கனவும் நினைவும் J K SIVAN
கனவு காண்பது சுவாரஸ்யமான அனுபவம். அநேகமாக கனவில் தோன்றுவது எல்லாம் நாம் ஏற்கெனவே பார்த்த, பேசிய, தெரிந்த மனிதர்கள் பற்றியும், நாம் சென்ற, பார்த்த, பழக்கமான இடங்கள், அறிந்த விஷயங்கள் , அனுபவங்கள் பற்றித்தான் சுற்றி சுற்றி வரும். ஒன்றோடு ஒன்று ''தாக்கலா மோக்கலா'' (ஒன்றுக் கொன்று சம்பந்த மில்லாத என்று எடுத்துக் கொள்ளவும். அர்த்தம் கேட்காதீர்கள். எனக்கே தெரியாது).
மற்றவர் கனவுகள் பற்றி பேசும்போது, கேட்கும்போது, எழுதும்போது நாம் புரிந்து கொள்ள, அவற்றுக்கு ருசி ஊட்ட நமது அனுபவங்களின் வாசனைப்பொடிகளையும் தூவுகிறோம். அப்போது தான் நமக்கே புரியும்.
அலெக்சாண்டர் பல தேசங்களை வெல்வதாக கனவு கண்டான், பார்வதி தக்ஷன் யாகத்தில் நெருப்பில் துவண்டு விழுந்து, மயங்கி, கருகி சாம்பாலானாள் என்று கனவு கண்டால் எந்த பாதிப்பும் நமக்கு ஏற்படுவதல்ல. சம்பந்தமே இல்லாதது. அதனால் ஒட்டுவதில்லை. மறந்து விடுகிறோம்.
உண்மையில் கனவுகளை விளக்குவது ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. மனோ தத்துவம் அதில் பெரும் பங்கு வகிக்கும். நிஜமாக நடந்தவை, நிகழ்ந்த சம்பவங்கள் அவற்றின் பதிவுகள் மனதில் பிரதிபலிப்பது தான் கனவு. அதாவது நிஜம் நிழலாகி படமாகி மீண்டும் நினைவா வது. நாம் ''கனவு பலித்தது '' என்பது ஏற்கன வே நடந்தது மீண்டும் விழித்திருக்கும்போது கண்முன் காண்கிறோம் அல்லவா அதை.
எல்லா கனவும் அப்படியல்ல. ஒரு மலை உச்சியில் ஒரு புலி துரத்துகிறது தாவி தாவி ஓடி ஒரு கிளையில் தொங்கிய பாம்பை கயிறாக பாவித்து அதைப் பிடித்து சரசர வென்று ஏறி அது வாயைத் திறக்கும்முன்பு பள்ளத்தில் விழுந்து ஒரு மர உச்சியில் மெத்தை மாதிரி விழுந்து அமர்ந்து இன்னும் கீழே பார்த்தால் நீர் மட்டத்தில் நிறைய பல்லோடு பசியோடு காத்திருக்கும் முதலைகள்.... இது நினைவாக கூடாது. நம் வாழ்வில் நடந்ததும் இல்லை. எங்கோ படித்தது, கேட்டது, படம் பார்த்தது..... ஆகவே மீண்டும் மனதில் பதியாது. எங்கோ படித்தது, யாரிடமோ கேட்டது. மனதில் பதிந்தது எப்போதும் சாவகாசமாக வெளியே வருகிற விஷயம்.
என் அப்பாவுக்கு தஞ்சாவூர் வீட்டில் திருடன் அடிக்கடி கனவாக வந்து அவர் குரல் வளை யை பிடிப்பான். அவர் உதவி கேட்டு கத்துவது உளறலாக பக்கத்தில் படுத்திருப்பவர்களை எழுப்பும். உடல் வியர்த்து விழித்து படுக்கை யில் எழுந்து உட்கார்ந்து சுற்றுமுற்றும் நாலாபக்கமும் தஞ்சாவூர் திருடனை கோடம்பாக்கம் சூளைமேட்டு வீட்டில் தேடி நல்ல வேளை இல்லை என்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு அடுத்து அவன் மீண்டும் கனவில் வர காத்திருப்பார்.
மூளையின் மடிப்புகளில் எண்ணி லடங்காத எண்ண பதிவுகள் தான் நம்மோடு வளர் பவை. சில அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடரும்.
கர்நாடகாவிலிருந்து வடக்கே சுற்றி பார்க்க சென்ற ஒரு குடும்ப ப்ராம்மண ஸ்த்ரீ ஆக்ரா கோட்டைக்குள் பேரன் பேத்திகளோடு நுழைந்து பார்த்தபோது அவ்வளவு பெரிய கோட்டையில் சில அறைகள் அவளுக்கு ஏற்கனவே பழக்கமானவை யாக தோன்றி யது. அவள் கணவன். குழந்தை, அதற்கு பால் ஊட்டிய இடம், சின்னதாக கிருஷ்ணனை வழிபட வைத்திருந்த மேடை, மாடப்பிரை எல்லாம் தெரிந்து. ஜஹாங்கிர் மனைவி அவள்.....அல்லது ஷாஜஹான் மனைவியோ ஞாபகம் எனக்கில்லை. அவளுக்கு பழைய ஞாபகம் இருந்ததால் அழுதாள். அந்த இடத்தை விட்டு வெளியே வர மாட்டேன் என்றாள் . கர்நாடகா குடும்பத்துக்கு ஆச்சர்யம், அதிர்ச்சி, ஒருவேளை திடீர் பைத்தியமா என்று கூட பயந்தார்கள். இந்த விஷயத்தை விடியோவில் பார்த்ததாக ஞாபகம்.
எதற்கு இதை சொன்னேன் என்றால் கனவு என்பது எந்தஜென்மத்தில் நடந்ததோ கூட இப்போது ஞாபகத் துக்கு மெதுவாக மேலே கனவாக வரும்.
காலம் சென்ற நெருங்கிய உறவுகள் கூட அடுத்த வாரிசுகள் மூலம் சில காரியங்களை நடத்திக்கொள்ள முடியும் போல் இருக்கிறது.
சீனாவில் ஒரு பணக்காரன், தவுக்கே என்று சொல்வார்கள். அப்படி ஒரு தாவுக்கே நிறைய பணத்தை குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் எங்கோ ஒளித்து வைத்து விட்டு டப்பென்று ஒருநாள் மண்டையைப் போட்டு விட்டான். அவன் பிள்ளையோ பேரனோ அந்த வீட்டில் வாழ்ந்தவனுக்கு இதெல்லாம் தெரியாது. தாவுக்கே அடிக்கடி கனவில் வந்து'' மாடிப்படியேறி என்னோடு வா என்று மொட்டை மாடிக்கு அழைத்து சென்றது'' ரொம்ப தொந்தரவாக போய்விட்டது.
ஒருநாள் அவன் தாத்தாவோ அப்பாவோ சொன்ன வீட்டுக்கு போய் மாடி ஏறினால் கனவில் கண்டது போலவே ஒரு சிதிலமான பழையவீட்டின் மொட்டை மாடியில் ஒரு சிறிய தொட்டி கட்டி அதை மூடி இருந்தது. தொட்டியை உடைத்து பார்த்தபோது உள்ளே நிறைய தங்கம், வெள்ளி..அப்பறம் என்ன அந்த தவுக்கே தெய்வம் போல் கொண்டாடப்பட்டான். அவன் படத்திற்கு விளக்கேற்றி, மாலை கூட போட்டான் பையனோ பேரனோ அந்த அதிர்ஷ்டக்காரன்.
கனவுகள் ஒரு அதிசய அனுபவம். இந்த ஜென்மம் இதற்கு முந்தியவை எல்லாம் கூட மனதில் இடம் பிடித்து விடுகிறது.
கிணற்றில் சொம்பு , தவலை , பக்கெட் விழுந்தால் முன்பெல்லாம் பாதாள கரண்டி என்று ஒரு பல கொக்கிகள் கொண்ட சங்கிலி யை கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் அனுப்பி துழாவுவோம். ஏதாவது ஒரு கொக்கியில் கிணற்றில் விழுந்த சாமான் மாட்டிக் கொண்டு மெதுவாக மேலே நாம் கயிற்றை இழுக்கும்போது ஜாக்கிரதையாக நம்மிடம் வரும். அது போல் இருக்கிறது இந்த கனவில் காணும் நிஜங்கள்.
No comments:
Post a Comment