ஊருக்கு ஒரு சிவம் அவசியம் - J K SIVAN
எனது நண்பர் ஸ்ரீ K G சிவம், ஒய்வு பெற்ற IRS அரசாங்க அதிகாரியைப் போல் நாம் எல்லோ
ரும் இருந்தால் இந்த நாட்டின் எத்தனையோ ஸ்தலங்களின் புகழ், பெருமை நாடளவில்,
உலகளவில் புகழ் வாய்ந்ததாக இருக்கும்.
சிவம் குத்தனூர்க்காரர். ராமாயணத்தில் வரும் வாலி பூஜை செய்து வணங்கிய ஸ்ரீ சௌந்தர்ய நாயகி சமேத வாலீஸ்வரர் ஆலயம் குத்தனூரில் உள்ளது. இந்த குத்தனூர், சரஸ்வதி ஆலயம் உள்ள ஒட்டக்கூத்தர் பிறந்த கூத்தனுர் அல்ல. அது சோழமண்டலம். இது திருவண்ணாமலை, வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள கிராமம். இங்கே கிட்டத்தட்ட இருநூறு வருஷங்களுக்கு முன் சின்னசாமி தாசர் என்ற மஹான் பிறந்திருக்கி றார். திரு. சிவம் நிறைய அலைந்து விஷயம் சேகரித்து அற்புதமாக சின்னசாமி தாஸரின் நூல்களைப்பற்றி விவரம் அளிக்கிறார். காளத்தி புராணத்தில் கண்ட வாலீஸ்வரர் இந்த குத்த னூர் சிவன் என்று தேடி கண்டுபிடித்து சிறு குறிப்பு தந்துள்ளார்.
குத்தனூர் வழியாக சென்றுகொண்டிருந்த வாலி அங்கே சோலைகள் மிகுந்த ஒரு இடத்தில் கொன்றை, வில்வமரங்கள் இருந்த ஒரு இடத்தில் தான் பூஜித்த சிவலிங்கத்தை பேழையில் இருந்து எடுத்து வெளியே வைத்துவிட்டு அருகே இருந்த தடாகத்தில் ஸ்னானம் செய்தபிறகு வழிபட்டு மீண்டும் சிவலிங்கத்தை பேழையில் வைக்க எடுத்தான். சிவன் நகரவில்லை. மிக பலசாலி வாலியால் லிங்கத்தை இம்மியும் அசைக்க முடியாமல் வாலால் கட்டி இழுத்தான். முடியவில்லை. லிங்கம் சற்றே சாய்ந்தது அவ்வளவு தான். இன்றும் வால் பட்ட தழும்பு கள் லிங்கத்தின் மேல் இருக்கிறது. அங்கேயே லிங்கம் பிரதிஷ்டை ஆகி நமக்கு வாலீஸ்வரர் கிடைத்தார். வாலி குளித்த குளம் வில்வார்த் தேரி என்ற பெயரில் உள்ளது. இது நிறைய மூலிகைகள் கிடைக்கும் இடம்.
1957ல் மஹா பெரியவா இந்த ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்திருக் கிறார். வாலியால் சாய்ந்த லிங்கத்தை நேராக்க முயன்றபோதெல்லாம் ஸ்தபதிகள் தோல்வி கண்டனர்.
குத்தனூரில் உள்ள பெருமாள் ஸ்ரீ வேதவல்லி பத்மாவதி சமேத வேத நாராயண பெருமாள். இந்த ஆலயம் தோன்றியது சின்னசாமி தாசர் என்ற மஹான் மூலம். அவர் வாழ்ந்த காலம் 1828-1882. வேங்கடசுப்ரமணியன் என்ற அவர் பெயரை சின்னசாமியாக்கியது சந்நியாசியாக உருவெடுத்து சின்னசாமி என்ற தீக்ஷா நாமம் தந்த வாலீஸ்வரன்.
ஒரு முறை காஞ்சிபுரம் சென்று இரவு நேரம் ஊர் திரும்பிய போது ''என்ன சின்னசாமி என்னைப் பார்க்காமல் போகிறாய்'' என்று குரல் கேட்டது. மறுநாள் சூரிய வெளிச்சத்தில் நண்பர்களோடு அந்த இடத்திற்கு சென்று தேடி, தோண்டி பார்த்தபோது இரு தேவியருடன் மேலே சொன்ன வேதநாராயண பெருமாள் விக்ரஹமாக கிடைத்தார்.
சின்னசாமி தாசர் முயற்சியால் ஆலயம் 1855ல் ஆலயம் உருவாகியது. சின்ன சாமி தாசர் கிட்டத்தட்ட 300 கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். உதாரணத்துக்கு அற்புத பாடல்:
''தோட்டமொன்று போட்டோம், இதை துஷ்டர் கிட்ட ஓட்டமாட்டோம் '' (தோ )
வாட்டமில்லாத மாநஸஹாசத்தில் வாரி இறைக்கும் வகை செயது தீரத்தில் (தோ )
நரஹரி நாம கரும்பு- நட்டத்தை எந்நாளும் விரும்பும்,பிரஹலாதன் பேருக்கு குத்தகை,
பிரம்மாதி தேவர் அறியத்தந்திவ்வகை, (தோ )
ராமநாம திராக்ஷை - நடுவில் வைத்ததபேக்ஷை
வாமதேவன் சருவாணி காவலாக வைத்து கொத்தி சுற்றியணைத் தாவலாக (தோ )
கிருஷ்ண நாம ரசாலம் - கிட்டவைத்த தனுகூலம் விஷ்ணுராத குரு விர்த்தி பண்ணத்துய்ய வேதவ்யாஸன்
மேல் விசாரணை செய்யத் (தோ )
நாராயணா நாமசீனி - நாட்டியத் திலபிமானி பாராயணஞ் செய்யும் நாரத யோகி பக்தனுஞ் சின்ன சாமியுமன்பாகி (தோ )
சின்னசாமி தாசர் தோட்டம் மண்ணல்ல மனசு. இந்த விவசாயி மனத்தை சீர் படுத்தி, பக்தி நீர் வார்த்து, இனிய நினைவாக நாரயணனை கரும்பாக பயிரிட்டு அந்த பக்தியை கரும்பிலெடுத்த சர்க்கரையாக எல்லோருக்கும் கொடுத்து (பரப்பி )பிரம்மாதி தேவர்களுக்கு குத்தகை விடுகிறார். ராமநாமம் எனும் திராக்ஷை பயிராகிறது. எல்லோரும் இந்த சின்னசாமி தாசர் போன்ற விவசாயியை பின்பற்றினால் வீடு பேறு எனும் மோக்ஷம் அடையலாம்.
ஒரு அற்புத விஷயம். ஸ்ரீ குத்தனூர் K G சிவம் மற்றும் நண்பர்கள் ஊர்மக்கள் சேர்ந்து அருள்மிகு வாலீஸ்வர வேதநாராயண பூஜா அண்ட் சாரிடபிள் டிரஸ்ட் என்ற அமைப்பை நிறுவி பராமரித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் இது போல் சிவம்கள் தோன்றி அந்தந்த ஊர் பெருமையை ஆலய மஹிமையை எடுத்துச் சொல்ல வேண்டும். நமது கலாச்சாரம், மேன்மை தழைத்தோங்கும். பக்தி பெருகும்.
இந்த ஆலயத்துக்கு உதவ அது சம்பந்தமாக விபரம் தேடுவோர் அணுக: K G சிவம் 9443469810
No comments:
Post a Comment