நரசிம்ம சாக்ஷாத்காரம் -- J K SIVAN
இப்போதெல்லாம் குரு சிஷ்ய உறவு பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் சிஷ்யனாகலாம். தகுதி என்று எதுவும் கிடையாது. வித்தை வியாபாரமாகிவிட்டது. ஆதி சங்கரரின் காலத்தில் அப்படி அல்ல. அவரது சிஷ்யர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே.
இப்போது குருவுக்கு அபிமான சிஷ்யன் என்று இருந்த காலம் போய்விட்டது. ப்ரயோஜனமுள்ள சிஷ்யன் என்ற நிலை அதைத் தின்று விட்டது.
பத்மபாதர் என்று ஒரு சிஷ்யர் ஆதிசங்கரருக்கு ப்ரியமானவர். சிறந்த குருபக்தர். அவர் இயற்பெயர் உண்மையில் சனந்தன். மற்ற சிஷ்யர்களுக்கு ஒரு அதிருப்தி. ஏன் நமது குரு சனந்தன் மீது மட்டும் அளவற்ற பாசம் வைத்திருக்கிறார்? அவன் என்ன உசத்தி? நம்மைக்காட்டிலும் படிப்பிலும் உயர்ந்தவனில்லையே.
இதை ஆதி சங்கரர் கவனித்து விட்டார். மற்றவர்களுக்கு குருபக்தி என்றால் என்ன என்று விளக்க ஒரு சந்தர்ப்பம் வந்தது.
வழக்கம்போல் ஒருநாள் குருவின் காஷாயங்களைத் தோய்த்து உலர்த்தி மடித்துக் கொண்டுவருவதற்கு ஆற்றைக் கடந்து அக்கரைக்கு சனந்தன் சென்றான். சற்று நேரத்திற்கெல்லாம் வெள்ளம் கங்கையில் பெருக் கெடுக்க எவரும் அது வடியும் வரை பல மணி நேரம் ஆற்றைக் கடக்க முடியாது. அடிக்கடி இப்படி வெள்ளம் வரும்.
கரையில் ஆதி சங்கரரின் மற்ற சிஷ்யர்கள் அவரை சூழ்ந்து அமர்ந்து அன்றைய பாடம் கற்க தயாராகினர். ஸநந்தனும் வரும் வரை பாடம் கற்பதில் காலம் கடத்த மற்ற சிஷ்யர்கள் விருப்பமாக இல்லை என்று ஆதி சங்கரர் புரிந்து கொண்டார். இருந்தாலும் ''அதோ சனந்தன் அக்கரையில் இருக்கிறான் அவனும் வரட்டும் பிறகு பாடம் ஆரம்பிக்கலாம்'' என்கிறார்.
எப்படி சனந்தன் வரமுடியும்? வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறதே என சிஷ்யர்கள் யோசிக்க, ஆதி சங்கரர் குரல் கொடுத்தார்
''சனந்தா, வேகமாக ஓடிவா உனக்காக பாடம் சொல்லிக்கொடுக்க காத்திருக்கிறேன்''.
குருநாதரின் '' ஓடி வா உடனே '' என்ற குரல் தான் ஸநந்தனுக்கு முக்கியம் அவனுக்கு . ஆற்று வெள்ளமோ, அதை நீந்தி கரையேறும் சக்தியோ கிடையாது, ஆற்றில் இறங்கினால் முழுகிவிடுவோம் என்ற உயிர் மேல் பற்றோ எதுவும் எண்ணமாக எழவில்லை. கண்ணை மூடிக்கொண்டு நீரில் குதித்தான். '' குருநாதா, ஜெய ஜெய சங்கர,ஹாரா ஹர சங்கர'' ஒன்றே தான் மூச்சு.
கங்கா மாதா சும்மா இருப்பாளா? சநந்தன் ஓடி வந்து வெள்ளத்தில் வைத்த காலடி ஒவ்வொன்றின் கீழும் பெரிய தாமரை மலர் அவன் பாதங்களைத் தாங்கி சுமந்து ஆற்றைக் கடக்கச் செயது அக்கரை கொண்டு சேர்த்தாள்.. தரையில் ஓடுவது போல் சநந்தன் தாமரை மலர்கள் மேல் அடி வைத்து ஆற்றைக் கடந்து
ஆசார்யன் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
இந்த நிகழ்ச்சி மற்ற சிஷ்யர்களை வியக்கச் செய்து அவர்களிடம் இல்லாத அவனது அதீத குருபக்தியை நிரூபித்தது. ஒவ்வொரு பாதத்தின் கீழும் தாமரை அவனை சுமந்து வந்ததால் அவன் அந்த கணம் முதல் பத்ம பாதன் (பத்மம் என்றால் தாமரை) ஆனான். நமக்கும் பத்ம பாதரின் ஆசார்ய பக்தி தெரிகிறது.
பத்மபாதர் சோழ தேசத்தில் பிறந்த ஒரு நரசிம்ம உபசாகர். அஹோபிலத்தில் பல வருஷங்கள் தவம் செயது நரசிம்ம சாக்ஷாத் காரம் பெற காத்திருந்தார். நரசிம்ம சுவாமி அருள் தரிசனம் இன்னும் கிடைக்க வில்லை. பத்மபாதர் காத்திருக்கிறார். இந்த கால கட்டத்தில் தான் அஹோபிலம் அருகே ஸ்ரீசைலத்துக்கு ஆதி சங்கரர் விஜயம் செய்கிறார்.
ஆதிசங்கரர் பத்மபாதரிடம் ''புத்ரா, பத்மபாதா , நரசிம்ம சுவாமி தரிசனம் பெற காத்திருக்கிறாய் அல்லவா?நரசிம்மரின் அருள் பெரும் நேரம் நெருங்கிவிட்டது உனக்கு. இங்கிருந்து சற்று தூரத்தில் செஞ்சுகூடம் என்று ஊர் இருக்கிறதே. அங்கே ஒரு பர்வத பிலம் எனும் குகை இருக்கிறது. தாயின் கருவறை போல் நுழைவு வாயில் சிறிதான இருண்ட பாதாள குகை. மோக்ஷ பாதைக்கு இட்டுச்செல்லும் மார்க்கம். நீ அங்கே சென்று நரசிம்ம ஸ்வாமியை வேண்டிக்கொண்டு தவம் செய். மோக்ஷ சித்தி உனக்கு கிட்டும்'' என்கிறார். பத்மபாதர் அங்கே சென்று கடும் தவம் செய்கிறார்.
செஞ்சுகூடம் ஆதிவிகாஸ் எனும் வனப் பிரதேசத்தை சேர்ந்தது. அதன் அரசன் பயன்னா.செஞ்சுக்களின் தலைவன். காட்டு ராஜா. பத்மபாதர் அவனது காட்டில் தவம் செய்யபோகிறார் என்று அறிந்து பத்மபாதர் அருகே வருகிறான்.
''சுவாமி நான் இங்குள்ளவன். உங்களுக்கு என்ன தேவை என்று சொல்லுங்கள் என்னாலான உதவி செய்கி றேன்.
''அப்பனே, நான் நரசிம்ம தரிசனம் பெற்று வரம் பெற தவம் செய்கிறேன் ''
''சுவாமி, நரசிம்மம் என்றால் என்ன, எப்படி இருக்கும்?''
''மனித உடல் சிங்க முகம் , அந்த தெய்வத்தின் தரிசனம் பெற தவமிருக்கிறேன்.''
''சுவாமி நான் இந்த காட்டில் எல்லாம் இடமும் அறிந்தவன். சிங்கம் புலி போன்ற மிருகங்களை எல்லாம் தெரிந்தவன். நீங்கள் சொல்லுகிறபடி ஒரு உருவத்தை இதுவரை பார்த்ததில்லையே.. இங்கு அதும அதிரி எதுவுமில்லையே ''
''அப்பனே இந்த புனித க்ஷேத்திரத்தில் தான் நிச்சயம் நரசிம்மஸ்வாமி இருக்கிறார். புராணங்கள் சொல்கிறதே. என் குருநாதரும் சொன்னார். ஆனால் நரசிம்மத்தை உன்னால் பார்க்கமுடியாது''
''சுவாமி நீங்கள் சொல்வது நியாயம் இல்லை. இங்கே அப்படி ஒரு நரசிம்மம் இருந்தால் இங்கேயே பிறந்து வளர்ந்து அலைந்த நான் அதைத் தேடி கண்டுபிடித்து கட்டிக் கொண்டு வந்து உங்கள் முன் நிறுத்துவேன். இல்லையெனில் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்''
பயன்னா, நரசிம்மத்தைத் தேடி புறப்பட்டான். அன்ன ஆகாரம், நித்திரை இன்றி இரவும் பகலும் நரசிம்ம னையே நினைத்து, மனித உடல் சிம்ம முகம் எங்கே என்று தேடி அலைந்தான். நாட்கள் கழிந்தன அவன் முயற்சி வெற்றி தரவில்லை. சரி நாம் ஸ்வாமியை நரசிம்மம் இல்லாமல் சென்று பார்க்க முடியாது. இங்கேயே பிராணனை விடவேண்டியது தான் என்று முடிவெடுத்தான்.
பயன்னாவின் தன்னலமற்ற தியாகம், உண்மையான பக்தியை மெச்சி நரசிம்மம் காட்சி அளித்தது.
''வா வா நரசிம்மம், வந்து வகையாக மாட்டிக்கொண்டாயா. எவ்வளவு நாள் என்னைத் தேட வைத்தாய். என் கண்ணில் படாமல் ஒளிந்திருந்தாய். என் சுவாமியிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன். இனி நீ என்னிடமிருந்து தப்பவே முடியாது. ''
காட்டில் கொடிகள் வேர்கள் நீளமாக நிறைய எடுத்து முறுக்கி, பெரிய கயிறுபோல் திரித்து நரசிம்மத்தை கட்டினான். ஒரு முனையை இடுப்பில் கட்டி இழுத்து கொண்டு பத்ம பாதர் முன் நிறுத்தினான்.
''சுவாமி இதோ பார்த்தீர்களா? நீங்கள் கேட்ட நரசிம்மம். பலநாள் தேடி இன்று கிடைத்தது. கயிற்றில் கட்டி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். வந்து பாருங்கள்''
பத்ம பாதருக்கு பயன்னாவின் பேச்சு புரியவில்லை. '' என்ன உளறுகிறான் இவன். நரசிம்மத்தை இவன் பிடித்து கட்டி இழுத்துக் கொண்டு வருவதாவது. சரியான பேத்தல்''. பத்மபாதர் வந்து பார்த்தார். அவர் கண்ணுக்கு நரசிம்மம் தெரியவில்லை.
''என்ன சாமி எங்கோ தேடறீங்க. இதோ பாருங்க உங்களையே பார்க்குது. பெரிய சிங்கத்தலை. மனிஷ உடம்பு. பெரிசாக இருக்குதே தெரியலை உங்களுக்கு''
பத்மபாதர் அவன் சொல்லிலிருந்து அவன் உண்மை பேசுவதை அறிந்துகொண்டார். ''ஆஹா என்ன பாக்கியவான் இவன்''!
''நரசிம்மா, ஹரி. இந்த காட்டு மனிதன் பயன்னாவுக்கு ஒரே நாளில் நரசிம்ம சாக்ஷாத்காரம் அருளிவிட் டீர்களே. பல வருஷங்கள் தவம் செய்யும் எனக்கு அந்த பாக்யம் கிட்டவில்லையே''
''பத்மபாதா, ஏகாக்ரம் எனும் ஒரே சிந்தனையாக என்னை அடைய முற்படுவது எளிதல்ல. பல வருஷங்கள் நீ அடைய முயன்றதை ஒரே நாளில் பயன்னா அடைந்துவிட்டான் என்றால் அவன் உடல் பொருள் ஆவி எல்லாமே என்னிடமே கடந்த சிலநாளாக அர்ப்பணித்துவிட்டான் பிராநதியாகம் செய்யும் எல்லைக்கும் வந்துவிட்டான். ஆகவே நான் அவனுக்கு அடிமையாகி சிறைப்பட்டேன். நீ அவன் சகாவாகிவிட்டதால் அவன் சகாயத்தில் உன் தவமும் பலன் தந்து இதோ உனக்கும் நான் தரிசனம் கொடுக்கிறேன் '' என்ற நரசிம்மம் அவர் முன் தோன்றி ஆசி தந்து மறைந்தது.
No comments:
Post a Comment