Wednesday, February 24, 2021

A CHETTINAD MARRIAGE





ஒரு செட்டியார் வீட்டு கல்யாணம்.
 நங்கநல்லூர் J K   SIVAN 



நாட்டுக்கோட்டை  செட்டியார்கள், நகரத்தார்கள்  என்றெல்லாம்  பெயர் கொண்ட  தாராள மன  சிவபக்தர்கள் தமிழுக்கும்  ஹிந்து சனாதன தர்மத்துக்கும் ,  மக்களுக்கும் எண்ணற்ற  தொண்டாற்றியவர்கள், அன்றும்இன்றும் .   
பூர்வீகத்தில்  தொண்டை மண்டலத்தில்  காஞ்சியில்  வாழ்ந்து, சோழ நாட்டில்   கோவலன் மாதிரி காவிரிப்பூம் பட்டினத்தில் குடிபெயர்ந்து,  பிறகு  பாண்டியநாட்டில்  சீரும் சிறப்புமாக  குடியேறியவர்கள். பெரும்பாலும்   காரைக்குடி, சிவகங்கை , புதுக்கோட்டை  சுற்றி  முக்கிய மாக 9 கிராம வாசிகள். இது தான் செட்டிநாடு.  
நகரத்தார்,  தொழில் வியாபார  நிபுணர்கள்.  கடல்கடந்து  பர்மா, இலங்கை, மலேசியா  எல்லாம் சென்று   வாணிபத்தில் கொடிகட்டி பறந்தவர்கள்.  உலகின் பல இடங்களில் பல துறைகளில்  காணப்படுகிறவர்கள்.

மேலே  சொன்ன செட்டிநாட்டில் மாத்தூர்  என்று  ஒரு அமைதியான கிராமம்  அங்கு   பெரியநாயகி சமேத  ஐந்நூற்றிஈஸ்வரர் என்று ஒரு சிவன் ஆலயம் கொண்டிருக்கிறார். 1200 ஆண்டுக‌ளுக்கு முந்திய இக்கோவில்  கொங்கண ‌சித்தர் வழிபட்ட  ஆலயம். 

காலம் காலமாக நகரத்தாரால் புனருத்தாரணம் செய்யப்பட்டு  பலரின்  குலதெய்வ கோயில். 5  நிலை ராஜகோபுரம்.  மேல் தளம்  33,000 ச‌துர‌ அடி ப‌ர‌ப்பு. சிம்ம‌ பீட‌த்தின் மேல் ந‌ந்தி இங்கு  ம‌ட்டும் தான் விசேஷம்.  ப்ரஹாரத்தில்  ஸ்தல விருக்ஷம்  ம‌கிழ‌ ம‌ர‌த்த‌டியில் முனீஸ்வ‌ர‌ர் பீட‌ம்   ஊர் காவல் தெய்வம்.  

காரைக்குடி ரயில் நிலத்திலிருந்து  7கிமீ  தூரத் தில் ஆலயம்.  கோட்டையூரிலிருந்து 5கிமீ.  உத்சவங்கள்  விழாக்கள் என்றால் நகரத்தார்  ஏற்பாடுகளைச் சொல்லி மாளாது. அநேகருக்கு வயிறு முட்ட சாப்பாடு நிச்சயம்.

இந்த  தெய்வத்தை குலதெய்வமாக கொண்டு ஒரு செட்டியார் வீட்ல  கல்யாணம் நடந்தது.  நான் போக வில்லை.  கல்யாணம் சமீபத்தில் இல்லை.

 எனக்கு  நாலு வயதில்  (10.9.1943ல் ) எனக்கு தெரியாத  யாரோ ஒரு செட்டிநாட்டு  கண்டனூர்  வயிரவன் செட்டியார் மகனுக்கு  தான்  அந்த  கல்யாணம்.  அழைப்பு விடுத்தவர் இனிஷி யல் வேணுமானால் தருகிறேன்:  கவீ. அள .ராம. ராமநாதன்.   கல்யாணப்பெண் யார் தெரியுமா?  வள்ளல்  அழகப்ப செட்டியார் மகள். 

இந்த அழைப்பு  எனக்கு  சமீபத்தில்  எனது  82வது  வயதில்  வாட்சப்பில்  யாரோ  அனுப்பி வந்த தாலும், கல்யாணம்  நடந்தபோது  என்னை யாரும் செட்டிநாட்டுக்கு  ரயிலில்  கூட்டிச் சென்று,  தோளில் தூக்கிச் செல்லாததாலும் என்னால்  போக இயலவில்லை. 

இந்த கல்யாணத்தின் சிறப்பு பற்றி கட்டாயம் சொல்லியாக வேண்டும்.   அப்போதெல்லாம்  கல்யாண சத்திரங்கள்,  ஹால்கள், ரிஸப்ஷன்கள் கிடையாது. மைக், ஸ்பீக்கர்,  போட்டோ, வீடியோ தெரியாது. கோட்டையூரில்   கோட்டை மாதிரி செட்டியார் வீட்டிலேயே கல்யாணம். ஒருநாள் ஒன்றரைநாள் இல்லை  ஐந்துநாள்  ஏழுநாள் வைபவம்.  

நாலுநாள்  முன்னதாகவே  என்று பத்திரிகையில் போட்டிருக்கும்.    ஆனால்   உறவினர்கள்  எல்லோ ரும்  அதற்கும் முன்னதாகவே  வந்து கேம்ப் போட்டுவிடுவார்கள். 

எந்த வீட்டுக் கல்யாணத்திலும் ஊரார் இல்லாமல் கிடையாது. 

 இந்தக் கல்யாணத்தில் முக்கிய அம்சங்கள்:  கல்யாணத்துக்கு முதல் நாள்  9.9.1943  மத்தியானம் ரெண்டு  மணிக்கு நாதஸ்வர சக்ரவர்த்தி TN  ராஜரத்தினம் பிள்ளை,   P S   வீராசாமி பிள்ளை யோடு  நாதஸ்வரத்தை எடுத்துக்கொண்டு வந்து விட்டார்.   ஆஹா  கானமழை   கன மழையாக   பொழிந்து தள்ளிவிட்டார்கள்.  இலவசமான கல்யாண சாப்பாடு விருந்தோடு சுகமான  சங்கீத விருந்து.    ஐந்து மணி அளவில் முடிந்தது.

உடனே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு  எல்லோரும் காப்பி  சிற்றுண்டி  சாப்பிட்டு  மிகப்பெரிய  கும்பலாக திரண்டார்கள். ஏன்  என்ன காரணம்.?

சாயந்திரம் ஐந்துமணிக்கு   டாண்  என்று  மிகப் பெரிய  சூப்பர் ஸ்டார் வந்துவிட்டாரே!.  ஏழிசை மன்னன்,  M  K  தியாகராஜ பாகவதர் சரஸ்வதி ஸ்டோர்ஸ்  வாத்ய கோஷ்டியோடு  ஐந்து மணி கச்சேரிக்கு  தயாராகி விட்டாரே. அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே ஒரு பெரிய  விருந்து.  பிடில் ( வயலின்) வித்துவான் மைசூர் T  குருராஜப்பா,  மிருதங்கம் வாசிக்க  குற்றாலம் சிவ வடிவேல் பிள்ளை, பிரபல கடம் வித்துவான்  ஆலங்குடி ராமசந்திரன்,  டொய்ங் டொய்ங் என்று  மோர்சிங்கில்  மன்னார்குடி நடேச பிள்ளை. 

 இரவுச்சாப்பாடு  அப்புறம் தான்.   முதலில் இந்த  கிரேட்  கர்நாடக திரை இசை  நிகழ்ச்சி.  எட்டு மணிக்கு பாகவதர் முடித்தார். அத்தனை பெரும்   ஸ்வர்கத்திலிருந்து  செட்டிநாட்டுக்கு திரும்பி னார்கள்.

இரவு  எட்டுமணிக்கு  மிஸ்  N A  சுந்தரம்   ஒன்பதரை வரை  ஒன்றரை மணிநேரம் தனது பார்ட்டியோடு   அற்புதமாக பாடினாள் . என்ன பாடினாள்  என்று எனக்கு தெரியாத தால்  சொல்லவில்லை.

இரவு  மின்சாரம் இல்லையென்றாலும்  காஸ்,  பெட்ரோமாக்ஸ்  வெளிச்சத்தில்  மேடை போட்டு ஒரு  பிரம்மாண்டமான நடனம் ஏற்பாடு செய்தி ருந்தார் செட்டியார்.  யார் நடனமணி தெரியுமா?  கலாக்ஷேத்ரா வை  அடையாறில் நிறுவிய  ஸ்ரீமதி ருக்மணி அருண்டேல்   அவர்களது பார்ட்டியோடு  ஆடிய  நடன நிகழ்ச்சி.  யாரும் அங்கு இங்கு நகருவார்களா. இரவு  பதினொருமணிக்கு  முடிவுற்றது.

அடுத்த  ரெண்டு நாள் நிகழ்ச்சி சொல்கிறேன்  காத்திருங்கள். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...