர் கண் சிவந்து  பல்லை நறநறவென்று கடிக்க  வாய்ப்புண்டு.  அவர் நினைக்கும்  மயானம் வேறு நான் சொல்லும் மயானம் வேறு ஸார்.  நான் மட்டுமல்ல. ஒரு பஸ் நிறைய  அநேகரை  மயானத்துக்கு  கூட்டிக்கொண்டு சென்றி ருக்கிறேன்.  அது பல வருஷங்களுக்கு முன்பு.
எங்கள் பஸ்  திருக்கடவூர்,திருவிடை மருதூர், தலைச்சங்காடு, போகும் வழியில் மதுராந் தகம், செங்கல்பட்டு, இன்னும் எத்தனையோ கோவில்களை பார்த்துக்கொண்டே சென்றோம். ஒருவர் இருவர் இல்லை. ஐம்பத்தைந்து பேர். ஒரு சொகுசு பேருந்து நிறைய.  எல்லோரும் வேதவித்துக்கள். வழியெல்லாம் கோவில்களில் விளக்கேற்றி, எண்ணெய் அளித்து, ஸ்லோகங் கள் மந்த்ரங்கள் சொல்லி, அர்ச்சனைகள் செய்தோம்.  ருத்ரம், சமகம்,  தேவாரம் திருவாசகம் எல்லாம் பாடினோம்.அதெல்லாம் முக்கியமில்லை. மயானம் சென்றது தான் நான் இப்போது  சொல்லப்போவது.   பஸ்ஸில்  ஒரு மாமி  
''சிவன் மாமா, மயானம் எப்போ போகப் போகிறோம்?''
''நிச்சயம் காலை பதினொன்றுக்குள்..''
இந்த கேள்வி பதிலை முதல் முறையாக படிக் கின்ற உங்களில் சிலர் அல்ல பலர் ''இந்த ஆளுக்கு பைத்தியமா, அல்லது இப்படி கேட்டவளுக்கா ? அதெப்படி  மயானம் செல்லப்போகும் நேரத்தை முன்னராகவே சொல்ல இயலும்?  பைத்தியங்கள்  பேத்தல்'' என்று  தான்  சான்றிதழ் தருவார்கள். 
ஐயா பொறுங்கள். மயானம் என்றால் சுடுகாடு இல்லை இங்கே. ''மெய்ஞானம்'' என்கிற அற்புத க்ஷேத்ரம் வழக்கம்போல் நம்மவர்களால் சிதைக்கப்பட்டு,  சிதை அடுக்குகிற  ''மயான'' மாக போய்விட்டது. பழங்காலத்தில் இதற்கு பிரம்மபுரி, வில்வா ரண்யம், வேதபுரி, திரு மெய்ஞ்ஞானம் என்றெல்லாம் பெயர். திருஞான சம்பந்தர் காலத்திலே எல்லாமே எரிந்து போய் ''மயானம்'' ஆகிவிட்டது  என்பது  அவரது பதிகத்தில் ''மயானம்'' என்று வருவதில் தெரிகிறது. பக்தர்கள் இந்த பக்கமே வராததற்கு இந்த பெயரேகூட   ஒரு காரணமோ?

எத்தனை பேருக்கு உங்களில் மயானம் என்கிற  இந்த மெய்ஞானம் க்ஷேத்ரம் திருக்கடவூரில் (இப்போது திருக்கடையூர்) இருப்பது தெரியும். தெரியாதவர்களுக்கு விவரம் சொல்கிறேன்.
திருக்கடவூரிலிருந்து 2 கிமீ.   மயிலாடுதுறை - காரைக்கால் மார்கத்தில்  வந்தால்   22 கி.மீ. தூரம்.  மயானம் ஆலயத்தில் சிவன் பெயர்: பிரம்மபுரீஸ்வரர். ஸ்வயம்பு. அம்பாள்: ஆம்ல குஜாம்பிகை. மலர் குழல் மின்னம்மை. கொன்றை, வில்வம் ஸ்தல விருக்ஷங்கள். அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பெற்ற ஸ்தலம். காவிரி தென்கரை 276 சிவாலயங் களில் 48வது. மேற்கு பார்த்த 55 சிவாலயங் களில் ஒன்று.    ராஜகோபுரம் இல்லை. மூன்றுஅடுக்கு மாடங்கள். ரெண்டு பெரிய பிராஹாரம்.

புராணங்களில் சிவன் பிரம்மாவை ஒரு கல்பத்துக்கு ஒன்றாக, ஐந்து முறை ஸம்ஹரித்து உயிர்ப்பித்தார் என்றும் அந்த ஐந்து இடங்கள் ''மயானம்'' என்று அழைக் கப்படுவதாகவும் தெரிகிறது. இந்த மயானங் கள், காசி மயானம், கச்சி மயானம், திருக்கடவூர் மயானம், காழி மயானம் (சீர்காழி) , வீழி நாலூர் மயானம் எனப்படும். பிரம்மனுக்கு சிவன் ஞானம் போதித் ததால் மெய்ஞானம் என்று பெயர். மார்க்கண்டர் சிவனை பிரார்த்தித்த இடம்.  ஆதி கடவூர் இது. இங்கிருந்து கிணற்று ஜலம் திருக்கடையூர்  அம்ரிதகடேஸ்வரருக்கு அபிஷேகத்துக்கு தினம் செல்கிறதுண்டு. .

ஒரு வரிக்கதை சொன்னால்  ஸ்தலபுராணம் அறியலாம்.  ஏமக்கேரிடன் எனும் சாளுக்கிய சிவபக்த ராஜா போரில் தோற்றுப்போய் நாடிழந்து இங்கே வந்து வேண்டிக் கொண்ட தால் சிங்காரவேலன் ராஜா உருவில் சென்று அந்த எதிரி ராஜாவை வென்று சாளுக்கியன் மீண்டும் ராஜ்ஜியம் பெற்று நன்றிக் கடனாக 53 ஏக்கர் நிலம் இங்கே முருகனுக்கு எழுதி வைத்து, அது தான்  ''சிங்காரவேலி '' .
இங்கே ஒரு விசேஷம். வில்லேந்திய முருகனை இங்கே தரிசிக்கலாம். ருத்ராக்ஷம் தரித்து ஒரு கையில் வில், மற்றதில் அம்பு. காலணி அணிந்த சிங்காரவேலன்.  தக்ஷிணாமூர்த் திக்கு  இங்கே  ஆறு சிஷ்யர்கள் இங்கே.  தொந்தி இல்லாத கணபதி.
பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த ஊர்.  ஸ்கந்த ஷஷ்டி, திருக் கார்த்திகை, திருவாதிரை இந்த ஆலயத்தில் சிறப்பு நாட்கள். மயானம் பற்றி  தேவார பாடல்  சில:  எல்லாவற்றிலும்   ''திருக்கடவூர் 'மயானம்''  கவனியுங்கள்:

வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.

மங்கைமணந்த மார்பர் மழுவாள் வலனொன்றேந்திக்
கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயானம் அமர்ந்தார்
செங்கண்வெள்ளே றேறிச் செல்வஞ்செய்யா வருவார்
அங்கையேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே.

ஈடல்இடபம் இசைய ஏறிமழுவொன் றேந்திக்
காடதிடமா வுடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார்
ஆடல்அரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.

இறைநின்றிலங்கு வளையாள் இளையாளொருபா லுடையார்
மறைநின்றிலங்கு மொழியார் மலையார்மனத்தின் மிசையார்
கறைநின்றிலங்கு பொழில்சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார்
பிறைநின்றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே.

வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோடொருகா திலங்கத்
துள்ளும்இளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக்
கள்ளநகுவெண் டலையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பிள்ளைமதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.

பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங்கொன்றை புனைந்தார்
ஒன்றாவெள்ளே றுயர்த்த துடையாரதுவே யூர்வார்
கன்றாவினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார்
பின்தாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.

பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.

செற்றஅரக்கன் அலறத் திகழ்சேவடிமெல் விரலாற்
கற்குன்றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்
மற்றொன்றிணையில் வலிய மாசில்வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே.

வருமாகரியின் உரியார் வளர்புன்சடையார் விடையார்
கருமான்உரிதோல் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
திருமாலொடுநான் முகனுந் தேர்ந்துங்காணமுன் ணொண்ணாப்
பெருமானெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.

தூயவிடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்
காயவேவச் செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
தீயகருமஞ் சொல்லுஞ் சிறுபுன்தேரர் அமணர்
பேய்பேயென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே.

மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னுமயானம் அமர்ந்த
அரவம் அசைத்த பெருமான் அகலம்அறிய லாகப்
பரவுமுறையே பயிலும் பந்தன்செஞ்சொல் மாலை
இரவும்பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.

நான் சென்றபோது அந்த கோவிலில் ஒரு முதியவர் பணி புரிந்து வந்தார். மிக அற்புதமான குரல் படைத்த அவர் கட கடவென்று மேற்சொன்ன திருஞான சம்பந்தரின் மயான ஆலய பாடல்களை பாடி தெரிந்த அர்த்தங்களை சொன்னது நினைவிருக்கிறது. என் தமையனார் ரத்னமய்யரும் ஜோடி சேர்ந்து நிறைய ஸ்லோகங்கள் பாடினார். நான் என்னுடன் வந்தவர்களிடம் நிதி வசூலித்து அந்த முதியவருக்கு எங்களாலான காணிக்கையை சமர்பித்தோம்.

ஆலய நேரம் காலை 6.30 - மதியம் 12மணி வரை. மாலை 4.00 முதல் 7.30 வரை. .இன்னும்  மயானம் பற்றி சொல்கிறேன் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...