Wednesday, February 24, 2021

பத்ரகிரியார்

 


பத்ரகிரியார் --  நங்கநல்லூர்  J K   SIVAN 

           ஒரு  ராஜா குமுறுகிறான்   
                       
பத்ரகிரியார்  எனும்  துறவி தான்  ஒருகாலத்தில்   வடக்கே  உஜ்ஜயினி  ராஜா  பர்த்ருஹரி என்பவன். விக்ரமாதித்தனின் சகோதரனாக  இருந்து, மனைவியின் துரோகத்தால் வாழ்க்கை அரசு எல்லாம் வெறுத்து சன்யாசியாகி  நடையாய்    நடந்து  தெற்கே  திருவிடை மருதூரில் பட்டினத்தாரைப்  பார்த்து அவர் சிஷ்யனாகி, தமிழ்  நன்றாக பேச,   எழுத,   பாட,   வந்து,  தனது மனக்குமுறலை  எழுதி வைத்தது  தான் ''பத்திரகிரியார்  புலம்பல் என்று படிக்கிறோம்.  இந்த புலம்பல் அவனது சொந்த வருத்தமல்ல.  நமக்கும் சேர்த்தே முன்பே  அவன்  புலம்பி இருக்கிறான்.   எக்காலத்திலும் எல்லோருக்கும்  பொருத்தமானதை அழகாக  நிறைவேறுவது  ''எக்காலம்?   எக்காலம்?  '' என்று முடியும்படியாகவே  புலம்பி  இருக்கிறார்  பத்ரகிரி யார். 
இன்று காலையிலேயே  கொஞ்சம் புலம்புவோம்.   
ராஜாவின்  தமிழ்  ரொம்ப  சிம்பிளாக புரியும்படியாகவே  உள்ளது. . 

''மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்;
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்?''

என்றைக்கு  நான்  எல்லோரையும்  என்னைப்போல நினைப்பேன். என்று அஹிம்சாவாதியாக உண்மையாக வே இருப்பேன்?

''பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்;
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்? ''

( ''அவனா, படுபாவி ஆயிற்றே  என்ற பெயர் வாங்கி பலர் சாபத்தை பெற்று எண்ணைக்  கொப்பரையில்  அப்பளம்  ஆகாமல் ஆத்மாவை நாடி புரிந்துகொண்டு  ஞானமார்க்கம் அடைவது எப்போதப்பா?''

உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்?

கல் செதுக்கபட்டால் விக்ரஹம்.   செதுக்காவிட்டால்  வாசல்படி. மெழுகு, பதமாக வளைக்கப்பட்டால்  உருவம், அழுக்கு சொம்பின் மீது புளி தேய்த்தால் தான்  பள பளா . என் நெஞ்சு இருளடைந்து கிடக்கிறதே  ஞானம் பெற்று  இதுபோல் ஒளிவிடுவது எப்போது?

''வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம்?''

அரசனாக இருந்து நான் அனுபவித்த  ஜிலு ஜிலு, பள  பள  ஜிகினா அந்தஸ்து, மாலை,  மரியாதை, பொய்  பகட்டு கர்வம்  போதும் போதும்.  இதெல்லாம் நான் என்றைக்கு   மனதிலிருந்து அகற்றி  மறந்து உன்னை நினைப்பது?

பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம்?

விலையுயர்ந்த  தங்க ஜரிகை தலைப்பாகை, அங்கி, மாலை  மணியாரம், ஸலாம்  போட  நிறைய  ஆட்கள்,  என்னை மதிப்பது  போல்  என் முன்னே நடிக்கும்  கும்பல்  இந்த  பாபங்களை எல்லாம் துறந்துவிட்டு உன் திருப்பாதம் மட்டுமே  கதி என்று என்றைக்கு விருப்பம் கொள்வேன் தெரியவில்லையே?''

''ஆமை  வரும் ஆள் கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்?''

ஆஹா,   இந்த  ஆமை மெதுவாக  போய்க்கொண்டிருக்கிறது.  யாரவது எதிர்பட்டால், தலை கால்களை  ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்கிறதே. அதைப்  போல்  நான் பேச்சை அறவே ஒழித்து, மௌனமாக  ஆத்ம சிந்தனையில்  இந்த ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் இருந்து  என்னை  உள்ளே இழுத்துக்கொண்டு சுருங்குவது  எப்போதப்பா? சொல்?''

 ''தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும்
கண்டு களிக்கும் கருத்தொழிவது எக்காலம்?

மாட மாளிகை , கூட கோபுரம்,  பல்லாக்கு,விசிறி, என்னை வணங்கும் கும்பல் இதிலெல்லாம் சந்தோஷப்பட்டேன், இந்த  பொய் வாழ்க்கை எண்ணம் மனதிலிருந்து  ஒழிவது எப்போதப்பா?''

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம்
செத்த சவம்போல் திரிவதினி எக்காலம்?

என்னப்பா  சிவனே, நீ  எங்கே இருக்கிறாய்?  உன்னைத்   தேடி அலைந்து, அதுவரை இந்த உலக வாழ்க்கையை  விட்டு  விலகி, உலக சம்பந்தமில்லாத  இறந்துபோனவனின்   உடலைப்போல  திரிந்து கொண்டிருப்பது எப்போதப்பா?

'அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோளறுப்பது எக்காலம்?

 ''உலகே  மாயம் வாழ்வே மாயம்''   அர்த்தம் புரிந்து பாடிக்கொண்டு  என் அறிவை உபயோகித்து அதன் மூலம் பேரறிவான உன்னை புரிந்து கொண்டு,  மீண்டும்  மீண்டும்  உலகில் பிறக்கும்  என்  வினையை முடித்துக் கொள்வது எப்போது?
தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...