Saturday, February 13, 2021

CHANAKYA

 

             சந்திரகுப்த மௌர்யன். --    J K  SIVAN 


நம்மைப்போல  அனுபவ  சாலிகளை  உலகிலே எங்குமே  பார்க்க முடியாது.   நமக்கு எத்தனை ராஜாக்கள், கைகட்டி அனைவருக்கும்  இன்று மாலை வரை நமஸ்காரம் செய்து கிடைத்ததை  உண்டு வீராவேசமாக  டயலாக் நம் ஒருவரால் தான் பேசமுடியும். அப்படி நம்மை ஆண்டவர்களில் ஒரு வம்சத்தினர்  மௌரியர்கள்.  அந்த சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவன் சந்திரகுப்தன். குட்டி குட்டியாக  இருந்த  நாடுகளை வென்று இணைத்து ஒரு மஹா பெரிய சாம்ராஜ்யமாக ஆக்கியவன்.   அவனுக்கு இப்படி வெற்றிகரமாக  அறிவுரைகளை போதித்து  அவனது சாம்ராஜ்ய வளர்ச்சிக்கு   ஆதாரமாக, அச்சாணியாக இருந்தவர்  கௌடில்யர் எனும் சாணக்கியர். சந்திரகுப்தனுக்கு முன்பு   நந்தர்கள் எனும் வம்ச ராஜாக்கள் ஆண்டு கொண்டிருந்தபோது அவர்களை வென்று சந்திரகுப்தன் அரசனானான்.  23 வருஷம்  ராஜாவாக இருந்து பிறகு ஜைன துறவியானான்.   அந்த  பௌத்த மதம்  வளர்ந்து வந்தது.  அன்ன பானம் எதுவும் உண்ணாமல் உபவாசமாக இருந்து உயிரை விடும்   ''சல்லேகனா '' என்ற தீவிர உபவாசம் வழக்கத்தில் இருந்தது.  சந்திரகுப்தன்  இந்த உபவாசம் இருந்து மறைந்தான். 

சந்திரகுப்தன் ஒரு நந்தராஜாவுக்கும்  முரா என்ற அவனது பணிப்பெண்ணுக்கு பிறந்த  ஒரு சாதாரண ஏழை  குடிமகன்.   அவனை பெற்றோர்கள் கைவிட  காட்டில் எப்படியோ  யாரோ ஒரு  குடியானவன் குடும்பம் அவனை வளர்த்து  பின்னர் அவன்  கௌடில்யர் எனும்  ப்ராமணரிடம்  குருகுலவாசம் செயது கல்வி கற்கிறான்.  

 தாய் பேரைச்சொல்லி அடையாளம் காட்டும் வழக்கம் அப்போதும் உண்டு.   முரா மகன் மௌர்யன். அதை சந்திரகுப்தனுடைய பேரோடு சேர்த்து  அழைத்தார்கள்.  மௌர்ய வம்ச பரம்பரை வளர்ந்தது. எங்கோ சாதாரணமாக வாழ்ந்த அவன் வாழ்வில்  ஒரு  அற்புத திருப்பம்.  சாணக்கியன்  என்ற  வேத சாஸ்த்ர  நிபுணன் நண்பனானான். சந்திரகுப்தன் அவனிடம் கற்ற பாடங்கள் அவனை ஒரு சிறந்த சக்ரவர்த்தி யாக்கிற்று.

மகத நாட்டை அப்போது ஆண்டுகொண்டிருந்த நந்த வமிச ராஜாக்களின் போக்கு  சாணக்யனுக்கு பிடிக்கவில்லை. அவர்களிடமிருந்து ஆட்சியை மீட்க ஒரு சரியான  வீரனை தேடிக்கொண்டிருந்தவன் கண்களில் சந்திரகுப்தன்  நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்த போது தென்பட்டான்.  சாணக்கியன் அவனை கவனித்தான்.  விளையாடும்போது   கூட  மற்றவர்களை எப்படி  அதிகாரம் பண்ணி  தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு  விளையாடுகிறான்  என்பதை ரசித்தான்.   சந்திரகுப்தன்  மிருகங்க ளையும் கூட  தன் வசப்படுத்தும் சக்தி கொண்டவன் என்பதை அறிந்த சாணக்கியன் இவனை ஒரு சிறந்த தலைவனாக்கலாம்  என்று முடிவெடுத்தான். ஆகவே அவனை நெருங்கி  அவனுக்கு  சகல வித்தையையும் கற்றுக்கொடுத்தான். தக்ஷசீலத்துக்கு அழைத்து சென்றான்.  சாணக்கியன்  பொருள் சேர்த்து சரியான ஆட்களை பிடித்து  பயிற்சி கொடுத்து  ஒரு  பலமான படை தயாரித்தான்.  ஒருநாள்  நந்தவம்ச அரசன் வீழ்த்தப்பட்டான். சந்திரகுப்த மௌர்யன் மகத  நாட்டு அரசனானான். 

அந்த  கால கட்டத்தில்  அலெக்சாண்டரின் படைகள் இந்தியாவின் பல பகுதிகளை வென்று விட்டு  கிரீஸ் நாட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.  ஒரு  கணிசமான படையை இந்தியாவில் ஒரு  தளபதியின் பொறுப்பில் விட்டுவிட்டு  அலெக்சாண்டர் படையோடு  திரும்பிச் சென்றான்..  சாணக்கியன் இதைக்   கவனிக்க தவறவில்லை.   சந்திரகுப்தன் மற்ற  சில  அரசர்களோடு சேர்ந்து அலெக்சாண்டரின் கட்டுப்பாட்டில் இருந்த  பகுதிகளை வெல்ல சாணக்கியன் திட்டமிட்டு நிறைவேற்றினான். அலெக்சாண்டரின் தளபதி செலுக்கஸ்  கட்டுப்பாட்டில் இருந்த  சில  நாடுகளின்  படைகளை படபடவென்று  தோற்கடித்து   மகத அரசை  பலப்படுத்தினான்  சாணக்கியன். கிரேக்க தளபதி செலுக்கஸ் நிகேடார்  தோல்வியடைந்தான். மகத சாம்ராஜ்யம்   பெரிய  சக்தியாக வளர்ந்து சந்திரகுப்த மௌர்யன் இந்த நாட்டின்   சக்ரவர்த்தியானான் . செலுக்கஸ் தனது பெண்ணை சந்திரகுப்தனுக்கு  மனைவியாக்கினான்.  செலுக்கஸ் உதவியோடு  சந்திரகுப்த மௌரிய சாம்ராஜ்யம்  தெற்கு ஆசியாவில் பெரிய நாடாக பெருகியது. அலெக்சாண்டரின் சாம்ராஜ்யத்துக்கு அடுத்த மிகப்பெரிய  நமது நாடு மௌரிய சாம்ராஜ்யமாக  திகழ்ந்தது.   தமிழ்நாடு, கேரளா  தவிர  மற்ற பகுதிகள் எல்லாம்  அப்போது  மௌர்ய சாம்ராஜ்யத்தில் அடக்கம்  என்றால்  யோசியுங்கள்.

ராஜ ரீக சாஸ்த்ர நீதியில்  எவ்வளவு தலை சிறந்தவன் சாணக்கியன் என்பதை இன்றும் அவனது அர்த்த சாஸ்திரம் நூலை படிக்கும்போது அவன் எப்படி நுணுக்கமாக  சிந்திப்பவன் என்று புரிகிறது.  ரொம்ப கெட்டிக்காரனை சாணக்கியன் என்கிறோம்.  அவனைப்பற்றி ஒரு தனி கட்டுரை எழுதப்போகிறேன்.

சரித்திரம் ஒரு பாடமாக பள்ளியில் படிக்கும்போது  வேறு வழியில்லையே தப்ப என்று படித்தோம். இப்போது திரும்பி பார்க்கும்போது நமது பாதை எவ்வளவு நீண்டது எத்தனை சறுக்கல்கள், எவ்வளவு வீர சாகசங்கள், எவ்வளவு  பேர் திறமைகள், தோல்விகள்  வெற்றிகள், அக்கிரமம், அநியாயம், நேர்மை தர்மம் எல்லாம் புரிகிறது அல்லவா?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...