Saturday, February 6, 2021

 பேசும் தெய்வம்    J K  SIVAN 



  "ஸ்ஸ்...ரீ...ரா..ஆ.ஆ..ஆ..ம.. ஜ்..ஜய்ய்யம்ம்  


மஹா பெரியவா  நடந்தோ  மேனாவில் சென்றோ  தரிசிக்காத  சிவாலயம் இல்லை  என்று தாராளமாக சொல்லலாம்.     நாம்  செய்த நல்வினைப்பயன்  அவரது திருவடிகள்  இந்த  புண்ய பூமியில்  பல இடங்களில் பதிந்திருக்கிறது.   சில  ஸ்தலங்களுக்கு,  க்ஷேத்ரங்களுக்கு  செல்வதன் மூலம்  நாம்  மகான்களின்  அதிர்வலைகளை,  VIBRATION ஐ இன்றும் ஆங்காங்கே  பெறுகிறோம். அதனால்  தான்  மஹான்கள் வாழ்ந்த ,நடமாடிய பல க்ஷேத்ரங்களுக்கு   அடிக்கடி போகவேண்டும் என்று  சொல்வது.

ஆந்த்ரப்ரதேசத்தில்   எங்கோ ஒரு கிராமத்தில்   சில நாட்கள்  மஹா பெரியவா   முகாமிட்டிருந்த  சமயம்.  வழக்கம்போல  அவரது உபன்யாசத்தை கேட்க  பக்தர்கள்  கூடுவார்கள். மற்ற பண்டிதர்கள், விதவான்களும்  அவர்  முன்  சொற்பொழிவாற்றுவார்கள்.  

அன்று  மஹா பெரியவா  முன்பு   ஒரு உபன்யாசகர்  ராமாயணம் பிரவசனம் செய்தார்.  மிக அழகாக எளிமையாக ராம காவியத்தை அவர் சொன்னதை மஹா  பெரியவா  ரொம்ப  ரசித்தார்.   பாராட்டினார். 

இப்படி  ஒரு  பாராட்டை  பேசும் தெய்வத்திடம் இருந்து பெற்று மகிழ்ந்து,  நெகிழ்ந்துபோன உபன்யாசகர்,  சாஷ்டாங்கமாக பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். 

 "எழுந்திரு.  நீ இப்படி உபன்யாசம் செய்வது மட்டுமல்லாமல், இன்னொரு உபகாரமும் முன்பு செய்து கொண்டு இருந்தாயே, அதை இங்கேயும் செய்யலாமே"'' என்றார் மஹா பெரியவா..

அந்த உபன்யாசகர், தான் எங்கெல்லாம்  உபன்யாசம்  நிகழ்த்துகிறாரோ, அங்கெல்லாம்  கையோடு  கொண்டுவந்திருக்கும்  சின்னச் சின்ன  சில நோட்டுகளை  உபன்யாச நிகழ்ச்சி முடிந்ததும், அங்கே இருக்கும் சிறுவர் சிறுமிகளிடம் தந்து  ''இதில்  எல்லோரும்   ஸ்ரீராமஜயம் எழுதுங்கோ  '' என்று தருவார்.  

சமீப காலமாக   அவருக்கு ஒரு விரக்தி.   ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்லி எத்தனையோ   நோட்டு புத்தகங்கள் கொடுக்கிறேன்.   ஆனால்,  யாராவது  ஸ்ரத்தையோடு எழுதுகிறார்களா இல்லையா  என்று தெரியவில்லையே?   ஆகவே  இப்படி எழுதச் சொல்வதால் என்ன பிரயோஜனம் என்ற விரக்தி  அவருக்கு. 

பண்டிதர் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருப்பதை  மஹா பெரியவா  எப்படியோ தெரிந்து கொண்டதைக் கண்ட உபன்யாசகருக்கு ஆச்சரியம்!  பெரியவா தானாகவே  உத்தவிட்டதால்  ஸ்ரீராமஜயம் எழுதும்  நோட்டுகளை வழக்கத்தைவிட நிறையவே   அன்று  பிரசங்கம் முடிந்ததும்  குழந்தைகளுக்குக் கொடுத்தார்.

''இதோ பாருங்கோ குழந்தைகளே,   எல்லோரும் நாளைக்கு இதே நேரத்துக்குள் அந்த நோட்டு முழுக்க ஸ்ரீராமஜயம் எழுதிக் கொண்டு வந்து என்கிட்டே தரணும்!"  என்று  அறிவித்தார்    மஹா பெரியவா.  மறுநாள் 

எல்லாக் குழந்தைகளுமே ஸ்ரீராமஜயம் எழுதி முடித்த நோட்டுகளுடன் வந்து விட்டார்கள்.
அன்றைக்கும் உபன்யாசம் உண்டு என்பதால், உபன்யாசகரும் வந்திருந்தார்.
குழந்தைகள் வரிசையாக நின்று ஒவ்வொருவராக ஸ்ரீராமஜயம் நோட்டை பெரியவரிடம் சமர்ப்பிக்க, கல்கண்டு பிரசாதமும் வெள்ளிக்காசும் கொடுத்து ஆசிர்வதித்த பெரியவர், குறிப்பாக ஒரு பையன் வந்து நோட்டைத்   தன்னிடம் சமர்ப்பித்ததும் அவனை ஆதூரத்துடன் உற்றுப் பார்த்தார்.

"நோட்டு முழுக்க ஸ்ரீராமஜயம் எழுதியிருக்கியே, எங்கே ஸ்ரீராமஜயம்னு உரக்கச் சொல்லு பார்ப்போம்" என்று சொல்ல, அங்கே திடீரென்று அமைதி நிலவியது.

நோட் டை  மஹா பெரியவாளிடம்  தந்த சிறுவன் மிரள மிரள விழிக்க, "உன்னைத்தான் சொல்றேன். ஸ்ரீராம
ஜயம்''என்று  சொல்லு!".    
மறுபடியும்  அந்த பையனிடம் சொன்னார்,  பெரியவா. 

"பெரியவா...அவனால பேச முடியாது....!" பக்கத்தில்  இருந்த இன்னொரு சிறுவன் சொல்ல, அங்கே திடீரென்று ஒரு சலசலப்பு எழுந்தது.

சட்டென்று கையைச் சொடுக்கிய மகான், "கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்கோ... அந்தப் பையன் ஸ்ரீராமஜயம் சொல்லட்டும்!" கொஞ்சம் அழுத்தமாகவே சொல்ல, அங்கே பேரமைதி நிலவிய அந்த நிலையில் தான் நடந்தது அந்த அதிசயம்.

எந்தப் பையன் பிறவியிலேயே பேசும் திறன் அற்று இருந்தானோ அவன், மகாபெரியவர் முன்னிலையில், மெதுவாகத் திக்கித் திணறி..       ."ஸ்ஸ்...ரீ...ரா..ஆ.ஆ..ஆ..ம.. ஜ்..ஜய்ய்யம்ம்!" என்று மூன்றுமுறை தடுமாறிச் சொல்லிவிட்டு, பிறகு மளமளவென்று ஸ்ரீராமஜயம், ஸ்ரீராமஜயம் என்று உரக்கச் சொல்லத் தொடங்கினான்.

ஆமாம்..இது வரை பேசாதிருந்த பையனுக்கு  திடீரென்று   பேசும் திறன் வந்துவிட்டது. அதிசயித்துப் போனவர்கள் பெரியவரின் அனுகிரஹத்தை நினைத்து   ''ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர''   என்று குரல் எழுப்ப, மெதுவாகக் கையை உயர்த்திய மஹா பெரியவா,   கொஞ்சம் தள்ளி   சிலையாக  நின்று கொண்டிருந்த உபன்யாசகரை அழைத்தார்.

"நான் எதுவும் பண்ணலை ...எல்லாம் இவரால வந்தது. இவர் ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்லி நோட்டு கொடுத் தார் இல்லையா? ஸ்ரீராமஜயம் எழுதின புண்ணியம் இவனுக்கு வாக்கு வந்திருக்கு..! அதனால, இந்தப் பெருமை இவருக்குத்தான்!" 

உபன்யாசகரைச் சுட்டிக்காட்டி மகாபெரியவா சொன்னபோது  அப்படியே நெக்குருகி நெகிழ்ந்து போனார் உபன்யாசகர்.

ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்கிறோமே, யாருமே  எழுதியதாக தெரியலையே,  எழுதச்  சொல்வதால்  என்ன பயன் என்று உபன்யாசகர் நினைத்தது  பெரியவாளுக்கு  எப்படித் தெரிந்தது? பேசாமல் இருந்த சிறுவன் பேசியது எப்படி? எல்லாம் அந்த மகானுக்கு மட்டுமே தெரிந்த தெய்வ ரகசியம்!     
இந்த  சம்பவத்தை  யாரோ  எழுதியிருந்ததை படித்து மகிழ்ந்து  என் வழியில்  உங்களுக்கு தருகிறேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...