மொத்த நிலம் எனக்கே.. J K SIVAN
ஒரு பட்டணத்து அக்கா பட்டிக்காட்டு தங்கை யை பார்க்க வந்தவள் பட்டண வாழ்க்கை சுகத்தை பற்றி பெருமை பீற்றிக்கொள்கிறாள்.
''சீ இங்கே யார் இருப்பா? ஒரு சினிமா, கடை கண்ணி , பஸ் , துணிமணி, பொழுது போக்கு ஒரு மண்ணாங் கட்டியும் இல்லை. திரும்ப திரும்ப கோவில், குளம், சந்தை, மாந்தோப்பு, குடிசை வீடுகள்..கொசு, மாடு ஆடு மாட்டுவண்டி... என்ன வாழ்க்கை இது?''
''நீ நினைக்கிற மாதிரி ஒண்ணும் இல்லே இங்கே. என்ன அமைதியான வாழ்க்கை, சுதந்திரமான வாழ்க்கை, சுகமான சுத்தமான காற்று, பறவைக ளின் சப்த ஜாலங்கள், தெய்வீக வாழ்க்கை. மனதுக்கு திருப்தியாக எங்களுக்கு தேவையான எல்லாம் இங்கே நிறைய கிடைக்கிறது. நாங்கள் கஜகஜ வென்று கும்பலில் வியாதி யில், நெரிச லில் வாழும் பட்டண வாழ்க்கை பிடிக்காத வர்கள்.
இரு சகோதரிகளும் மாற்றி மாற்றி பட்டண, கிராம வாழ்க்கையின் லாப நஷ்டங்கள் பேசுவதையெல்லாம் தங்கையின் கணவன் பாலு, கேட்டுக்கொண்டு படுத்துக் கொண்டி ருந்தான். தனது மனைவி கிராம வாழ்க்கையின் சிறப்பை சொல்வது வாஸ்தவம் தான். உழைத்து இன்னும் கூட முன்னேறலாம். நமக்கு இன்னும் நிறைய நிலம் இல்லையே, சொல்ப நிலத்தில் பயிரிட்டு என்ன பெரிதாக சம்பாதித்து வாழ முடியும் என்று தோன்றியது.
அந்த கிராம எல்லையில் ஒரு பணக்காரி. முன்னூறு ஏக்கர் நிலத்துக்கு மேல் சொந்தக்காரி. கண்டிப்பான பண்ணையாரம்மா. பாலுவின் ஆடு, மாடு, கோழி, பன்றி எப்போதும் அந்த நிலத் தில் அத்துமீறி நுழைந்து பயிர்களை நாசம் பண்ணி அவன் அவளுக்கு அபராதம் செலுத்து வது வழக்கமான ஒரு செயல்.
குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. ஆடு மாடு விலங் குகள் வெளியே அதிகம் செல்லாமல் கொட்டகையிலேயே இருந்து அவன் கொடுக்கும் ஆகாரத்தில் வாழ்ந்தன. காற்று வாக்கில் சேதி காதில் விழுந்தது. பண்ணை யாரம்மா நிலத்தை எல்லாம் விற்கப்போகிறாள், யாரோ ஒரு ஹோட்டல் கார முதலாளி வாங்க பேரம் பேசுகிறாராம். அவர் சொந்தக்காரர் ஆகி விட்டால் அவரது ஆட்கள் எவ்வளவு அபராதம் கேட்பார் களோ?வேலை செய்யும் பண்ணையாட் கள் ஒன்று சேர்ந்து,
''எஜமானியம்மா, ஓட்டல் காரருக்கு விற்காதீர்கள். எங்களுக்கே நிலத்தை கொடுத்து விடுங்கள், நாங்கள் பணம் திரட்டி கொடுக்கிறோம்'' என்கி றார்கள். மொத்தமாக வாங்க அவர்களுக் குள் ஒற்றுமை இல்லை. ஆகவே தனித்தனியாக பண்ணையாரம்மாளிடம் நிலம் கேட்டார்கள்.
பாலுவின் பக்கத்து வீட்டுக்காரன் ஐம்பது ஏக்கர் பேரம் பேசி வாங்கினான். பாதி பணம் ரொக்கம். மீதி பாதி கடன். ஒருவருஷத்தில் திருப்ப பண்ணையாரம்மா ஒப்புக்கொண்டுவிட்டாள் .பாலு மனைவியை கலந்தாலோசித்தான்.
''பிச்சம்மா இதோ பார் ஒவ்வொரு பயலும் பண்ணை யாரம்மாவிடம் கொஞ்சம் கொஞ்ச மாக நிலத்தை வாங்குறான். நாமும் சூட்டோடு சூடாக ஒரு இருபது ஏக்கர் வாங்கிப்போடணும். அப்புறம் ஒண்ணும் தேறாது''
அந்த காலத்தில் நூறு ரூபாய் பெரிது. பாலுவிடம் சேமிப்பு 100 ரூபாய் இருந்தது. அது போதாதே, ஒரு குதிரைக் குட்டியை விற்றான். தேனீக்களை விற்றான். தன் மகனை ஒரு பண்ணையில் வேலைக் கு சேர்த்து அட்வான்ஸ் வாங்கினான். அக்காள் புருஷனிடம் கடன் தொகை கொஞ்சம் வாங்கினான். பண்ணையா ரம்மாவுக்கு கொடுக்கவேண்டிய தொகையில் பாதி சேர்ந்து விட்டது. நாற்பது ஏக்கர் நிலம் பேரம் பேசி வாங்கலாம். அதில் பாதி காடு. மரங்கள் தான் அதிகம். விலை குறைத்து கேட்கலாம்'' என்று எண்ணம்.
நைச்சியமாக பேசி பண்ணையாரம்மா பாதி பணம் இப்போதும் மீதி ரெண்டு வருஷத்தில் வட்டியோடு வாங்கிக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்தாள் . பாலு இப்போது நாற்பது ஏக்கர் முதலாளி.பாடுபட்டு விதைத்து நீரூற்றி உழைத் தான். ஒருவருஷத்தில் நல்ல விளைச்சல். கடன் களை எல்லாம் தீர்த்தான். பாலு இப்போது குட்டி பண்ணையார். மரங்களை வெட்டி விற்றான். ஆடு மாடுகள் அதிகமாயின. விளைச் சல் நிலம் கூடியது. பாடு பட்டு உழைத்ததற்கு கை மேல் பலன். அக்காள் புருஷன் கடன் அடைத்து விட்டான். செடிகளில் பூக்கள், நீரோடை, அவன் மனதுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவன் வாங்கியபோது வெறும் காடாக இருந்தது இப்போது கழனிகளாகிவிட்டது.
மற்றவர்களின் குதிரைகள் , மாடுகள் வந்து பாலுவின் நிலத்தில் மேய ஆரம்பித்து விட்டன. விரட்டி விட்டானே ஒழிய அபராதம் விதிக்க வில்லை. சிலர் பாலுவின் காட்டில் மரங்களை திருட்டுத்தனமாக வெட்டினர். பாலு கோவிந்தன் மீது பிராது கொடுத்தான். ருசு இல்லாததால் கிராம பஞ்சாயத்து கோவிந்த னை நிரபராதி என விடுவித்ததில் பாலுவுக்கு கோபம் அதிகமாகி யது. பாலுவின் வீட்டை கொளுத்துகிறேன் என்று கரு கட்டினான் கோவிந்தன். மொத்தத்தில் அதிக நிலம் வந்தபின் பாலுக்கு முன்பிருந்த அமைதி போய்விட்டது. ஊரில் பழைய நல்ல பேரும் இல்லை. விரோதிகள் தான் அதிகம்.
கிராமத்தில் நிறைய பேர் வேறு ஊருக்கு செல்ல தொடங்கியபோது பாலுவுக்கு போக பிடிக்க வில்லை. போகிறவர்கள் நிலங்களை பேரம் பேசி வாங்கினால் அவனது பண்ணை இன்னும் பெரிதாகுமே
.
ஒருநாள் வேரூர்க்காரன் ஒருவன் வந்து பாலுவின் வீட்டில் தங்கினான். சாப்பிட்டு விட்டு இருவரும் பேசினார்கள். பாலு அவனிடம் ''நீ எங்கிருந்து வருகிறாய்?'' என கேட்டான்..
''வடக்கே முன்னூறு மைலுக்கு அப்பால். ரொம்ப தூரம். அங்கே நிலமெல்லாம் விற்கிறார்கள். உங்க ஊரிலிருந்து சிலர் அங்கே வந்து ஆளுக்கு 25 ஏக்கர் நிலம் கூட வாங்கி இருக்கிறார்கள். பொன் விளையும் பூமி. விலை கம்மி. விளைச்சல் அதிகம். வெறும் கையோடு வந்த ஒரு விவசாயி இப்போது ஆறு குதிரை மூன்று மாடு , ஒரு வீடு , வைத்திருக்கிறான்''.
பாலுவுக்கு ஆசைத்தீ உள்ளே வளர்ந்தது. இந்த நிலத்தை, சொத்தை விற்று அங்கே நிறைய வாங்கவேண்டும். முதலில் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினான். பார்த்தான். ரொம்ப பிடித்ததால் ஊருக்கு வந்து நிலம் சொத்து எல்லாம் விற்று குடும்பத்தோடு அக்கரைச் சீமைக்கு கிளம்பிவிட்டான். 125 ஏக்கர் அவனுக்கும் பிள்ளைக்கும் சேர்த்து வாங்கி நிறைய குதிரைகள், வண்டி, ஆடு மாடு எல்லாம் வாங்கி முன்னைவிட பத்து மடங்கு பெரிய பண்ணையார் பாலு இப்போது. அத்தனை நிலத்தில் சோளம் கம்பு தினை நன்றாக விளைந்து இன்னும் நிலம் வேண்டுமே என்ன செய்யலாம்? குத்தகைக்கு சில நிலங்களை பேசி பயிரிட்டான். நன்றாக விளைச்சல் அறுவடை நேரம் குத்தகை முடிந்து அவன் உழைப்பு வீணானது பிடிக்கவில்லை. நமக்கே இன்னும் நிலமிருந்தால் இந்த கதி வராதே.
ராமசாமி 150 ஏக்கரை விற்கப்போகிறான் என்று கேள்விப்பட்டு வனிடம் பேசி 3000 ரூபாய்க்கு வியாபாரம் படிந்த சமயம். பாதி இப்போ மீதி ரெண்டு வருஷம் கழித்து கடன் தீர்க்க லாம் .வியாபாரம் முடியும் சமயம் ஒரு விருந்தாளி வந்தான். வந்தவன் நிலம் விற்று தரும் கமிஷன் வியாபாரி.
''இதுக்கு எதற்கு அத்தனை ரூபாய் கொடுக்கி றாய் ? எங்க ஊர் பக்கம் இதில் பாதி விலைக்கு 250 ஏக்கர் நிலம் கிடைக்குமே. குபேர பூமி. அந்த நில சொந்தக்காரர்களோடு நட்போடு பழகி னால் சல்லிசான விலைக்கு தருவார்கள் . நான் என்ன செய்தேன் தெரியுமா ஒரு டப்பா டீ தூள் ரெண்டு பெரிய போர்வை, ஒரு ஜோடி செருப்பு கொடுதததற்கு ஒரு நில சொந்தக்காரன் எனக்கு நூறு ஏக்கர் நிலம் ஒரு ஏக்கர் பதினைந்து ரூபாய் க்கு கொடுத்தான். நிலங்கள் ஆற்றுப்படுகையில் நிறைய இருப்பதால் விளைச்சல் அமோகம். தண்ணீர் அதிகம் ஊற்றவேண்டாம்'' என்றான் விருந்தாளி.
பாலுவின் ஆசை கொழுந்து விட்டெறிந்தது. பாலு அந்த தூர தேச நிலத்தை எப்படியாவது வாங்கி விட தீர்மானித்தான். கொடுத்த காசுக்கு பத்து மடங்கு அதிக நிலம் கொள்ளை கொள்ளையாக கிடைத்தால் விடலாமா? குடும்பத்தோடு கிளம்பி வழியே நிறைய டீ டப்பாக்கள், செருப்புகள், போர்வைகள் வாங்கி கொண்டான்.
நடந்து 7ம் நாள் அந்த ஊர் வந்து சேர்ந்தார்கள். அந்த ஊர் பாஷை தெரிந்த ஒருவன் ஊர் பிரமுகர்களுக்கு பாலுவை அறிமுகம் செய்து, பாலு வையும் அவன் கொண்டுவந்த பரிசுக ளையும் அவர்களுக்கு பிடித்து விட்டது. பாலுவுக்கு நிலம் விற்க முடிவாகியது . அவன் கொடுக்கும் காசுக்கு அவன் கைகாட்டும் அளவுக்கு நிலம் தர தீர்மானித்தார்கள். அந்த ஊர் தலைவன் பாலு பேசும் பாஷை தெரிந்தவன். அவன் பரிசுகளை பெற்று மகிழ்ந்து
''பாலு உனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ அதை எடுத்துக் கொள். எங்களிடம் நிலம் அளவில்லாமல் இருக்கிறது.''''ஏதாவது ஒரு அளவு வேண்டுமல்லவா? நான் எவ்வளவு நிலம் எடுத்துக் கொள்வது?'' என்று பவ்யமாக பாலு பதில் சொன்னான்
''ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும்''
''இங்கே நாங்கள் அப்படித்தான் நிலத்தை விற்கும் வழக்கம். ஒரு நாள் நீ சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை எவ்வளவு தூரம் நடக்கிறாயோ அவ்வளவு நிலம் உனக்கு
''அப்படியென்றால் நிறைய நிலம் கிடைக்குமே'' -- பாலு
''ஆஹா, அதனால் என்ன பரவாயில்லை. எங்களு க்கு எந்த நஷடமும் இல்லை '' -- தலைவன்
''கையில் ஒரு மண்வெட்டி எடுத்துக்கொண்டு போ அங்கங்கே திரும்பும்போது முனையில் மண் வெட்டியால் ஒரு பள்ளம் செதுக்கி அடை யாளம் வை. திரும்பி வரும்போது எத்தனை நிலம் நீ அடையாளம் காட்டினாயோ அது உனக்கு
'''நான் நாளைக்கலையில் சூரிய உதயம் தயாராக இருக்கிறேன்.''என்றான் பாலு .
''ஒரு நாளைக்கு நான் முப்பத்தைந்து மைல் நடப்பேனே . பல ஏக்கர்கள் மடக்கிப் பிடிப்பேன்'' ராத்திரி முழுதும் கனவுகள் மாறி மாறி வந்தது. பாலு எப்போது பொழுது விடியும் என காத்திருந் தான்.
''பாலு இதோ எதிரே பார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கள் நிலம் தான். இதோ என் தொப்பி இது தான் ஆரம்ப அடையாளம். இங்கி ருந்து நீ செல். சாயந்திரம் அஸ்தமனம் முடியும் முன் இங்கே திரும்பி வரவேண்டும். அதுவரை நீ அடையாளம் செய்த இடம் உனக்கு. பாலு கையில் மண்வெட்டியோடு கிளம்பினான். விடுவிடுவென்று கிழக்கு நோக்கி நடந்தான். வெயில் ஏற என்ற அவன் நடை தளர்ந்தது. செருப்பு தொந்தரவாக இருக்கிறது என்று அதை கழற்றி எறிந்தான். இன்னும் வேகமாக நடந்தான். சீக்கிரம் வந்த இடத்துக்கு திரும்புமுன் எவ்வளவு தூரம் போகமுடியுமோ அவ்வளவு போனால் அத்தனை நிலமும் எனக்கு. சிறிது நேரத்தில் இடது பக்கம் திரும்பினான். அட அங்கே தூரத்தில் இன்னும் பசுமையான நிலம் இருக்கிறதே என்று அங்கே போனான். திரும்பி பார்த்தபோது ஆரம்பித்த இடத்தில் எறும்பு போல அவர்கள் நிற்பது தெரிந்தது. ரொம்ப தூரம் இந்த பக்கம் வந்துவிட்டேன். திரும்ப வேண்டு மே என்று இன்னொரு பக்கம் திரும்பி நடந்தான். வியர்க்க விறுவிறுக்க நடையை கட்டினான். அங்கே ஒரு அடையாளம் தோண்டி விட்டு திரும்பி நடந்தான். கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. தாகம். களைப்பாக இருந்தும் மேலே மேலே நடந்தான். எங்கேயாவது களைப் புக்கு உட்கார்ந்து அப்படியே தூங்கிவிட்டால் அத்தனை முயற்சியும் வீணாகிவிடுமே ? நேரம் வீணாக்காமல் நடக்கவேண்டும். மறுபடியும் சற்று கிழக்கே ஒரு அருமையான நிலம் இருப்பதை விடலாமா. அங்கே சென்று ஒரு குழி தோண்டினான்.
சூரியன் மேற்கே நகர ஆரம்பித்தான். பாலு மூச்சை கையில் பிடித்துக்கொண்டு வேகமாக நடந்தான். நடந்தால் திரும்பி ஆரம்பத்தை அடைய முடியாது போல் இருக்கிறதே என்று தாகத்தோடு, பசியோடு, களைப்போடு ஓடினான். உதடுகள் காய்ந்துவிட்டன.சட்டையை கழட்டி எறிந்தான். எதிரே பார்த்த்தபோது ஆரம்ப எல்லா வெகு தூரத்தில் இருக்கிறதே.
''சீக்கிரம் வாடா'' பொழுது சாயப்போகிறது என்று நண்பர்கள் அங்கிருந்து கத்தினார்கள்.
சூரியன் சிகப்பாக கீழே இறங்குகிறான். பூமியைத் தொட சில நிமிஷங்கள் உள்ளன. பாலு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வெகு வேகமாக ஓடி வருகிறான்.
'
'சீக்கிரம் வந்து சேர் வா. கோட்டை விடாதே'' .... ஆரம்ப எல்லையிலிருந்து கத்துகிறார்கள். தரையில் தொப்பி தெரிகிறது. இன்னும் கொஞ் சம் தூரம் ஓடவேண்டும். இதோ இன்னும் சில அடி தூரத்தில் தொப்பி அதன்மேல் அவன் வைத்த பணம்.....
அதற்குள் அவன் வாயிலிருந்து சிவப்பாக ரத்தம் கொதித்து வெளியே வழிந்தது. கண்கள் மயங்கி யது. பாலுவுக்கு உலகம் சுழன்றது மூச்சு தடை பட்டது. ஹா என்று சப்தம். பாலு உயிரற்று தரையில் விழுந்தான். ஆறடி ஏழடி தூரத்தில் தொப்பி அவன் ஆரம்ப ஸ்தலம்.. அதை தொட்டிருந் தால் அத்தனை நிலமும் அவனுக்கு......
அவன் கையிலிருந்த மண்வெட்டி குழிவெட்ட பயன்பட்டது. ஆறடி மண் பள்ளம் தோன்றி பாலு அதில்அமைதியாக இறக்கப்பட்டான். அவனுக்கு தேவைப்பட்ட நிலம் ஆறு அடிக்கு மூன்று அடி நீள நிலம் தானோ ? இது டால்ஸ்டாய் எழுதிய ''HOW MUCH LAND DOES A MAN NEED?''சிறுகதையின் தமிழ் வடிவம்.
No comments:
Post a Comment