ஒரு செட்டியார் வீட்டு கல்யாணம் - 4 நங்கநல்லூர் J K SIVAN
மூன்றாம் நாள் கோலாகலம்...
பழைய டயரியை புரட்டுகிறேன். இதோ தேடிய தேதி 11.9.1943. கண்ணை மூடிக்கொண்டு நாம் 78 வருஷங்கள் பின்னோக்கி செல்கிறோம்
இதோ இன்னும் நாம் கோட்டையூரில் செட்டியார் மாளிகையில் தான் இருக்கிறோம் . இங்கே வந்து இன்று மூன்றாவது நாள். அழகப்ப செட்டியார் பெண் உமையாள் கல்யாணம் நேற்று விமரிசையாக நடந்து முடிந்தது. இன்னும் கூட்டம் கலையவில்லை. ஒரு சிலர் மட்டும் அவசர ஜோலியாக செல்லவேண்டியவர்கள் வில் வண்டியில் புறப்பட்டு விட்டார்கள். செட்டியார் பத்துக்கு மேல் ரெட்டை காளை பூட்டிய பெரிய வில் வண்டிகள், சாரட்டுகள், (குதிரைகள் இழுத்து செல்பவை) ஏற்பாடு செய்திருக்கிறாரே. எந்த ஊருக்குச் செல்லவேண்டுமோ அங்கேயோ, அல்லது போகும் வழியிலோ இறக்கிவிட. தயாராக நிற்கின்றனவே .
நேற்று நடந்த நிகழ்ச்சிகள் இன்னும் மனதில் நிற்கிறது. அதற்குள் பொழுது விடிந்து விட்டது. மொட்டை மாடியில் பந்தல் போட்டு நிறைய பேர் ஜமக்காளங்களில் இலவம்பஞ்சு தலைய ணைகள், போர்வைகளோடு படுத்துக் கொண்டி ருந்தோம். காலையில் எழுந்து ஆற்றங்கரைக்கு செல்கிறார்கள். குளித்துவிட்டு அருகே சிவன் கோவிலை சுற்றி விட்டு திருநீறு பூசிக்கொண்டு வருவோம்.
ஒரு விஷயம். இந்த கோட்டையூரில் அழகப்ப செட்டியார் மாளிகை அருகே இருக்கும் நகர சிவன் கோவில் வேறு. எட்டு ஒன்பது கி.மீ. தள்ளி இருக்கும் மாத்தூர் ஐந்நூற்றீஸ்வரர் ஆலயம் வேறு. அது தான் செட்டியாரின் குலதெய்வம் .கோட்டையூர் சிவன் கோவில் கூட பிரம்மாண் டமானது.
அடுத்த கிராமத்துக்கு ஏன் மாத்தூர் என்று பெயர்? அதற்கு ஒரு சின்ன கதை சொல்ல கொங்கண சித்தரை போய் அழைத்துக் கொண்டு வருகிறேன். அவர் அந்த சிவன் ஆலயத்தில் தான் ரஸவாத சித்து அறிந்தார். சில மூலிகைச் செடி கொடிகளின் வேர்களை பித்தளை இரும்பு சாமான் மேல் தேய்த்தால் அது பத்தரை மாத்து தங்கமாயிற்று. கொங்கணர் பண ஆசை கொண்டவர் அல்ல. எதற்காவது உபயோகமாகட்டுமே என்று ஐந்நூறு இரும்பு பாளங்கள் மீது மூலிகை வேர்களை தேய்த்து ஐநூறு தங்கப்பாளங்கள் உருவாக்கினார். அந்த நேரம் பார்த்து அவருக்கு தாகம். தண்ணீர் தேடினார். ஒரு சிறுவன் வந்து செம்புக் குடத்தில் தண்ணீர் தர அதைக் குடித்து தாகசாந்தி அடைந்தார். அந்த சிறுவன் போகிற போக்கில் காலால் அந்த ஐநூறு தங்கப்பாளங்களையும் வேர்களையும் உதைத்தான். அவை மீண்டும் பித்தளை இரும்பாயிற்று. நாமாக இருந்தால் அந்த பையனைத் தேடி கொலையே செயதிருப் போம். அந்தப் பையனும் திடீரென்று மறைந்து விட்டான். கொங்கணருக்கு வந்தது சிவன் என்று தெரிந்து தியானத்தில் ஆழ்ந்தார். ஐந்நூறு தங்கப் பாளங்களை ரசவாதத்தில் அளித்த சிவன் அதுமுதல் ஐந்நூற்றுஈஸ்வரர் என்றும் அந்த ஊர் பத்தரை மாத்து தங்கமாக பித்தளை இரும்பை மாற்றியதால் மாத்தூர் என்பது தான் பெயர்க்காரணம்.
இனி செட்டியாரின் கல்யாண மாளிகைக்குள் சென்று, காலை உணவை சுடச்சுட உண்டு காப்பியை விழுங்கிவிட்டு மண்டபத்தில் நுழையும் போதே பிரபல பாண்டு கோஷ்டி நாதமுனி அவர்களின் பாண்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. காலை 8.30க்கு ஆரம்பித்து விட்டார். நிறைய இங்கிலிஷ் வாத்தியங்கள் அக்காலத்தில் விரும்பி கேட்டார்கள். நான் தியாகராயநகர் பனகல் பார்க்கில் எட்டு ஒன்பது வயதில் சாயந்திரங்களில் கார்பொ ரேஷன் பாண்டு குழு நிகழ்ச்சிகள் கேட்டு மகிழ்ந்தவன். ஆனால் எனக்கு சங்கீத ஞானம் அப்போது கிடையாது. வெள்ளை யூனிபார்ம், தலையில் கலர் தொப்பி, இடுப்பில் கலர் SACHE காலில் செருப்பு. வட்டமாக நின்று வாசிப் பார்கள். நான் ஒருமுறை பெரிய பாண்டை கையால் தட்டினதற்கு அந்த ஆள் கெட்ட வார்த்தையில் திட்டினான். அதன் அர்த்தமும் அப்போது எனக்கு தெரியாது.
நாதமுனியோடு கிட்டத்தட்ட 20 பேர் இருந்தார் கள். ஒவ்வொருவரும் சிறிதும் பெரிதுமாக விசித்திர வாத்தியங்கள். குழல், டமாரம், தவில், புல்லாங்குழல், கிளாரினெட், ஹார்மோனியம், ஜால்ரா, அற்புதமான சப்தங்கள். தமிழ் பாடல்கள் நேயர் விருப்பமாக வாசித்து காட்டினார்கள்.
ஒன்பதரை மணிக்கு காலை அடுத்த நிகழ்ச்சி க்கு ஜாம்பவான்கள் வந்துவிட்டார்கள். பிரபல சங்கீத வித்வான் சாத்தூர் சுப்ரமணியத்துக்கு பக்கவாத்தியம் யார் தெரியுமா? மைசூர் ஸமஸ்தான வித்துவான் பிடில் செளடையா. திருவாங்கூர் சமஸ்தான வித்துவான் பழனி சுப்ரமணிய பிள்ளை மிருதங்கம், ஆலங்குடி ராமச்சந்திரன் கடம், வழக்கம்போல் மன்னார் குடி நடேச பிள்ளை மோர்சிங். சீதாபதே நா மனசுனா, கமாஸ் ராக ஆலாபனைகள் பிரமாதமாக சங்கதிகள் பேசின. தியாகராஜ ஸ்வாமிகள் அங்கு இருந்தால் என் பாட்டை பேஷாக பாடினாயே பலே பலே என்று புகழ்ந்திருப்பார்.தமிழ் பாட்டுகள் அதிகம் பாடினார்.
பகல் பன்னிரெண்டுக்கு இன்னும் ஒரு பிரபலம் வரப்போகிறார் என்று அனைவருக்கும் ஆனந்தம். அதில் பாதியில் எழுந்து வர மனசு வராதே. மலைப்பாம்பு மாதிரி காலை டிபன் அயிட்டங் களை இரை எடுத்தவர்கள் அடுத்த கச்சேரி முடிந்து ரெண்டு மணிக்கு சாப்பிடலாமே என்று அமர்ந்து விட்டார்கள்.
பன்னிரெண்டு மணிக்கு பாட மேடைக்கு வந்தவர்கள் பெண்கள் டீம். ஸ்ரீமதி லலிதாங்கி, அவர் மகள் வசந்தகுமாரி (MLV ) வயலின் வாசித்தவர் ஸ்ரீமதி அபிராம சுந்தரி, பெண் மிருத்ங்கிஸ்ட் திருமதி ஹம்ச தமயந்தி.
குறிப்பாக வசந்தகுமாரியின் குரல் அற்புதமாக இழைந்து நெஞ்சை தொட்டது. கல்யாணி, பிலஹரி ரெண்டும் அதி அற்புதம்.
மீண்டும் சொல்கிறேன். செட்டியார் வீட்டு சாப்பாட்டை வர்ணிக்க புறப்பட்டால் ஒரு தனி ப் புத்தகமே எழுத வேண்டி வரும் என்பதால் உங்கள் ஆசையை கிளப்பாமல் ரெண்டு மணி கச்சேரிக்கு நேரே போவோம். காத்திருங்கள்.
No comments:
Post a Comment