Tuesday, February 9, 2021

JEWELLERY OF THE PAST

 

 மறக்க முடியாத முகங்கள்      --      J K  SIVAN 


என் பால்ய வயது காலத்தில் கோடம்பாக்கத்தில் எங்கள் வீட்டுக்கு ஒரு பாட்டி  தினமும் தயிர் கொண்டு தருவாள். சுருக்கமான முகம், பற்கள் இன்றி உள்ளடங்கிய வாய், அதில் கொள்ளை சிரிப்பு,  சுருக்கமான நெற்றியில் பட்டையாக  வெண்ணீறு, வெள்ளை சுருள் சுருளான  முடியை முடிந்து கொண்டு  அன்பு நிறைந்த கண்களோடு என்னை  ''வாங்க சின்ன ஐயரே''  என்று அழைப்பாள். வாசல் திண்ணையில் கூடையில்  தயிர் சட்டி. சுற்றி துணி.  ஒரு கருப்பு கொட்டாங்கச்சிக்கு  நடுவே மூங்கில் கொம்பு செருகிய  கரண்டி.  தயிர் கமகம என்று மணக்கும்.  அம்மா  கொண்டு வரும் பாத்திரத்தில்  எத்தனை கொட்டாங்கச்சி என்று கணக்கு  சுவற்றில் கரிக்கோடு போட்டு வைத்து விட்டு போவாள். இப்போது நினைத்தாலும் அவள் முகத்தில் ஒரு தனி கவர்ச்சி அவளது காதுகளும், அவற்றில் தொங்கும் என்னென்னவோ சாமான்களும்.  அவற்றிற்கு பாம்படம் என்று பெயர்.  

இன்னொரு  பாம்படம் அணிந்த பெண் நினைவுக்கு வருகிறாள். அவள்    ''சோசியம் பாக்கலையோ  சோசியம்'' என்று கத்திக்கொண்டு வருபவள்.  கையில் ஒரு  கோலாட்ட குச்சி போன்று வெள்ளிப்பூண் போட்ட குச்சி இருக்கும்.   ஜோசியம் பார்க்கும்  மந்திரக்கோல்.  ஒரு சுருக்குப் பையில் சில  வெள்ளை சோழிகள் இரு இருக்கும்.  அவளது தோளில்  உள்ள பையில்  ஒரு சிறிய  மடக்கு பாய் சுருட்டி வைத்திருப்பாள். அந்த பாய்க்கு  இரு பக்கமும்   விளிம்புகளில்  சிகப்பு நிற   உறை  இருக்கும்.  


 கை ரேகை பார்த்து  பாட்டு பாடிக்கொண்டே சோசியம் சொல்வாள். மோர் வாங்கி குடிப்பாள் .  சாதம் இருந்தால் அம்மாவிடம் கேட்டு சாப்பிடுவாள். அரிசி வாங்கிக்கொண்டு போவாள். ஒரு  அணா  காசு எப்போவாவது அம்மா தருவாள்.

முந்தைய காலத்தில்  காதணிகள் பல வகைப்பட்டவை.   மதுரைஜில்லா பெண்கள், நெல்லை  குமரி மாவட்ட பெண்கள்  இந்த பாம்படத்தை அணிவார்கள்.  தூத்துக்குடியில்  நிறைய பாம்பட    பாட்டிகளை  சந்தித்திருக்கிறேன்.

இந்த  காதணிகள்  தங்க முலாம்  பூசிய  வெள்ளி, அல்லது  வெண்கல அணிகள் , அல்லது தங்கத்திலேயே  செய்தவை. அவற்றில் தண்டட்டி, முடிச்சு, பாம்படம் என பல வகைகள் உண்டு.  சில  ஊர்களில்  தடயம்  என்பார்கள்.  அது  பாம்படம் தான்.   காதில் மஞ்சளாக  பளபளவென்று   சதுரம், செவ்வகம், முக்கோணம் , உருண்டை  என்று பல வடிவங்களில்,  முடிச்சு முடிச்சாக இவை  காதுகளில் தொங்கும்.   பாம்பு  படம் எடுப்பது போல்  இருக்கிறது என்பதற்காக  பாம்பு படம்  என்று பேர். அது பாம்படம் ஆகிவிட்டது.   இவ்வளவு கனமான  காதணிகளை  அணிவதற்கு காதுகளை  தயார் செய்வார்கள்.  அதற்கு ''காது வடித்தல்'' என்று பெயர்.
 
இவ்வளவு கனமான  சாமான்களை காதில் தொங்கவிட்டால்  அந்த காது துளை என்னவாகும். பாம்படம் சாமான்களின்  கனம் தாங்காமல்   கீழ்க்   காது மடல் நீண்ட துளை யோடு  கழுத்து தோள்  வரை தொங்கும். பார்ப்பதற்கு  என்னவோ போல் இருக்கும்.  இப்போது  இவர்களை காணமுடியவில்லை. கிராமங்களில் இன்னும் இருப்பார்கள்.

 பழைய  நகைகள், உடைகள்,  ஆடை டிசைன்கள்  மீண்டும்  வருவது போல்  பாம்படம் அணிவதும் ஒரு வேளை  திரும்பி நமது பெண்களுக்கு வருமோ??

பெண்கள்  இப்படி  தொள்ளைக்காதர்களாக இருப்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆண்களுக்கு இந்த பழக்கம் உண்டா  என்றால்  ஒருவரைத் தவிர வேறு யாரும் எனக்கு தெரியாது
.
அந்த ஒருவர்  பாண்டிச்சேரி,   (புதுச்சேரி)  மணக்குள விநாயகர்  கோவில் மூலவர் பின்னால்  காட்சி அளிக்கும் ஸ்ரீ தொள்ளைக்காது  சித்தர் தான்.

அவரைப் பற்றி  அடுத்த  பதிவில்  விவரம் தருகிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...