ஒரு தூய கிருஷ்ணபக்தர். ---- J K SIVAN
அண்ணாநகர் நரசிம்மன் அமரரானார் என்ற சேதி நேற்று என்னை திகைக்க வைத்தது. திடீர் என்று ஒரு சிலரால் தான் பேசிக்கொண்டே இருக்கும்போது மரணமெய்த முடியும். இதைத்தான் அனாயாச மரணம் என்பார்கள். இவர்கள் நோய்வாய்ப்படுபவர்கள் அல்ல. பலகாலம் படுக்கையில் பலவித ஊசிகளோடு பீஷ்மராக படுபவர்கள் இல்லை. டாக்டரின் எதிரிகள்.
3.2.21 வழக்கம்போல் விடிந்தது. தன்னுடைய அன்றாட கடமைகளை நிறைவேற்றிவிட்டு மாலை தன்னுடைய மூத்த சகோதரி உடல்நலக்குறைவாக படுத்த படுக்கையாக இருப்பதால் அவளை சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் கூற தாம்பரம் சென்று,வழியில் கிரோம்பேட்டையில் இன்னொரு நெருங்கிய உறவினரைக் கண்டு பாசத்தோடு நாலு வார்த்தை பேசி, சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினார். சற்று படுக்கிறேன் உடல் என்னவோ போல் இருக்கிறது என்கிறார். மனைவி ஆம்புலன்ஸ் அழைத்து ஆஸ்பத்ரி செல்கிறார்கள்.
''என்னம்மா இறந்தவரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்களே ''' நரசிம்மன் வாழ்க்கைபயணம் வரும் வழியிலேயே முற்றுப்புள்ளி பெற்றுவிட்டதோ? அப்புறம் நரசிம்மன் செய்தியாக பலரை அடைந்தார்.
பூலோகத்தில் இந்தா உன் ப்ராரப்தம் கொஞ்சம் சஞ்சிதம் எல்லாம் எடுத்துக்கொண்டு இந்த ஜென்மத்துக்கான தீவினை நல்வினைப்பயன்களைத்துய்த்து திரும்பு. மற்றதை அடுத்ததாக உனக்கு ஏற்ற, தகுதியுள்ள, பிறவியில் தருகிறேன் என்று தான் கிருஷ்ணன் அனுப்பினான்.
நரசிம்மன் எல்லோருக்கும் உதவினார். ஒருவரும் குறை சொல்லாத அன்போடு பழகினார், தாராளமாக உதவினார். வந்த வேலை முடிந்த அடுத்த கணமே மறைந்தார். அவரது மறைவு ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா ட்ரஸ்டுக்கு ஒரு பெரிய இழப்பு
5.3.17ல் நாம் ஏற்பாடு பண்ணியது போல் இந்தவருஷமும் இன்னமும் ஜோராக ஒரு விழா பிரிந்தாரண்யம் கிருஷ்ணனுக்கு எடுப்போமா? என்று உற்சாகத்தோடு 2020ல் கேட்டது கொரோனா காதில் விழுந்து தள்ளிப்போட்டுவிட்டது. 2021ல் ஒரு திட்டம் மனதில் இருந்தது. அதற்கு நரசிம்மன் இனி இல்லையே.
5.3.17ல் என்ன நடந்தது என்று தெரியாதவர்களுக்கு :
5.3. 2017 அன்று விடியற்காலை எங்கள் ஊர் நங்கநல்லூரில் இருந்து ரெண்டு பஸ்கள் புறப்பட்டது. சென்னை
யை அடுத்த திருமால்பூர் போகும் வழியில் பள்ளூர் என்று ஒரு அமைதியான கிராமம். அதில் நுழைந்தால் இன்னும் சிறிய ஒரு கிராமத்திற்கு கொண்டு செல்லும். அதற்கு எதற்காக போகவேண்டும்.?
பிருந்தாரண்யம் என்று ஒரு சிறு துளசி செடிகள் வனமாக மலிந்த சூழலில் ஒரு குட்டி கிருஷ்ணன் கோவில் கொண்டு இருக்கிறானே. திரு நரசிம்மன் என்கிற சென்னை அண்ணாநகர் பக்தர் அமைத்திருக்கிறார். அந்த ப்ருந்தாரண்ய கிருஷ்ணனுக்கு அன்று வருஷாந்திர திருமஞ்சனம், அபிஷேகம், ஆரத்தி செய்ய ரெண்டு பஸ் நிறைய ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா குழு நண்பர்கள், ISKCON பக்தர்கள், எல்லோருமாக நிறைய துளசி, புஷ்பங்கள், பூஜை அர்ச்சனை, அபிஷேகத்துக்கு தேவையான சாமான்கள் எடுத்துக்கொண்டு சென்றோம். நரசிம்மன் ஒரு கோபூஜைக்கு ஏற்பாடு செயதிருந்தார். மதுராந்தகம் ஸ்ரீ ரகுவீர பட்டாச்சார்யாரை அழைத்து விசேஷ உபன்யாசம் கிருஷ்ணன் பற்றி செய்ய வைத்தோம். போதாதற்கு ஸ்ரீ ராதாகிருஷ்ணன் எனும் 400 பசுக்களை வைத்து கோவிந்தன் கோசாலை நடத்தும் அன்பரும் மதுராந்தகரம் அருகே இருக்கும் எண்டத்தூர் எனும் ஊரிலிருந்து வந்திருந்தார்.
அனைவருக்கும் காலை உணவு. தொடர்ந்து இதில் பங்கேற்க நாங்கள் அழைத்த மடிப்பாக்கம் ISKCON பஜனை ஸ்ரீனிவாசன் குழுவினரின் அற்புத க்ரிஷ்ணநாம சங்கீர்த்தனம்.
அப்புறம் கோபூஜை, பிருந்தாரண்ய க்ரிஷ்ணனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்ய அருகில் இருக்கும் ராமர் கோவில் நிர்வாகிகள் பட்டாச்சார்யர்கள் வந்திருந்து ரகுவீரருக்கும் உதவினார்கள். தொடர்ந்து கோமஹிமை பற்றி ஸ்ரீ ராதா கிருஷ்ணன், கிருஷ்ணன் மஹிமை பற்றி ரகுவீர பட்டாச்சாரியார் ஆகியோர் பேசினார்கள். ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் செய்யும் சேவைகள் பற்றி நானும் பேசினேன். மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பிறகு அருகில் இருந்த கிராமப் பள்ளி சிறுவர் சிறுமிகளை எல்லாம் அழைத்து அனைவருக்கும் ஒரு சிறிய வினாவிடை நிகழ்ச்சி நடத்தினோம். அவர்கள் அத்தனைபேருக்கும் எழுதும் கருவிகள், பென்சில், பேனா, நோட்டுப்புத்தகங்கள் எல்லாம் நரசிம்மன் வழங்கினார். அன்று மாலை தான் ரகுவீர பட்டாச்சார்யார் கைகளால் நான் எழுதிய ''அவசர கேள்வியும், அவசிய பதிலும் '' என்ற யக்ஷ ப்ரச்னம் நூல் வெளியிடப்பட்டு அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. ஆங்கிலத்திலும் பின்னர் ETERNAL QUESTIONS AND EVERLASTING ANSWERS என்ற பெயரில் அதை எழுதி வெளியிட்டேன்.
ஸ்ரீ நரசிம்மன் ஸ்ரீ கிருஷ்ணன் தாமரைப்பாதங்களில் இளைப்பாறிக்கொண்டு நம்மை எல்லாம் ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை
No comments:
Post a Comment