தோபா சித்தர் ... J K SIVAN
ரெண்டு நாட்களுக்கு முன்பு சில பழைய கால ... ரொம்ப ரொம்ப ..பழைய புத்தகங்களோடு வந்து சந்தித்தார். அவற்றுள் சில தொடும்போதே ஒடிந்து தூளாகிறது. ஒன்றிரண்டு வெகு சுவாரஸ்யமாக இருந்தது படிக்க. ஒரு சின்ன புஸ்தகம் ''தோபா ஸ்வாமிகள் சரித்திரம்'' 107 வயதானது. குட்டி எழுத்தில் வேலூர் சுந்தரவிநாயகர் அச்சுக்கூடத்தில் பிரசுரிக்கப்பட்டது. விலை போடவில்லை. ன்று இது வரை நான் அறியாத ஒருவரைப் பற்றி.
தோபா ஸ்வாமிகள் என்ற ஒரு சித்தர் இருநூறு வருஷங்களுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் பட்டாளத்தார் ஒருவர் மகன். இயற்பெயர் ராமலிங்கம் பிள்ளை. (வள்ளலார் இல்லை). அப்பாவுக்கு பிறகு அதே ராணுவ உத்யோகம். தேவாரம் திருவாசகத்தில் அளவற்ற ஈடுபாடு. பெற்றோரை இழந்தவர் . ராணுவத்தில் தினமும் கவாத்து drill குறிப்பிட்ட நேரத்தில் பயிற்சி பெறவேண்டும். நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டதால் ராமலிங்கம்பிள்ளை போகவில்லை. அவருக்கு பதிலாக சிவனே குதிரையில் ஏறி பயிற்சி செய்ய, பிறகு குதிரை மட்டும் நிற்க, ஆள் எங்கே என்று தேடி ராமலிங்கம் வீட்டில் சென்று அதிகாரி பார்க்க, அவர் நிஷ்டையில் இருப்பதைப் பார்க்க, விஷயம் பரவி விட்டது. உத்தியோகத்தை ராஜினாமா செய்துவிட்டு கையில் ஒரு பிச்சை எடுக்க சட்டியுடன் தேசாந்திரம் புறப்பட்டார். நான்கு நாய்கள் அவரை தொடர்ந்து செல்லும். பிச்சையில் கிடைத்த உணவு அவற்றிற்கு. தொடர்ந்து அதிசயங்கள் நிகழ்த்தினார். தோ என்ற முதல் எழுத்தைக் கொண்டு பா இயற்றிய ஞான சம்பந்தர் இவருக்கு குரு என்பதால் இவரை 'தோ பா'' சுவாமி என்று அழைத்தார்கள். அவதூதர். நிர்வாணமாக அலைவார். வெள்ளைக்கார அதிகாரி பிடித்து சிறையிலிட்டான். அவன் வீட்டுக்கு சென்றதும் அவனது படுக்கையறையில் சுவாமி படுத்திருப்பது கண்டு ஆச்சரியமடைந்து சிறைக்கு சென்று பார்த்தபோது சிறை பூட்டப்பட்டிருந்தது. உள்ளே இருந்த சுவாமி எப்படி அவன் படுக்கை அறைக்குள் வந்தார்?? சாட்டையால் கட்டையால் அடித்தவர்கள் தாங்களே அந்த அடியை தாங்கமுடியாமல் அலறினார்கள். ஒரு முஸ்லீம் ஊசியை அவர் மேல எறிய அந்த ஊசி அவனது மர்ம ஸ்தானத்தில் புகுந்து வலி தாங்கமுடியாமல் சுவாமியிடம் சென்று மன்னிக்க வேண்டினான். ஊசி வெளியே வந்துவிட்டது. ஒரு மசூதி கட்டினான். ''தோபா'' மசூதி இன்னும் சென்னையில் இருக்கிறதாம். ஒரு திண்ணையில் இவர் இருக்கும்போது அந்த வீட்டுக்காரம்மா அவர் ஓரு ஒளி மயமான வஸ்துவாக ஜொலிப்பதைப் பார்த்து பயந்து அலறினாள். உடனே அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். பின்னர் அவளும் அவள் கணவனும் அவரை தேடிப்பிடித்து அழைத்தனர். அவரகளுக்கு புத்ர ப்ராப்தி இல்லை என்பதால் அவர் ஆசிபெற்று குழந்தைச் செல்வம் பெற்றார்கள். பல பேருக்கு பல விதமாக அருளிய சித்தர் இவர் என்று படித்தேன். பாம்பு கடித்த பெண் உயிர் பெற்றாள் . இறந்தவர் சிலர் உயிர் பிழைத்தார்கள். சிலர் விஷம் கொடுத்து கொள்ளப்பார்த்தார்கள். அந்த விஷம் அவர்களுக்கே எமனாக முடிந்தது. 1850ல் தோபா சாமிகள் சித்தி அடைந்தார்.
ஸ்வாமிகள் உபயோகித்த பிக்ஷை எடுக்கும் மண் சட்டி 107 வருஷங்களுக்கு முன்பு இந்த புத்தகம் வெளியான காலத்தில் திருப்பாதிரி புலியூர் புரிக்கீசன் பேட்டை பழனியாண்டி முதலியார் வீட்டில் பூஜையில் இருந்து பல அதிசயங்களை நிகழ்த்தியதாக இந்த புஸ்தகம் சொல்கிறது. இப்போது முதலியார் இருக்கிறதா, அதில் சட்டி உண்டா?? என்பது யாராவது விசாரித்து சொன்னால் தான் தெரியும். நிறைய விஷயங்களை நாம் தெரிந்து கொள்வதில்லை. மஹான்கள் இப்படியே தெரியாமல் மறைந்து போய்விட்டார்கள்.
தோபா சாமியார் ஜீவ சமாதி வேலூரில் 208 மெயின் பஜாரில் இப்போதும் இருப்பதாக படம் பார்த்து அறிந்துகொண்டேன். அது சரி வேலூரில் ஒரு சைதாப்பேட்டை இருக்கிறதா? தோபா சுவாமி ஜீவ சமாதி பற்றி ஒரு வீடியோ லிங்க் இருக்கிறது https://goo.gl/maps/DxytUbDbUox
No comments:
Post a Comment